முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
57. ஓடாப் பூட்கை மறவர் மிடறப
இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்பக்
குருதி பனிற்றும் புலவுக்களத் தோனே
துணங்கை யாடிய வலம்படு கோமான்
  5 மெல்லிய வகுந்திற் சீறடி யொதுங்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி
பாணர் கையது பணிதொடை நரம்பின்
விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணிக்
குரல்புண ரின்னிசைத் தழிஞ்சி பாடி
  10 இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த
வளங்கெழு குடைச்சூ லடங்கிய கொள்கை
ஆன்ற வறிவிற் றோன்றிய நல்லிசை
ஒண்ணுதன் மகளிர் துனித்த கண்ணினும்
இரவலர் புன்க ணஞ்சும்
  15 புரவெதிர் கொள்வனைக் கண்டனம் வரற்கே.

     துறை - விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - சில்வளை விறலி (6)

     (ப - ரை.) மறவர் மிடறபக் (1) களத்தோன் (3) எனக்
கூட்டுக.

     3. பனிற்றுதல் - தூவுதல்; பனிற்றுவது புண்பட்ட
வீரருடலெனக் கொள்க. களமென்றது ஈண்டுக் களத்தையணிந்த
பாசறையினை.

     5. 1வகுந்து - வழி.

     6. சில்வளை விறலியென்றது பல்வளையிடுவது பெதும்பைப்
பருவத்தாகலின், அஃதன்றிச் சில்வளையிடும் பருவத்தாளென அவள்
ஆடல் முதலிய துறைக்குரியளாதல் கூறியவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'சில்வளை விறலி' என்று
பெயராயிற்று.

     8. விரல்கவர் யாழென்றதனாற் பயன் வாசித்துக் கைவந்த
யாழென்றவாறு.

     9. தழிஞ்சி - தழிஞ்சியென்னும் துறைப்பொருண்மேல் தந்த
பாடல். தழிஞ்சியைக் குரல்புண ரின்னிசையிலே பாடியெனக் கொள்க.

     10. புதல்வராகிய நல்வளமென இருபெயரொட்டு.

     11. குடைச்சூல் - சிலம்பு.

     சில்வளை விறலி (6), புரவெதிர்கொள்வனைத் (15) தழிஞ்சிபாடி
(9) கண்டனம் வரற்கு (15)ச் செல்லாமோ (6);
அப்புரவெதிர்கொள்வனாகிய (15) வலம்படு கோமான் இதுபொழுது
தான் அவ்வெதிர்கோடற்கேற்ப வருவாயினையுடைய (4)
புலவுக்களத்தோன்காண் (3) என மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க.

     வரற்குச் (15) செல்லாமோ (6) எனக் கூட்ட வேண்டுதலின்
மாறாயிற்று.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்போடு அவன்
கொடைச்சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. புறங்கொடுத்து ஓடாமைக்குக் காரணமாகிய
மேற்கோளையுடைய வீரரது வலி கெடும்படி. ஓடாப் பூட்கை; பதிற்.
34 :2,

     2-3. பெரிய பனந்தோடாகிய மாலையொடு சிறந்த வீரக்கழல்
சிவக்கும்படி இரத்தத்தைக் தூவுகின்ற புலால்நாற்றத்தையுடைய
களத்தை யணைந்த பாசறையிலுள்ளான் (பதிற். 42 : 1, உரை,)

     4. போர்க்களத்தில் துணங்கைக் கூத்தை ஆடிய
வெற்றியுண்டாகும் சேரன். கோமான் (4) புலவுக்களத்தோன் (3) என
முடிக்க.

     5-6. சிலவாகிய வளையை அணிந்து விறலி, நிலம் மெல்லிய
வழியில் சிறிய அடியால் நடந்து செல்லாமோ; செல்லாமோ:
செல்லுவாமோ என்பதன் மரூஉ. 'மெல்லங்கழி : மென்மை, நிலத்தின்
மென்மை' (திருச்சிற். 177, பேர்.) 8 : பதிற். 66 : 1 - 2.

     7-9. பாணரது கையின்கண் உள்ளதாகிய பணிந்த
கட்டினையுடைய நரம்பினையுடைய விரலால் வாசித்துப் பழகிய
பேரியாழைப் பாலைப்பண்ணாக அமைத்து, மிடற்றுக்குரலோடு
ஒன்றுபட்ட இனிய இசையிலே தழிஞ்சி யென்னும் துறைப்பொருள்
அமைந்த பாடல்களைப் பாடி; தழிஞ்சி: 'வேந்தர் தம்படையாளர்
முன்பு போர்செய்துழிக்கணையும் வேலும் முதலிய படைகளைத்
தம்மிடத்தே தடுத்துக் கொண்டழிந்தவர்களைத் தாம் சென்று
பொருள் கொடுத்தும் வினாவியும் தழுவிக் கோடல்; தழிச்சுதல் :
தழிஞ்சியாயிற்று' ;"தழிச்சிய வாட்புண்ணோர் தம்மில்லந் தோறும்
பழிச்சியசீர்ப் பாசறை வேந்தன் - விழுச்சிறப்பிற் சொல்லிய சொல்லே
மருந்தாகத் தூர்ந்தன, புல்லணலார் வெய்துயிர்க்கும் புண்"
(தொல். புறத். 8. ந, மேற்.); "அழிகுநர் புறக்கொடையயில்வா
ளோச்சாக், கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று" (பு. வெ. 55)

     10. இளைய துணையாகிய புதல்வராகிய நல்ல செல்வத்தைப்
பெற்ற.

     11. மு. பதிற். 90 : 48. 11-3. தொழில்வளம் பொருந்திய
சிலம்பையும், அடங்கிய கொள்கையையும், நிறைந்த அறிவையும்
உண்டாகிய புகழையும், ஒள்ளிய நெற்றியையும் உடைய மகளிர்
ஊடலாற்சினந்து பார்த்த பார்வைக்கு அஞ்சுதலைக் காட்டிலும்,
குடைச்சூல் - புடைதாழ்த்தல்; புடைபட்டு உட்கருவை யுடைத்தாதல்;
குடைபடுதல்' (சிலப்.16 : 118. அரும்பத; அடியார்.)

     14-5. இரவலரது துன்பத்தை அஞ்சுகின்ற, நம் குடியைப்
புரத்தலை ஏற்றுக்கொள்வோனைக் கண்டுவருதற்பொருட்டு. கண்டனம்
வரற்கு (15) விறலி, செல்லாமோ (6) என முடிக்க.

     (பி - ம்.) 3. புலக்களத்தோனே. 11. குடச்சூல். 13. துணித்த.
(7)


     1வகுந்து : "வரைசேர் வகுந்திற கானத்துப் படினே" (மலைபடு,
242)





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

7. சில்வளை விறலி
 
57.ஓடாப் பூட்கை மறவர் மிடறப
இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்பக்
குருதி பனிற்றும் புலவுக்களத் தோனே
துணங்கை யாடிய வலம்படு கோமான்
 
5மெல்லிய வகுந்திற் சீறடி யொதுங்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி
பாணர் கையது பணிதொடை நரம்பின்
விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணிக்
குரல்புண ரின்னிசைத் தழிஞ்சி பாடி
 
10இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த
வளங்கெழு குடைச்சூ லடங்கிய கொள்கை
ஆன்ற வறிவிற் றோன்றிய நல்லிசை
ஒண்ணுதன் மகளிர் துனித்த கண்ணினும்
இரவலர் புன்க ணஞ்சும்
 
15புரவெதிர் கொள்வனைக் கண்டனம் வரற்கே.
 

துறை  : விறலியாற்றுப்படை
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்  : சில்வளை விறலி.

5- 6. மெல்லிய.............விறலி. 

உரை :  சில்  வளை விறலி - சிலவாகிய   வளைகளை  யணிந்த
விறலியே;  மெல்லிய  வகுந்தில்  - மென்மையான நிலத்திடத்தவாகிய
வழியிலே  ; சீறடி ஒதுங்கிச் செல்லாமோ - சிறிய காலடிகளால் நடந்து
செல்வேம் வருதியோ எ - று.

ஆடற்றுறைக்  குரியளாதல் தோன்ற, “சில்வளை விறலி” யென்றார்.
“பல்வளை  யிடுவது  பெதும்பைப்  பருவத்தாகலின், அஃதன்றிச் சில்
வளையிடும்   பருவத்தாளென   அவள்   ஆடல்  முதலிய  துறைக்
குரியளாதல்   கூறியவாறு”   என்றும்,   “இச்  சிறப்பானே  இதற்குச்
சில்வளை   விறலியென்னும்   பெயராயிற்”   றென்றும்  பழையவுரை
கூறுகின்றது.   “இன்புளி   வெஞ்சோறு,  தேமா  மேனிச்  சில்வளை
யாயமொடு,  ஆமான்  சூட்டினமைவரப் பெறுகுவிர் (சிறுபாண். 175-7)
என்புழியும்  விறலிக்குச்  சில்வளையே  கூறுமாறு  காண்க. மெல்லிய
வகுந்தில்  என்பது பரலும் முள்ளுமின்றிச் செல்லும்வழி. செம்மையும்
மென்மையும்   உடைத்தாதல்   தோன்றநின்றது.   வகுந்து,   வழி  ;
வகுந்துசெல்  வருத்தத்து  வான்றுயர்  நீங்க”  (சிலப். 14 : 17) என்று
சான்றோர் கூறுதல் காண்க. செல்லாமோ என்புழி ஓகாரம் எதிர்மறை ;
இது  செல்லாம் என்னும் மறை வினையோடு புணர்ந்து உடன்பாட்டுப்
பொருளை  வற்புறுத்திச்  செல்வோம்  வருக  என்னும்  பொருள்பட
நின்றது.  செல்வாமோ  என்பது  செல்லாமோ  என மருவி முடிந்தது
என்றும் கூறுப. தில் ; விழை வின்கண் வந்தது.

6 - 15 பாணர் கையது .................வரற்கே.

உரை :  இளம் துணைப் புதல்வர் நல்வளம் பயந்த - இளமையும்
துணையாகும்   தன்மையுமுடைய  மக்களாகிய  நல்ல  செல்வத்தைப்
பெற்றளித்த   ;   வளம்கெழு  குடைச்சூல்  -  வளமை  பொருந்திய
சிலம்பையும்   ;   அடங்கிய  கொள்கை  -  அடக்கத்தால் உயர்ந்த
ஒழுக்கத்தையும்  ;  ஆன்ற  அறிவின்  -  நிறைந்த  அறிவையும்  ;
தோன்றிய  நல்லிசை  -  குணஞ்  செயல்களால் உண்டாகிய கெடாத
புகழையுமுடைய  ;  ஒண்ணுதல் மகளிர் ஒள்ளிய நுதலினராகிய காதல்
மகளிர்   ;   துனித்த   கண்ணினும்  -  புலவியாற்  சீறி  நோக்கும்
பார்வையினும்  ; இரவலர் புன்கண் அஞ்சும் - இரவலர்  குறையிரந்து
பசித்துன்பம்  தோன்ற   நோக்கும் பார்வை கண்டு மிக அஞ்சுகின்ற;
புரவெதிர்   கொள்வனை   -   நம்மைப் பாதுகாத்தலை மேற்கொண்
டொழுகுவோனாகிய     சேரமானை ; பாணர்    கையது - பாணரது
கையிடத்தேயுள்ளதாகிய;  பணிதொடர்  நரம்பின்  -  தாழக்கட்கூடிய
நரம்பினை  ;  விரல்  கவர்  - கை விரலால் வாசித்தலை விரும்பும் ;
பேர்  யாழ்  - பேரியாழின்கண் ; பாலை பண்ணி - பாலைப்பண்ணை
யெழுப்பி  ;  குரல்  புணர்  இன்  இசை  - குரலென்னும் நரம்பொடு
புணர்த்த இனிய இசையில் ; தழிஞ்சி பாடி - தழிஞ்சியென்னும் துறை
பொருளாக அமைந்த பாட்டினைப் பாடிச் சென்று ; கண்டனம் வரற்கு
- கண்டு வருதற்குச் செல்வோம், வருதியோ எ - று.
 

பாணர்     கையது பேரியாழ் நரம்பின் விரல்கவர் பேரியாழ் என
இயையும்.  நரம்பினை  இறுக்கும்  முறுக்காணி  கோட்டின் பக்கத்தே
தாழவிருத்தலின்,  அதனோடு தொடர்படுத்திப் பிணித்திருக்கும் இசை
நரம்பை,  “பணி  தொடர்  நரம்” பென்றார். பணியா மரபினையுடைய
எத்தகையோரையும்  தன்பாலெழும்  இசையாற் பணிவிக்கும் சிறப்புப்
பற்றி  இவ்வாறு  கூறினா  ரெனினுமாம் ; “ஆறலை கள்வர் படைவிட
அருளின், மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை” (பொருந. 21 - 22)
என்று  சான்றோர்  கூறுதல்  காண்க. கவர்தல், விரும்புதல் ; “கவர்வு
விருப்பாகும்”  என்பது  தொல்காப்பியம்.  கைவிரல்களாற்  பலகாலும்
வாசித்துப்   பயின்ற  யாழாதல்  தோன்ற,  “விரல்  கவர்  பேரியாழ்”
எனப்பட்டது.   “விரல்   கவர்  யாழென்றதனாற்  பயன்,  வாசித்துக்
கைவந்த  யாழ்  என்றவாறு” என்று பழையவுரையும் கூறுதல் காண்க.
பேரியாழ், யாழ்வகையுள் ஒன்று. கோல் தொடுத் திசைப்பனவும், விரல்
தொடுத்  திசைப்பனவும்  என  இப் பேரியாழ் வகை கூறப்படுகின்றது.
கோல்  தொடுத்  திசைப்பனவற்றுள்  ஆயிரம் நரம்பு பெற்று ஆயிரம்
கோல்  தொடுத்து  இசைப்பனவும்  பண்டைநாளில் இருந்தன வென்று
சிலப்பதிகாரம்  பழையவுரை  கூறுகிறது  ; (அடி நல். உரைப்பாயிரம்)
இப்  பேரியாழ்  வகையின் நீக்குதற்கு, “விரல் கவர் பேரியாழ்” எனச்
சிறப்பித்தாரென்றுணர்க.   குரலென்னும்   நரம்பிசையினை   ஆதார
சுருதியாகப் புணர்ந்து பாலைப்பண் வகை பலவும் பாடப்படுதல் பற்றி,
“குரல்   புணர்   இன்னிசை”  யென்றார்.  இப்  பாலைவகையினைச்
சிலப்பதிகார  அரங்கேற்று காதையுரையிற் காண்க. இனி, குரலென்றது
மிடற்றோசை யென்று கொள்வாருமுளர்.

தழிஞ்சியாவது     போரில் அழிந்தார்பால் கண்ணோடிச் செய்வன
செய்தல்.     இது     பொருளாகப்    பாடும்    இசைப்பாட்டையும்
தழிஞ்சியென்றார்.  “தொடைபடு  பேரியாழ் பாலை பண்ணிப், பணியா
மரபின்   உழிஞை   பாட”   (பதிற்.   46)  என்று  உழிஞைப்பாட்டு
இசைக்கப்படுமாறும்  காண்க.  தழிஞ்சி பாடி, கண்டனம் வரற்கே என
இயையும். சென்றென ஒரு சொல் வருவித்துக் கொள்க.

இம்மையிற்  புகழும் மறுமையிற் பேரின்பமும் பயக்கும் பெறலரும்
பேறாதலின்,  மக்கட்  பேற்றினை,  “நல்  வளம்” என்றும், அதனைத்
தெரித்துமொழி கிளவியாற் கூறுவார், “இளந்துணைப் புதல்வர் நல்வள”
மென்றும்  கூறினார்.  புதல்வராகிய நல்வள மென்க. “இம்மை யுலகத்
திசையொடும்   விளங்கி,   மறுமை   யுலகமும்  மறுவின்  றெய்துப,
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சி, சிறுவர்ப் பயந்த செம்மலோர்”
(அகம். 66)  எனச்  சான்றோர்     கூறுதல்    காண்க.  மக்களைப்
பயத்தல்  கணவர்க்கு  உவகை  தருவதொன்றாதல்  பற்றி, மகளிரை,
“இளந்துணைப்   புதல்வர்   நல்வளம்  பயந்த  மகளிர்”  என்றார்.
“கணவ  னுவப்பப்   புதல்வர்ப் பயந்து”   (மதுரை.   600)   என்று
மாங்குடி  மருதனார்  கூறுவர்.  குடைச்சூல்,  சிலம்பு  ;  புடைபட்டு
உட்கருவையுடைத்தாதல்  பற்றி, சிலம்பு  குடைக்சூ  லெனப்பட்டது ;
“பத்திக்கேவணப்    பசும்பொற்   குடைச்சூல்,   சித்திரச்   சிலம்பு”
(சிலப்.   16 : 118-9)    என்பதன்   உரை   காண்க.    வளங்கெழு
குடைச்சூல்       என்புழி,          வளம்         பொன்னினும்
மணியினும்    தொழிற்    சிறப்பமையச்    செய்த   சிறப்பு.   மன
மொழிமெய்களால்  அடங்கிய ஒழுக்கமுடைமை  தோன்ற, “அடங்கிய
கொள்கை”    யென்றார்.   உடையாரது    அடக்கம்   அவருடைய
ஒழுக்கத்தின்  மேலேற்றப்பட்டது.  அரச  மகளிர்க்குக்  கல்வியறியும்
இன்றியமையாதெனக்   கருதினமையின்,  “ஆன்ற அறிவின்” என்றார்.
“அறிவும்  அருமையும்  பெண்பாலான”  (பொ. 209) என்று ஆசிரியர்
ஓதுவது     காண்க.     இல்வாழ்வின்    முடிபொருள்    நல்லிசை
நிலைபெறுவித்தலெனக்   கருதி   யொழுகுவது   அவ்   வாழ்க்கைத்
துணையாம்  மகளிர்  கடமையாதலை  யுணர்ந்து  அறஞ்செய்து புகழ்
மிகுத்தல்  பற்றி,  “தோன்றிய நல்லிசை ஒண்ணுதல் மகளிர்” என்றார்.
“புகழ்புரிந்    தில்லிலோர்க்கில்லை”    (குறள்.   59)   என்பதனால்,
புகழ்புரிதல்     மனைமகளிர்    கடமையாத    லறிக.    துனித்தல்,
உணர்ப்புவயின்  வாரா  வூடல்  மிகுதி.  துனித்த வழிக் காமவின்பம்
சிறவாமையின்,  மகளிர்  துனிக்கு  ஆடவர்  அஞ்சுவரென  வறிக  ;
“இனியன்ன   நின்னொடு  சூழ்வார்யார்   நெஞ்சே,   துனி  செய்து
துவ்வாய்காண் மற்று” (குறள். 1294) எனச் சான்றோர் கூறுமாற்றானறிக.
இல்லிருந்து  செய்யும்  நல்லறப்  பயனாக நுகரும் காதலின்பத்தினும்,
அவ்வறப்  பயனாக  எய்தும் ஈதலின்பத்தையே பெரிதாகக் கருதுமாறு
தோன்ற,  “மகளிர்  துனித்த  கண்ணினும் இரவலர் புன்கண் அஞ்சும்
புரவெதிர்   கொள்வன்”   என்றார்.  செல்வத்துப்  பயனும்  இதுவே
யென்பதுபற்றி, இரவலர் புன்கண் கண்டு அஞ்சுதலை விதந்தோதினார்;
“சேர்ந்தோர்,   புன்க    ணஞ்சும்   பண்பின்,  மென்கட்  செல்வம்
செல்வமென்  பதுவே”  (நற்.  210)  என்று  பிறரும் கூறுதல் காண்க.
கண்டனம்   வரற்குச்   செல்லாமோதில்   சில்வளை   விறலியெனக்
கூட்டிக்கொள்க.
 

1 - 4. ஓடாப்பூட்கை ............ கோமான்.

உரை : துணங்கை யாடிய வலம்படு கோமான் -வெற்றிக் குறியாகத்
துணங்கைக்  கூத்தாடிய வெற்றி பொருந்திய சேரமானாகிய வேந்தன் ;
ஓடாப்  பூட்கை மறவர் - தோற்றோடாத மேற்கோளையுடைய வீரரது ;
மிடல்  தப  -  வலி  கெடும்படியாகப்  பொருதழித்தலால்  ; குருதி -
அழியும்   அவருடைய  உடற்குருதி ; இரும்பனம் புடையலொடு வான்
கழல்  சிவப்ப  -  தான் அணிந்துள்ள பெரிய பனந்தோட்டாற் செய்த
மாலையும்  பெரிய வீரக் கழலும் சிவக்குமாறு ; பனிற்றும் - துளிக்கும்
;  புலவுக் களத்தோன்  -  புலால்  நாறும் போர்க்களத்தே  அமைந்த
பாசறையில் உள்ளான் எ - று.

போரில் வெற்றிபெற்ற வேந்தன் வீரருடன் துணங்கையாடுவது பற்றி,
“துணங்கை யாடிய வலம்படு கோமான்” என்றார். பூட்கை, மேற்கோள்
மிடல்,     வலி. தபவெனக் காரணம் காரியமாக   உபசரிக்கப்பட்டது.
புடையல்,  மாலை.  குருதி  புடையலும்  கழலும்  சிவப்பப் பனிற்றும்
என்க.  “பனிற்றுதல்  தூவுதல்” என்றுரைத்து, “பனிற்றுவது புண்பட்ட
வீரருடல்  எனக்  கொள்க” என்பர் பழையவுரைகாரர். எனவே மறவர்
மிடல்   தபுதலால்,   புண்பட்ட  அவருடல்  குருதியைத்  தெறித்துத்
தூவுமென்பது     கருத்தாயிற்று.     களமென்றது     கங்கையிடைச்
சேரியென்புழிப் போலப் பாசறைமேல் நின்றது.
 

இதுகாறும்   கூறியது, “விறலி,  புரவெதிர்  கொள்வனைத் தழிஞ்சி
பாடிக்   கண்டனம்    வரற்குச்   செல்லாமோ   ;   அப்  புரவெதிர்
கொள்வனாகிய  கோமான்  இதுபொழுது   தான் அவ்  வெதிர்கோடற்
கேற்பப்  புலவுக்  களத்தோன் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க”
என்றும்.   “வரற்குச்   சொல்லாமோ    எனக் கூட்ட  வேண்டுதலின்
மாறாயிற்”      றென்றும்,     “இதனாற்    சொல்லியது      அவன்
வென்றிச்சிறப்போடு   அவன் கொடைச்சிறப்பும் உடன் கூறியவாறாயிற்”
றென்றும்  பழையவுரைகாரர் கூறுவர்.


 மேல்மூலம்