முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
51. துளங்குநீர் வியலகங் கலங்கக் கால்பொர
விளங்கிரும் புணரி யுருமென முழங்கும்
கடல்சேர் கானற் குடபுல முன்னிக்
கூவற் றுழந்த தடந்தா ணாரை
  5 குவியிணர் ஞாழன் மாச்சினைச் சேக்கும்
வண்டிறை கொண்ட தண்கடற் பரப்பின்
அடும்பம லடைகரை யலவ னாடிய
வடுவடு நுண்ணயி ரூதை யுஞற்றும்
தூவிரும் போந்தைப் பொழிலணிப் பொலிதந்
  10 தியலின ளொல்கின ளாடு மடமகள்
வெறியுறு நுடக்கம் போலத் தோன்றிப்
பெருமலை வயின்வயின் விலங்கு மருமணி
அரவழங்கும் பெருந்தெய்வத்து
வளைஞரலும் பனிப்பௌவத்துக்
  15 குணகுட கடலோ டாயிடை மணந்த
பந்த ரந்தரம் வேய்ந்து
வண்பிணி யவிழ்ந்த கண்போ னெய்தல்
நனையுறு நறவி னாடுடன் கமழச்
சுடர் நுதன் மடநோக்கின்
  20 வாணகை யிலங்கெயிற்
றமிழ்துபொதி துவர்வா யசைநடை விறலியர்
பாடல் சான்று நீடினை யுறைதலின்
வெள்வே லண்ணன் மெல்லியன் போன்மென
உள்ளுவர் கொல்லோநின் னுணரா தோரே
  25 மழைதவழும் பெருங்குன்றத்துச்
செயிருடைய வரவெறிந்து
கடுஞ்சினத்த மிடறபுக்கும்
பெருஞ்சினப்புய லேறனையை
தாங்குநர், தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கும்
  30 எஃகுடை வலத்தர்நின் படைவழி வாழ்நர்
மறங்கெழு போந்தை வெண்டோடு புனைந்து
நிறம்பெயர் கண்ணிப் பருந்தூ றளப்பத்
தூக்கணை கிழித்த மாக்கட் டண்ணுமை
கைவ லிளையர் கையலை யழுங்க
  35 மாற்றருஞ் சீற்றத்து மாயிருங் கூற்றம்
வலைவிரித் தன்ன நோக்கலை
கடியையா னெடுந்தகை செருவத் தானே.

     துறை - வஞ்சித்துறைப்பாடாண் பாட்டு. வண்ணம் -
ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு - செந்தூக்கும்
வஞ்சித்தூக்கும். பெயர் - வடுவடு நுண்ணயிர் (8).

     (ப - ரை) 3. குடபுலமென்றது தன் நகரிக்கு மேல்பாலாம்.

     மாச்சினைச் சேக்கும் (5) பொழில் (9), வண்டு இறைகொண்ட
(6) பொழில் (9), அடைகரைப் (7) பொழில் (9) எனக் கூட்டுக.

     8. வடுவையடுதல் - வடுவை மாய்த்தல். ஊதை உஞற்றுதல்
- அவ்வடு மாயும்படி நுண்ணிய அயிரை முகந்து தூவுதலிலே
முயல்கை; அயிர் - நுண்மணல்.

     வடுவை மாய்க்கும் நுண்ணயிரெனற்பாலதனை வடுவடு
நுண்ணயிரென்று கூறிய சிறப்பானே இதற்கு, 'வடுவடு நுண்ணயிர்'
என்று பெயராயிற்று.

     9. பொழிற்கண் ஒப்பனையாற் பொலிவுபெற்றென்றவாறு.

     10. இயலுதல் - உலாவுதல். ஒல்குதல் - அசைதல்.

     11. வெறியுறு நுடக்கம் - இயல்பாக நுடங்கலன்றித்
தெய்வமேறிய விகாரத்தால் நுடங்குதல். 13. அரவழங்குதல் -
அரவாடுதல்.

     11-3. வெறியுறு நுடக்கம்போல அரவழங்குமெனக் கூட்டுக.

     அரவழங்கும் (13) பெருமலைப் (12) பெருந்தெய்வம் (13) என
மாறிக் கூட்டுக. 12. பெருமலை : இமயம்.

     குணகுடகடல் (15) எனக் கிழக்கும் மேற்கும் எல்லை பின்
கூறுகின்றமையான், வளைஞரலும் பனிப்பௌவம் (14) என்றது
தென்னெல்லையாம்.

     தெய்வத்து (13), பௌவத்து (14) என்னும் அத்துக்கள் ஈண்டுச்
சாரியைப் பொருண்மையைச் செய்யாமையின் அசைநிலையெனப்படும்.

     15. ஒடு: எண்ணொடு. ஆயிடையென்றது அவற்றின்
நடுவென்றவாறு.

     பெருந்தெய்வம் (13) பனிப்பௌவம் (14) குணகடல் குடகடல்
(15) ஆகிய அவ்வெனக் கூட்டுக.

     1அவ்வென்னும் சுட்டுமுதல் வகாரவீற்றுப்பெயர் ஆயிடையென
முடிந்தது.

     15-6. ஆயிடை மணந்த பந்தரென்றது ஆயிடையிலுள்ள
அரசரும் பிறரும் சேவித்தற்கு வந்து பொருந்தின பந்தரென்றவாறு.

     ஆயிடையென்றது ஆயிடையிலுள்ளாரை.

     16. பந்த ரந்தரமென்றது பந்தரின் உள்வெளியை. வேய்தல்
- வேய்ந்தாற்போல நெய்தன்மாலைகளை நாற்றுதல். வேயவெனத்
திரிக்க.

     18. நறவினொடுவென ஒடு விரிக்க.

     22. பாடல்சான்றென்பதனைச் சாலவெனத் திரிக்க.

     23. மெல்லியனென்றது ஐம்புலன்களிடத்தும்
மனநெகிழ்ச்சியுடைய னென்றவாறு.

     கடுஞ்சினத்த (27) அரவு (26) என மாறிக் கூட்டுக.

     30. படைவழிவாழ்நரென்றது படையிடமாக வாழும்
படையாளரை. மறங்கெழு (31) கண்ணி (32) எனக் கூட்டுக.

     32. நிறம்பெய்ர்தல் - உதிரத்தால் நிறம்பெயர்தல். ஊறளத்தல்
- உறுதற்கு ஆராய்தல்.

     கையலை யழுங்க (34) என்னும் எழுவாயையும்
பயனிலையையும் ஒரு சொல் நீர்மைப்படுத்தித் தண்ணுமை (33)
என்னும் எழுவாய்க்குப் பயனிலையாக்குக.

     36. நோக்கென்றது மாற்றார்படையைத் தப்பாமல் ஒன்றாகக்
கொல்லக் கருதின நோக்கென்றவாறு.

     பருந்தூறளப்பக் (32) கையலையழுங்க (34) என நின்ற
செயவெனெச்சங்களை நோக்கலை (36) என்னும்
முற்றுவினைக்குறிப்பொடு முடிக்க.

     நீ குடபுலமுன்னிப் (3) போந்தைப் பொழிலணிப் பொலிதந்து
(9) நெய்தல் (17) நறவினோடு கமழ (18) விறலியரது (21) பாடல் சாலப்
புறத்து வினையின்மையின் (22) 2வினோதத்திலே நீடியுறைதலாலே, நீ
அவ்வாறு நீடியதறியாது அண்ணல் மெல்லியன் போன்மென (23)
நின்னை உணராதோர் உள்ளுவர்களோ (24)? நீ தான்
அரவோடொக்கும் நின்பகைவரைக்கடுக அழிக்க வேண்டு
நிலைமையில் அவ்வரவினைக் கடுக அழிக்கும் (26) உருமேற்றினை
யொப்பை (28); அவ்வாறு விரையச் செய்யும் நிலைமைக் கண்
நினக்கேற்ப நின்படைவழி வாழ்நரும் 3காலாண்மேற் செல்லாது
(30) தாங்குநர் யானைக்கோடு துமிக்கும் (29) எஃகுடை
வலத்தராயிருப்பர் (30); அவ்வாறு நீ அழியாது மாறுபாடாற்றிப்
பொருதழிக்கும் வழி நின்முடிக் கண்ணியை, உதிரம் தெறித்தலால்
நிறம்பெயர்தலிற் பருந்து உறுதற்கு அளப்ப (32), நின்முன்னர்
வழங்கும் மாக்கட் டண்ணுமை நின்னெதிர் நின்று
மாற்றாரெய்தலையுடைய அம்பு கண்கிழித்தலால் (33) ஒலியொழியக்
(34) கூற்றம் (35) வலைவிரித்தாற் போலக் களத்தில் எதிர்ந்த
மாற்றார் படையை யெல்லாம் ஒன்றாகக் கொல்லக் கருதி நோக்கின
நோக்கினையுடையை (36); நெடுந்தகாய், இவ்வாறு
செருவத்துக் கடியை (37) என வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன்வினோதத்து மென்மையும்
செருவகத்துக் கடுமையும் உடன்கூறியவாறாயிற்று.

     29. தாங்குநர் தடக்கையானைத் தொடிக்கோடு துமிக்குமென்று
4எதிரூன்றினார் மேற்சேறல் கூறினமையான், இஃது எடுத்துச்செலவின்
மேற்றாய் வஞ்சித்துறைப் பாடாணாயிற்று.

     'அரவழங்கும்' (13) என்பது முதலாக இரண்டு குறளடியும்,
'பந்தரந்தரம் வேய்ந்து' (16) என ஒரு சிந்தடியும், 'சுடர்நுதல்' (19)
என்பது முதலாக இரண்டு குறளடியும், 'மழைதவழும்' (25) என்பது
முதலாக நாலு குறளடியும் வந்தமையான் வஞ்சித்தூக்குமாயிற்று.

     'தாங்குநர்' (29) என்பது கூன்.

     (கு - ரை) 1-22. சேரனது பொழுதுபோக்குச் சிறப்புக்
கூறப்படும்.

     1-9. கடற்கரைச் சோலையின் இயல்பு.

     1-3. அசைகின்ற நீரையுடைய அகன்ற கடற்பரப்புக்
கலங்கும் படி காற்று அடித்தலால் விளங்குகின்ற பெரிய
அலைகள் இடியோசை போல முழங்குகின்ற கடலைச் சேர்ந்த
சோலையையுடைய தன் நகரத்தின் மேல்பாலுள்ள இடத்துக்குச்
செல்லக் கருதி.

     4-9. பனங்காட்டின் இயல்பு.

     4-5. பள்ளங்களில் இரையின்பொருட்டுத் துழாவிய வளைந்த
காலையுடைய நாரை, குவிந்த பூங்கொத்துக்- களையுடைய
ஞாழல்மரத்தினது பெரிய கிளையினிடத்தே தங்கும்.

     6-9. வண்டுகள் தங்குதல்கொண்ட குளிர்ந்த கடற்பரப்பில்,
அடம்பங் கொடிகள் தழைத்து வளர்ந்த நீரையடைந்த கரையில்
நண்டுகள் விளையாடியதனால் உண்டான சுவடுகளை மறைக்கின்ற
நுண்ணிய மணலைக் காற்று வீசுகின்ற, தூய கரிய பனஞ்சோலையில்
அலங்காரத்தாற் பொலிவு பெற்று.

     சேக்கும் (5) கொண்ட (6) உஞற்றும் (8) என்னும் எச்சங்களைப்
பொழில் (9) என்னும் பெயரோடு முடிக்க.

     10. "ஒருதிறம், பாடனல் விறலிய ரொல்குபு நுடங்க" (பரி. 17:15)

     10-13. உலாவினளாய், அசைந்தனளாய் ஆடுகின்றன
மடப்பத்தையுடைய மகளது, தெய்வம் ஏறியதனால் அசைகின்ற
அசைவைப்போலத் தோன்றி, இடந்தோறும் இடந்தோறும்,
குறுக்கிட்டுக்கிடந்து விளங்கும் அரிய மணிகளையுடைய பாம்புகள்
ஆடுகின்ற, பெரிய மலையாகிய பெருந் தெய்வமும்; தெய்வத்து
அத்து வேண்டா வழிச் சாரியை. பாம்பு ஆடுதலுக்கு விறலி ஆடுதல்
உவமை.

     14. சங்குகள் ஒலிக்கும் குளிர்ச்சியையுடைய கடலும்;
பௌவத்து: அத்து வேண்டாவழிச் சாரியை.

     15. குணகடலும் குடகடலும் ஆகிய எல்லையையுடைய
அவ்விடத்தே உள்ள அரசரும் பிறரும் ஒன்று கூடின; கூடியது
சேரனைச் சேவித்தற் பொருட்டு.

     16. பந்தரின் உள்ளிடத்தே வேய்ந்தாற்போல (நெய்தல்
மாலைகளை)த் தொங்கவிடுதலால்; வேய்ந்து - வேய; எச்சத்திரிபு.

     17-8. வளவிய முறுக்கு அவிழ்ந்த கண்ணைப்போன்ற நெய்தல்
தேன் பொருந்திய நறவம்பூவோடு நாடுமுழுவதும் நறுமணம் வீச;
நறவு: ஒருவகை மலர். (பரி. 7 : 63 - 4)

     19-21. விறலியரது வருணனை.

     ஒளி பொருந்திய நெற்றியையும், மடப்பம் பொருந்திய
பார்வையையும் மிக்க ஒளியையுடைய விளங்குகின்ற பற்களையும்,
அமிழ்துபோன்ற நீரை அடக்கிய சிவந்த வாயையும், தளர்ந்த
நடையையுமுடைய விறலியரது.

     வாள்நகை: ஒருபொருட்பன்மொழி.

     22. பாடல் மிகுதலின் அங்கே தாமதித்தனையாய்த் தங்குதலால்.

     23-4. வெள்ளிய வேலையுடைய சேரன் ஐம்புலன்களிடத்தும்
நெகிழ்ச்சியுடையான் போலுமென்று நின் இயல்பை முற்ற உணராதோர்
நினைப்பார்களோ?

     25-8. சேரனுக்கு இடி உவமை.

     மேகங்கள் தவழ்கின்ற பெரிய மலையில், குற்றமுடைய
பாம்புகளை உருட்டி அவற்றின் மிக்க கோபத்தையுடைய
வன்மையைக் கெடுக்கும் மிக்க சினத்தையுடைய மேகத்தில்
தோன்றும் சிறந்த இடியை ஒப்பாய்.

     பகையரசர்க்குப் பாம்பும் சேரனுக்கு இடியும் உவமை;
வரையுதிர்க்கு, நரையுருமி னேறனையை" (மதுரைக். 62 - 3):
"இளையதாயினுங் கிளையரா வெறியும், அருநரை யுருமிற்
பொருநரைப் பொறா அச் செருமாண் பஞ்சவ ரேறே" (புறநா.
58 : 6 : 8)

     29-30. சேரனுடைய படைவீரரது சிறப்பு.

     தம்மைத் தடுத்து நிற்பவரது வளைந்த துதிக்கையையுடைய
யானையினது பூணை அணிந்த கொம்பை வெட்டும் வாளையுடைய
வெற்றியையுடையர் நின் படையில் வாழும் வீரர்.

     31-7. போர்க்களத்தில் சேரனுடைய நிலை.

     31-2. வீரம்பொருந்திய பனையின் வெள்ளிய ஓலையை
அணிந்து, இரத்தத்தால் தன் நிறம் நீங்கிய போர்க்கண்ணியிடத்தே
உறுதலைப் பருந்து ஆராயவும். இரத்தம் படிந்த பனந்தோட்டைப்
பருந்து ஊனென்று மயங்கி அதனைக் கொத்தக் கருதியது. புனைந்து
நோக்கலை (36) என இயையும்.

     33-4. மாமிசத்தையுடைய அம்பு கிழித்த கரிய கண்ணையுடைய
தண்ணுமை வாசித்தலிற் கைவல்ல இளையர்தம் கையால் வருந்துதல்
கெடவும். தூக்கணை: "புலவுக்கணை" (பு. வெ. 10)

     35-7. நெடுந்தகாய், பரிகாரம் இல்லாத கோபத்தையுடைய
கரிய பெரிய கூற்றுவன் தன்வலையை விரித்தாற்போன்ற
பார்வையையுடையையாய்ப் போர்க்களத்தில் பகைவர்க்கு அச்சத்தைச்
செய்தலையுடையாய்; " நீயே மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்,
கூற்று வெகுண்டன்ன முன்பொடு, மாற்றிரு வேந்தர் மண்ணோக்
கினையே" (புறநா. 42 : 22 - 4)

     விறலியர் பாடலை நுகரும்பொழுது உருகுதலும் வன்மையும்
உடையனாகி மெல்லியன் போலத் தோற்றினாலும் பகைவரை
அடுதலில் மிகவலியானென்றபடி.

     (பி - ம்) 12. விலங்கு மட்டுமணி. 13. அரவு வழங்கும் 33.
தூகணை கிழித்த. 35. மாவருங்கூற்றம் 37. கடியைநெடுந்தகை
செருவகத்தானே. (1)


     1பதிற். 11: 24, உரை.

     2வினோதம் - பொழுதுபோக்கு.

     3பதிற். 54; 16. 7, உரை.

     4எதிரூன்றினார் - காஞ்சித்திணைக்குரியோர்; "உட்கா,
தெதிரூன்றல் காஞ்சி" (
பழம்பாட்டு)





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

1. வடுவடு நுண்ணயிர்
 
51.துளங்குநீர் வியலகங் கலங்கக் கால்பொர
விளங்கிரும் புணரி யுருமென முழங்கும்
கடல்சேர் கானற் குடபுல முன்னிக்
கூவற் றுழந்த தடந்தா ணாரை
 
5குவியிணர் ஞாழன் மாச்சினைச் சேக்கும்
வண்டிறை கொண்ட தண்கடற் பரப்பின்
அடும்பம லடைகரை யலவ னாடிய
வடுவடு நுண்ணயி ரூதை யுஞற்றும்
தூவிரும் போந்தைப் பொழிலணிப் பொலிதந்
 
10தியலின ளொல்கின ளாடு மடமகள்
வெறியுறு நுடக்கம் போலத் தோன்றிப்
பெருமலை வயின்வயின் விலங்கு மருமணி
அரவழங்கும் பெருந்தெய்வத்து
வளைநரலும் பனிப்பௌவத்துக்
 
15குணகுட கடலோ டாயிடை மணந்த
பந்த ரந்தரம் வேய்ந்து
வன்பிணி யவிழ்ந்த கண்போ னெய்தல்
நனையுறு நறவி
1 னாகுடன் கமழச்
சுடர்நுதன் மடநோக்கின்
 
20வாணகை யிலங்கெயிற்
றமிழ்துபொதி துவர்வா யசைநடை விறலியர்
பாடல் சான்று நீடினை யுறைதலின்
வெள்வே லண்ணன் மெல்லியன் போன்மென
உள்ளுவர் கொல்லோநின் னுணரா தோரே
 
25மழைதவழும் பெருங்குன்றத்துச்
செயிருடைய வரவெறிந்து
கடுஞ்சினத்த மிடறபுக்கும்
பெருஞ்சினப்புய லேறனையை
தாங்குநர்,
தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கும்
 
30எஃகுடை வலத்தர்நின் படைவழி வாழ்நர்
மறங்கெழு போந்தை வெண்ே்டாடு புனைந்து
நிறம்பெயர் கண்ணிப் பருந்தூ றளப்பத்
தூக்கணை கிழித்த மாக்கட் டண்ணுமை
கைவ லிளையர் கையலை யழுங்க
  
35மாற்றருஞ் சீற்றத்து மாயிருங் கூற்றம்
வலைவிரித் தன்ன நோக்கலை
கடியையா னெடுந்தகை செருவத் தானே.

துறை  : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு.
வண்ணம் : ஒழுகுவண்ணமும்சொற்சீர்வண்ணமும்.
தூக்கு  : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.
பெயர்  : வடுவடு நுண்ணயிர்.

1 - 9. துளங்குநீர் ........................பொலிதந்து.

உரை : துளங்கு நீர் வியலகம் - அசைகின்ற நீர் நிரம்பிய அகன்ற
கடற்பரப்பானது   ;   கலங்கக்   கால்பொர  -  கலங்கும்படி  காற்று
மோதுதலால்;  விளங்கு  இரும்  புணரி - விளங்க வெழுகின்ற பெரிய
அலைகள்;  உரும்  என முழங்கும் - இடிபோல முழங்கும்; குட புலக்
கடல் சேர் கானல் முன்னி - மேலைக் கடலைச் சார்ந்த கானற்சோலை
நோக்கிச்   செல்லலுற்று;   கூவல்   துழந்த  தடந்  தாள்    நாரை-
பள்ளங்களிலே  யிருந்து  மீனாகிய  இரை  தேடி  வருந்தின  பெரிய
கால்களையுடைய  நாரை  ;  வண்டிறை  கொண்ட குவியிணர் ஞாழல்
மாச்சினைச்     சேக்கும்    -    வண்டு    தங்குகின்ற    குவிந்த
பூங்கொத்துக்களையுடைய   ஞாழல்   மரத்தின்  பெரிய  கிளையிலே
தங்கும்  ;  அடும்பு  அமல்  - பூக்கள் மலர்ந்த அடம்பங் கொடிகள்
நெருங்கிய;   தண்   கடற்   பரப்பின்   அடைகரை   -  தண்ணிய
கடற்பரப்பினைச்  சார்ந்த  கரையிலே  ; அலவன் ஆடிய வடு அடும்
நுண்ணயிர்   -   நண்டுகள்   மேய்வதனா  லுண்டாகிய  சுவடுகளை
மறைக்கும்  நுண்  மணலை  ;  ஊதை  உஞற்றும்  - ஊதைக் காற்று
எறியும்;   தூவிரும்   போந்தை   பொழில்  -  தூய  பெரிய பனஞ்
சோலையில்  ;  அணிப்  பொலி  தந்து - அரசு மேவும் அணி திகழ்
விளங்கியிருந்து எ - று.

கடலகத்தே  நிரம்பி நிற்கும் நீர் இடையறா அலைகளால் அசைத்த
வண்ண  மிருத்தல்பற்றி,  அதனைத் “துளங்குநீர் வியலகம்”  என்றார்.
இயல்பாகவே  துளங்குதலையுடைய  கடலில்  காற்று முடுகிப் பொருத
வழிப்  பேரலைகள் எழுந்து முழங்குமாதலின், “கால்பொர விளங்கிரும்
புணரி  யுருமென  முழங்கும்”  என்றார்.  காற்று முடுகிப் பொருதமை,
“வியலகம்   கலங்கக்   கால்பொர”  என்றதனாற்  பெற்றாம்.  கானல்,
கடற்கரைச்  சோலை. குடபுலக் கடல்சேர் கானல் என மாறிக்  கூட்டுக.
“குடபுல   மென்றது   தன்   நகரிக்கு   மேல்   பாலாம்”   என்பர்  பழையவுரைகாரர்.     கானற்சோலை    முன்னிப்    புறப்பட்டவன்,
இடையிலே   பனஞ்    சோலைக்கண்     தங்குகின்றானென  வறிக.
கூவல் எனவே, அதன்பால் மீன்கள் பெருக  இல்லாமை  யறியப்படும்.
இருந்த  சிலவற்றைத்  தேடித்  தேடி   அதனை   நாரை   யுழப்பிற்
றென்பார்,      “கூவல்      துழந்த      தடந்தாள்       நாரை”
யென்றும்,   அதனால்  அயர்வுற்ற  அந்  நாரை  ஞாழல்  மரத்தின்
கிளையிடத்தே,   தங்கிற்   றென்பார்,   “நாரை  குவியிணர்  ஞாழல்
மாச்சினைச் சேக்கும்” என்றார். மாச்சினை, கரிய கிளை   யென்றுமாம்.
ஞாழலின்   பூங்கொத்தில்   வண்டினம்  தங்கித்  தேனுண்டு  பாடுத
லியல்பாதலால், வண்டிறை கொண்ட குவியிணர் ஞாழல்  எனப்பட்டது;
“தெரியிணர்   ஞாழலுந்  தேங்கமழ்  புன்னையும்,  புரியவிழ்  பூவின
கைதையும்,   செருந்தியும்,   விரிஞிமி   றிமிர்ந்தார்ப்ப  விருந்தும்பி
யியைபூத”  (கலி.  127)  என்று  சான்றோர் கூறுதல் காண்க. சேக்கும்
பொழில்,  ஊதை  யுஞற்றும்  பொழில்  என  இயையும்   ‘வண்டிறை
கொண்ட  என்பதையும்  பொழிலொடு  இயைப்பர்  பழையவுரைகாரர்.
அடும்பு    அமன்ற    இடம்    அடைகரையே   யாயினும்,   அது
கடற்பரப்பினை   அடுத்த   கரையாதலின்,   அடும்பமல்   தண்கடற்
பரப்பின்  அடைகரை  யென  இயைத்துரைக்கப்பட்டது.  அடுத்துள்ள
கரை  அடைகரையாயிற்று.  நண்டு  நுண்  மணல் மேற் செல்லுமிடத்
துண்டாகிய  சுவட்டினைக் காற்றாலும் அலையாலும் எறியப்படும் நுண்
மணல்  பரந்து  மறைத்தலின்  “அலவ  னாடிய வடுவடு நுண்ணயிர்”
என்றார் இனிப் பழையவுரைகாரர், “வடுவை யடுதல் வடுவை மாய்த்த”
லென்றும்,  “ஊதை  யுஞற்றுதல்,  அவ்  வடு  மாயும்படி  நுண்ணிய
அயிரை  முகந்து  தூவுதலிலே  முயல்கை”  யென்றும், “அயிர் நுண்
மணல்”   என்றும்  கூறி,  “வடுவை  மாய்க்கும்  நுண்ணயிர்  எனற்
பாலதனை  வடுவடு  நுண்ணயி  ரென்ற  சிறப்பானே இதற்கு வடுவடு
நுண்ணயிர்   என்று   பெயராயிற்   றென்றும்  கூறுவர்.  வடுவாவது
ஒருகாலும்  மாறாதது.  “மாறாதே  நாவினாற் சுட்ட வடு” (குறள். 129)
என்று   சான்றோர்   கூறுதல்   காண்க.   எளிதில்   மறையக்கூடிய
சுவட்டினை   மாறாத   இயல்பிற்றாகிய  வடு  வென்றும்,  மறைத்தற்
பொருட்டாகிய மாய்க்கும் தொழிலை யடுத லென்றும் கூறிய சிறப்பால்,
“வடுவடு   நுண்ணயிர்”  என்று  பெயர்  கூறப்பட்டதெனக்  கோடல்
சீரிதாம்.  ஊதைக் காற்று நுண்மணலைச் சிறிது சிறிதாக எறிதல் பற்றி.
“உஞற்றும்” என்றார்.   

அரசர்    தங்குவதாயின் அதற்கேற்ப அச்சோலை பலவகையாலும்
அணிசெய்யப்படுவதுபற்றி   “அணி”  என்றும்,  அதன்கண்   அரசன்
எழுந்  தருளுதலால்  விளக்கம்  மிகுதலின்  “பொலி  தந்து” என்றும்
கூறினார்.  “எம்  மனையகம்  பொலிய  வந்தோய்”,  என்று  பிறரும்
கூறுதல்    காண்க.    “பொழிற்    கண்   ஒப்பனையாற்  பொலிவு
பெற்றென்றவா” றென்று பழையவுரை கூறும்.

10 - 24. இயலினள்..........................உணராதோரே.

உரை :   இயலினள்  ஒல்கினள்  ஆடும் மடமகள்  -   நடந்தும்
அசைந்தும்   ஆடலியற்றும்   சாலினியொருத்தி;    தோன்றிவெறியுறு
நுடக்கம்   போல   -   வெறியயர்   களத்தே  தோன்றி  மருளுற்று
அசைந்தாடுவது போல ; வயின்வயின் விலங்கும் - இடங்கள்  தோறும்
கிடந்து குறுக்கிட்டு விளங்கும்; அரு  மணி  அர   வழங்கும் - அரிய
மணியினையுடைய பாம்புகள்     செல்லும்  ;   பெரு  மலை  பெருந்
தெய்வத்து - பெரிய இமயமாகிய  பெரிய  கடவுள்மலையும்  ;  வளை
நரலும்    பனிப்    பௌவம் -  சங்கமுழங்கும்   குளிர்ந்த   தென்
கடலும்  ;  குண  குட   கடலோடு- கீழ்க்கடலும்  மேலைக்  கடலும்
ஆகிய  ; ஆயிடை -  அந்த நான்கு எல்லைக் கிடைப்பட்ட  நிலத்து
வாழும் அரசரும்     பிறசான்றோரும்; மணந்த பந்தர்-   கூடியிருந்த
பந்தரின்கண்ணே ;     அந்தரம்    வேய்ந்து    -     மேலிடத்தே
நெய்தல்   மாலைகளால்   அலங்கரித்தலால்  ;  வன்  பிணியவிழ்ந்த
கண்போல்  நெய்தல்  -  வளவிய அரும்பவிழ்ந்த கண் போன்ற அந்
நெய்தல்  மலர்கள்  ; நனை யுறு நறவின் - தேன் பொருந்திய நறவம்
பூக்களோடு  ; நாகு உடன் கமழ - புன்னையும் உடன் மணம்  கமழ;
சுடர்  நுதல் மட நோக்கின் - ஒளி திகழும் நெற்றியினையும் மடப்பம்
பொருந்திய  பார்வையினையும் ; வாள் நகை இலங்கு எயிற்று - மிக்க
ஒளி விளங்கும் பற்களையும் ; அமிழ்து பொதி துவர் வாய் - அமுதம்
போன்ற  சொற்களைச் சொல்லும் சிவந்த வாயினையும் ; அசை நடை
-  அசைந்த நடையினையுமுடைய ; விறலியர் - விறலிகளின் ; பாடல்
சான்று  நீடினை  உறைதலின் - பாடல்களை நிரம்ப வேற்று விரும்பி
நீட்டித்  திருத்தலாலே ; வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம்
-    வெள்ளிய   வேலேந்திய   அண்ணலாகிய  ஆடுகோட்பாட்டுச்
சேரலாதன்  சிற்றின்பத்  துறையில் எளியன் போலும்;  என - என்று;
நின்   உணராதோர்  நின்  இயல்பை  யுணராத  பிறர்;   உள்ளுவர்
கொல்லோ ; நினைப்பார்களோ எ - று. 

மடமகள்     வெறியுறு நுடக்கம் போலத் தோன்றி அர வழங்கும்
பெருமலைப் பெருந் தெய்வமும் பனிப் பௌவமும் குண குட கடலும்
ஆயிடை  மணந்த  பந்தரின்கண்  நெய்தல் நறவுடன் கமழ, விறலியர்
பாடல்  சான்று  நீடினை  யுறைதலின்,  நின் உணராதோர், அண்ணல்
மெல்லியன்  போலும்  என  உள்ளுவர்  கொல்லோ;  உள்ளுவராயின்
அவர்க்கென்று  தெளிய இனிக் கூறுவேன் எனக் கூட்டி வினை முடிவு
செய்க.   நுதலும்,  நோக்கும்  எயிறும்  துவர்வாயும்  நடையுமுடைய
விறலியர் என இயையும்.

பெருமலையாகிய     பெருந் தெய்வத்து என இயைக்க. உலகத்து
மலைகளெல்லாவற்றினும்    மிக்க   உயர்ச்சி,   திண்மை,   அகலம்
முதலியவற்றால்   ஒப்புயவர்வற்ற  பெருமை  யுடைமைபற்றி,  இமயம்
“பெருமலை”  யெனப்பட்டது.  தேவர்கட்குத்  தேவனாகிய  கண்ணுத
லண்ணல்     வீற்றிருக்கும்     பெருமையும்    தெய்வத்தன்மையும்
உடைமையால்    மலையாகிய    பெருந்தெய்வம்    என்பாராயினர்.
தெய்வத்து, பௌவத்து என்புழி நின்ற அத்துச்சாரியை  அல்வழிக்கண்
வந்து   கட்டுரைச்   சுவை   பயந்து  நின்றன.  பழையவுரைகாரரும்,
“அரவழங்கும்  பெருமலைப்  பெருந்  தெய்வம் என மாறிக் கூட்டுக”
என்றும்,  “பெருமலை  இமயம்”  என்றும்,  “குண  குட கடல் எனக்
கிழக்கும்  மேற்கும்  எல்லை பின் கூறுகின்ற மையான், வளை நரலும்
பனிப்  பௌவம் என்றது தென் னெல்லையாம்” என்றும் “தெய்வத்து,
பௌவத்து     என்னும்     அத்துக்கள்     ஈண்டுச்    சாரியைப்
பொருண்மையைச் செய்யாமையின் அசைநிலை யெனப்படும்” என்றும்
கூறுவர்.  “சாரியையாவது  சொல்  தொடர்ந்து  செல்லும்  நெறிக்கண்
நின்று  அதற்குப்  பற்றுக்  கோடாகச்  சிறிது   பொருள்   பயந்தும்
பயவாததுமாய்     நிற்பது”    (சிலப்.   பதிக.  61   உரை)    என
அடியார்க்கு  நல்லார்  கூறுதலால், ஈண்டுப் பொருள் பயவாது நிற்கும்
அத்துச்சாரியையெனக் கொள்ளப்பட்டதென அறிக. 

தாழ்ந்தும்   நிமிர்ந்தும் உலவியும் அசைந்தும் நடிக்கும் சாலினி,
தெய்வமருள்   கொண்டு  அசைந்தும்  நடுங்கியும்  ஆடுவது  பாம்பு
படமெடுத்து  அசைந்தாடுதற்கு  உவமமாதலின்,  “வெறியுறு  நுடக்கம்
போலத்  தோன்றி  அரவழங்கும்”  என்றார். பாம்புமிழ் மணி திகழும்
கதிரொளி  இடந்தொறும் பரந்து வீசுதலால், “வயின் வயின் விலங்கும்
அருமணி”   என்றார்.   விலங்குதல்,  குறுக்கிட்  டொளிர்தல். அரா
வென்பது  அர வெனக் குறுகிற்று. வழங்குதல், ஈண்டு ஆடுதல்மேற்று.
வெறியுறு    நுடக்க    மென்றதற்கு,    “இயல்பாக  நுடங்கலின்றித்
தெய்வமேறிய  விகாரத்தால் நுடங்குதல்” என்று பழையவுரை கூறுதல்
காண்க. இயலுதல், உலாவுதல், ஒல்குதல், அசைதல்.

குண குட கடலோடு என்புழி,எண்ணொடு நீண்டது.ஆயிடை, அவ்
வெல்லைகட்கு    இடைநிலத்தில்.   பழையவுரைகாரரும்,  “ஆயிடை
யென்றது அவற்றின் நடு வென்றவா” றென்றும், “அவ்வென்னும் சுட்டு
முதல் வகரவீற்றுப் பெயர் ஆயிடை யென முடிந்த” தென்றும் கூறுதல்
காண்க.   அவ்   இடை   என்பது   ஆறாம்வேற்றுமைத்  தொகைப்
பொருட்டாயினும்,     “நான்கனுருபின்     தொன்னெறி     மரபின்
தோன்றலாறே”  (வேற்.  மயங். 27) என்பதனால் அவ்வெல்லைக்கென
வுரைக்கப்பட்டது.  இடை  யென்பது  ஆகுபெயரால் ஆண்டு வாழும்
வேந்தரையும் பிற சான்றோரையும் குறித்து நின்றது.

பந்தர் அந்தரம் - பந்தரின் உள் வெளி. வேய்ந்தென்பது காரணப்
பொருட்டு.  வேய  வெனத்  திரிப்பர்  பழையவுரைகாரர், “கண்போல்
நெய்தல்”  எனப் பின்னே கூறுதலின், “அந்தரம் வேய்ந்து” எனக்கூறி
யொழிந்தார். நெய்தலும் நறவம் பூவும் விரவித் தொடுத்த மாலைகளால்
பந்தர்  புனையப்பட்டமை  தோன்ற,  “நெய்தல்  நனையுறு  நறவின்
நாகுடன்  கமழ” என்றார். நெய்தற் பூவைப்போல நறவம்பூவும் மகளிர்
கண்போல்வ   தாகலின்,  “கண்போல்  நெய்தல்  நனையுறு  நறவின்
நாகுடன் கமழ” என்றார்; நறவம் பூ மகளி்ர் கண்ணிற் குவமையாதலை
“நறவின்,  சேயித ழனைய வாகிக் குவளை, மாயிதழ் புரையு மலிர்கொ
ளீரிமை”  (அகம். 19) என வருதலா லறிக. நாகம், நாகெனக் குறைந்து
நின்றது. பழையவுரைகாரர் “நறவி னொடு என ஒடு விரிக்க” என்பர்.

அரசன்     முன்  ஆடியும்  பாடியும்  இன்புறுத்தும்  விறலியர்,
அவற்றிற்கேற்ப  மெய்யழகும்  நன்குடைய ரென்பது தோன்ற, நுதலும்
நோக்கும்  எயிறும்  பிறவும்  எடுத்தோதினார். அமிழ்து பொதி துவர்
வாய்  என்புழி,  அமிழ்து  அவர்  வாயிலூறும் தீ நீர் என்பாருமுளர்.
அவர்     பாடும்     பாட்டின்பத்தில்     தோய்ந்து   பேரீடுபட்டு
அமைந்திருந்தமை  தோன்றப்  “பாடல்  சான்று”  என்றும்,  நீட்டித்
துறைதலால்  அரசன்  உள்ளத்தில்  காமவேட்கை  யெழுமென் றஞ்சி,
“நீடினை   யுறைதலின்”   என்றும்,   அஃது   ஏனை   வேந்தர்க்கு
எள்ளுரையாமென்று  தெருட்டுவார், “வெள்வே லண்ணல் மெல்லியன்
போன்மென,  வுள்ளுவர்  கொல்லோ”  என்றும், மெல்லியன் போலத்
தோன்றினும்  உரனும்  பெருமையும்  நீ  சிறப்ப வுடையை யென்பது
நின்னை யுணர்ந்த எம்போலியர்   நன்கறிவர்,  பிறரறியார்  என்பார்,
“நின்னுணரா     தோரே”    என்றும் கூறினார். “ஆடலும் பாடலும்
அழகு மென்றிக் கூறிய மூன்று” (சிலப். 3. 8-9) என்பதனால்  அழகும்
இன்றியமையாமை   யறியப்படும்.   மேலும்   ,   “காவல்  வேந்தன்
இலைப்பூங் கோதை யியல்பின் வழாமை” (சிலப். 3 159-60)  என்பதன்
உரையில்   “என்   சொல்லியவாறாமோ   வெனின்,   நாடக  மகள்
அரங்கேறக்  கண்ட  அரசன்  அவள்மேற் காமக் குறிப்புடையனாதல்
இயல்பு”  என்று  அடியார்க்கு  நல்லார்  கூறுதலால், அரசன் இன்பக்
களியாட்டில்  நெடிதிருத்தல்  குற்றமாதலை  யறிக.  நெடி திருந்தவழி
அரசனது   மென்மை  பகைவர்க்குத்  தம்  பகைமைக்குரிய  சூழ்ச்சி
செய்து   வேறற்கு   வாயிலா  மென்பதற்காகவே,  திருவள்ளுவனார்,
இன்னோரன்ன   வின்பங்களைப்   பிறர்   அறியாமைத்  துய்ப்பதே
வேண்டுவதென்பார், “காதல  காத  லறியாமைத்2துய்க்கிற்பின், ஏதில
ஏதிலார் நூல்” (குறள். 440) என்றார். 

 இனிப்     பழையவுரைகாரர், “பாடல் சான் றென்பதனைச்  சால
வெனத் திரிக்க” வென்றும், “மெல்லிய னென்றது ஐம்புலன்களிடத்தும்
மனநெகி்ழ்ச்சியுடைய னென்றவா” றென்றும் கூறுவர்.

25 - 28. மழைதவழும்....................ஏறனையை.

உரை :  மழை தவழும் பெருங்  குன்றத்து - மேகங்கள்  தவழும்
பெரிய  குன்றுகளில்  வாழும்  ; செயிர் உடைய - நஞ்சினையுடைய ;
அரவு  எறிந்து  -  பாம்புகளை  யுட்குவித்து  ;  கடும் சினத்த மிடல்
தபுக்கும்  -  மிக்க  சினத்தையுடைய  அவற்றின் வலியை யழிக்கும் ;
பெருஞ்  சினப் புய லேறு அனையை - பெரிய முழக்கத்தினையுடைய
வானிடியேற்றினை யொப்பாய் எ - று.

மழை     தவழும் குன்றென்றது,  குன்றத்தின் உயர்ச்சி  தோன்ற
நின்றது.  மிகு  நஞ்சும்  பெருவன்மையும் படைத்த நாகங்கள் வாழும்
மழை   யென்றற்குப்   “பெருங்   குன்றத்து”  என்று  சிறப்பித்தார்.
நஞ்சுடைமை   நாகத்திற்குக்   குற்றமாதலின்,  “செயிருடைய  அரவு”
என்றும்,   தன்   முழக்கத்தாலே   அத்தகைய   நாகமும்   நடு்ங்கி
யொடுங்குமாறு  செய்தல்பற்றி,  “அர  வெறிந்து”  என்றும்  கூறினார்.
“விரிநிற  நாகம்  விடருள தேனும், உருமின் கடுஞ்சினம் சேணின்றும்
உட்கும்” (நாலடி. 164) என்று பின்வந்த சான்றோரும் கூறுதல் காண்க.
சீறி  வரும்  பாம்பின்  தோற்றம்  பெரும்  படை  வீரர் கூட்டத்தின்
வலியையும்   சிதைத்   தொழிக்கும்  ஆற்றல்  படைத்திருத்தல்பற்றி,
“கடுஞ் சினத்தமிடல்” என்றும், இடியேற்றின் முழக்கமும் ஒளியும் அந்
நாகத்தினைக்  கொன்று விடுதலால், “தபுக்கும் பெருஞ்சினப் புயலேறு”
என்றும்   கூறினார்.   பாம்பென்றாற்  படையும்  நடுங்கும்  என்னும்
பழமொழி,  பாம்பின் கடுஞ்சினத்த மிடலை யுணர்த்தி நிற்பது காண்க.
பெருஞ்   சினம்   என்புழிச்   சினம்  இலக்கணை.  மேகத்திடத்தே
பிறத்தல்பற்றி,    இடியேற்றினைப்   “புயலேறு”   என்றார்  பழைய
வுரைகாரர்,  “கடுஞ்  சினத்த  அரவு  என  மாறிக் கூட்டுக” என்பர் .
எனவே,  செயிருடைய  கடுஞ்  சினத்த  அரவெறிந்து மிடல் தபுக்கும்
ஏறனையை என்றியையும். 

இதனால்,   சிறப்புடைய முடிவேந்தர்களான சோழ பாண்டியராகிய
பாம்புகளின்   மிடல்  தபுத்தற்கண்,  இச்  சேரமான்  பெருஞ்சினத்த
புயலேறனையன்   எனச்   சிறப்பித்தவாறாயிற்று.  ஆகவே,  இவனது
ஒளியும்    ஆணையும்   கேட்டு   அவர்கள்   அஞ்சி   யொடுங்கி
யிருந்தமையும் ஓராற்றால் உணர்த்தியவாறுமாயிற்று.

29 - 30. தாங்குநர்....................வாழ்நர்.  

உரை :  நின் படை வழி வாழ்நர் - நின்  படையிடத்தே யிருந்து
போர்  புகன்று வாழும் வீரர் ; தாங்குநர் - தாம் மேற்  செல்லுமிடத்து
எதிரூன்றும்   பகைவருடைய   ;   தடக்   கை  யானை  -  பெரிய
கையையுடைய   யானையின்   ;   தொடிக்   கோடு      துமிக்கும்-
தொடியணிந்த  கொம்பினை  ஒரு வீச்சிலே எறிந்தழிக்கும் ; எஃகுடை
வலத்தர் - வாளையுடைய வெற்றி வீரராவர் எ - று.

போருடற்றிப்     பெறும் புகழ் பற்றுக்கோடாகப்   படை வீரருள்
ஒருவராய்   இருந்து   வாழ்கின்றன   ரென்பார்,  சேரமான்  வீரரை
“நின்படை  வழி  வாழ்நர்”  என்றார்;  எனவே,  அவர், “போரெனிற்
புகலும்  புனை கழன் மறவர்” (புறம். 31) என்றவாறாயிற்று.  தாங்குதல்,
எதிர்த்தல்;    மேற்செல்லா    வகையிற்றடுத்தலுமாம்.   “வருவிசைப்
புனலைக்  கற்சிறை போல, ஒருவன் தாங்கிய பெருமை” (தொல். பொ.
புறத். 8) என்றாற் போல. தாங்குவோர் படையினுள் யானைப்படையை
விதந்தோனினார்.    நால்வகைப்    படையினுள்  யானைப்படையை
சிறந்தமைபற்றி  ;  “யானையுடைய  படை  காண்டல்  முன்னினிதே”
(இனிய.  5)  என்று  சான்றோர்  கூறுதல் காண்க. “தடக்கை யானை”
யென்றது,  அதன் கோட்டின் இயற்கை வன்மை எடுத்துரைத்தவாறாம்.
அதற்குச்  செயற்கையாகவும்  வலியூட்டப்பெற்றமை  தோன்ற,  பூண்
அணிந்திருத்தல் கூறுவார், “தொடிக்கோடு” என்றும், இருவகையானும்
வலி   பெரிதுடைய   தாயினும்  படை  வாழ்நரின்  வாட்படை அக்
கோட்டினை  மிக எளிதில் துண்டித் தொழிப்பது தோன்ற, “துமிக்கும்
எஃகுடை  வலத்தர்” என்றார். எஃகு, வாள், வலம், வெற்றி, எஃகுடை
வலத்தரென்றற்கு, வலக் கையில் வாளேந்தியவர் என்றுமாம். வீரர்க்கு
யானையை   யெறிதலிலே   வேட்கை  மிகுதியாதல்  பற்றி, அதனை
எடுத்துரைத்தா ரென்றலுமமையும்.

31 - 37. மறங்கெழு...............செருவத்தானே.  

உரை :   போந்தை  வெண்டோடு    புனைந்து  -   பனையின்
வெண்மையான  தோடுகளாற்  செய்யப்பட்டு; நிறம் பெயர் - பகைவர்
உடற்  குருதி  பட்டு  நிறம்  வேறு பட்ட ; மறம் கெழுகண்ணி ; வீரர்
அணிந்துள்ள  கண்ணியை  ;  பருந்து  ஊறளப்ப  பருந்துகள்  ஊன்
துண்டமெனப்   பிறழவுணர்ந்து   தாம்  உற்று  அதனைக்  கொத்திக்
கொண்டேகற்குரிய  அளவினை நோக்கியிருப்ப ; தூக்கணை  கிழித்த -
பகைவர் எறியும் அம்புகள் பாய்தலால் கிழிந்த ; மாக்கண் தண்ணுமை
- கரிய கண்ணையுடைய   தண்ணுமையானது;   கைவல்    இளையர்
கையலை      அழுங்க   -    இசைக்கும்     தொழில்     வல்ல
இளையவர்கள்  கையால்  அறையப்படுதலின்றியொழிய  ;   மாற்றரும்
சீற்றத்து  -  மாற்ற முடியாத சினத்தை யுடைய ; மா இரும்   கூற்றம்-
கரிய பெரிய கூற்றுவன்; வலை விரித்தன்ன நோக்கலை - உயிர்களைக்
கவரும்    தன்    பார்வையாகிய    வலையை    விரித்தாற்போன்ற
பார்வையினையுடையை    ;    செருவத்தான்   -   போர்க்களத்தே
அப்பார்வைக்குட்பட்ட பகைவர் உயிர் கவரப்படுதலால்;  நெடுந்தகை-
நெடுந்தகையே;    கடியை    -   அப்பகைவர்க்குப்   பேரச்சத்தைச்
செய்கின்றாய் எ - று. 

சேரர்க்குரிய     அடையாளப் பூவாதலின், பனையினது வெள்ளிய
தோட்டாற்  கண்ணி  செய்து  தலையில்  அணிந்திருந்தமை தோன்ற,
“போந்தை வெண்டோடு புனைந்து” என்றார். தோடு, ஈண்டு வெள்ளிய
குருத்தோலை   மேற்று.  பகைவரைக்  கொல்லுதலால்  அவர் குருதி
தோய்ந்து  நிறம்  சிவந்து  தோன்றுதல் பற்றி, “நிறம் பெயர் கண்ணி”
யென்றும்,  அதனால்  அக்கண்ணி  ஊன்தசை  போலத் தோன்றவே
வானத்திற்   பறக்கும்  பருந்து  அதனைக்  கவர்தற்குப்  பார்க்கின்ற
தென்பார்,  “பருந்தூறளப்ப”  என்றார். உறுதல், ஊறு என முதனிலை
திரிந்து   தொழிற்பெய   ராயிற்று.   அளத்தல்,  ஆராய்தல்,  “நிறம்
பெயர்தல்  உதிரத்தால்  நிறம்  பெயர்த”  லென்றும்,   “ஊறளத்தல்-
உறுதற்கு ஆராய்தல்” என்றும் பழையவுரைகாரர் கூறுதல் காண்க.

எத்துணை    வன்மை யுடைய ராயினும், தண்ணுமை இசைப்போர்,
அது  கண்  கிழிந்தவழி இசைத்தல் கூடாமையின், “கைவல் இளையர்
கையலை யழுங்க” என்றார். கையலை, கையால் அறைந்து இசைத்தல்,
அத்தண்ணுமை    கண்   கிழிந்ததற்குக்   காரணம்   இஃதென்பார்,
“தூக்கணை   கிழித்த   மாக்கண்   தண்ணுமை”  என்றார். தூகணை
எனற்பாலது   தூக்கணையென   வந்தது.   தூவென்பது  ஊனையும்
குறிக்குமாகலின்,  ஊன் படிந்த கணை யென்றுமாம். கையலை யழுங்க
என்பது     எழுவாயும்     பயனிலையுமா     யியைந்து     ஒரு
சொன்னீர்மைப்பட்டு,     தண்ணுமை    யென்பதற்கு    முடிபாயிற்
றென்பாராய்ப்   பழையவுரைகாரர்,   “கையலை   யழுங்க  என்னும்
எழுவாயையும்   பயனிலையையும்  ஒரு  சொல்  நீர்மைப்  படுத்தித்
தண்ணுமை  யென்னும்  எழுவாய்க்குப்  பயனிலை  யாக்குக” என்பர்.
தானைத் தலைவர் குறிக்கும் ஏவலை இத்தண்ணுமை முழக்கித் தானை
வீரர்க்குத் தெரிவித்துப் பகைவரை இடமறிந்து தாக்கச் செய்தல் பற்றிப்
பகைவர்  அதன்  கண்ணைத் தம் அம்பு செலுத்திக் கிழிப்பவாதலின்,
“தூக்கணை  கிழித்த  மாக்கண்  தண்ணுமை”  என்றார்  என அறிக.
“தழீஇந்தாம்     என்னத்     தண்ணுமை,     கழித்தானொள்வாள்
வீழ்ந்தனகளிறே” (புறத். 1409) என வருதல் காண்க.

உயிர்     கவர வரும் கூற்றுவனை வேறல்   எத்திறத்தோர்க்கும்
அரிதென்பதுபற்றி  “மாற்றருஞ்  சீற்றத்து மாயிருங் கூற்றம்” என்றார்.
பெரிய  குற்றம்  புரிந்து பேரரசர் சீற்றத்துக்குள்ளாயினார், அக்குற்றம்
புரிந்தோர்  தம்  குற்றமுணர்ந்து  அவ்வரசரை யடிபணிந்து நிற்பரேல்
அச்சீற்றம்   மாற்றப்படும்   ;   கூற்றத்தின்  சீற்றம்  எவ்வாற்றானும்
மாறாமையின்,  “மாற்றருஞ்  சீற்றத்துக்  கூற்ற”  மென்றாரென  வறிக.
“பெரிய தப்புநராயினும் பகைவர், பணிந்து திறை பகரக் கொள்ளுநை”
(பதிற்.  17)   என்றும், “மெல்ல     வந்தென்   னல்லடி    யுள்ளி,
ஈயென     விரக்குவராயின்,  முரசு   கெழுதாயத் தரசோ  தஞ்சம்,
இன்னுயிராயினும்  கொடுக்குவென்”  (புறம்.  73) என்றும் கூறுதலால்
அரசர் சீற்றம் மாற்றருஞ் சீற்றமன்மை யுணரப்படும். கூற்றத்தின் சீற்ற
மன்னதன்  றென்பது,  “நேமி  மால்வரைக்  கப்புறம் புகினும், கோள்
வாய்த்துக்  கொட்கும்  கூற்றத்து,  மீளிக் கொடுநா விலக்குதற் கரிதே”
(ஆசிரிய  மாலை)  என்று சான்றோர்  கூறுதலா  லறிக. இதுபற்றியே
சான்றோர்   “மருந்தில்   கூற்றத்தருந்தொழி”  லென்றும்,  மாற்றருங்
கூற்றம்” (தொல். புற. 24) என்றும் ஓதுகின்றனர். “மாற்றருஞ் சீற்றத்து
மாய் இருங்கூற்றம் என்பதற்கு, மாற்றற்கில்லாத சீற்றத்தால் உயிர்களை
மாய்க்கும் பெரிய கூற்றென்றலும் ஒன்று. 

நாளுலந்தாரையன்றிக் கூற்றம் நோக்காமையாலும், அதனால் அதன்
நோக்கிற்பட்டார்  மாய்தல்  ஒருதலை யாதலாலும் “வலை விரித்தன்ன
நோக்கல்”  என்றார்.  வலையிற்பட்டது  தப்பாமை  போலக்  கூற்றின்
நோக்கிற்    பட்டதும்   தப்பாமை   பற்றி,   அதன்   நோக்கத்தை
வலையென்றார்.  அவ்வாறே  இச்சேரலாதனும்,  தன்னால்  செயிர்த்து
நோக்கப்பட்ட  பகை  வீரரை  எஞ்சாமற்  கோறலின், “கூற்றம் வலை
விரித்தன்ன    நோக்கலை”    யென்றும்,    “கடியை   நெடுந்தகை
செருவத்தானே”  யென்றும் கூறினார். கடி, அச்சம். ஒன்னார் உட்கும்
உருவச்  சிறப்புத்  தோன்றக்  “கடியை”  யென்றும், அவர் காண்பது
செருவின்கண்ணே   யாகலின்  “செருவத்தானே”  யென்றும்,  ஏனை
நாட்டார்க்கும்  தன்  அருள்  பெற்று  வாழ்வார்க்கும்  செருநிலத்தும்
இனியனாயொழுகுமாறு  தோன்ற,  “நெடுந்தகை”  என்றும்  கூறினார்.
செரு,  செருவமென     நின்றது.    இனிப்    பழைய   வுரைகாரர்,
“நோக்கென்றது   மாற்றார் படையைத் தப்பாமல் ஒன்றாகக் கொல்லக்
கருதின நோக்கென்றவா” றென்பர்.

அளப்ப,     அழுங்க     என     நின்ற   செயவெனெச்சங்கள்
நோக்கலையென்னும் குறிப்புவினை கொண்டன.

இதுகாறும்   கூறியது, நெடுந்தகை, நீ குடபுல முன்னிப் போந்தைப்
பொழிலணிப்   பொலிதந்து,  பந்தர்  அந்தரம்  வேய்ந்து  நெய்தலும்
நறவமும்  நாகமும்  மணம்  கமழ,  விறலியர் பாடல் சான்று நீடினை
யுறைதலின்,  நின்  உணராதோர், அண்ணல் மெல்லியன் போன்மென
உள்ளுவர்   கொல்லோ   ;  உணர்ந்தோர்,   மெல்லியன்   போலத்
தோன்றினும்,  நீ  பெருஞ்  சினப்  புயலேறனையை ; நின் படைவழி
வாழ்நர்   யானைக்கோடு  துமிக்கும்   எஃகுடை  வலத்தர்  பருந்து
ஊறளப்ப,  தண்ணுமை இளையர் கையலை யழுங்க, நீ கூற்றம் வலை
விரித்தன்ன   நோக்கலை;   செருவத்தின்கண்   கடியை   என்பதை
நன்கறிவர் என வினை முடிவு செய்க.

“நீ     குடபுல முன்னிப் போந்தைப்  பொழிலணிப்  பொலிதந்து,
நெய்தல்   நறவினொடு   கமழ,  விறலியரது  பாடல்  சாலப்  புறத்து
வினையின்மையின்  வினோதத்திலே  நீடி  யுறைதலாலே நீ அவ்வாறு
நீடிய   தறியாது   அண்ணல்   மெல்லியன்  போன்மென  நின்னை
யுணராதோர்   உணர்வார்களோ?  நீதான்  அரவோ டொக்கும்  நின்
பகைவரைக்  கடுக  அழிக்க வேண்டும் நிலைமையில் அவ்வரவினைக்
கடுக  அழிக்கும்  உருமேற்றினை  யொப்பை  ;  அவ்வாறு விரையச்
செய்யும்  நிலைமைக்கண்,  நினக்கேற்ப  நின் படை வழி  வாழுநரும்,
காலாள்மேற்     செல்லாது   தாங்குநர்   யானைக்கோடு  துமிக்கும்
எஃகுடை  வலத்தரா யிருப்பர்;அவ்வாறு நீ அழியாது மாறுபாடாற்றிப்
பொருதழிக்கும்வழி  நின்முடிக்கண்ணியை உதிரம் தெறித்தலால் நிறம்
பெயர்தலிற் பருந்து உறுதற் களப்ப, நின் முன்னர் வழங்கும் மாக்கண்
தண்ணுமை  நின்னெதிர் நின்று, மாற்றா ரெய்தலையுடைய அம்பு கண்
கிழித்தலால் ஒலியொழியக் கூற்றம் வலை விரித்தாற் போலக் களத்தில்
எதிர்ந்த  மாற்றார்  படையை  யெல்லாம் ஒன்றாகக் கொல்லக் கருதி
நோக்கின நோக்கினையுடையை ; நெடுந்தகாய் ! இவ்வாறு செருவத்துக்
கடியை என வினை முடிவு செய்க” என்பது பழையவுரை. 

இதனாற்   சொல்லியது   அவன்    வினோதத்து   மென்மையும்
செருவகத்துக் கடுமையும் உடன் கூறியவாறாயிற்று.

தாங்குநர்     தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கு  மென்று
எதிரூன்றினார்  மேற்சேறல் கூறினமையான், இஃது எடுத்துச் செலவின்
மேற்றாய்  வஞ்சித்துறைப்  பாடாணாயிற்று.  ‘அரவழங்கும்”  என்பது
முதலாக  இரண்டு  குறளடியும்,  “பந்த ரந்தரம் வேய்ந்து என வொரு
சிந்தடியும்,  “சுடர்நுத” லென்பது முதலாக இரண்டு குறளடியும் “மழை
தவழும்”  என்பது முதலாக நான்கு குறளடியும் வந்தமையான் வஞ்சித்
தூக்குமாயிற்று. தாங்குநர், என்பது கூன். 


1. நாடுடன் கமழும் - பாட வேறுபாடு
2. பாடம் - உய்க்கிற்பின்

 மேல்மூலம்