முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
52. கொடிநுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து
வடிமணி நெடுந்தேர் வேறுபுலம் பரப்பி

அருங்கலத் தரீஇயர் நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கந் திசைதிரிந் தாங்கு
  5 மையணிந் தெழுதரு மாயிரம் பஃறோல்
மெய்புதை யரண மெண்ணா தெஃகுசுமந்து
முன்சமத் தெழுதரும் வன்க ணாடவர்
தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க
உயர்நிலை யுலக மெய்தினர் பலர்பட
  10 நல்லமர்க் கடந்தநின் செல்லுறழ் தடக்கை
இரப்போர்க்குக் கவித லல்லதை யிரைஇய
மலர்பறி யாவெனக் கேட்டிகு மினியே
சுடரும் பாண்டிற் றிருநாறு விளக்கத்து
முழாவிமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை யாகச்
  15 சிலைப்புவல் லேற்றிற் றலைக்கை தந்துநீ
நளிந்தனை வருத லுடன்றன ளாகி
உயவுங் கோதை யூரலந் தித்தி
ஈரிதழ் மழைக்கட் பேரிய லரிவை
ஒள்ளித ழவிழகங் கடுக்குஞ் சீறடிப்
  20 பல்சில கிண்கிணி சிறுபர டலைப்பக்
கொல்புனற் றளிரி னடுங்குவன ணின்றுநின்
எறிய ரோக்கிய சிறுசெங் குவளை
ஈயென விரப்பவு மொல்லா ணீயெமக்
கியாரை யோவெனப் பெயர்வோள் கையதை
  25 கதுமென வுருத்த நோக்கமோ டதுநீ
பாஅல் வல்லா யாயினை பாஅல்
யாங்குவல் லுநையோ வாழ்கநின் கண்ணி
அகலிரு விசும்பிற் பகலிடந் தரீஇயர்
தெறுகதிர் திகழ்தரு முருகெழுழ ஞாயிற்
  30 றுருபுகிளர் வண்ணங் கொண்ட
வான்றோய் வெண்குடை வேந்தர்தம் மெயிலே.

          துறை - குரவை நிலை. வண்ணம் -
ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - சிறுசெங்
குவளை. (22)

     (ப - ரை) வங்கம் திசைதிரிந் தாங்குக் (4)
கொல்களிறுமிடைந்து (1) என மாறிக் கூட்டுக.

     3. திருநாறு விளக்கென்றது செல்வமுடைமையெல்லாம்
தோன்றும்
விளக்கு. 16. நளிதல் - தன்னைச் 1சேவிக்கும் மகளிரொடு
குரவையாடிச் செறிதல்.

     17. ஊரலந்தித்தி - ஊரலையுடைய தித்தி; அம்முச் சாரியை.
18. ஈரிதழ் - குளிர்ந்த இமை. 19. அவிழகமென்றது அவிழ்ந்த
பூவினை.

     22. தான் அவனை எறிதற்கு ஓக்கிய சிறியதொரு
செங்குவளையெனச் சிறுமையால் அவள்மென்மை கூறிய சிறப்பான்
இதற்கு, 'சிறுசெங்குவளை' என்று பெயராயிற்று.

     இரப்ப (23) என்னும் செயவெனெச்சத்தினைக் கையதை (24)
என்னும் முற்றுவினைக் குறிப்பொடு முடிக்க.

     சிறுசெங்குவளை (22) பெயர்வோள் கையதை (24) என
முற்றாக அறுத்து, அது (25) எனப் பின் சுட்டிற்றாக்குக.

     28. பகலிடம் - பகற்பொழுது.

     30. உருபு கிளர் வண்ணம் - நிறம் விளங்கின தன்மை.

     வண்ணங்கொண்ட (30) வேந்தர் (31) எனக்கூட்டி 2ஞாயிறு
போலக் கோபித்து எதிர்நின்ற வேந்தரென உரைக்க.

     நல்லமர்க்கடந்த நின்தடக்கை (10) இரப்போர்க்குக்
கவிதலல்லதை இரைஇய (11) மலர்பறியாவெனக் கேட்டிகும் (12); இனி
துணங்கைக்குத்(14) தலைக்கை தந்து நீ (15) அளிந்தனைவருதல்
உடன்றனளாகி (16) நின்னரிவை (18) நின் (21) எறியர் ஓக்கிய
சிறுசெங்குவளையானது (22) நீ (25) 3ஈயென்று இழிந்தோன் கூற்றான்
இரப்பவும் நினக்கு ஈந்துபோகாது நின் இரப்பிற்கு ஒல்லாளாய் நீ
எமக்கு (23) யாரென்று பெயர்வோள் கையதாயிருந்தது (24);
அவ்வாறு இரந்து நீ பெறாது அவளை உருத்த நோக்கமொடு அதை
அவள்பானின்றும் (25) பகுத்துக்கொள்ளமாட்டா யாயினை (26);
அவ்வாறு அது பகுக்கமாட்டாத நீ வேந்தர்களெயிலைப் (31)
பகுத்துக்கோடல் (26) யாங்கு வல்லையாயினாய்? நின் கண்ணி
வாழ்க (27) என மாறி வினைமுடிவு செய்க.

     பாஅல் (26) யாங்கு வல்லுநையோ (27) என்றதன்முன் எயில்
(31) என்பது கூட்டவேண்டுதலின் மாறாயிற்று.

     இதனாற் சொல்லியது அவன் கைவண்மையொடும்
வென்றியோடு படுத்து அவன் காமவின்பச்சிறப்புக் கூறியவாறாயிற்று.

     இப்பாட்டு, துணங்கையாடுதல் காரணமாகப் பிறந்த ஊடற்
பொருட்டாகையாற் குரவைநிலை யென்றாவாறாயிற்று.

     (கு - ரை) 1-2. சேரனுடைய பகைவரது படைச்சிறப்ப.

     1. கொடிகள் அசைகின்ற நிலையையுடைய ஆண்யானைகள்
நெருங்கப் பெற்று. யானையின் மீது கொடி விளங்குதல்: நெடுநல்.
87; பதிற் 69 : 1 - 2. 88 :

     17. 2. திருந்திய தொழிலையுடைய மணிகளைக்கட்டிய உயர்ந்த
தேர்களை வேறிடங்களிற் பரவச்செய்து.

     3-4. பிறநாடுகளிலுள்ள அரிய ஆபரணங்களைத் தரும்
பொருட்டுக் கடல்நீரில் உயர்ந்துசெல்லும் பெரிய
ஆரவாரத்தையுடைய கப்பல் திசைகளிலே திரிந்தாற்போல,
திரிந்தாங்கு (4) களிறு மிடைந்து (1) என இயைக்க; "விழுமிய
நாவாய் பெருநீ ரோச்சுநர், நனந்தலைத் தேஎத்து நன்கல னுய்ம்மார்,
புணர்ந்துடன் கொணர்ந்த புரவி" (மதுரைக். 321-3). யானைக்குக்
கப்பல்: மதுரைக். 379 - 83; நற். 74 : 3 - 4; புறநா. 26 : 1 - 3.

     5. மேகத்தை ஒத்து எழுகின்ற கரிய பெரிய
பரிசைப்படையினையும்; பரிசைக்கு மேகம் உவமை: பதிற். 62 : 2;
"மழையென மருளும் பஃறோல்" (புறநா. 17 : 34). அணிந்து:
உவமஉருபு. மை அணிந்து - மை பூசப்பெற்று எனலுமாம்.

     6-7. உடலை மூடுகின்ற கவசத்தையும் வேண்டுமென்று
எண்ணாமல் வேலையும் தாங்கிப் போர்க்களத்தின் முன்னே
புறப்பட்டுச் செல்லும் அஞ்சாமையையுடைய வீரர்; இவர்
காலாட்படையிலுள்ள வேல்வீரர்.

     8-9. தோல்வியடையாமைக்கு காரணமான தும்பையானது
பகைவரிடத்தே விளங்கும்படி, உயர்ந்த நிலையையுடைய
வீரசுவர்க்கத்தை அடைந்தனராய்ப் பலர் இறக்கும்படி; பலர் இறந்து
வீரசுவர்க்கத்தையடைய என்பது கருத்தாகக் கொள்க. பகைவரிடத்தே
பொருங்கால் அதிரப் பொருது சிறத்தலின் அவர் அணிந்த தும்பை
விளங்குவதாயிற்று.

     10-12. சேரனது கொடைச் சிறப்பு.

     நல்ல போர்களை வஞ்சியாது எதிர்நின்று வென்ற நினது
இடியை ஒத்துப் பகைவரை அழிக்கின்ற பெரிய கைகள், நின்பால்
வந்து இரப்பவர்களுக்கு அவர்கள் வேண்டியவற்றைக்
கொடுத்தற்பொருட்டுக் கவிதல் அல்லாமல், பிறரிடம் சென்று
இரத்தற்கு விரிதலை அறியா எனக் கேட்டோம்; இப்பொழுதோ
எனின்; பதிற். 44 : 5-6. செல்லுறழ் தடக்கை; முருகு 5, ந,

     13-6. சேரன் தன்னைச் சேவிக்குமகளிரோடு குரவையயர்தல்.

     13. ஒளிவிடும் காலையுடைய, செல்வமெல்லாம் விளங்கித்
தோன்றும் விளக்கின் ஒளியிலே.

     14-6. முழவு ஒலிக்கின்ற, மகளிர் ஆடுகின்ற துணங்கைக்
கூத்திற்குத் தழுவுதலையுடைய தெப்பமாக, முழங்குதலில் வல்ல
ஏற்றைப்போல முதற்கையைக் கொடுத்து நீ அவர்களோடு
செறிந்துவருதலை அறிந்து சினம் கொண்டவளாகி; "நிரைதொடி
நல்லவர் துணங்கையுட் டலைக்கொள்ளக், கரையிடைக் கிழிந்தநின்
காழகம்வந் துரையாக்கால்" (கலித். 73 : 16 - 7); "மெல்லிணர்க்
கண்ணி மிலைந்த மைந்தர், எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து"
(புறநா. 24 : 8 - 9)

     17-8. வருந்துகின்ற மாலையைப்போன்ற தன்மையையும்,
பரவுதலையுடைய தேமலையும், குளிர்ந்த இமைகளையுடைய
மழைபோன்ற கண்களையும் உடைய பெரிய இயல்பையுடைய நின்
தேவி.

     19-22. சேரன் பெருந்தேவியின் ஊடல் கூறப்படும்.

     19-20. ஒள்ளிய இதழையுடைய பூவைப்போன்ற சிறிய அடியின்
கண் அணிந்த, பலவாகிய இரண்டு கிண்கிணிகள் சிறிய பரட்டை
வருத்த; "பைம்பொற் கிண்கிணி பரட்டுமிசை யார்க்கும், செந்தளிர்ச்
சீறடி" (பெருங். 2. 3 : 85 - 6). உறுப்பு வகையினாற் பலவாகவும்,
எண்ணால் இரண்டாகவும் அமைதலின், 'பல்சில கிண்கிணி' என்றார்.

     21. கரையை இடிக்கின்ற நீரிலேயுள்ள தளிரைப்போல
நடுங்குகின்றவளாய் நின்று. கோபத்தாலும் கரணத்தாலும்
நடுங்கிற்றென ஊடலும் கூடலுமுணர்த்திற்று. (சீவக. 134, ந.)

     21-2. நின்மீது எறிதற் பொருடடுத் தூக்கிய சிறிய செங்குவளை
மலர்.

     23-4. இரப்போன் கூற்றால் அதனை எனக்கு ஈயென்று நீ
கேட்பவும் தான் அதற்கு மனம் பொருந்தாளாய், "நீ எமக்கு என்ன
முறையையுடையையோ? " என்று சினத்தால் கூறி நீங்குவோளாகிய
நின் தேவியின் கையிலுள்ளது; எமக்கு என்றது தன் பெருமிதந்
தோன்றக் கூறியது (சிலப். 20 : 12. அரும்பத.); "தொடிய
வெமக்குநீயாரை" (கலித். 88 : 3). கையதை; ஐகாரம்: அசைநிலை.
சிறுசெங்குவளை கையது என்க; கையது: குறிப்பு முற்று.

     25-6. கோபித்த பார்வையொடு அக் குவளைமலரை நீ
நின்பால் விரையப் பகுத்துக் கொள்ளுதலை மாட்டாயாயினாய்.

     26-7. பகுத்துக்கொள்ளுதலை எவ்வாறு வல்லையாயினாய்; நின்
கண்ணி வாழ்வதாக. கண்ணியை வாழ்த்தல்: பதிற். 56 : 3; "வார்
கழல் வேந்தே வாழ்கநின் கண்ணி" (மணி. 5 : 28)

     28-9. மற்ற நான்கு பூதங்களும் விரிதற்குக் காரணமான பெரிய
ஆகாயத்தில் பகற்பொழுதைச் செய்யும்பொருட்டுச் சுடுகின்ற
கிரணங்கள் விளங்குகின்ற அச்சம் பொருந்திய சூரியனது.

     30. நிறம் விளங்கின தன்மையைக் கொண்ட: உருபு -
உருவமுமாம்.

     31. வான்றோய் வெண்குடை வேந்தர்தம் எயில் - வானைத்
தோயும் உயர்ந்த வெண்குடையையுடைய பகைவேந்தருடைய
மதில்களை.

     வண்ணங்கொண்ட (30) வேந்தர் (31) என்க.

     எயிலைப் (31) பாஅல் (26) யாங்குவல்லுநையோ (27) என
இயைக்க.

     இச்செய்யுளில் ஒன்றற்கு ஒன்று முரண்பாடாகத் தோற்றம்
இருவகைச் செய்திகள் சொல்லப்பட்டன. சேரன் பிறர்பால் இரக்கும்
இயல்பினன் அல்லனாயினும் ஊடிய தேவியின்பால் சிறு
செங்குவளையை இரப்பவனானான்; பகைவருடைய பெரிய
மதில்களைக் கைக்கொள்ளும் வன்மையை யுடையவனாயினும் தன்
தேவியினிடமிருந்து சிறு செங்குவளையையும் கொள்ளும்
வன்மையிலனானான்.

     29-31. சினங்கொண்ட அரசர்க்குச் சூரியன் உவமை: "ஊழியிற்
சினவும், பருதி மண்டில மெனப்பொலி முகத்தினன்" (கம்ப.
வருணனை வழி. 15). பி - ம்) 6. என்னாது. 17. உயலுங். 18.
பேரிலரிவை. 20. பல்செல், பல்செங். 22. எறியரோச்சிய.
27.வல்லினையோ (2)


         1முருகு. 212, உரை.

          2பொருந. 135 - 6.

          3தொல். எச்ச.49.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

2. சிறு செங்குவளை
 
52.கொடி நுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து
வடிமணி நெடுந்தேர் வேறுபுலம் பரப்பி
அருங்கலந் தரீஇயர் நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கந் திசைதிரிந் தாங்கு
 
5மையணிந் தெழுதரு மாயிரும் பஃறோல்
மெய்புதை யரணமெண் ணாதெஃகு சுமந்து
முன்சமத் தெழுதரும் வன்க ணாடவர்
தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க
உயர்நிலை யுலக மெய்தினர் பலர்பட
  
10நல்லமர்க் கடந்தநின் செல்லுறழ் தடக்கை
இரப்போர்க்குக் கவித லல்லதை யிரைஇய
மலர்பறி யாவெனக் கேட்டிகு மினியே
சுடரும் பாண்டிற் றிருநாறு விளக்கத்து
முழாவிமிழ் துணங்கைக்குத் தழூஉப் புணையாகச்
 
15சிலைப்புவல் லேற்றிற் றலைக்கை குந்துநீ
நளிந்தனை வருத லுடன்றன ளாகி

உயவுங் கோதை யூரலந் தித்தி்
ஈரிதழ் மழைக்கட் பேரிய லரிவை
ஒள்ளித ழவிழகங் கடுக்குஞ் சீறடிப்
 
20பல்சில கிண்கிணி சிறுபர டலைப்பக்
கொல்புனற் றளிரி னடுங்குவன ணின்றுநின்
எறிய ரோக்கிய சிறுசெங் குவளை
ஈயென விரப்பவு மொல்லா ணீயெமக்
கியாரை யோவெனப் பெயர்வோள் கையதை
 
25கதுமென வுருத்த நோக்கமோ டதுநீ
பாஅல் வல்லா யாயினை பாஅல்
யாங்கு வல்லுநையோ வாழ்கநின் கண்ணி
அகலிரு விசும்பிற் பகலிடந் தரீஇயர்
தெறுகதிர் திகழ்தரு முருகெழு ஞாயிற்
 
30றுருபுகிளர் வண்ணங் கொண்ட 
வான்றோய் வெண்குடை வேந்தர்தம் மெயிலே.
 

துறை  : குரவை நிலை.
வண்ணம்  : ஒழுகுவண்ணம்
தூக்கு  : செந்தூக்கு
பெயர்   : சிறுசெங்குவளை.

1 - 12. கொடி நுடங்கு ............ கேட்டிகும்.

உரை :  அருங்கலம் தரீஇயர் -  பிற நாடுகளி  னின்று   அரிய
பொருள்களைக்   கொண்டு   வருதற்காக  ;  நீர்மிசை    நிவக்கும்-
கடலின்மேல்  மிதந்து  செல்லும்  ;  பெருங்கலி  வங்கம்  -  பெரிய
ஆரவாரத்தை  யுடைய  கப்பல்கள்  ;  திசை திரிந்தாங்கு - செல்லுந்
திசைகளிலே  திரிந்து செல்வது போல ; கொடி நுடங்கு நிலைய கொல்
களிறு  மிடைந்து  -  கொடிகள்  அசையும்  நிலையை யுடைய போர்
யானைகள்   செறிந்து  திரிதலால்  ;  வடிமணி  நெடுந்தேர்  வடித்த
வோசையினையுடைய  மணிகட்டிய  நெடிய  தேர்களை ; வேறு புலம்
பரப்பி  - வேறிடங்களில் பரவிச் செல்வித்து ; மையணிந்து எழுதருமா
இரும்பல்தோல் - மழைமேகம் போலக் கருத்தெழும் பெரிய பலவாகிய
கேடகங்களுடன்  ;  எஃகு  சுமந்து வேலும் வாளும்  ஏந்திக்கொண்டு ;
முன்  சமத்து - போரின் முன்னணியில் நின்று பொருதலை  விரும்பி ;
மெய்புதை  அரணம்  எண்ணாது  -  மெய்யை  மூடும் கவசத்தையும்
வேண்டுமென் றெண்ணாமல் விரைந்து ; எழுதரும் வன்கண் ஆடவர்-
செல்லும்    வன்கண்மையினையுடைய போர்வீரரது ;    தொலையாத்
தும்பை - தோலாமைக் கேதுவாகிய தும்பைமாலை ; தெவ்வழி விளங்க
-   பகைவர்  படையிடையே  விளங்கித்  தோன்றப்    பொருதலால்;
பலர்பட  பகைவர்  பலர்  உயிர்  துறக்கவும்  ;  உயர்நிலை  யுலகம்
எய்தினர்  - அவரனைவரும் வீரர் புகும் துறக்கத்தை  அடைந்தாராக;
நல்லமர்  கடந்த  -  இவ்வாறு  நல்ல போர்களை வஞ்சியாது செய்து
மேம்பட்ட  ;  நின்  செல்  உறழ் தடக்கை - நின்னுடைய இடியினும்
மாறுபட்ட   பெரிய   கை;   இரப்போர்க்குக்  கவிதல்   அல்லதை-
இரவலர்க்கு    ஈதற்    பொருட்டுக்   கவிதலை     யறியுமேயன்றி;
இரைஇய-பிறர்     எவரையும்     இரத்தற்    பொருட்டு;   மலர்பு
அறியா-மலர்தலை  யறியாது  ; எனக் கேட்டிகும் - என்று சான்றோர்
பலரும் கூறக் கேட்டிருக்கின்றோம் எ - று.
 

கொடி     யேந்தி யசைந்து  செல்லும்  யானைக்கும் தேர்கட்கும்
கடற்பரப்பிற்  செல்லும்  கலத்தை  உவமங்  கூறல்  சான்றோர் மரபு.
“வளை  மேய்  பரப்பின், வீங்குபிணி நோன்கயி றரீஇதை புடையூஉக்,
கூம்பு  முதன்  முருங்க  வெற்றிக்  காய்ந்துடன், கடுங்காற்  றெடுப்பக்
கல்பொருதுரைஇ, நெடுஞ்சுழிப்பட்ட நாவாய் போல, இருதலைப் பணில
மார்ப்பச்   சினஞ்  சிறந்து,  கோலோர்க்  கொன்று  மேலோர்  வீசி,
மென்பிணி  வன்றொடர்  பேணாது காழ்சாய்த்துக், கந்துநீத் துழிதரும்
கடாஅ  யானையும்” (மதுரை. 375 -83) என்றும், “ஊர்ந்த தேரே, சிறு
குடிப் பரதவர் பெருங்கடல் மடுத்த, கடுஞ்செலற் கொடுந்திமில் போல”
(அகம்.  330)  என்றும்  சான்றோர் கூறுதல் காண்க. களிறும்  தேரும்
வேறுவேறு  அணிவகுக்கப்பட்டு  வேறுவேறு  நெறியிற்  சேறல் பற்றி,
“பெருங்கலி  வங்கம்  திசை  திரிந்தாங்கு”  என்றார்.  திரிந் தாங்குக்
கொல்  களிறு  மிடைந்து என மாறிக் கூட்டுக” என்பது பழைய வுரை.
தம் நாட்டிலின்றி வேறு நாட்டில் உளவாய்க் கடல் கடந்து கொணர்தற்
குரியவா   யிருத்தல்பற்றி,   “அருங்கலம்”   எனப்பட்டன.  அருமை
நன்மை மிகுதிபற்றி யென்றுமாம் ; “விழுமிய நாவாய் பெருநீரோச்சுநர்,
நனந்தலை  தேஎத்து  நன்கல  னுய்ம்மார்”  (மதுரை. 321 - 2) எனச்
சான்றோர்  கூறுப. ஒரு திசையே நோக்கிப் பல நெறியாற் சேறல்பற்றி,
“திசை  திரிந்து”  என்றார்.  மை,  கருமுகில்,  மா,  கருமை. கேடகம்
கருமைநிற   முடைத்தாதல்பற்றி,   “மாயிரும்   பஃறோல்”  என்றும்,
தோலாற்  செய்யப்படுதலின்  தோலென்றும் கூறப்பட்டது. “மழையென
மருளும்  பஃறோல்”  (புறம்.  17)  என்று  வருதல்  காண்க. தோலும்
எஃகும்  சுமந்து  எண்ணா  தெழுதரும் ஆடவர் என இயைக்க. இனி,
பஃறோல்  மெய்புதை  யரணமாதலை  யெண்ணாது  என இயைத்தல்
பொருந்தாது    ;    என்னை,   தோலையின்றி,   வேலும்  வாளும்
ஏந்தாராதலாலும், தோலுடைமை  யால்  வேறு கவசம் வேண்டாவென்
றெண்ணற்கு  இடமுண்மையாலும்,  தோலேந்தாது  சேறல் படைமடமா
மாதலாலு  மென்க.  மெய்புதை  யரணம், இரும்பினாற் செய்யப்படும்
கவசம்;  புலித்தோலாற்  செய்யப்படுதலு  முண்டு.  “புலி நிறக்கவசம்”
(புறம்.  13)  என  வருதல்  காண்க. “மண்டமர் நசையொடு கண்படை
பெறாது”  (முல்லை.  67)  செருக்கிச்  செரு  வேட்ட  உள்ளமுடைய
ரென்பது  தோன்ற, “முன் சமத் தெழுதரும் வன்கணாடவர்” என்றார்.
அரண     மெண்ணாமைக்கும்    முன்  சமத்து எழுதருதற்கும் ஏது 
இஃதென்பார்  “வன்கண் ஆடவர்” என்று சிறப்பித்தார். தெவ்வரொடு
பொருமிடத்துத்     தும்பை   சூடிப்  பொருது  வெல்வது  தோன்ற,
“தொலையாத்    தும்பை     தெவ்வழி     விளங்கி”    யென்றார்.
தோலாமையை விளக்கும் தும்பைப்  போர்  என்றற்கு, “தொலையாத்
தும்பை” எனல் வேண்டிற்று. விளங்க என்புழிக்  காரணம்  காரியமாக
உபசரிக்கப்பட்டது.       தெவ்வரிடையே    பட்டவர்  பலராயினும்,
அவரனை      வரும்      துறக்க      வின்பம்       பெற்றனர்
என்பார், “உயர்நிலை யுலக மெய்தினர் பலர்பட” என்றார். உயர்நிலை
யுலகம்,  துறக்கம்  ;  “உயர்நிலை  யுலகத்துச்  செல்லாது” (பதிற். 54)
எனப்  பிறாண்டும்  கூறுதல்  காண்க.  தெவ்வழிப் பலர்பட வெனவே,
தன்  படையில்  பட்டவர்  இலர்  என்பதாம். இருப்பின் அவர் மிகச்
சிலரே.     தெவ்வழியிற்     பலர்படக்     கொன்று      வெனிற்
யெய்தியதனோடமையாது  அப் பலர்க்கும் உயர்நிலை யுலகம் வழங்கி
இன்புறுத்துதல் பற்றி, சேரலாதன் செய்த போரை, “நல்லமர்” என்றும்,
அதனை   யறத்தாற்றிற்  பொருது  கடக்கும்  அவன்   வன்மையைச்
“செல்லுறழ்  தடக்கை”  எனக் கைம்மேல் வைத்தும் கூறினார், செல்-
இடி  ;  “செறுநர்த்  தேய்த்த  செல்லுறழ்  தடக்கை” (முருகு. 5) என
நக்கீரரும் கூறுதல் காண்க.
   

இவ்வாறு  போருடற்று முகத்தால் தனக்கழிந்து உயிர் துறந்தார்க்கு
உயர்   நிலையுலகமும்,   தன்னரு   ணோக்கம்   பெற்று  இரக்கும்
இரவலர்க்குப்  பெரும்  பொருளும் வழங்கும் சேரலாதனது கைகளின்
சிறப்பைத்    “தடக்கை”    என்று    குறித்தாராயிற்று.  சேரலாதன்
இரவலர்க்குக்  கொடை  வழங்கு மாற்றால் அத் தடக்கையைக் கவிப்ப
துண்டே  யன்றிப்  பிறரை  இரந்தறியான். என்றற்கு “இரப்போர்க்குக்
கவிதலல்லதை   இரைஇய  மலர்  பறியா”  என்றார்.  இதனை  யாம்
கண்ணிற்  கண்டே  மில்லையாயினும்  பிறர் பொய்யாகவேனும் கூறக்
கேட்டிலோம்  என்றற்கு,  “இரைஇய  மலர் பறியாவெனக் கேட்டிகும்”
என்றார். பிறரைப் பொருள் வேண்டி யிரவானாயினும் துணை வேண்டி
யானும் குறை யிரந்தறியா னென்பதும் “இரைஇய” எனப் பொதுப்படக்
கூறியதனால்   பெற்றாம்.   இன்ன   இயல்புடையான்பால்  இவ்வாறு
கூறலாகா  தாயினும்,  தன்னை  “எறிய  ரோக்கிய  சிறு செங்குவளை
ஈயென”த்  தன்  காதலிபால் அவன் ஊடலுணர்த்துமாற்றால் இரப்பது
கூறுகின்றாராதலின்,  அக்கருத்தினை  முடித்தற்கு  உபகாரப்படுவதால்
இவ்வாறு கூற லமையுமாறு உணர்க.

13 - 24. இனியே .......................கையதை.

உரை  : இனி  -  இப்பொழுது  ;  சுடரும்  பாண்டில்  திருநாறு
விளக்கத்து - ஒளிர்கின்ற கால் விளக்கின் திரு விளங்கும் ஒளியிலே ;
முழா  இமிழ்  துணங்கைக்கு  -  முழவு  முழங்க ஆடும் துணங்கைக்
கூத்தின்  கண்  கை  பிணைந்தாடும்  மகளிர்க்கு ;தழூஉப் புணையாக
கைகோத்துக்    கொள்ளும்   புணையாக;   சிலைப்பு   வல்லேற்றின்
சிலைத்தலையுடைய  வலிய  ஏற்றினைப்  போல ; தலைக்கை - தந்து
முதற்கை   கொடுத்து   ;  நீ  நளிந்தனை  வருதல்  -  நீ  செறிந்து
வந்தமையின் பொருட்டு ; உயவுங் கோதை - அசைகின்ற  மாலையும்,
ஊரல்  அம் தித்தி - பரந்த தேமலையும் ;  ஈர்  இதழ்  மழைக்கண்-
குளிர்ந்த  இமைகள் பொருந்திய குளிர்ந்த கண்களையும் ; பேர் இயல்
அரிவை - பெரிய இயல்பையு முடைய நின் மனைவியாகிய  அரிவை;
உடன்  றனளாகி  -  ஊடலுற்று ; ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும்
சீறடி  -  ஒள்ளிய  இதழ் விரிந்த பூவை யொக்கும் சிறிய அடிகளிலே
அணிந்துள்ள  ;  சில  பல்  கிண்கிணி  - இரண்டாகிய பல மணிகள்
கோத்த   கிண்கிணியானவை   ;   சிறு   பரடு  அலைப்ப  - சிறிய
பரட்டின்கட்  கிடந்து  ஒலிக்க  ;  கொல்புனல்  தளிரின்  - கரையை
யலைக்கும்  நீர்ப்பெருக்கால்  அசையும்  தளிர் போல;  நடுங்குவனள்
நின்று  - வெகுளியால் வாயிதழ் துடிப்ப நடுங்கி நின்று ; நின்  எறியர்
ஓக்கிய  சிறு  செங்குவளை  -  நின்மேல் எறிதற்காக வோச்சிய சிறிய
செங்குவளை மலரை ; ஈ என இரப்பவும் - ஈவாயாக என  இருகையும்
விரித்து  நீ  இரக்கவும்  ;  ஒல்லாள்  -  சிவப்பாறாது  ;  நீ எமக்கு
யாரையோ  என  - நீ எம்பால் அன்புடையை யல்லை யன்றே என்று
சொல்லி  ;  பெயர்வோள்  கையதை  -  நின்  முன்னின்று  நீங்கும்
அவளுடைய கையகத்தே இருந்தது, காண் எ - று. 
  

பாண்டில், கால்விளக்கு;“இடவரை யூன்றிய கடவுட்  பாண்டில்”(1)
என  இளம்பெருமானடிகளும்  கூறுதல் காண்க. அப் பாண்டில் சுடர்
விட்டெரிதலால்    உண்டாகும்    விளக்கம்   “திருநாறு  விளக்க”
மெனப்படுகிறது.  திருநாறு  விளக்கம்  என்றது,  “செல்வ முடைமை
யெல்லாம்   தோன்றும்   விளக்கு”   எனப்  பழைய வுரை  கூறும்.
துணங்கையாடற்கேற்ப     முழவு     முழங்குதலால்    “முழவிமிழ்
துணங்கைக்கு”   என்றார்.   துணங்கை  யெனவே, அதனை  யாடும்
மகளிரென்பது     வருவிக்கப்பட்டது.    ஏர்க்களத்தில்   மகளிரும்
போர்க்களத்தில்   வீரரும்   பேய்   மகளிரும்  இத்துணங்கையாடுப.
ஊரிடங்களிலும்  இரவில்  பாண்டில்  விளக்கின்  ஒளியில் மகளிரும்
ஆடவரும்   துணங்கை   யாடுவது   உண்டு.   மகளிர் கைபிணைந்
தாடுமிடத்து  ஆடவர் முதல்வராய்க்  கை  தந்து ஆடல் தொடங்குத்
திறத்தை,   தலைக்கை   தருதல்   என்பர்.   அதனைச்   சேரமான்
செய்வதுபற்றி,  “சிலைப்பு  வல்லேற்றின்  தலைக்கை தந்து” என்றார்.
சிலைத்தல்  ஏற்றிற்கு  இயல்பு  ; “ஆமா நல்லேறு சிலைப்ப” (முருகு.
315)  எனப் பிறரும் கூறுதல் காண்க. “மெல்லிணர்க் கண்ணி மிலைந்த
மைந்தர்,  எல்  வளை  மகளிர்  தலைக்கை  தரூஉந்து” (புறம்.  24)
என்பதனால்  ஆடவர் மகளிர்க்குத் தலைக்கை தருமாறு உணரப்படும்.
நளிந்தனை   வருதல்,   கூடி  யிருந்து  வருதல்,  நளிதல்,  செறிதல்
முருகனும்    இவ்வாறு   மகளிரொடு   விளையாடி   யொழுகுதலை,
“மென்றோட்  பலபிணை  தழீஇத்  தலைத்தந்து,  குன்றுதோ றாடலும்
நின்றதன்  பண்பே”  (முருகு 216 - 7) என்பதனா லறியலாம். பழைய
வுரைகாரரும்  நளிதல்  என்றற்கு,  “தன்னைச் சேவிக்கும் மகளிரொடு
குரவை யாடிச் செறிதல்” என்பர்.

சேரலாதன்   துணங்கை மகளிரொடு விளையாடிச் செறிந்து வருதல்
அவன்  மனைவி  ஊடற்கு ஏதுவாயினமையின், “நளிந்தனை   வருதல்
உடன்றனளாகி”    என்றார்.    நளிந்தனை,    “தந்தனை சென்மோ”
(ஐங்.159)என்புழிப்போல முற்றெச்சம்.  வருதல்   என்புழிக்  குவ்வுருபு
விகாரத்தால்  தொக்கது.  உடலுதல்,  ஊடுதல்  “உடலினெ னல்லேன்
பொய்யா   துரைமோ”     (ஐங். 66)    என்றாற்போல. “கிழவோன்
விளையாட்டாங்கு மற்றே” (தொல். கற்பு. 23)  என்றதனால்,  அரசமா
தேவி    யூடற்கு     அவன்      விளையாட்டுக்   காரணமாயிற்று.
உய்வுதல்,      ஈண்டு    அசைதல்   மேற்று.   ஊரல்,    பரத்தல்;
“ஊரலவ்வா  யுருத்த தித்தி, (அகம். 326) என வருதல் காண்க. அம்:
அல்வழிச்  சாரியை. தித்தி, தேமல், வரியுமாம் ; “நுணங்கெழில் ஒண்
தித்தி”  கலி.  (60)  என்பதன் உரைக்கண்  நுண்  தித்தி யென்றற்கு,
“்ஒள்ளிய  வரி” யென்று நச்சினார்க்கினியர் கூறுவர். கற்பும் காமமும்
நற்பா லொழுக்கமும் முதலிய குண மாண்புகளெல்லாம் உடைமைபற்றி
அரசியை, “பேரிய  லரிவை”  யென்றார்.  ஊடற்காலத்தும் உள்ளத்து
வெகுளியை மறைத்துக்  குளிர்ந்த  நோக்கமே  செய்தலின்,  “ஈரிதழ்
மழைக் கண் பேரிய லரிவை” என்றார்.  
 

 சில     வென்பதும்  பன்மை  யாயினும்  சில  விறந்தவற்றையே
பலவென்னும்  வழக்குப்பற்றி,  இரண்டாதல் தோன்ற, “சில கிண்கிணி”
யென்றும்,  மணிகளின்  பன்மை  தோன்றப்  “பல்  சில  கிண்கிணி”
யென்றும்   சிறப்பித்தார்.  பரடு,  அடியின்  மேல்பக்கம்  அதன்மீது
காலைச்  சூழ்ந்து  கிடத்தலின்,  “பல்சில கிண்கிணி சிறுபர டலைப்ப”
என்றார்.   கொங்கு   வேளிரும்,   “பைம்பொற்  கிண்கிணி  பரட்டு
மிசையார்க்கும்,  செந்தளிர்ச் சீறடி” (பெருங். 2, 3 : 82 - 6) என்றார்.
இதனால்   விரைந்து   நடத்தல்  பெற்றாம்  ; பெறவே,  அரசியைச்
சேரலாதன் மேலும் செல்லா வகை தடுத்தலும் அவன் வெகுளி சிறப்ப,
அதனைக் காக்கும் வன்மையின்மையின் நுதல் வியர்ப்ப வுடல் நடுங்க
நிற்றல்   தோன்ற,  “கொல்  புனல்  தளிரின்  நடுங்குவனள் நின்று”
என்றார்.  “தீயுறு  தளிரின்  நடுங்கி,  யாவது  மிலையான் செயற்குரி
யதுவே” (குறுந். 383) எனச் சான்றோர் கூறுவர்.

ஒப்பனை     செய்யப் பெற்ற செல்வமகளிர் காதில்   அசோகின்
தளிரணிந்து   கையில்   குவளை  செங்கழுநீர்  முதலிய  பூக்களைப்
பிடித்திருப்பது  மரபு.  ஈண்டு  அரசமாதேவி  கையில் செங்குவளைப்
பூவை  வைத்தி்ருந்தவள்  புலவியெய்தியதும்  அதனை   அரசன்பால்
எறியலுற்றாளென்பார்,   “நின்   எறியரோக்கிய   சிறுசெங்  குவளை”
என்றார்.  “ஒண்  பூம்  பிண்டி  யொருகாது  செரீஇ”  (குறிஞ்சி. 119)
என்றும்,  புலந்த  மகளிர்  பூக்களை  யெறிதலை “குண்டல மிலங்கப்
போந்து  இனமலர்  சிதறி  யேகினாள்”  (சீவக. 1026) என்றும், “தாள்
நின்ற குவளைப் போதின் தாதகம் குழைய மோந்து” (சூளா. கல்யா.156)  
என்றும்   சான்றோர்   கூறுதல்    காண்க.   இனிக்    கூந்தலில்
அணிந்திருந்த   செங்குவளை   கொண்டு  சேரலாதனை  எறியலுற்றா
ளென்றும்  ;  “குவளை  நாளும்  குவையிருங்  கூந்தல்” (குறுந். 300)
எனக் கூந்தலில் குவளையணியப்படுமாறு கூறப்படுதல் காண்க.

செங்குவளை மிக்க மென்மை யுடைத்தாதலின், அது தம்மேற்படின்
மெலிந்து  சாம்புமென் றஞ்சி, சேரலாதன் அதனைத் தனக்கு ஈயுமாறு
தன்   இருகைகளையும்   மலர்த்தி   இரந்தா  னென்பார்,  “ஈயென,
இரப்பவும்” என்றார். தன்னுயர்ச்சி தோன்றக் கொடுவென்றாதல், தனது
ஒத்த  அன்புடைமை  தோன்ற, தருக என்றாதல் கூறாது இழிந்தோர்க்
குரிய சொல்லால் அவளை மிக  வுயர்த்திக் கூறும் கருத்துத்  தோன்ற,
“ஈ” என்று  இரந்தா     னென்ற   வாறாயிற்று.  ஈத்த  வழி,  தான்
அவனது   பரத்தைமைக்  கியைந்தவாறாம்.  அதுவேயுமன்றி  அவன்
தன்னை    எளிதிலடைதற்கு    வாயிலாமென்னும்  கருத்தால்,  ஈயா
ளாயினாளென்றற்கு, “ஒல்லாள்”  என்றார்.  ஒல்லுதல்,   உடன்படுதல்,
“ஒல்லேம்     போல்யா    மதுவேண்டுதுமே”    (ஐங். 88) என்றும்,
“ஒல்லேன் போல வுரையா டுவலே”(நற்.124) என்றும் வருதல்  காண்க.
இரப்பவும் ஒல்லாள் என முடிக்க. 
 

  “நினக்கு   எம்பால்  அன்பில்லை யாதலால் எம்பால் நீ என்ன
முறைமையுடையை”  எனப் புலந்து கூறுவாள், பல கூறாது “நீ எமக்கு
யாரையோ”  எனக் கூறினாள் ; “யாரைநீ யெம்மில் புகுதர்வாய்” (கலி.
98)  எனப்  பிறரும்  கூறுதல்  காண்க.  எமக்கு என்றது தன் வயின்
உரிமையும்,  நீ  யாரையோ  என்றது  அவன்  வயிற் பரத்தைமையும்
குறித்து   நின்றன   என்று   கூறியவள்,  அவன்  முன்  நின்றவழி,
ஆற்றாமை   வாயிலாகத்   தன்னை  யெய்துதற்கு  இடனா  மென்று
“பெயர்வோள்”   என்றும்,   அவனால்   நயக்கப்பட்ட  குவளையை
அவன்பாலுள்ள காதலன்பால் எறியாது கையகத்தே கொண்டிருக்குமாறு
தோன்றக்  “கையதை”  யென்றும்  கூறினார்.  கையதை  என்புழி, ஐ
யென்னும் இடைச்சொல் அசை நிலை.

இனிப்   பழைய வுரைகாரர், அவிழக மென்றதற்கு, “அவிழ்ந்த பூ”
என்றும்,  சிறு  செங்குவளை  யென்றதற்குத், “தான் எறிதற் கோக்கிய
சிறியதொரு  செங்குவளை  யெனச்  சிறுமையால்  அவள்  மென்மை
கூறிய  சிறப்பான்  இதற்குச்  சிறு  செங்குவளை யென்று பெயராயிற்”
றென்றும் கூறுவர்.

இரப்பவும்  என்ற செயவெனெச்சத்துக்கும் பழைய உரைகாரர் வேறு
முடிபு  கூறுவாராய்,  அதனைக்  “கையதை  யென்னும் முற்றுவினைக்
குறிப்பொடு   முடிக்க”  என்றும்,  “சிறு  செங்குவளை  பெயர்வோள்
கையதை  என  முற்றாக  அறுத்து அது எனப் பின் சுட்டிற் றாக்குக”
என்றும் கூறுவர்.

25 - 26. கதுமென................வல்லா யாயினை. 

உரை :  கதுமென உருத்த நோக்கமொடு   - சட்டென வெகுண்ட
பார்வையுடனே  ;  நீ  அது பா அல் வல்லா யாயினை - நீ அச் சிறு
செங்குவளை நின்பாற் பகுத்துக்கொள்ளமாட்டாயாயினை எ - று.

பிறரால்    இரக்கப்படுவதன்றிப் பிறர்பால் இரத்தற்குரியனல்லாத நீ
இரந்து  கேட்கவும்,  ஈயாமையே  யன்றி, “யாரையோ நீ எமக்கு” என
வெகுண்டுரைத்து   எதிரே  நில்லாது  பெயர்ந்தமையின்,  முன்போல்
அவளைப்  பெயர  விடாது  தகைந்து  அதனைக் கவர்ந்து கோடற்கு
வேண்டும்.   வெகுளிகொள்ளினும்  குற்றமாகாதாகவும்  அது  செய்யா
தொழிந்தனையென்பார்,  “கதுமென  வுருத்த  நோக்கமொடு  அது நீ
பாஅல்  வல்லாயாயினை”  என்றார்.  எனவே,  இச்  செயலாலும்  நீ
மென்மையுடையை   யென்பதே  தெரிகின்ற  தென்பது  கூற்றெச்சம்.
உருத்த       கண்டார்க்கு      உட்குவினைப்    பயத்தலையுடைய  
என்றுமாம்.     உருத்த    நோக்கமொடு     அதனைக்    கவர்ந்து
கொள்ளின்,     கழிசினத்துக்கு   எளிதில்    இடந்  தரும் மெல்லிய
வுள்ளமுடைய  னென்றாகி  நல்லோரது  இகழ்பாட்டினைப் பெறுவிக்கு
மாகலின்,  அச்  சினத்தைத்  தன்  அறிவின்  திண்மையால் தோன்றா
வகையிற்   கெடுத்து  அன்புவழி  நின்ற   வல்லாண்மையை  விதந்து
“வல்லா யாயினை” யென்றா ரென வறிக.
 

27 - 31. பாஅல்................................எயிலே.

உரை : அகல் இரு விசும்பில் - அகன்ற நீலவானத்தின் கண்ணே;
பகல்  இடம்  தரீஇயர் - பகற்காலத்துக்கு இடமுண்டாதற்  பொருட்டு;
தெறு கதிர் திகழ் தரும் உரு கெழு ஞாயிற்று - சுடுகின்ற கதிர்களைப்
பரப்பி  விளங்கும்  நிறம் பொருந்திய ஞாயிற்றினுடைய ; உருபு கிளர்
வண்ணம்   கொண்ட  - உருவத்தையும் விளங்குகின்ற தன்மையையும்
கொண்ட;    வெண்   குடை    வேந்தர்தம்    -   வெண்கொற்றக்
குடையையுடையை  வேந்தர்களின்  ;  வான்  தோய்  எயில் - வான்
அளாவ  வுயர்ந்த மதில்களை ; பாஅல் யாங்கு வல்லுநையோ-உருத்து
நோக்கிநின்   பால்  கவர்ந்துகொள்ள எவ்வாறு வல்லையாயினையோ;
நின் கண்ணி வாழ்க - நின் கண்ணி வாழ்வதாக எ - று.

ஞாயிற்று  உருபு கிளர் வண்ணங்கொண்ட வேந்தர்தம் வான்றோய்
எயில்  பா  அல்  யாங்கு  வல்லுநையோ,  நின் கண்ணி வாழ்க என
இயையும்.

அகலிரு    விசும்பென்றற்கு, “தன்னை யொழிந்த நான்கு பூதமும்
தன்னிடத்தே  அகன்று  விரிதற்குக் காரணமாகிய ஆகாயம்” என்றும்,
“அகலிரு  விசும்பென்பது  நோய்தீரு மருந்துபோல் நின்ற” தென்றும்
கூறுவர்  நச்சினார்க்கினியர்  (பெரும்பா.  1) ஞாயிற்றின் தோற்றத்தால்
உலகில்  பகற்போது உண்டாதல் பற்றி, “பகலிடம் தரீஇயர் தெறு கதிர்
திகழ்தரும்  உருகெழு  ஞாயிறு”  என்றார்.  உரு,  நிறம்.  ஏழுவகை
நிறங்களும்  ஒருங்கு  கலந்தாகிய ஒண்ணிற முடைமையின், உருகெழு
ஞாயிறென்றல்  அமையு  மென்க.  உருபு,  வடிவு, வண்ணம் ஈண்டுத்
தன்மைமேற்று.  அஃதாவது இருள் கடிந்து ஒளி பெருக்குதல.் உருபும்
வண்ணமும்   என   எண்ணும்மை   விரித்துக்   கொள்க.  கொண்ட
வென்னும்   பெயரெச்சத்தை   வெண்குடையொடு  முடிக்க.  உருபும்
வண்ணமும்கொண்ட    குடை,  வான்றோய்  குடையென  இயையும்.
பழையவுரைகாரர்    வண்ணத்தைத்    தன்மையென்றே    கொண்டு,
“வண்ணம்  கொண்ட  வேந்தரெனக் கூட்டி ஞாயிறுபோலக் கோபித்து
எதிர்நின்ற  வேந்தரென  வுரைக்க”  என்றும், உருவு கிளர் வண்ணம்
என்றதற்கு “நிறம் விளங்கின தன்மை” என்றும் கூறுவர்.

ஒருகாலைக் கொருகால் தேய்தலும் வளர்தலுமின்றி எந்நாளும் ஒரு
தன்மைத்தாய வடிவும் பகை கடிந்து புகழ்நாட்டும் கொற்றமும் விளங்க
நிற்றல்  பற்றி,  “ஞாயிற்று  உருபு  கிளர்  வண்ணம் கொண்ட வெண்
குடை”  யென்றார்.  தன்  ஒளியும்  வெம்மையும்  நிலவும் பொருட்டு
ஞாயிறு  தன்  தெறுகதிர் திகழ்தரும் என்றதனால், இவ்வேந்தரும் தம்
ஒளியும்    பொருமுரணும்    நிலவுதற்பொருட்டுச்     சேரலாதனை
எதிர்ப்பவர்   என்பது   பெற்றாம்.   வேந்தரது செயல் அவர்க்குரிய
குடைமேலேற்றிக் கூறப்பட்டதாம்.
 

காதலிபால் கொள்ளாத உருத்த நோக்கத்தை எயில் கொள்ளுமிடத்து
ஒழியாது  மேற்கோடல்   பற்றி,  ஈண்டு  வருவித்துக்கொள்ளப்பட்டது.
மகளிர்  கையகத்திருந்த   சிறு  செங்குவளையை  மிக  நயந்து  அது
குறித்து  ஈயென  விரைந்து   கேட்டு  மறுக்கப்பட்ட  வழியும்  சினஞ்
சிறிதுமின்றி   வன்மையின்றி    மெலிந்து  நின்ற  நீ  ஞாயிறுபோலும்
தெறலும்    வெம்மையுமுடைய  வேந்தர்  காக்கும்  மதிலை  எளிதிற்
கொள்ளும்   வலியுடையோனாய்  இருத்தலின்,  ஆங்கு மனையகத்தே
காணப்படாத   வன்மை, ஈங்குத் தானே வெளியாதற்கு ஏது வொன்றும்
தெரிந்தில தென்பார், “பாஅல் யாங்கு வல்லுநையோ” என்றார்.

இதனால்   ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தன்பால் அன்புடையார்
பால்   கொள்ளும்  எளிமையும்  மென்மையும்  எடுத்தோதி,  அவன்
பகைவரை   யடர்த்துப்   பலர்   உயர்நிலை   யுலகமெய்த  அவரது
எயிலைக்கொள்ளும்     வன்மையைச்    சிறப்பித்தோதி   வாழ்த்தக்
கருதுகின்றா ராதலால், “வாழ்க நின் கண்ணி” யென்றார்.

இதுகாறும்     கூறியது,     “நல்லமர்க்   கடந்தநின்   தடக்கை.
இரப்போர்க்குக்   கவித   லல்லதை  இரைஇய  மலர்  பறியாவெனக்
கேட்டிகும்;  இனி,  துணங்கைக்குத்  தலைக்கை  தந்து நீ நளிந்தனை
வருதல்  உடன்றனளாகி,  நின்னரிவை  நின் எறியர் ஓக்கிய சிறுசெங்
குவளையானது,  நீ  ஈ  யென்று  இழிந்தோன்  கூற்றான்  இரப்பவும்
நினக்கு  ஈந்து  போகாது  நின்  இரப்பிற்கு  ஒல்லாளாய்,  நீ எமக்கு
யாரென்று   பெயர்வோள்  கையதாயிருந்தது;  அவ்வாறு  நீ  இரந்து
பெறாது  அவளை  உருத்த நோக்கமொடு அதை அவள்பால் நின்றும்
பகுத்துக்கொள்ளமாட்டாயாயினை;  அவ்வாறு அது பகுக்கமாட்டாத நீ
வேந்தர்கள்  எயிலைப்  பகுத்துக்கோடல்  யாங்கு  வல்லையாயினாய்;
நின்  கண்ணி  வாழ்க என மாறி வினைமுடிவு செய்க. பாஅல் யாங்கு
வல்லுநையோ  என்றதன்  முன்  எயில் என்பது கூட்ட வேண்டுதலின்
மாறாயிற்று” என்றும்,

“இதனாற்     சொல்லியது,  அவன் கைவண்மையொடும் வென்றி
யொடும்  படுத்து  அவன்  காமவின்பச்  சிறப்புக்  கூறியவாறாயிற்று”
என்றும்,

“இப்     பாட்டு,  துணங்கையாடுதல் காரணமாகப்  பிறந்த வூடற்
பொருட்டாகையால்    குரவைநிலை    யென்றவாறாயிற்று”  என்றும்
பழையவுரை கூறும்.


 மேல்மூலம்