முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
56. விழவுவீற் றிருந்த வியலு ளாங்கட்
கோடியர் முழவின் முன்ன ராடல்
வல்லா னல்லன் வாழ்கவவன் கண்ணி
வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த்
  5 திலங்கும் பூணன் பொலங்கொடி யுழிஞையன்
மடம்பெரு மையி னுடன்றுமேல் வந்த
வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி
வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே.

     துறை - 1ஒள்வாளமலை. வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி (7)

     (ப - ரை) 5. பூணன் உழிஞையனென்பன
வினைக்குறிப்புமுற்று.

     7. வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி யென்றது மாற்று வேந்தர்
அஞ்சித் தங்கள் மெய்யை மறந்த வாழ்வென்றவாறு.

     வாழ்ச்சி, மெய்மறத்தல் காரணமாக அதன் காரியமாய்
வந்ததாகலான், மெய்ம்மறந்தவென்னும் பெயரெச்சம் 2நிலமுதற்பெயர்
ஆறுமன்றிக் காரியப்பெயரென வேறோர் பெயர் கொண்டதெனப்படும்.
வாழ்வு - வெற்றிச் செல்வம்.

     இச்சிறப்பானே இதற்கு, 'வேந்துமெய்ம்மறந்த வாழ்ச்சி'
என்று பெயராயிற்று.

     வாழ்ச்சிக் (7) களம் (8) எனக் கூட்டுக. முரசம் துவைப்ப வாள்
உயர்த்து (4) இலங்கும் பூணனாய்ப் பொலங்கொடி உழிஞையனாய்ப்
(5) போர்க்களத்து ஆடும் கோ (8) வியலுளாங்கட் (1) கோடியர்
முழவின் முன்னர் ஆடல் (2) வல்லானல்லன்; அவன் கண்ணி வாழ்க
(3) என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க.

     'வல்லானல்லன்' என்பதன்முன் கோவென்பது
கூட்டவேண்டுதலின் மாறாயிற்று.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-3. விழா பெருமையோடு விளங்கிய அகன்ற
தன் ஊரினிடத்தே, கூத்தரது முழவின் முன்னர் ஆடுதலை வல்லவன்
அல்லன்; அவன் கண்ணி வாழ்வதாக.

     4. வெற்றியுண்டாதற்குக் காரணமான முரசம் ஒலிப்ப, வாளை
உயர வீசி. வலம்படு முரசம்: பதிற். 17 : 5, உரை.

     5. விளங்குகின்ற ஆபரணங்களை அணிந்து, பொன்னாற்
செய்த கொடியாகிய உழிஞையினது பூவைச் சூடி.

     6-8. அறியாமை மிகுதலால் பகைகொண்டு படையெடுத்துவந்த
பகைவேந்தர் தம் உடம்பை மறத்தற்குக் காரணமான வெற்றிச்செல்வம்
அழிந்துகெட்ட போர்க்களத்தில் ஆடு அரசன்; "கழித்துவா ளமலை
யாடிக் காட்டுவார்" (சீவக. 783)

     ஆடுகோ (8) ஆடல் (2) வல்லானல்லன்; அவன் கண்ணி
வாழ்க (3) என முடிவு செய்க.

     கண்ணியை வாழ்த்தல்: பதிற். 54 : 2, உரை

     மு. "தேரின்கண் வந்த அரசர்பலரையும் வென்ற வேந்தன்
வெற்றிக் களிப்பாலே தேர்த்தட்டிலே நின்று போர்த்தலைவரோடு
கை பிணைந்து ஆடும் குரவை' (தொல், புறத், 21. ந.) (6)


     1பு. வெ. 147.

     2தொல், வினை. 37.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

6. வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
 
56.விழவு வீற்றிருந்த வியலு ளாங்கண்
கோடியர் முழவின் முன்ன ராடல்
வல்லா னல்லன் வாழ்கவவன் கண்ணி
வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த்
 
5திலங்கும் பூணன் பொலங்கொடி யுழிஞையன்
மடம்பெரு மையி னுடன்றுமேல் வந்த
வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி
வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே.
 

துறை  : ஒள்வாளமலை.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்   : வேந்துமெய்ம்மறந்தவாழ்ச்சி
 

1 - 3. விழவு ............ கண்ணி.

உரை :   விழவு  வீற்றிருந்த  -  விழவானது  மிக்க  சிறப்புடன்
எடுக்கப்பட்ட  ; வியலுள் ஆங்கண் - அகன்ற ஊரிடத்தே ; கோடியர்
முழவின்  முன்னர்  -  கூத்தர்  முழக்கும்  முழாவின் ஓசைக் கேற்ப
அதன்  முன்னின்று  ; ஆடல் வல்லான் அல்லன் - ஆடுந்தொழிலில்
நம்  சேரலாதன்  வல்லவன்  அல்லன்  ;  அவன்  கண்ணி வாழ்க -
அவன் முடியில் சூடிய கண்ணி வாழ்வதாக எ - று.

விழாக்  காலங்களில் ஊர்களில் கூத்தர் முழக்கும் முழவோசையின்
தாளத்திற்  கேற்ப  வீரர்  கூடி  ஆடுவது மரபாதலால், அதனுண்மை
வற்புறுத்தற்குக்  “கோடியர் முழவின் முன்னர் ஆடல்வல்லா னல்லன்”
என்றார்.   வியலுள்   ஆங்கண்   விழா   வயருமிடத்துக்  கோடியர்
முழவிற்கேற்ப  ஆடுதல் பகைவேந்தரை வென்று மேம்படும் சிறப்பால்
போர்க்  களத்தே  தேர்  முன்  நின்று  குரவையாடும்  வேந்தனான
சேரலாதற்குப்   பொருந்தாமை   தோன்ற  “ஆடல்வல்லா  னல்லன்”
என்றார்.   வியலுள்,   ஊர்.  ஆங்கண்,  இடம்.  கோடியர்,  கூத்தர்.
கோடியர்    முழவின்    முன்னர்    ஆடல்வன்மை   யின்மையால்
சேரலாதற்குத்  தாழ்வு  சிறிதுமில்லை  யென்பது  தோன்றக் கூறுவார்,
“வாழ்க  வவன்  கண்ணி”  என்றார்.  இனி,  அவன் போர்க்களத்தே
பகைவரை    வென்றாடும்    குரவையில்   வன்மை   மிகவுடையன்
என்பதனை மேலே கூறுகின்றார்.

4 - 8. வலம்படு .................... கோவே.

உரை : வலம்படு முரசம் துவைப்ப- வெற்றி முரசம் மிக்கொலிப்ப
;  வாள்  உயர்த்து  -  வாளை  யுயரவேந்தி  ;  இலங்கும் பூணன் -
விளங்குகின்ற  பூண்களை  அணிந்து  ; பொலங்கொடி உழிஞையன் -
பொன்னாற்  செய்த உழிஞைக் கொடியைச் சூடி ; மடம் பெருமையின்
-   அறியாமை   மிகுதியால்   ;  உடன்று  மேல்  வந்த  வேந்து -
பகைகொண்டு   போர்   மேற்கொண்டு  வந்து  பொருத  வேந்தர் ;
மெய்ம்மறந்தவாழ்ச்சி  -  தம்முடம்பைத்  துறந்து சென்று துறக்கத்தே
வாழ்வு  பெறுதலால்  ;  வீந்துகும்  -  பட்டுவீழும் ; போர்க்களத்து -
போர்க்களத்திலே   ;  ஆடும்  கோ   -   இனிது   ஆடுதல்வல்ல
வேந்தனாவான் எ - று.

போருடற்றும்     வீரரை    யூக்கி     வெற்றி    பெறுவிக்கும்
முழக்கத்தையுடையதாதலின், “வலம்படு முரசம்” என்றும், அது பெரிது
முழங்குமாறு   தோன்றத்  “துவைப்ப”  என்றும்  கூறினார்.  பிறரும்
“வலம்படுவியன்பணை”   (பதிற்.   17)   என்றல்  காண்க.  வாளைக்
கையிலேந்தித்  தேர்த்தட்டிலே  நின்று  வீரருடன் கைபிணைந்தாடும்
சிறப்பைச் சுட்டி, “வாளுயர்த்து” என்றார். பூணன், உழிஞையன் என்ற
வினைக்குறிப்பு  முற்றுக்கள் “குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்”
(முருகு.     209)      என்புழிப்போல       எச்சப்பொருளவாயின.
பழையவுரைகாரர், “பூணன் உழிஞைய னென்பன வினைக்குறிப்பு முற்”
றென்பர்    என்ப    வாயினும்,   வினைமுடிபின்கண்,    பூணனாய்,
உழிஞையனாய் ஆடும் கோவென்றே யியைப்பர்.
 

அறிவுடையராயின்  பணிந்து திறை பகரும் பண்பு மேற்கொள்வர் ;
அஃதின்மையின்    உடன்று    மேல்வந்தன    ரென்பார்,   “மடம்
பெருமையின்”  என்றும்,  அதனால்  அவர்  தம் உடலைக் கைவிட்டு
உயிர்கொண்டு  துறக்கம் புகுந்து வாழலுற்றா ரென்றற்கு “மெய்ம்மறந்த
வாழ்ச்சி”  யென்றும்  கூறினார்.  நிலையில்லாத மெய்யை நிலையாகக்
கருதாது  அதனை  மறந்து  நிலைத்த  புகழை  விரும்பி  மாய்தலால்
உண்டாகும் துறக்கவாழ்வு, மெய்ம்மறந்த வாழ்ச்சி யாயிற்று என வறிக.
இவ்வாழ்வு  கருதிப்  போர்க்களத்தில்  வேந்தரும்  வீரரும்  பொருது
மடிதலால்,   “வீந்துகு   போர்க்களம்”  என்றார்  .  இனிப்  பழைய
வுரைகாரர்,  “வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி யென்றது மாற்று வேந்தர்
அஞ்சித்  தம்  மெய்யை மறந்த வாழ்வென்றவா” றென்றும், “வாழ்ச்சி
மெய்ம்   மறத்தல்   காரணமாக  அதன்  காரியமாய்  வந்ததாகலான்,
மெய்ம்மறந்த    வென்னும்     பெயரெச்சம்    நிலமுதற்    பெயர்
ஆறுமன்றிக்      காரியப்      பெயரென      வேறோர்   பெயர்
கொண்டதெனப்படும்”  என்றும், “வாழ்வு வெற்றிச் செல்வ” மென்றும்,
“வாழ்ச்சிக்  களமெனக்  கூட்டுக”  என்றும், “இச் சிறப்பானே இதற்கு
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர்.

இதுகாறும்     கூறியது, முரசம் துவைப்ப  வாளுயர்த்து இலங்கும்
பூணனாய்ப்     பொலங்கொடி    யுழிஞையனாய்ப்    போர்க்களத்து
ஆடும்கோ,  வியலுளாங்கண்  கோடியர்  முழவின்  முன்னர்  ஆடல்
வல்லானல்லன்,  அவன்  கண்ணி  வாழ்க  என மாறிக் கூட்டி வினை
முடிவு செய்க.

இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று.


 மேல்மூலம்