முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
59.



பகனீ டாகா திரவுப்பொழுது பெருகி
மாசி நின்ற மாகூர் திங்கட்
பனிச்சுரம் படரும் பாண்மக னுவப்பப்
புல்லிருள் விடியப் புலம்புசே ணகலப்
 5




பாயிரு ணீங்கப் பல்கதிர் பரப்பி
ஞாயிறு குணமுதற் றோன்றி யாஅங்
கிரவன் மாக்கள் சிறுகுடி பெருக
உலகந் தாங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்ம்மறை வீற்றிருங் கொற்றத்துச்
 10




செல்வர் செல்வ சேர்ந்தோர்க் கரணம்
அறியா தெதிர்ந்து துப்பிற் குறையுற்றுப்
பணிந்துதிறை தருபநின் பகைவ ராயிற்
சினஞ்செலத் தணியுமோ வாழ்கநின் கண்ணி
பல்வேறு வகைய நனந்தலை யீண்டிய
 15




மலையவுங் கடலவும் பண்ணியம் பகுக்கும்
ஆறுமுட் டுறாஅ தறம்புரிந் தொழுகும்
நாடல் சான்ற துப்பிற் பணைத்தோட்
பாடுசா னன்கலந் தரூஉம்
நாடுபுறந் தருத னினக்குமார் கடனே.

     இதுவுமது. பெயர் - மாகூர் திங்கள் (2)

     (ப - ரை) நீடாகாது பெருகி (1) என நின்ற பகலிரெவென்னும்
சினைமேல் வினையெச்சம் மாசி நின்ற (2) என்னும் தம் முதலது
வினையொடு முடிந்தன.

     2. மாசியென்றது மாசித்தன்மையை. இனி, அவ்வெச்சங்களைத்
திரிப்பினும் அமையும். மா 1கூர்தல் - மாக்கள் குளிராலே உடல்
வளைதல்.

     இச்சிறப்பானே இதற்கு, 'மாகூர் திங்கள்' என்று பெயராயிற்று.

     திங்கள் - மாதம். 4. புலம்பு - உலகத்து உயிர்கள் புலம்பு.

     13. சினஞ்செலத் தணியுமோவென்றது நின்பாற் சினமானது
நின்பால்நின்றும் கையறப்போம்படி சிறுகத்
தணிவுபிறக்குமோவென்றவாறு.

     இனி, உம்மும் ஓவும் அசையாக்கித் தணியென்பதனை
முன்னிலை வினையாக்கி உரைப்பாரும் உளர்.

     14. நனந்தலையென்றது பரமண்டலங்களை.

     ஈண்டிய (14) பண்ணியம் (15) என்றது, அம்மண்டலங்களில்
தன் பகைவர் பால் ஈண்டிய பண்டங்களை.

     15. மலையவும் கடலவுமாகியவென ஒரு சொல் வருவிக்க.

     16. முட்டுறாமலெனத் திரிக்க. அறம்புரிதல் - நாடுகாவலாகிய
அறத்திலே மேவுதல்.

     15-16. பகுக்கும் ஆறென்றது அப்பண்ணியங்களைப் பலர்க்கும்
பகுத்துக் கொடுக்கும் நெறியென்றவாறு.

     17-8. தோட்கலனென்றது தோளிற்கேற்ற கலமென்றவாறு;
தோட்குத் தருமென்றுமாம். 19. மார்: அசை..

     வில்லோர் மெய்ம்மறை (9) செல்வ, சேர்ந்தோர்க்கரணம் (10),
நின் தோட்கேற்ற (17) நன்கலங்களைத் திறைதரும் (18) நாடுகளைப்
புறந்தருதல் நின் கடனாயிருக்குமாகலான் (19) நின் பகைவர் (12)
அறியாது எதிர்ந்து துப்பிற்குறையுற்றுக் (11) பணிந்து திறைதருவராயின்
(12) சினஞ்செலத் தணியுமோ; நின்கண்ணி வாழ்க (13) என மாறிக்
கூட்டி வினைமுடிவு செய்க.

     'நாடு புறந்தருதல் நினக்குமார் கடன்' (19) என்பதன்பின்,
'சினஞ்செலத் தணியுமோ' (13) என்பதைக் கூட்ட வேண்டுதலின்,
மாறாயிற்று.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-2. பகல் நீடுதல் ஆகாமல், இராப்பொழுது மிக்கு,
மாசியின் தன்மை நிலைபெற்ற, மாக்களெல்லாம் குளிரால் உடம்பு
நடுங்குகின்ற மாதத்தில்.

     3. குளிர்ச்சியையுடைய அரிய வழியிலே செல்லும் பாணன்
உவப்பவும். 4. புல்லிய இராப்பொழுது நீங்கவும், உலகத்து
உயிர்களுடைய வருத்தம் நெடுந்தூரத்தே அகலவும்.

     5. உலகெங்கும் பரவிய இருள்நீங்கும்படி பல கிரணங்களைப்
பரப்பி.

     6. சூரியன் கீழ்த்திசையிலே தோன்றினாற் போல. உவப்ப,
விடிய, அகல, நீங்க, பரப்பி, தோன்றியாங்கு என இயையும்.

     7-8. இரத்தலையுடைய பரிசிலருடைய சிறிய குடும்பங்கள்
வளர்ச்சியடையும்படி, உலகத்தைத் தாங்கிய மேம்பட்ட
கல்வியையுடைய.

     9. விற்படையையுடையோரது கவசம்போன்றாய்; வில்லோர்
மெய்ம்மறையென்பது அனைத்தும் ஒரு பெயராய் நின்றது.

     9-10. ஏனையரசரினும் வேறாகிய பெரிய உரிமையையுடைய,
செல்வர்க்குள் மேம்பட்ட செல்வத்தையுடையாய், நின்னை
அடைந்தோர்க்குப் பாதுகாவலாகவுள்ளாய்.

     11. துப்பின் அறியாது எதிர்ந்து குறையுற்று - தம் வன்மையால்
நினது வலியை அறியாமல் நின்னோடு மாறுபட்டுத் தோற்று.

     12. நின்னுடைய பகைவர் நினக்கு அடங்கித் திறைகளைத்
தருவராயின். 13. நின்னிடத்தினின்றும் நீங்கும்படி நின் சினம்
தணியுமோ? நின் கண்ணி வாழ்க.

     14. பல வேறுவகையவாகிய, பகைவருடைய அகன்ற நாடுகளில்
நெருங்கிய.

     15-6. மலையினிடத்தனவும், கடலிலுள்ளனவுமாகிய
பண்டங்களைப் பலர்க்கும் பகுத்துக்கொடுக்கும் வழி முட்டுப்படாமல்,
தன்னாட்டைக் காத்தலாகிய அறத்தை விரும்பி ஒழுகுகின்ற.

     17-9. நாடல் சான்ற துப்பின் நினக்குப் பாடுசால் நன்கலம்
தரூஉம் நாடு பணைத்தோள் புறந்தருதல் கடன் - பகைவர்
ஆராய்தல் அமைந்த வன்மையையுடைய நினக்குப் புகழ்ச்சிமிக்க
நல்ல ஆபரணங்களைத் தருகின்ற நாடுகளை நினது பெருத்த
தோள்களில் வைத்துப் பாதுகாத்தல் நின் கடனாகும்; நாட்டைத்
தோளில் வைத்துப் பாதுகாப்பதாகக் கூறுதல் மரபு; 'சிறந்த நல்நாடு
செகில்கொண்டு - ஏனையோர் நாட்டிற் சிறந்த நன்னாட்டைத்
தோளிலே வைத்து' (பொருந. 137 - 8, ந.). உரையாசிரியர் வேறு
முடிபு கூறுவர்.

     (பி - ம்.) 1. பகனீடாதிரவு.    (9)                               


     1கூர்தல்: மந்திகூர - குரங்கு குளிர்ச்சிமிக; குன்னாக்க
என்பாரும் உளர்’; (
நெடுநல். 9, ந); “துவலையி னனைந்த புறத்த
தயலது, கூரலிருக்கை யருளி” (
நற். 181 : 6-7); “இறைமிசை, மாரிச்
சுதையினீர்ம்புறத் தன்ன, கூரற் கொக்கின் குறும்கறைச் சேவல்”

(அகநா, 346 : 1 - 3)




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

9. மாகூர் திங்கள்
 
59.பகல்நீ டாகா திரவுப்பொழுது பெருகி
மாசி நின்ற மாகூர் திங்கள்
பனிச்சுரம் படரும் பாண்மக னுவப்பப்
புல்லிருள் விடியப் புலம்புசே ணகலப்
 
5பாயிரு ணீங்கப் பல்கதிர் பரப்பி
ஞாயிறு குணமுதற் றோன்றி யாஅங்கு
இரவன் மாக்கள் சிறுகுடி பெருக
உலகந் தாங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்ம்மறை வீற்றிருங் கொற்றத்துச்
 
10செல்வர் செல்வ சேர்ந்தோர்க் கரணம்
அறியா தெதிர்ந்து துப்பிற் குறையுற்றுப்
பணிந்துதிறை தருபநின் பகைவ ராயிற்
சினஞ்செலத் தணிமோ வாழ்கநின் கண்ணி
பல்வேறு வகைய நனந்தலை யீண்டிய
 
15மலையவுங் கடலவும் பண்ணியம் பகுக்கும்
ஆறுமுட் டுறாஅ தறம்புரிந் தொழுகும்
நாடல் சான்ற துப்பிற் பணைத்தோள்
பாடுசா னன்கலந் தரூஉம்
நாடுபுறந் தருத னினக்குமார் கடனே.
 

இதுவுமது.

பெயர்   : மாகூர் திங்கள

1 - 6. பகல் .............. தோன்றியா அங்கு.

உரை : பகல்நீடு ஆகாது - பகற்போது நீளாமல் ; இரவுப்பொழுது
பெருகி  நின்ற  -  இராக்காலம் நீண்டுள்ள ; மாகூர் மாசித் திங்கள் -
விலங்குகள்  குளிர்  மிக்கு  வருந்தும் மாசித் திங்களிலே ; பனிச்சுரம்
படரும்  -  பனிமிக்க  அரிய  வழிகளை  நடந்து செல்ல நினையும் ;
பாண்  மகன்  உவப்ப  - பாணன் மகிழ்ச்சி யெய்துமாறு ; புல் இருள்
விடிய  -  புல்லிய  இருட் காலமாகிய  விடியற்போது கழிய ; புலம்பு
சேண்   அகல   -   இருளிலும்   பனியிலும்  வருந்தும்  வருத்தம்
நெடிதகன்றொழிய  ;  பாய்  இருள் நீங்க - உலகமெங்கும் பரந்துள்ள
இருள்  நீங்கும்  வண்ணம் ; ஞாயிறு பல் கதிர் பரப்பி - ஞாயிறானது
பலவாகிய  தன்  கதிர்களைப் பரப்பி ; குண முதல் தோன்றி யாங்கு -
கீழ்த்திசையிலே தோன்றியது போல எ - று.

பகல்     நீடாகாது இரவுப்பொழுது பெருகி நின்ற, மாகூர்  மாசித்
திங்கள்  என  இயைக்க.  பகலும் இரவும் திங்கட்குச்  சினையாகலின்,
சினைவினைகள்  முதல்வினை  கொண்டன. நீடு ஆகாது என்பன ஒரு
சொல்லாய்  நீளாமல்  என்னும் பொருள் தந்தன. பழையவுரைகாரரும்,
“நீடாகாது   பெருகி   என   நின்ற   பகலிரவென்னும்   சினைமேல்
வினையெச்சம்,  மாசி  நின்ற  என்னும்  தம்  முதலது  வினையொடு
முடிந்தன”  என்றும், “இனி அவ்வெச்சங்களைத் திரிப்பினு  மமையும்”
என்றும்   கூறுவர்.   அவர்   மாசி  நின்ற  மாகூர்  திங்கள் எனக்
கிடந்தபடியே   கொண்டு,   “மாசி   யென்றது  மாசித்  தன்மையை”
யென்றும், “மாகூர் தல் மாக்கள் குளிராலே உடல் வளைதல்” என்றும்
கூறுவர்.  முன் பனியின் பிற்பாதியும், பின் பனியின் முற்பாதியுமாகிய
தையும்  மாசியுமாகிய  திங்களே  பனிமிக்குக்  குளிரால்  உயிர்களை
வருத்துங்  காலமாதலால்,  “தையு மாசியும் வையகத் துறங்கு” என்பது
பற்றி,    மாசித்    திங்கள்   சிறப்பித்   தோதப்பட்டது.   மாக்கள்
குளிர்மிகுதியால்  இரைதேடச்  செல்லாது  பசி  மிக்கு உடல் சுருங்கி
ஒடுங்கிக்  கிடப்பது  குறித்து “மாகூர்  திங்கள்” என்றார். “மாமேயல்
மறப்ப மந்தி கூர” (நெடுதல். 9) என்றாற் போல.

பழுமரம்    தேர்ந்து செல்லும் பறவைகளைப் போலச் செல்வமும்
வண்மையும் சேர  வுடையாரை  நாடிச்செல்லும்  பரிசின்  மாக்களுள்
பாணர்   நெடுஞ்    சுரங்களையும்   அரிய   வென்னாது   கடந்து
செல்வராதலால், “பனிச்சுரம் படரும் பாண்மகன்” என்றார். விடியலில்
எழுந்து வெயில் வெம்மை மிகுதற்குள் சுரத்தைக் கடந்து    செல்லுங்
கருத்தினனாயினும்,  பின்பனியின்  கடுமையால்  வருந்தும்  வருத்தம்
ஞாயிற்றின்   தோற்றத்தால்   நீங்குவதுபற்றி,  “பாண்மகன்  உவப்ப”
என்றார்.  கடையாமத்தின்  பிற்பகுதியில்  ஞாயிற்றின்  வரவு காட்டும்
வெள்ளொளி   பரந்து  இரவுப்போதில்  திண்ணிதாய்ச்  செறிந்திருந்த
இருளை  நீக்குதலால்,  செறிவு  குன்றிச்  சிறிது  சிறிதாய்த்  தேய்ந்து
கெடும்   அவ்   விருளைப்   “புல்லிருள்”  என்றும்,  அது  நீங்கிய
காலைப்போதில்   உயிர்த்தொகைகள்   தத்தம்  உறையுளில்  தமித்து
ஒதுங்கிக்  கிடந்த  நிலையின்  நீங்கித் தெளிந்த வுணர்வுடன் வெளிப்
போதருவதால்,  “புலம்பு  சேணகல”  என்றும்,  இரவுப்போதில் உலக
முற்றும்   அணுப்புதைக்கவும்   இடமின்றிச்  செறிந்திருப்பது   பற்றி,
“பாயிருள்”  என்றும்  சிறப்பித்தார் என வறிக. ஞாயிறு தோன்றுதற்கு
முன்பே,    அதன்    பலவாகிய    கதிர்கள்    முன்னே  போந்து
இருட்கூட்டத்தின்  ஈடழித்து  விளக்கம்  செய்யும்  சிறப்புத் தோன்ற,
“பல்கதிர்  பரப்பி” என்றார். புல்லிருள் விடிதல் பாண்மகனுவத்தற்கும்,
பல்கதிர்  பரப்புதல்  பாயிருள்  நீங்குதற்கும்  புலம்பு  சேணகறற்குங்
காரணமாய் நின்றன.
 

இனி,    இப் பாட்டின்கண் மாசித்திங்களை மாகூர் திங்கள் என்று
சிறப்பித்தது கொண்டு “இச் சிறப்பானே இதற்கு மாகூர் திங்கள் என்று
பெயராயிற்”  றென்றும்,  “திங்கள், மாதம்” என்றும் பழையவுரைகாரர்
கூறுவர்.

பகல்    நீடாகாது இரவுப்பொழுது பெருகிநின்ற மாசித் திங்களிலே,
உவப்ப,   விடிய,   அகல,   நீங்க,   பரப்பி,   ஞாயிறு   குணமுதல்
தோன்றியாங்கு என முடிக்க.

7 - 10. இரவல் ................. அரணம்.

உரை :   இரவல்  மாக்கள்  சிறு  குடி  பெருக  -  இரத்தலைத்
தொழிலாகவுடைய பரிசிலர்களின் சிறுமையுற்ற குடிகள் சிறுமை நீங்கிப்
பொருட்பேற்றால்  பெருக்க  மெய்தவும் ; உலகம் தாங்கிய மேம்படு -
உலகுயிர்களை இனிது புரத்தலால் குடக்கில் சேரர் குடியில் மேம்பட்ட
;  கற்பின் - கல்வி யறிவினையுடைய ; வில்லோர் மெய்ம்மறை - வில்
வீரர்க்கு  மெய்  புகு  கருவிபோல்பவனே  ;  வீற்றிருங் கொற்றத்துச்
செல்வர்  செல்வ  - வீறும்பெருங்கொற்றமுமுடைய வேந்தர்க்கெல்லாம்
வேந்தாயுள்ளோனே  ; சேர்ந்தோர்க்கு அரணம் - தன்னைப் புகலென்
றடைந்தோர்க்குக் காப்பாயிருப்பவனே எ - று.

ஞாயிறு       குணமுதல்       தோன்றியதனால்    பாண்மகன்
உவகையெய்துதலும் உயிர்த்தொகை  புலம்பு நீங்கி இன்ப மெய்துதலும்
பயனாதல்போல  நின்  தோற்றத்தால்  இரவலர் சிறுமைக்குடி பெருக்க
மெய்துவதும்,    உலகம்    நல்லாட்சி   பெற்று   இன்பமெய்துவதும்
உண்டாயின  என்பார், “ஞாயிறு குணமுதற் றோன்றி யாங்கு, மேம்படு
கற்பின்  மெய்ம்மறை” யென்றார். ஞாயிறு குணமுதல்  தோன்றியாங்கு”
குட   திசைக்கட்டோன்றினை  யென்பது,  “உவமப்பொருளின்  உற்ற
துணர”    (தொல்.உவம.30)    நின்றது.   இசைத்தமிழ்   வளர்க்கும்
ஏற்றமுடையராயினும்       இரந்து      வாழ்தல்பற்றி,     “இரவன்
மாக்கள்”     என்றும்,    இரத்தற்கு    ஏது    அவர்     குடியின்
சிறுமை     யென்பது எய்த, “சிறுகுடி”    யென்றும், சிறுமை நீங்கிப்
பொருட்பெருக்கம்   எய்துதலால்   சேரலாதனுடைய  கொடை  நலம்
தோன்றுதலின்,   “பெருக”  என்றும்,  “மன்னனுயிர்த்தே  மலர்தலை
யுலகம்”  (புறம்.  186)  என்பதைத் தேர்ந்து தான் அதற்கு உயிரெனக்
கருதி,  அரசு காவல் புரிந்து மேம்படுதல் விளங்க, அதனை விதந்தும்
கூறினர்.   இம்   மேம்பாடு   அவன்   பெற்ற  கல்விச்  சிறப்பைத்
தோற்றுவித்தலின்,  “கற்பின்  மெய்ம்மறை”  யென்றார்.  கற்பு, கல்வி.
“தொலையாக்  கற்பு”  (பதிற்.  80) எனப் பிறாண்டும் வருதல் காண்க.
இனி,  கற்பினை  வில்லோர்க்கு ஏற்றி யுரைப்பினு மமையும். சேரர்க்கு
விற்படையே  சிறந்ததாதலின்,  “வில்லோர்  மெய்ம்மறை”  யென்றார்.
அவர்   கொடியினும்   விற்பொறியே   காணப்படும்.  வீற்றையுடைய
கொற்றத்தை, வீற்றிருங் கொற்ற மென்றார். வீறு, பிறிதொன்றற் கில்லாத
சிறப்பு.    கொற்றமுடையார்    செல்வமுடையராதலால்,    அரசரை,
“கொற்றத்துச்   செல்வர்”   என்றும்,   அச்  செல்வர்  பலருள்ளும்
தலைசிறந்த   வேந்தனாதல்  தோன்ற,  “செல்வர்  செல்வ”  என்றும்
கூறினார்.   செல்வமுடையார்க்குச்   சீரிய  செல்வமாவது  தன்னைச்
சேர்ந்தோர்  “புன்கண்  அஞ்சும்  மென்கண்மை”  (நற். 210) என்பது
பற்றி, “சேர்ந்தோர்க் கரணம்” என்றார்.
 

14 - 19. பல்வேறு .............. கடனே.

உரை :  பல் வேறு வகைய நனந்தலை - நாடும் காடும்  அவலும்
மிசையுமெனப்  பல்வேறு  வகைப்பட்ட  அகன்ற    நாடுகளிலிருந்து;
ஈண்டிய    வந்து    தொக்கனவும்   ;   மலையவும்   கடலவும்   -
மலையிடத்தனவும்  கடலிடத்தனவுமாகிய ; பண்ணியம் பகுக்கும் ஆறு
-  செல்வப்  பொருள்களை  அறம்  முதலிய  துறைகளில்  வகுத்துச்
செய்யும்   இறைமாட்சியால்   ;   அறம்  முட்டுறாது  புரிந்தொழுகும்
செய்தற்குரிய  அறங்கள்  குன்றாமல்  செய்தொழுகும் ; நாடல் சான்ற
துப்பின்   -   பகைவர்  ஆராய்தற்  கமைந்த  வலி  பொருந்திய  ;
பணைத்தோள்  -  பருத்த தோளையுடைய ; நினக்கு - வேந்தனாகிய
நினக்கு  ;  பாடு  சால் நன்கலம் தரூஉம் நாடு புறந்தருதலும் கடன் -
பெருமையமைந்த   உயர்ந்த   செல்வங்களைத்   திறையாக  நல்கும்
நாடுகளைக் காத்தலும் கடனாதலால் எ - று.

ஈண்டியவும்   மலையவும் கடலவுமாகிய பண்ணியம் என இயைக்க.
இனி,  நனந்தலை யீண்டிய,   பல்வேறு வகைய பண்ணிய மென்றுமாம்,
பண்ணியமென்றது,       பொதுவருவாயாகிய     பண்டங்களென்றும்,
நன்கலனென்றது,  அவற்றுட்  சிறப்புடைய மணி முதலாயின வென்றும்
கொள்க.  இயற்றல்,  ஈட்டல்,  காத்தல்,  வகுத்தல்  என்ற  நால்வகை
அரசியற்  செயல்களுள்,   வகுத்தலால் அரசு மாட்சி யெய்துவது பற்றி,
“பண்ணியம்  பகுக்கும்   ஆறு”  என்றார்.  இவ்வாறு  பகுக்குமிடத்து,
அறம்  பொருள், இன்பம்  குறித்துப் பகுத்தல் அறமாதல் கண்டு, அது
செய்தொழுகும்   வேந்தனை,   “பகுக்கும்  ஆறு  முட்டுறாது  அறம்
புரிந்தொழுகும் நினக்கு” என்றார்.

இனிப்     பழைய வுரைகாரர், ஈண்டிய பண்ணிய மென்றியைத்து,
“நனந்தலை   யென்றது   பர   மண்டலங்களை”  யென்றும்,  “அம்
மண்டலங்களில் தன் பகைவர்பால் ஈண்டிய  பண்டங்களை” யென்றும்,
அறம்  புரிதல்   என்றதற்கு,  “நாடு காவலாகிய அறத்திலே மேவுதல்”
என்றும், “பகுக்கும்  ஆறென்றது,  அப் பண்ணியங்களைப் பலர்க்கும்
பகுத்துக் கொடுக்கும் நெறியென்றவா” றென்றும் கூறுவர்.
 

நாடல்  சான்ற துப்பிற் பணைத்தோள் நினக்கு என்பார்,  தோளினது
வலியை   நாடல்  சான்ற  துப்பு   என்றது,  தோள்வலியை  எளிதாக்
கருதமாட்டாமையின்,      பகைவர்தம்     வலியும்     துணைவலியும்
படைவலியும்  ஒருசேரத்   தொகுத்து  நோக்கி  இவன்  தோள்வலிக்கு
ஆற்றாமை  கண்டு எண்ணமிடுதற் கேதுவாகிய வலி யென்றவாறு. பாடு,
பெருமை.   இனிப் பழையவுரைகாரர், பணைத் தோளையுடைய  நினக்கு
என்று    இயைக்காமல்,     பணைத்தோட்கு   அணியும்    நன்கலம்
என்றியைத்து,  “தோட்கல னென்றது  தோளிற் கேற்ற கல மென்றவாறு”
என்றும், “தோட்குத்  தருமென்றுமா” மென்றும் கூறுவர்.

நினக்குமார்   கடன்   என்புழி   உம்மை பிரித்துக் கூட்டப்பட்டது.
ஆர்; அசைநிலை ;  (தொல்.  இடை.  23)  மார்   என்றே  கொண்டு
அசைநிலையாக்குவர்    பழைய   வுரைகாரர்.  தரூஉம்  என்றதனால்,
திறைப்  பொருளாதல் பெற்றாம். அத் திறைப்  பொருளும்  அறம் புரிந்
தொழுகுதற்குப்  பயன்படுதலால்,   “நாடு    புறந்  தருதலும்   கடன்”
என்றாரென வுணர்க.

11 - 13. அறியாது ................. கண்ணி.

உரை :   நின் பகைவர் -  நினக்குப் பகையாய வேந்தர் ; துப்பின்
அறியாது -  தம் வலி யொன்றே பற்றி நின் வலி யியல்பை நன்கறியாது
;  எதிர்ந்து  -  எதிர்த்துப்  பொருது ; குறை  யுற்று - வலி யிழந்து ;
பணிந்து - நின்னைப் பணிந்து ;  திறை தருப ஆயின் -  திறையினைக்
கொணர்ந்து தருவராயின்;  சினம் செலத்தணிமோ அவர்  மேற் சென்ற
நின்   சினம்  தணிவாயாக ;  நின்  கண்ணி  வாழ்க  -  நின் கண்ணி
வாழ்வதாக எ - று.

நினக்குப்    பகையாயினார், நாடல் சான்ற நின் துப்பினை  நாடாது
பொருதழிந்ததற்கு  ஏது,  அவர்   தம்  அறியாமை  யென்றும்,  அது
தனக்கும்   ஏது,  தம்  வலியினைத்  தாமே   வியந்து கொண்டமையே
யென்றும்  கூறுவார், “அறியா  தெதிர்ந்து துப்பிற் குறையுற்று” என்றும்,
அதனால்   அவர்  செய்யக்கடவது  பணிந்து  திறைதருவதை  யல்லது
வேறில்லை  யென்றற்கு, “பணிந்துதிறை தருப  நின் பகைவர்” என்றும்,
அவர்கட்கு  நீ   செய்வது,  சினந்  தணிந்து  அருளுவதே யென்பார்,
“சினம்  செலத் தணிமோ” என்றும், எனவே, பகைத்துக்  கெட்டார்க்கும்
அருள்   சுரந்தளிக்கும்  நீ  நெடிது  வாழ்க   என  வாழ்த்துவதே எம்
போன்றோர்   செயற்பால  தென்பார், “வாழ்க நின் கண்ணி”  யென்றும்
கூறினார்.  “பாடுசால் நன்கலம்  தரூஉம் நாடு புறந் தருதல் நினக்குமார்
கடனே”    என்ப  வாகலின்,  “சினம்  செலத்தணிமோ”   என்றாரென
வுணர்க.   மோ  :  முன்னிலை   யசை.  இக்  கருத்தே  பற்றிப்  பிற
சான்றோரும்,  “புரைவது   நினைப்பிற்  புரைவதோ  வின்றே,  பெரிய
தப்புந   ராயினும், பணிந்து திறை பகரக் கொள்ளுநையாதலின்” (பதிற்.
17)  என்று கூறுதல் காண்க.
 

இதுகாறுங்  கூறியவாற்றால், பகல் நீடாகாது இரவுப்பொழுது பெருகி
நின்ற மாசித் திங்களிலே, பாண்மக னுவப்ப, புல்லிருள் விடிய,  புலம்ப
அகல,   பாயிருள்   நீங்க,   பல்கதிர்  பரப்பி,  ஞாயிறு  குணமுதல்
தோன்றியாங்கு  சிறுகுடி  பெருக,  உலகந்  தாங்கிய,  குடக்கிற் சேரர்
குடியில்  தோன்றி மேம்பட்ட கற்பினையுடைய மெய்ம்மறை,  செல்வர்
செல்வ,  சேர்ந்தோர்க் கரணம், பண்ணியம் பகுக்கும் ஆறு முட்டுறாது
அறம்  புரிந்த  பணைத்  தோளையுடைய நினக்கு நாடு புறந்தருதலும்
கடனாதலால், அறியாது எதிர்ந்து குறையுற்றுப் பணிந்து பகைவர் திறை
தருபவாயின்,  சினம்  தணிவாயாக  ;  அதனால் நின் கண்ணி வாழ்க
என்று  முடிக்க.  பழையவுரைகாரர்,  “வில்லோர் மெய்ம்மறை, செல்வ,
சேர்ந்தோர்க் கரணம், நின்தோட் கேற்ற நன்கலங்களைத் திறை தரும்
நாடுகளைப்  புறந்தருதல்  நின் கடனாயிருக்குமாகலான், நின் பகைவர்
அறியாதெதிர்ந்து  துப்பிற்  குறையுற்றுப்  பணிந்து திறை தருவராயின்
சினம் செலத்தணிமோ, நின் கண்ணி வாழ்க என மாறிக் கூட்டி வினை
முடிவு   செய்க”  என்றும்,  “நாடு  புறந்தருதல்  நினக்குமார்  கடன்
என்பதன்   பின்   சினஞ்   செலத்   தணிமோ  என்பதைக்  கூட்ட
வேண்டுதலின், மாறாயிற்” றென்றும் கூறுவர்.

“இதனாற்     சொல்லியது     அவன்    வென்றிச்     சிறப்புக்
கூறியவாறாயிற்று”.


 மேல்மூலம்