55. |
ஆன்றோள்
கணவ சான்றோர் புரவல
நின்னயந்து வந்தனெ னடுபோர்க் கொற்றவ
இன்னிசைப் புணரி யிரங்கும் பௌவத்து நன்
கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க் |
5 |
கமழுந்
தாழைக் கானலம் பெருந்துறைத்
தண்கடற் படப்பை நன்னாட்டுப் பொருந
செவ்வூன் றோன்றா வெண்டுவை முதிரை
வாலூன் வல்சி மழவர் மெய்ம்மறை
குடவர் கோவே கொடித்தே ரண்ணல் |
10 |
வாரா
ராயினு மிரவலர் வேண்டித்
தேரிற் றந்தவர்க் கார்பத னல்கும்
நகைசால் வாய்மொழி யிசைசா றோன்றல்
வேண்டுவ வளவையுள் யாண்டுபல கழியப்
பெய்துபுறந் தந்து பொங்க லாடி |
15 |
விண்டுச்
சேர்ந்த வெண்மழை போலச்
சென்றா லியரோ பெரும வல்கலும்
நனந்தலை வேந்தர் தாரழிந் தலற
நீடுவரை யடுக்கத்த நாடுகைக் கொண்டு
பொருதுசினந் தணித்த செருப்புக லாண்மைத் |
20 |
தாங்குநர்த்
தகைத்த வொள்வாள்
ஓங்க லுள்ளத்துக் குருசினின் னாளே. |
துறை
- செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும்
தூக்கும் அது. பெயர் - துஞ்சும் பந்தர் (4)
(ப
- ரை)
பௌவத்து (3) நன்கல வெறுக்கை (4)
என்றது பௌவத்திலே வந்த நன்கலமாகிய செல்வமென்றவாறு.
4.
பந்தர் - பண்டகசாலைகள்.
நன்கல
வெறுக்கை துஞ்சுமென்ற சிறப்பானே இதற்கு, 'துஞ்சும்
பந்தர்' என்று பெயராயிற்று.
7.
செவ்வூன்றோன்றா வெண்டுவையென்றது அரைத்துக்
கரைத்த மையால் தன்னிற் புக்க செவ்வூன் தோன்றாத வெள்ளிய
துவையென்றவாறு.
முதிரையென்றது
அவரை துவரை முதலாயினவற்றை.
8.
வாலூனென்றது வெண்ணிண ஊனென்றவாறு.
வல்சி
மழவரென்றது தம் செல்வச்செருக்கானே சோறுண்பது
பெரிதன்றி முன்பு எண்ணப்பட்டவற்றையே உணவாகவுடைய
வீரரென்றவாறு. 10. இரவலரையென்னும் இரண்டாவது விகாரத்தால்
தொக்கது; இரவலரை வேண்டியென்றது தன்னாட்டு இரவலரின்மையின்
அவரைப் பெற விரும்பியென்றவாறு.
11.
தேரிற்றந்தென்றது அவ்விரவலருக்கு அவர் உள்வழித்
தேரைப் போகவிட்டு அதிலே அவர்களை வரப்பண்ணியென்றவாறு.
தேரானென உருபு விரிக்க; தேரெனக் தேர்ச்சியாக்கி. அவ்விரவலரை
1அவருள்ள விடத்தில் தேடி அழைத்தென்றுமாம்.
14.
பொங்கலாடியென்றது 2எஃகின பஞ்சுபோல வெளுத்துப்
பொங்கி யெழுதலைச் செய்தென்றவாறு. வெண்மழைபோலச் (15)
சென்றாலியர் (16) என்றது அம்மழை பெய்து புறந்தருங்
கூற்றையொத்து அது பெய்து வெண்மழையாகக் கழியுங் கூற்றை
ஒவ்வாது ஒழிகவென்றவாறு.
18.
நீடுவரையடுக்கமென விரிக்க; அடுக்கம் - ஈண்டு
அடுக்குதல். அல்கலும் (16) நாடு கைக்கொண்டு (18) வேந்தர்
தாரழிந்து அலறப் (17) பொருது சினந்தணிந்த செருப்புகலாண்மை
(19) என மாறிக் கூட்டுக.
ஆண்மையினையும்
(19) வாளினையும் (20) உள்ளத்தினையும்
(21) உடைய குருசிலென்க.
15.
மழையை அவன்றன்னோடு உவமியாது அவன் நாளோடு
(21) உவமித்தது, அவனோடு 3அவன் நாளுக்குள்ள ஒற்றுமை
பற்றியென்க.
ஆன்றோள்
கணவ, சான்றோர் புரவல (1), நின்னயந்து
வந்தனென்; கொற்றவ (2) பொருந (6), மழவர் மெய்ம்மறை (8),
கோவே, அண்ணல் (9), தோன்றல் (12), பெரும (16) குருசில்,
நின்னாள் (21) வெண்மழை போலச் (15) சென்றாலியரோ (16) என
மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.
பெரும,
குருசிலென்னும் விளிகள் முன்னின்ற விளிகளோடு
கூட்ட வேண்டுதலின் மாறாயிற்று.
இதனாற்
சொல்லியது அவன் உலகுபுரத்தாலும் தன் குறையும்
கூறி வாழ்த்தியவாறாயிற்று.
(கு
- ரை) 1. கற்பினாற் சிறந்தோளுடைய தலைவ,
நற்குணங்களால் நிரம்பியவர்களைப் புரத்தலில் வல்லோய்.
ஆன்றோன் கணவ: பதிற். 14 : 15, உரை.
சான்றோர் -
வீரரெனலுமாம். 2. கொல்லுகின்ற போரைச் செய்யும் அரசே,
நின்னைக் காண விரும்பி வந்தேன்.
3-6.
சேரநாட்டின் செல்வச் சிறப்பு.
இனிய
ஓசையையுடைய அலைகள் ஒலிக்கும் கடலிலே வந்த
நல்ல ஆபரணங்களாகிய செல்வம் தங்கும் பண்டசாலைகளையும்,
மணம் வீசுகின்ற தாழைகளையுடைய கடற்கரைச் சோலைகள்
பொருந்திய அழகிய பெரிய துறைகளையும் உடைய குளிர்ந்த
கடற்பக்கத்தையுடைய நல்ல நாட்டுக்கு உரிய ஒப்பற்றோய். பொருநன்
- தான் பிறர்க்கு உவமிக்கப்படுவான் (மதுரைக்.
42, ந. ; பதிற்.
73 : 2 - 3; புறநா. 377 : 10 - 11)
7-8.
சிவந்த இறைச்சி தனியே வேறுபட்டுத் தோன்றாத
வெள்ளிய துவையலையும் அவரை துவரை முதலியவற்றைக் கலந்த
வெள்ளிய நிணத்தையுடைய இறைச்சியாகிய உணவையுமுடைய
மழவர்க்குக் கவசம் போன்றாய்; "சான்றோர் மெய்ம்மறை" (பதிற்.
14 : 12)
9.
குடநாட்டிலுள்ளார்க்கு அரசே, கொடிகளையணிந்த
தேரையுடைய தலைவனே. குடவர்கோ: சிலப்.
24 : பாட்டுமடை.
10-12.
நின்நாட்டில் வறுமையில்லாமையால் இரவலர்
வாராரானாலும், அவர்களைப் பெறவிரும்பித் தேரை அவர்கள்
உள்ள பிறநாடுகளிலே அனுப்பி அதில் அவர்களைக் கொணர்ந்து
அவர்களுக்கு உணவைத்தரும், பகைவரும் கேட்டற்கு விருப்பம்
மிகுதற்குக் காரணமான உண்மையான மொழியையுடைய புகழ்மிக்க
தலைவனே. ஆர்பதம்: பதிற். 66 : 9.
நசைசால்
வாய்மொழி: "கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க்
கேளாரும், வேட்ப மொழிவதாஞ் சொல்" (குறள். 643)
என்பதும்
அதன் உரையும் இங்கே அறிதற்பாலன.
13.
நீ வேண்டிய கால அளவில் ஆண்டுகள் பல கழியும்படி.
14.
நெடுநல். 19; அகநா. 217 : 1.
14-6.
பெருமையையுடையாய், மழையைப் பெய்து, உலகத்தைக்
காப்பாற்றிப் பின்பு பன்னின பஞ்சைப்போலப் பொங்கியெழுதலைச்
செய்து மலையைச் சேர்ந்த வெளுத்த மேகத்தைபோல நீ செல்லா
தொழிவாயாக.
16-9.
நாள்தோறும் அகன்ற இடத்திலுள்ள பகையரசர், தம்
தூசிப்படை அழிந்து அலறும்படி போர்செய்து, உயர்ந்த மலைகளின்
அடுக்குகளையுடைய நாடுகளைக் கைப்பற்றிக்கொண்டு, அதனால்
சினம் குறைந்த போரை விரும்புகின்ற வீரத்தையும்.
20.
தன்னைத் தடுப்பாரை அது செய்யவொட்டாமல் தடுத்த
வாளினையும்.
21.
ஓங்குதலையுடைய ஊக்கத்தையும் உடைய தலைவ, நினது
நாள். உள்ளம் - ஊக்கம். நின் நாள் (21) சென்றாலியர் (16) என
இயைக்க.
(பி
- ம்) 15. மழைபோலச். 18. நெடுவரை. 19. பொருது முரண்
செருக்கிய. (5)
1"துறைதுறை
தோறு மிறைகொண் டோருள், அணியா
தோரையாராய்ந் துழிதரும். பணியா வேந்தன் பணிநரைக் காண்மின்"
(பெருங். 1. 40:
242 - 4)
2"எழிலி,
எஃகுறு பஞ்சிற்றாகி............. நெடுவரையாடும்"
(நற். 247
: 3 - 5); "பொங்கல் வெண்மழை, எஃகுறு பஞ்சித்
துய்ப்பட்டன்ன, துவலை" (அகநா.
217 : 1 - 3)
3இக்காலத்தும்
திருவாங்கூரரசர் நாளின்பெயரால்
வழங்கப்படுதல் அறியத்தக்கது; "நின்று நிலைஇயர் நின்னாண்மீன்"
(புறநா.
24 : 2)4
|