53. |
வென்றுகலந்
தரீஇயர் வேண்டுபுலத் திறுத்தவர்
வாடா யாணர் நாடுதிறை கொடுப்ப
நல்கினை யாகுமதி யெம்மென் றருளிக்
கல்பிறங்கு வைப்பிற் கடறரை யாத்தநின் |
5 |
தொல்புகழ்
மூதூர்ச் செல்குவை யாயிற்
செம்பொறிச் சிலம்பொ டணித்தழை தூங்கும்
எந்திரத் தகைப்பி னம்புடை வாயிற்
கோள்வன் முதலைய குண்டுகண் ணகழி
வானுற வோங்கிய வளைந்துசெய் புரிசை |
10 |
ஒன்னாத்
தெவ்வீர் முனைகெட விலங்கி
நின்னிற்
றந்த மன்னெயி லல்லது
முன்னும் பின்னுநின் முன்னோ ரோம்பிய
எயின்முகப் படுத்தல் யாவது வளையினும்
பிறிதாறு சென்மதி சினங்கெழு குருசில்
|
15 |
எழூஉப்புறந்
தரீஇப் பொன்பிணிப் பலகைக்
குழூஉநிலைப் புதவிற் கதவுமெய் காணிற்
றேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி
வேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுதல்
ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி |
20 |
மேம்படு வெல்கொடி
நுடங்கத்
தாங்க லாகா வாங்குநின் களிறே. |
துறை
- செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும்
தூக்கும் அது. பெயர் - குண்டுகண்ணகழி (8)
(ப
- ரை) 1.
அவரென்றது அவ்வாறு இறுக்கும்படி நின்னொடு
எதிர்ந்த அரசரென்றவாறு. 2. நாடு திறைகொடுப்பவென்றது நாட்டைத்
திறைகொடுப்பவென்றவாறு. திறைதரவென்றதற்குத் திறை
கொடுப்பவென்றது 1இடவழுவமைதி. நல்கினையாகுமதி எம் என்று (2)
திறை கொடுப்ப (3) எனக் கூட்டுக.
4.
வைப்பு - இடம். கடற்றையென இரண்டாவது விரிக்க.
சிலம்பும்
தழையும் (6) புரிசைக்கண் தங்கின (9) என்றது
2ஈண்டும் பொருவீருளீரேல் நும் காலிற் கழலினையும் அரையிற்
போர்க்குரிய உடையினையும் ஒழித்து இச்சிலம்பினையும்
தழையினையும் அணிமினென அவரைப் பெண்பாலாக
இகழ்ந்தவாறென்க.
இனி,
அவற்றை அம்மதிலில் வாழும் 3வெற்றிமடந்தைக்கு
அணியென்பாரும் உளர்.
8.
கோள்வன் முதலையவென்று முன்வந்த அடைச்சிறப்பான்
இதற்கு, 'குண்டுகண்
ணகழி' என்று பெயராயிற்று.9. வளைந்து
செய்புரிசை யென்பதனை வளையச்செய் புரிசையெனத் திரித்துக்
காலவழுவமைதியாகக் கொள்க.
வளைந்துசெய்புரிசை
(9) ஆகிய நின்னிற்றந்த மன்னெயில் 11)
என இருபெயரொட்டு.
11.
நின்னிற்றந்த மன்னெயிலென்றது நின்னாற் கொண்டு
பிறர்க்குக் கொடுக்கப்பட்ட மன்னெயிலென்றவாறு. கொடுத்த
வென்பதற்குத் தந்தவென்பது இடவழுமைதி. கொடுத்தவெனவே
கொண்டுகொடுத்தவெனக் கோடலென்பது போந்த பொருளாய்
விளங்கிற்று. தரப்பட்டவென்பதனைத் தந்தவெனச்
1செயப்படுபொருளைச் செய்ததுபோலச் சொல்லிற்றாக்குக.
மன்னெயிலல்லதென்புழி மன்னெயிற் கண்ணென ஏழாவது விரித்து
அதனைப் பின்வருகின்ற எயின்முகப் படுத்தல் (13) என்பதிடமாகப்
படுத்தலென்பதோர் சொல்வருவித்து அதனொடு முடிக்க.
12.
முன்னும் பின்னுமென்றது முன்னோர் தாங்கள்
இறப்பதற்கு முன்னும் இறந்ததற்குப் பின்னுமென்றவாறு.
பின்னோம்புதலாவது
முன்னோர் தமக்குப்பின்னும்
இவ்வரசாள்வாரும் நம்மைப்போல இவ்வாறு ஓம்புகவென
நியமித்துவைத்தல்.
13.
யாவதென்றது அஃது என்ன காரியம்? நினக்குத்
தகுவதொன்றன்றென்றவாறு.
16.
குழூஉநிலைப்புதவென்றது பல நிலமாகச் செய்த
கோபுரவாயிலென்றவாறு. 17. தேமென்றது தேனீ. கடாம் -
மதில்கண்டுழிப் போர் வேட்கையாற் பிறக்கும் மதம்.
நீ
வேண்டுபுலத்து இறுத்து அவர் (1) திறைகொடுப்ப (2)
அருளி (3) நின் (4) மூதூர்ச்செல்குவையின் (5) குருசில் (14)
வளையினும் (13) பிறிதாறு செல் (14); செல்லுதற்கு யாது
காரணமெனின் புதவிற் கதவு மெய்காணின் (16), ஆங்கு நின்களிறு
தாங்கலாகா (21); தாங்க வேண்டுவதேல், நின்னிற்றந்த எயின்
முகத்துப் படுத்துவதல்லது (11) நின் முன்னோரோம்பிய (12) எயின்
முகத்துப்படுத்தல் யாவது (13) என மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க.
'செல்குவையாயின்'
(5) என்பதன்பின் 'பிறிதாறு சென்மதி' (14)
என்பதனையும், 'தாங்க லாகா வாங்குநின் களிறு' (21) என்பதன் பின்
'எயின்முகப்படுத்தல்யாவது' (13) என்பதனையும் கூட்டவேண்டுதலின்
மாறாயிற்று.
இதனாற்
சொல்லியது, அடைந்தவர்க்கு அருளலொடு படுத்து
அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1. பிறநாடுகளை வென்று அந்நாட்டரசர்
திறையாகக் கொடுக்கும் ஆபரணங்களைக் கொணரும்பொருட்டுத்
தான் வேண்டிய இடத்திலே படையொடு சென்று தங்கி; " நாடுகெட
வெருக்கி நன்கலந் தரூஉம்", "யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத்
திறுத்து" (பதிற்.83 : 7, 15 :
1) பகைவர் கலங்களைத் திறையாகத்
தருதல்: பதிற். 90 : 6 - 8; "நன்கலங்
களிற்றோடு நண்ணா ரேந்தி,
வந்துதிறை கொடுத்து" (அகநா: 124 : 1 -
2)
1-3.
அப்பகையரசர், 'எம்மைக் காப்பாயாக' என்று கூறிக்
குறையாத புதுவருவாயையுடைய தம் நாட்டைத் திறையாகக் கொடுப்ப
அவர்களுக்கு அருள்செய்து; "ஒல்குபு நிழல்சேர்ந்தார்க் குலையாது
காத்தோம்பி வெல்புக ழுலகேத்த விருந்துநாட் டுறைபவர்" (கலித்.
26 : 11 - 2). நல்கினையாகுமதி யென்று திறைகொடுப்பவெனக்
கூட்டுக.
4-5.
சேரன் தன் நகர்க்கு மீண்டு செல்லுதல். கற்கள்
விளங்கிய இடங்களையுடைய காடுகளைத்தன் அரையிலே
கட்டினாற்போன்று விளங்குகின்ற நினது பழையதாகிய புகழையுடைய
பழைய நகருக்கு மீண்டு செல்வாயானால். கடறு - காடு; காடென்றது
மதிலைச் சூழ்ந்த காவற்காட்டை. மலைநாடாதலின் கல்பிறங்குவைப்பிற்
கடறென்றார்.
6-9.
மதிலின் சிறப்பு.
6-7.
சிவந்த மூட்டுவாயையுடைய சிலம்பொடு அணியாகிய
தழை தங்குகின்ற எந்திரக்கட்டினையும், அம்பையுடைய வாயிலையும்;
பொறிமூட்டுவாய்: "பொறி, புனைவினைப் பொலங்கோதை" (பரி.
11 : 64 - 5) "எய்பெயரும் பகழி வாயிற் றூக்கி" (தொல்.
புறத்.
12, ந. மேற்.)
8.
நீந்திச் செல்ல முயல்வாரைக் கொள்ளுதல் வல்ல
முதலையையும் குழிந்த இடத்தையும் கொண்ட அகழியையும் உடைய;
"கராஅங் கலித்த குண்டுகண் ணகழி" (புறநா. 37
: 7)
9.
ஆகாயத்தைப் பொருந்தும்படி உயர்ந்த, அவ்வகழியை
வளையும்படி செய்த மதில், புரிசை ஆகிய மன்னெயில் (11) என
இயைக்க.
10-11.
நின்னோடு பொருந்தாத பகைவரது போர் கெடும்படி
தடுத்து, நின்னாற் கைக்கொண்டு கொடுக்கப்பட்ட நிலைபெற்ற
மதில்களிடத்துச் செலுத்துவதே அல்லாமல்.
12-3.
தாம் இறப்பதற்கு முன்னும் இறந்தபின்னும் நின்குலத்து
முன்னோர் அளித்த மதில்களிடத்தே செலுத்துவது நினக்கு என்ன
காரியம்? அது நின்பெருமைக்குப் பொருந்துவது அன்று.
13-4.
சினம்பொருந்திய குருசிலே! வளைந்து செல்ல வேண்டிய
தாயினும், வேறு வழியே செல்லுவாயாக. 15 - 6. மதிற்கதவின் சிறப்பு.
கணையமரத்தாற்
பாதுகாக்கப்பட்டு, இரும்பினாற்
பிணித்தலையுடைய பலகையாற் செய்யப்பட்ட, பலநிலைகளையுடைய
கோபுரவாயிலிலேயுள்ள கதவை மெய்யாகக் கண்டால். 17 - 8.
சேரனது யானையின் சினம்.
17.
உண்ணும் பொருட்டுத் தேனீக்கள் பரவிய மதத்தால்
குத்துக் கோலைக் கடந்த; மதம் போர் வேட்கையால் பிறந்தது.
18.
நிறத்தால் வேங்கைமலரைவென்ற புள்ளிகள் விளங்கித்
தோன்றுகின்ற நெற்றியினிடத்தே; புகர்நுதல்: வாளா பெயர்
மாத்திரையாய் நின்றது.
19.
ஏந்திய கையைச் சுருட்டி அங்குசத்தைக் கடந்து; "மதமாக்
கொடுந்தோட்டி கைந்நீவி" (பரி. 10 :
49)
20.
மேம்பட்ட என்றமையால் எடுத்த கொடி தன்மீது அசைய.
21.
நின்களிறுகள் அவ்விடத்தே அடங்குதல் ஆகா.
கதவு
மெய்காணின் தாங்கலாகாவென்றதன் கருத்து
அக்கதவைத்தன் கொம்பாற் குத்தச் செல்லுமென்றபடி; "நீண்மதி
லரணம் பாய்த்தெனக் தொடிபிளந்து, வைந்துதி மழுகிய
தடங்கோட்டியானை" (ஐங்குறு. 444)
நின்முன்னோராற்
பாதுகாக்கப்பட்ட வேந்தரது மதில்வழியே
செல்லற்க; வேறுவழியே செல்க என்பது கருத்து.
(பி
- ம்) 4. கடறரையார்த்த. 6. செம்பொற் சிலம்பு. 17. காழக
நீவி. (3)
1தொல்.
கிளவி. 29 - 30.
2'வரிப்புனை
பந்தொடு பாவை தூங்க" (முருகு, 68)
என்பதும்
'பகைவரை மகளிராக்கி அவர் கொண்டு விளையாடுதற்குத் தூக்கின
வென்றவாறு' என்னும் அதன் உரையும் இங்கே அறிதற்பாலன.
3வெற்றிமடந்தை
- துர்க்கை.
|