முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
60.



கொலைவினை மேவற்றுத் தானை தானே
இகல்வினை மேவலன் றண்டாது வீசும்
செல்லா மோதில் பாண்மகள் காணியர்
மிஞிறுபுற மூசவுந் தீஞ்சுவை திரியா
 5




தரம்போழ் கல்லா மரம்படு தீங்கினி
அஞ்சே றமைந்த முண்டை விளைபழம்
ஆறுசென் மாக்கட் கோய்தகை தடுக்கும்
மறாஅ விளையு ளறாஅ யாணர்த்
தொடைமடி களைந்த சிலையுடைய மறவர்
 10


பொங்குபிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி
வருங்கட லூதையிற் பனிக்கும்
துவ்வா நறவின் சாயினத் தானே.

     துறை - விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும்
அது. பெயர் - மரம்படு தீங்கணி
(5)

     (ப - ரை) 4. மிஞிறு புறமூசவும் தீஞ்சுவை திரியாமை
அப்பழத்தின் புறத்து வன்மையால்.

     5. அரம்போழ்கல்லாவென்றது புறத்து வன்மையால் அரிவாளும்
போழமாட்டாவென்றவாறு. 'அரம்போழ்கல்லாமரம்படு தீங்கனி'
என்றது 1புறக்காழனவாகிய பனை முதலியவற்றின் தீங்கனியை
நீக்குதற்கு.

     இச்சிறப்பானும் முன்னும் பின்னும் வந்த அடைச்சிறப்பானும்
இதற்கு; 'மரம்படு தீங்கனி' என்று பெயராயிற்று.

     6. முண்டை விளைபழம் - முட்டைகள்போலும் விளைபழம்;
முட்டையென்றது 2மெலிந்தது.

     மரம்படு தீங்கனியாகிய (5) முட்டை விளைபழம் (6) என
இருபெயரொட்டு.

     ஓய்தகை தடுக்கும் (7) துவ்வா நறவு (12) எனக் கூட்டுக.

     8. அறாஅ யாணரென்றது இடையறா கடல்வருவாய் முதலாய
செல்வங்களை. 9. தொடைமடி - அம்புதொடுத்து எய்தலில் மடிதல்.

     10. புணரியொடு மங்குலொடு என ஒடுவை இரண்டிடத்தும்
கொள்க. மயங்கவெனத் திரிக்க; மயங்குவது வருகின்ற ஊதை (11)
எனக் கொள்க.

     மறவர் (9) கடலூதையிற் பனிக்கும் (11) நறவு (12) எனக்கூட்டி,
ஆண்டுவாழும் மறவர் 3கடலூதையால் மட்டும் நடுங்கும் நறவென்க.

     12. நறவு - ஓரூர்; துவ்வா நறவு - வெளிப்படை.

     அவன்றான், இப்பொழுது துவ்வாநறவின் சாயினத்தான் (12)
இனித்தானை கொலைவினை மேவற்று; ஆகலால் தான் (1)
இகல்வினை மேவலன்; இன்னபொழுது இன்னவிடத்து
எழுமெனத்தெரியது (2); பாண்மகளே, நாம் அவனைக் காணியர்
செல்லாமோ; செல்லின் (3), தண்டாது வீசும் (2) எனக் கூட்டி
வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் கொடைச்சிறப்போடு வென்றிச்
சிறப்பும் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. சேரனது சேனை கொலையாகிய தொழிலை
விரும்புதலையுடையது.

     1-2. சேரன்தான், போராகிய வினையை
விரும்புதலையுடையனாகி அவ்விடத்தே பெற்ற அரியபொருள்களை
ஓரளவில் அமையாது கொடுப்பான்.

     3. விறலி, ஆதலால் அவனைக் காணும்பொருட்டுப் போதலை
விரும்புவோமா; தில்: விழைவுப்பொருளில் தன்மையிடத்து வந்தது.

     4-5. வண்டுகள் நறுமணத்தால் புறத்தே மொய்க்கவும் தம்
இனிய சுவை மாறுபடாமல், புறத்து வன்மையால் அரிவாளும்
பிளத்தற்கு இயலாத மரங்களில் விளைந்த இனிய பழங்களாகிய.

     6. அழகிய சாறு நிரம்பிய, முட்டைபோல முதிர்ந்த பழங்கள்;
முட்டை: இங்கே பலாப்பழத்தின் வடிவிற்கு உவமை; அஞ்சேறு
என்பதற்கு ஏற்ப முட்டை முண்டை என்றாயிற்று; மெலித்தல் விகாரம்.

     7. வழியிலே செல்லுகின்ற மக்களுக்கு, நடந்து செல்லுதலால்
உண்டான ஓய்ந்த தன்மையைத் தடுக்கும்; அறத்தின்பொருட்டு வழிச்
செல்வோர் உண்ணும்படி பழமரங்களை வளர்த்தல் மரபு;
"அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்" (குறுந். 209 : 1);
நெடுஞ்சேண் வந்த நீர்நிைசை வம்பலர், செல்லுயிர் நிறுத்த
சுவைக்காய் நெல்லி” (அகநா, 271 : 6 - 7).

     8. மறாஅ விளையுள் - முற்காலத்து விளைந்தேனென
மறுக்காத நிலத்தின் விளைவையும்; "தொல்லது விளைந்தென
நிலம்வளங் கரப்பினும், எல்லா வுயிர்க்கு மில்லால் வாழ்க்கை"
(புறநா.203 : 2 - 3). அறாஅ யாணர் - இடையறாமல் வருகின்ற
ஏனைய புதுவருவாய்களையும் உடைய.

     தடுக்கும் (7) யாணர்த் (8) துவ்வாநறவு (12) என இயையும்.

     9. அம்புகளைத் தொடுத்து எய்தலால் மடிதலைக களைந்த
வில்லையுடைய மறவர். 10. பொங்குகின்ற பிசிரையுடைய
அலைகளோடும் மேகங்களோடும் கலந்து. மங்குலொடு என்பதிலுள்ள
ஒடுவைப் புணரி யென்பதனோடும் கூட்டுக.

     11. வருகின்ற கடலினது குளிர்ந்த காற்றால் உடல்
நடுங்குகின்ற; என்றது அம்மறவர், சேரனது வன்மைகாரணமாக,
பகைவருக்கு நடுங்குதல் இலரென்றபடி.

     12. உண்ணப்படாத நறவென்னும் ஊரின்கண்ணே,
மென்மையையுடைய மகளிரினத்திடையேயுள்ளான். சாயினம் -
மெல்லிய மகளிராயம்; இவர் பாட்டாலும், கூத்தாலும், வார்த்தையாலும்
சேரனுக்கு மகிழ்ச்சி செய்யும் மகளிர்; "இன்னகை யாயமோ
டிருந்தோற் குறுகி" (சிறுபாண். 220)

     இதன் பதிகத்துத் தண்டாரணியம் (3) என்றது ஆரிய நாட்டிலே
உள்ளதோர் நாடு. கபலை (5) என்றது குராற்பசு.


     1“புறக்கா ழனவே புல்லென மொழிப” (தொல், மரபு, 85)
     2தொல், எச்ச. 7.
     3“செஞ்ஞாயிற்றுத் தெறவல்லது, பிறிதுதெற லறியார்நின்னிழல்
வாழ் வோரே”
(புறநா. 20 : 8 - 9) என்பதனோடு ஒப்புநோக்குக.




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

10. மரம்படு தீங்கனி.
 
60.கொலைவினை மேவற்றுத் தானை தானே
இகல்வினை மேவலன் றண்டாது வீசும்
செல்லா மோதில் பாண்மகள் காணியர்
மிஞிறுபுற மூசவுந் தீஞ்சுவை திரியாது
   
5அரம்போழ் கல்லா மரம்படு தீங்கனி
அஞ்சே றமைந்த முண்டை விளைபழம் 
ஆறுசென் மாக்கட் கோய்தகை தடுக்கும்
மறாஅ விளையு ளறாஅ யாணர்த்
தொடைமடி களைந்த சிலையுடை மறவர்
   
10பொங்குபிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி
வருங்கட லூதையிற் பனிக்கும்
துவ்வா நறவின் சாயினத் தானே.
 

துறை  : விறலியாற்றுப் படை.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்  : மரம்படு தீங்கனி.
 

4 - 12. மிஞிறு ......................... சாயினத்தானே.

உரை :  புறம்  மிஞிறு மூசவும் - புறத்தே   வண்டினம் மொய்த்து
நிற்கவும்  ;   தீஞ்சுவை  திரியாது  -  தீவிய சுவையில்  மாறுபடாமல் ;
அரம் போழ்கல்லா மரம்படு தீங்கனி -  அரிவாளால் அறுக்க மாட்டாத
மரத்தில்  உண்டாகிய   இனிய  கனியாகிய  ;  அம் சேறு அமைந்த -
அழகிய   தேன் நிறைந்த ; முண்டை விளை பழம் - முட்டை போன்ற
முதிர்ந்த   பழங்கள் ; ஆறு செல் மாக்கட்கு ஓய்தகை தடுக்கும்  வழிச்
செல்வோர்க்கு   உணவாகி    அவர்தம்   வழி  நடந்த  களைப்பைப்
போக்கும்  ;   மறா  அ  விளையுள்  -  மாறாத விளைவினை  நல்கும்
வயல்களால்  ; அறா அ யாணர் - நீங்காத புதுவருவா  யினையுடைய ;
தொடைமடி  களைந்த  சிலையுடை   மறவர்  -  அம்பு தொடுப்பதில்
மடிதலில்லாத   வில்லையுடைய  வீரர்கள்  ;  பொங்கு  பிசிர்ப் புணரி
மங்குலொடு   மயங்கி  வரும்  - பொங்குகின்ற சிறு நுண்திவலைகளை
யெறியும்  அலைகளோடு படிகின்ற மேகத்தோடும் கலந்துவரும் ;  கடல்
ஊதையின் பனிக்கும் - கடற்காற்றால் குளிர் மிக்கு  நடுங்கும் ; துவ்வா
நறவின்    சாய்   இனத்தான்   -    நறவென்னும்   ஊரின்கண்ணே
சாயலையுடைய  மகளிர் கூட்டத்தே யுள்ளான் எ - று.

தடுக்கும் நறவு என்றும், அறாஅ யாணர் நறவு என்றும்,  ஊதையிற்
பனிக்கும்  நறவு  என்றும்  இயையும்.  நறவு,  ஓர் ஊர். நற வென்பது
உண்ணப்படும்   கள்ளிற்கும்   பெயராதலால்,  அதனின்  நீக்குதற்குத்
“துவ்வா நறவு”  என்றார் . இது வெளிப்படை . மரம்படு தீங்கனியாகிய
முண்டை  விளை   பழம்  என்க  . எதுகை நோக்கி, முட்டையென்பது
முண்டையென   மெலிந்து  நின்றது  .  மணத்தால்  பழத்தையடைந்த
வண்டினம்,   அதன்  உறுதியான  தோலைக்  கிழித்து   உள்ளிருக்கும்
சேற்றை  யுண்ண  மாட்டாமையின்   புறத்தே மொய்த்தன வென்றற்கு,
“மிஞிறு புறம் மூசவும்”  என்றார். வலிய தோலால் புறத்தே மூடப்பட்டு
வண்டின     மூசிய    வழியும்   உள்ளிருக்கும்    பழத்தின்   சுவை
திரியாமையின்,  “தீஞ்சுவை   திரியாது”  என்றார்  .  திரியாது   என்ற
வினையெச்சம்  விளை  பழம்  என்பதில்  விளைதல் என்னும்  வினை
கொண்டது   .    மரம்படு   தீங்கனி   என்புழிப்    படுதல்  என்னும்
வினையொடு    முடிப்பினுமமையும்  இனி,  இத்  தீங்கனி    விளையும்
மரத்தின்  மாண்பு   கூறுவார்,  “அரம்   போழ்கல்லா மரம்” என்றார்.
பழையவுரைகாரரும்,   “மிஞிறு புறம் மூசவும் தீஞ்சுவை திரியாமை அப்
பழத்தின்   புறத்து    வன்மையால்”  என்றும்,  “அரம்   போழ்கல்லா
வென்றது,    புறத்து     வன்மையால்,   அரிவாளும்   போழமாட்டா
வென்றவாறு” என்றும்,  “அரம்போழ் கல்லா மரம்படு தீங்கனி  என்றது,
புறக்காழனவாகிய    பனை    முதலியவற்றின்  தீங்கனியை  நீக்குதற்”
கென்றும்,  “இச்   சிறப்பானும்  முன்னும்  பின்னும்   வந்த  அடைச்
சிறப்பானும்   இதற்கு   மரம்படு தீங்கனியென்று பெயராயிற்” றென்றும்
கூறுவர்.

அஞ்சேறு,     அழகிய தேன் . இக் காலத்தில் பழத்தின்  சேற்றைப்
பழச்சாறு   என்பர்.  அழகு,   இனிமை,  அமைதல்,  நிறைதல்,  சேறு
நிறையாவழிக் கனி,   தீவிதாகாமையின்,   “அஞ்சே றமைந்த முண்டை
விளை பழம்”   என்றார்.    முற்றக்  கனிந்த  பழமென்றற்கு,  விளை
பழமெனப்பட்டது.    பழையவுரைகாரரும்,  “முண்டை  விளை  பழம்,
முட்டைகள் போலும்   விளை  பழ”  மென்றும்  “முட்டை  யென்றது
மெலிந்த”  தென்றும், “மரம்படு  தீங்கனியாகிய முட்டை விளை பழம்
என இரு பெயரொட்” டென்றும் கூறுவர்.
 

வழிச்சாலைகளில்        இனிய      பழமரங்களை     அறத்தின்
பொருட்டுவைத்து     வளர்ப்பது    பண்டையோர்    இயல்பு.   வழிச்
செல்வோர், அப்பழங்களையுண்டு,  வழி வருத்தம் போக்கிக் கொள்வது
பயன். இக்  காலத்தே சாலையிடத்துப் பழமரங்கட்குக் காவலிட்டு  வழிச்
செல்வோர்க்குப்    பயன்படாவாறு    நீக்கிச்   சாலை   வருவாயாகப்
பொருளீட்டுவது   இயல்பாய்  விட்டது.  “அறந்தலைப்பட்ட  நெல்லியம்
பசுங்காய்”  (குறுந்.  209)  என்றும்,  “நெடுஞ்சேண்   வந்த நீர்  நசை
வம்பலர்,  செல்லுயிர்   நிறுத்த  சுவைக்காய்  நெல்லி”  (அகம்.    271)
என்றும்    வருவன   காண்மின்.    இவ்வண்ணம்   இப்   பழங்கள்
வழிச்செல்வோர்க்குப்   பயன்படுதலை, “செல்லுயிர் நிறுத்த சுவைக்காய்
நெல்லி”   என்று  சான்றோர்  கூறியது  போல,  ஈண்டும், “ஆறுசென்
மாக்கட்கு  ஓய்தகை தடுக்கும்” என்பது காண்க. ஓய்தகை,  களைப்பு.

பண்டை      நாளெல்லாம் பெருக விளைந்த  வயல், உரம்  குன்றி
விளைவு  பெருகா  தொழிதலை,  “வயல்  விளைவு   மறுப்ப”  என்ப
வாகலின்,  விளைவு  பெருக   நல்கும்  வயலை,  “மறாஅ விளையுள்”
என்றார்  ;  “தொல்லது  விளைந்தென நிலம் வளம் கரப்பினும், எல்லா
வுயிர்க்கும்   இல்லால் வாழ்க்கை” (புறம். 203) என ஊன்  பொதி பசுங்
குடையா  ரென்னும்  சான்றோர்   கூறுதல் காண்க. இவ் விளையுளால்
நாளும்   புது  வருவாய்   குன்றாமையின்,  “அறாஅ  யாணர்  நறவு”
என்றார்.   பழையவுரைகாரர்,  “அறாஅ  யாண  ரென்றது  இடையறாத
கடல்   வருவாய்  முதலாய   செல்வங்களை”  யென்பர்.  தொடுத்தல்
தொடை   யென நின்றது ; விடுத்தல் விடையாயது போல.  சிலையுடைய
மறவர்,   தாமேந்தும்   சிலை   அம்பு  தொடுக்காது  மடிந்திருத்தலை
வெறுத்துப்  போர்வேட்டுத் திரியும் செருக்குடைய ரென்றற்கு, “தொடை
மடி    களைந்த  சிலையுடைய  மறவர்”  எனப்பட்டனர்.   இவர்களை
ஊதைக்  காற்றன்றிப்   பிற   எவ்வுயிரும் எச் செயலும் நடுங்குவித்தல்
இல்லையென்பது   தோன்ற,  “சிலையுடை மறவர் ஊதையிற் பனிக்கும்
நறவு”    என்றார்.   அவ்  வூதையும்  புணரியும்   மங்குலும்  கலந்து
வந்தல்லது   பனிக்கு    மாற்றலுடைத்தன்  றென்பதும்  உரைத்தவாறு
காண்க.   பழையவுரைகாரரும்,  “மறவர்    கடலூதையிற்   பனிக்கும்
நறவெனக்   கூட்டி  ஆண்டு வாழும்  மறவர்  கடலூதையால்  மட்டும்
நடுங்கும்  நற  வென்க” என்றும், “நறவு  ஓர் ஊர்” என்றும், “துவ்வா
நறவு வெளிப்படை”  யென்றும் கூறுவர்.

இனி, அவர், தொடை மடி யென்றற்கு, “அம்பு தொடுத்து  எய்தலில்
மடிதல்”  என்றும்,    “புணரியொடு    மங்குலொடு   என   ஒடுவை
இரண்டிடத்தும்   கொள்க”   என்றும்  மயங்கி  யென்றதை,  “மயங்க
வெனத்   திரிக்க”  வென்றும்,  “மயங்குவது  வருகின்ற  வூதை யெனக்
கொள்க” என்றும் கூறுவர்.

சாய்,      மென்மை.    ஈண்டு  ஆகு  பெயரால்,   மென்மையை
இயல்பாகவுடைய  மகளிர்   மேல் நின்றது. இம் மகளிர் சேரலாதற்குத்
தம்  ஆடல்   பாடல் முதலியவற்றால்,   இன்புறுத்துபவர். இவருடைய
கூட்டத்திடையே வேந்தன் உள்ளான் என்பார், “சாயினத்தான்” என்றார்.
 

1 - 3. கொலை வினை .............. காணியர்.

உரை : தானை கொலை வினை  மேவற்று- தன் சேனை போராகிய
கொலைத்தொழிலை  விரும்பும்   இயல்பிற்றாக  ;  தான் இகல் வினை
மேவலன்  -   தான்  சாயினத்தா னாயினும் உள்ளத்தால்  பகைவரைப்
பொரும்  தொழிலையே விரும்புவ  னாதலால் ; தண்டாது வீசும் - நாம்
சென்ற  வழி   நமக்குப்  பகைப்  புலத்தே  பெறும்  அருங்கலன்களை
வரையாது  வழங்குவன்  (ஆகவே)  ;   பாண் மகள் - பாண் மகளே ;
காணியர் செல்லாமோ -  அவனைக் காண்டற்குச் செல்வேமோ எ - று.

பாண்மகள்     :   அண்மைவிளி. தில் : விழைவின் கண் வந்தது.
புறத்தே   நோக்குமிடத்துச்  சேரலாதன் நறவென்னு  மூரிடத்தே மகளிர்
கூட்டத்திடையே    இருந்தா   னாயினும்,   அவனுள்ளம்   பகைவரை
யழித்தலாகிய  இகல்  வினையே   மேவி யுளதென்பார், “தானே இகல்
வினை   மேவலன்”  என்றும்,  அவன்  உள்ளக்குறிப்பின்வழி  அவன்
தானை   வினை   மேவிய   இயல்பிற்றென்பார்,   “கொலை  வினை
மேவற்றுத்    தானை”    என்றும்,   இவ்வண்ணம்   வினை    மேற்
கொண்டிருப்பினும்  நம்போலும்  கூத்தர்க்கும் பாணர்க்கும் கொடுப்பன
கொடுத்தலிற்   குறைவிலன்  என்றற்குத்,  “தண்டாது  வீசும்”  என்றும்,
ஆகவே  அவன்பாற்  செல்வது  தக்க   தென்பார், “செல்லாமோ தில்
காணியர்”    என்றும்   கூறினார்.  காணியர்  :   செய்யிய  ரென்னும்
வினையெச்சம் ; இது   செல்லாமோ என்னும் முற்றுவினை கொண்டது.

இதுகாறும்   கூறியவாற்றால், மரம்படு தீங் கனியாகிய விளை  பழம்,
மாக்கட்கு ஓய் தகை தடுப்பதும், அறாஅ  யாணரை யுடையதும், மறவர்
பனிக்கும்  இடமாயதுமாகிய  நறவு  என்னும் ஊரின்கண் ஆய மகளிர்
கூட்டத்திடையே   இருந்தானாயினும்,  தன்  சேனை  கொலை வினை
மேவற்றாக,   தான் இகல்  வினை  மேவல  னாதலால்,   நாம் சென்று
காணின்  தண்டாது  வீசும் ;   ஆதலால்,  பாண்  மகளே, அவனைக்
காணியர்   செல்லாயோ  என்று  வினைமுடிவு செய்து கொள்க.  இனிப்
பழையவுரைகாரர்,   “அவன்றான்    இப்பொழுது   துவ்வா   நறவின்
சாயினத்தான்  ;   இனித்  தானை கொலைவினை மேவற்று ; ஆகலால்
தான்    இகல்வினை  மேவலன்  ;  இன்ன  பொழுது   இன்னவிடத்து
எழுமெனத்  தெரியாது,   பாண்  மகளே,  நாம்  அவனைக்   காணியர்
செல்லாமோ  ; செல்லின் தண்டாது வீசும்  எனக் கூட்டி வினை முடிவு
செய்க” என்பர்.

“இதனாற் சொல்லியது, அவன்  கொடைச்  சிறப்பொடு  வென்றிச்
சிறப்பும்  கூறியவாறாயிற்று”.


 மேல்மூலம்