முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
61.



பலாஅம் பழூத்த பசும்புண் ணரியல்
வாடை துரக்கு நாடுகெழு பெருவிறல்
ஓவத்தன்ன வினைபுனை நல்லிற்
பாவை யன்ன நல்லோள் கணவன்
 5




பொன்னி னன்ன பூவிற் சிறியிலைப்
புன்கா லுன்னத்துப் பகைவ னெங்கோ
புலர்ந்த சாத்திற் புலரா வீகை
மலர்ந்த மார்பின் மாவண் பாரி
முழவுமண் புலர விரவல ரினைய
 10




வாராச் சேட்புலம் படர்ந்தோ னளிக்கென
இரக்கு வாரே னெஞ்சிக் கூறேன்
ஈத்த திரங்கா னீத்தொறு மகிழான்
ஈத்தொறு மாவள் ளியனென நுவலுநின்
நல்லிசை தரவந் திசினே யொள்வாள்
 15



உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை
நிலவினன்ன வெள்வேல் பாடினி
முழவிற் போக்கிய வெண்கை
விழவி னன்னநின் கலிமகி ழானே.

     துறை - 1காட்சி வாழ்த்து. வண்ணம் ஒழுகுவண்ணம்.
தூக்கு - செந்தூக்கு. பெயர் - புலாஅம் பாசறை
(15)

     (ப - ரை) 1. பலாஅம் பழுத்த -பலாப்பழுத்தவென்னும் பகர
வொற்று மெலிந்தது. பசும்புண்ணென்றது புண்பட்ட வாய்போலப்
பழுத்து விழுந்தபழத்தினை. அரியலென்றது அப்பழத்தினின்றும்
பிரிந்து அரித்து விழுகின்ற தேனை.

     10. படர்ந்தோனென்றது முற்று. அளிக்கென வென்றது நீ
எம்மை அளிப்பாயாகவெனச் சொல்லியென்றவாறு.

     11. இரக்கென்றது தன்மைவினை. எஞ்சிக் கூறேனென்றது
உண்மையின் எல்லையைக் கடந்து பொய்யே
புகழ்ந்துசொல்லேனென்றவாறு.

     12. ஈத்தற்கென நான்காவது விரிக்க. ஈத்தொறு மகிழானென்றது
ஈயுந்தோறெல்லாம்தான் அயலாயிருத்தலல்லது ஈயாநின்றோ மென்று
ஒரு மகிழ்ச்சியுடையனல்லனென்றவாறு.

     13, நுவலுமென்றதற்கு உலகம் நுவலுமென வருவிக்க.

     15. புலாஅம் பாசறையென்றது வீரரெல்லாரும் போர்செய்து
புண்பட்ட மிகுதியாற் புலால் நாறுகின்ற பாசறையென்றவாறு.
இச்சிறப்பானே இதற்கு, 'புலாஅம் பாசறை' என்று பெயராயிற்று.

     16. வேலையென இரண்டாவது விரித்துப் பாடினியிற்
பாடுதலொடு முடிக்க. 17. வெண்கையென்றது பொருள்களை
அபிநயிக்கும் 2தொழிற்கை யல்லாத, வெறுமனே தாளத்திற்கு
இசைய விடும்எழிற்கையினை.

     18. கலிமகிழென்றது கலிமகிழையுடைய ஓலக்கத்தை.

     யான்பாரி (8) சேட்புலம் படர்ந்தோன்; நீ
அளிக்கவெனச் சொல்லி (10) இரக்கென்று வந்து சில புகழ்ந்து
சொல்லுகின்றேனுமல்லேன்; அஃதன்றி உண்மையொழியப் புகழ்ந்து
சொல்லுகின்றேனுமல்லேன் (11); ஈத்தற்கு இரங்காமை முதலாகிய
அப்பாரிகுணங்களை நின்பாலும் உளவாக (12) உலகம் சொல்லும்
நின் (13) புகழை நின்பாலே தர வந்தேன் (14), நின் பாசறையின்
கலிமகிழின்கண்ணே (18) என வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன்வென்றிச் சிறப்பொடு படுத்து
அவன் கொடைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. பலாமரத்திற் பழுத்த, பசிய புண்பட்ட
வாய்போல வெடித்த பழத்திலிருந்து அரித்து விழுகின்ற தேனை;
பலாப்பழுத்த வென்பது மெலித்தல் விகாரம் பெற்றது. பழத்தின்
வெடித்தவாய் புண்ணின் வாய் போன்றிருத்தலால் பசும்புண்
எனப்பட்டது; "புண்ணரிந், தரலையுக்கன நெடுந்தா ளாசினி"
"கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந் தூறலின்" (மலைபடு. 138 - 9,
292)

     2. காற்றானது வீசுகின்ற பறம்புநாடு பொருந்திய
பெருவிறலையுடையவன்.

     3-4. சித்திரத்தைப்போன்ற தொழில் புனைந்த நல்ல மனையின்
கண்ணேயுள்ள கொல்லிப்பாவையைப் போன்ற வடிவையுடைய
நல்லோளுடைய கணவன் (பதிற். 88 : 28 - 9); "ஓவத் தன்ன
விடனுடை வரைப்பிற் பாவை யன்ன நப்புறங் காக்கும்" (நற்.
182 :2-3); "ஓவத்தன்ன வினைபுனை நல்லிற், பாவை யன்ன பலராய்
மாண்கவின்" (அகநா. 98 : 11 - 2); "ஓவத்தன்ன விடனுடை வரைப்பிற்
பாவையன்ன குறுந்தொடி மகளிர்" (புறநா. 251 : 1 - 2)

     நல்லோள் கணவன்: பதிற். 14 : 15, உரை.

     5-6. பொன்னைப் போன்ற நிறத்தையுடைய பூவினையும்
சிறிய இலைகளையும், பொலிவற்ற அடிமரத்தையும் உடைய
உன்னமரத்துக்குப் பகைவனாகிய எம்முடைய அரசன். உன்னத்துப்
பகைவன்; பதிற்.40 : 17. உரை.

     ஓடா உடல் வேந்தடுக்கிய உன்னநிலை (தொல். புறத்.5, ந.)

     7-8. பூசிப் புலர்ந்த சந்தனத்தையும் வற்றாத ஈகையையும்
மகளிர்க்கு மலர்ந்த மார்பினையும் பெரிய கொடையையுமுடைய
பாரியென்பான்.

     பெருவிறல் (2) நல்லோள் கணவன் (4) எங்கோ (6) ஆகிய
பாரி (8) என்க.

     9. முழவு என்னும் வாத்தியம் தன்னிடத்தே பூசிய மார்ச்சனை
மண்காயவும் பரிசிலர் துன்பமடையும்; முழவு அழிய என்று கூறல்
இன்னாததாதலின், மண்புரை எனத் தகுதிபற்றிக் கூறப்பட்டது;
என்றதன் கருத்து அதனால் தொழில் கொள்வாரின்மையின் அது
பயனிழந்ததென்பது.

     10. மீண்டு வாராத உயர்ந்த இடத்திற்குசு சென்றான்; நீ
எம்மைக் காப்பாற்றுக வென்று. அளிக்கென : தொகுத்தல்.

     11. இரப்பேனாகி வாரேன்; அதனால் நின்பெருமையைக்
குறைத்துக் கூறமாட்டேன்; "விரிப்பி னகலுந் தொகுப்பி
னெஞ்சும்..........கைம் முற்றலநின் புகழே" (புறநா. 53 : 6 - 8)

     12-3. சேரனுடைய அருங்குணங்கள்.

     12. தான் ஈந்த பொருள்களைப் பற்றிக் கழிவிரக்கங்
கொள்ளான்; இரவலர்க்குக் கொடுக்குந்தோறும் தான் அயலாய்
இருத்தலாக நினைத்தலேயன்றித் தான் ஈகின்றதாக எண்ணி
மகிழமாட்டான்.

     13-4. ஈயுந்தோறும் பெரிய கொடையையுடையவனென
உலகத்தாரும் புலவரும் சொல்லுகின்ற, உரையும் பாட்டுமாகிய
நின்னுடைய நல்ல புகழ் என்னை நின்னிடத்துச் செலுத்துதலால்
வந்தேன்; "புகழ்சால் சிறப்பினின் னல்லிசை யுள்ளி, வந்தன னெந்தை
யானே........நின்னைக்கண்டால் வேண்டிய வளவை" (புறநா.135 :
9 - 20)

     4-5. ஒள்ளிய வாளால் வெட்டப்பட்ட வன்மையையுடைய
களிறுகளையுடைய புலால் நாற்றம் வீசும் பாசறையிடத்து.

     16. நிலவைப் போன்ற வெள்ளிய வேலைப்பாடுகின்ற விறலி.

     17-8. முழவின் கண்ணே செலுத்திய தாளத்திற்கு
இசையவிடும் எழிற் கையையுடைய விழாவைப்போன்ற நின்னுடைய
ஆரவாரத்தையுடைய ஓலக்கத்தின் கண்ணே.

     கலிமகிழின்கண் (18) வந்திசின் (14) என முடிக்க.

     (பி - ம்.) 2. தூக்கும். 6. எங்கோன். 12. ஈதொறு. (1)


     1பதிற். 41, துறை.
     2தொழிற்கை - தொழில்பெறக் காட்டும் கை : எழிற்கை
- அழகு பெறக் காட்டும் கை; “பிண்டியும் பிணையலு மெழிற்கையுந்
தொழிற் கையும்” (
சிலம். 3 : 18)




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

1. புலாஅம் பாசறை
 
61.பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல்
வாடை துரக்கு நாடுகெழு பெருவிறல்
ஓவத் தன்ன வினைபுனை நல்லிற்
பாவை யன்ன நல்லோள் கணவன்
   
5பொன்னி னன்ன பூவிற் சிறியிலைப்
புன்கா லுன்னத்துப் பகைவ னெங்கோ
புலர்ந்த சாந்திற் புலரா வீகை
மலர்ந்த மார்பின் மாவண் பாரி
முழவுமண் புலர விரவல ரினைய
   
10வாராச் சேட்புலம் படர்ந்தோ னளிக்கென
இரக்கு வாரே னெஞ்சிக் கூறேன்
ஈத்த திரங்கா னீத்தொறு மகிழான்
ஈத்தொரு மாவள் ளியனென நுவலுநின்
நல்லிசை தரவந் திசினே யொள்வாள்
   
15உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை
நிலவி னன்ன வெள்வேல் பாடினி
முழவிற் போக்கிய வெண்கை
விழவி னன்னநின் கலிமகி ழானே.
 

துறை  : காட்சி வாழ்த்து.
வண்ணம்  : ஒழுகு வண்ணம்.
தூக்கு  : செந்தூக்கு.
பெயர்  : புலாஅம்பாசறை.

1 - 8. பலாஅம்  ................. பாரி 

உரை :    பலாஅம்  பழுத்த பசும்புண் அரியல் -  பலாமரத்திலே
பழுத்து   வெடித்த  பழத்தின்    வெடிப்பிலிருந்தொழுகும்   தேனை;
வாடை  துரக்கும் - வாடைக்காற்று எறியும் ; நாடு கெழு பெருவிறல் -
பறம்பு  நாட்டிற்  பொருந்திய  பெரிய  விறல் படைத்தவனும் ; ஓவத்
தன்ன  வினை  புனை  நல்லில்  -  ஓவியத்தில்  எழுதியது போன்ற
வேலைப்பாடமைந்த  நல்ல  மனையின்  கண்ணே இருக்கும் ; பாவை
யன்ன  நல்லோள் கணவன் - பாவை போன்ற நல்ல அழகும் நலமும்
உடையாட்குக்  கணவனும்  ; பொன்னின்   அன்ன பூவின் சிறியிலை -
பொன்        போலும்      நிறமுடைய     பூவினையும்    சிறிய
இலையினையும் ; புன்கால் - புல்லிய   அடிப்பகுதியினையுமுடைய   ;
உன்னத்துப்  பகைவன்  -  உன்ன மரத்துக்குப்  பகைவனும்  ;  எம்
கோ - எமக்கு அரசனும் ; புலர்ந்த சாந்தின்   மலர்ந்த  மார்பின்  -  
பூசிப்  புலர்ந்த  சாந்தினையுடைய அகன்ற  மார்பினையும்  ;  புலரா  
ஈகை       மாவண்      பாரி     -   குன்றாத ஈகையால் பெரிய
வள்ளன்மையினையு முடையானுமாகிய பாரி எ - று.
 

பெரு   விறலும்,   கணவனும், பகைவனும், கோவுமாகிய பாரி என
இயையும்.    பலாஅம்    பழுத்த     பசும்   புண்    என்றதனால்,
பலாவின்   பழமும்  அது  முதிர்ந்து  வெடித்திருத்தலும்   பெற்றாம். 
பலாஅப் பழுத்த எனற்பாலது மெலிந்து   நின்றது. பழத்தின்  வெடிப்பு
புண்  போறலின், “பசும்புண்” என்றும், அதனினின்று  அரித் தொழுகும்
தேனை “அரியல்” என்றும் கூறினார். “புண்ணரிந்து, அரலை   புக்கன
நெடுந்தாளாசினி”  (மலைபடு.  138-9)   என்று பிறரும் கூறுதல் காண்க.
வாடைக்காற்று   வீசுங்கால்      இத்   தேன்   சிறுசிறு   துளிகளாக
எறியப்படுதலின்,    “வாடை    துரக்கும்”  என்றார்.  நாடு.  பறம்பு  
நாடு.  “பறம்பிற்  கோமான் பாரி” (சிறுபாண். 91)   என்று சான்றோர்
கூறுமாறு காண்க.   ஓவியம்,     ஓவமென   நின்றது,  “ஓவத்தன்ன  
விடனுடை   வரைப்பில்”   (புறம்.  251) என்றாற்போல.   பல்வகை
வேலைப்பாட்டால்    அழகு   செய்யப்பட்ட     மனை  யென்றற்கு,
“வினை  புனை நல்லில்”   என்றும்,     மேனி  நலத்தால்  பாவை
போறலின்,  “பாவை    யன்ன” என்றும்,  குண  நலத்தி்ன்  சிறப்புத்
தோன்ற,  “நல்லோ” ளென்றும்   கூறினார்.  பாவை   யுவமம் மேனி
நலத்தை விளக்கி நிற்றலை, “பாவை  யன்ன    பலராய்  மாண்கவின்”
(அகம்.  98)     என வரும்   சான்றோர்    உரையானு      மறிக.
உன்னம்,    ஒருவகை     மரம்.    இதன்   பூ   பொன்னிறமாயும்
இலை   சிறிதாகவும்   அடிமரம்      புற்கென்றும்  இருக்குமென்பது,
“பொன்னி    னன்ன    பூவிற்     சிறியிலைப்,    புன்கா லுன்னம்”  
என்பதனால்   விளங்குகிறது.    உன்ன    மரம்    போர்    வீரர்
நிமித்தம்     காண       நிற்கும்    மரம்   ;     காண்போர்க்கு
வெற்றி  யெய்துவதாயின்     தழைத்தும்,  தோல்வி  யெய்துவதாயின்  
கரிந்தும் காட்டும் என்ப.  அது  கரிந்து    காட்டிய வழியும் அஞ்சாது
அறமும்    வலியும்    துணையாகப்  பொருது   வெற்றி   யெய்தும்
வேந்தன்   என்றற்கு “உன்னத்துப்  பகைவன்”  என்றார்  ;    தான்
எய்துவது   தோல்வியென    உன்னமரம்    காட்டவும்    காணாது,
பொருது   வென்றி  யெய்தி உன்னத்தின்   நிமித்தத்தைக்  கெடுத்தல்
பற்றிப் பகைவ னென்பாராயின ரென்க.

பூசிய   சாந்தின் ஈரம் புலர்ந்தாலும்,   ஈதற்குக் கொண்ட நெஞ்சின்
ஈரம்   எஞ்ஞான்றும்  புலராது    ஈகை  வினையைப்  புரிவித்தல்பற்றி,
“புலர்ந்த  சாந்திற்  புலரா வீகை” என இயைத்துச் சொன்   முரணாகிய 
தொடையழகு  தோன்றக் கூறினார்.   கூறினா ராயினும், சாந்து பூசுதற்கு
இடனாவது  மார்பும்,    ஈகைவினைக்  கிடனாவது வண்மையு மாதலின்,
புலர்ந்த    சாந்தின்   மலர்ந்த   மார்பு” எ ன்றும்,  “புலரா   வீகை
மாவண்பாரி” யென்றும் இயைத்துப் பொருள்   கூறப்பட்டதென வறிக.

இனிப்   பழையவுரைகாரர்,  “பலாஅம்    பழுத்த  -    பலாஅப்
பழுத்தவென்னும்   பகர     வொற்று   மெலிந்தது”  என்றும்,  “பசும்
புண்ணென்றது  புண்பட்ட வாய் போலப் பழுத்து வீழ்ந்த   பழத்தினை”
யென்றும்,  “அரியலென்றது  அப்    பழத்தினின்றும்  பிரிந்து அரித்து
விழுகின்ற   தேனை” யென்றும் கூறுவர்.
 

பலாஅம்      பழுத்த              வென்னும்     பாடத்துக்குப்
பலாப்பழத்தினிடத்தவாகிய வென்று உரை கூறிக்கொள்க.

9 - 10. முழவு ....................  படர்ந்தோன்.

உரை :  முழவு  மண் புலர - முழவினிடத்தே   பூசிய மார்ச்சனை
மண்    புலர்ந்   தொழியவும்  ;  இரவலர்   இனைய  -  வேண்டுவன
வழங்குவோர் இல்லாமையால்  இரவலர் வருந்தவும் ; வாராச் சேட்புலம்
படர்ந்தோன்   -    மீண்டு   இந்   நிலவுலகிற்கு  வருதல்   இல்லாத
மேலுலகிற்குச் சென்றொழிந்தான் எ - று.

முழவு      முழக்கலுறுவோர் அதன்கண் ஓசை   மிகுமாறு கருமட்
பொடியும்  பசையும்  கலந்து  பிசைந்து பூசி, ஈரம் புலராவாறு அவ்வப்
போது   தண்ணீரைத்  தடவுவர். இக் காலத்தும் தண்ணுமை  முதலியன
இசைப்  போர்பால்  இச்  செயலுண்மை  காணலாம். முழவு முதலியன
இயக்காதவழி   மண்    புலர்ந்து   இறுதி  முழவிற்கு   இறுதி  பயந்து
விடுதலால்,  “முழவு  மண்  புலர”  என்றார். எனவே, அம் முழவினை
இயக்குவோர்   இலராயினர்  என்பதாம். “முழவு அழிய என்று  கூறதல்
இன்னாததாதலின்  மண்  புலர  எனத்   தகுதிபற்றிக்   கூறப்பட்டது  ;
என்றதன்  கருத்து   அதனால் தொழில்கொள்வாரின்மையின் அது பய
னிழந்த   தென்பது” என்பர், உ. வே. சாமிநாதையர்.  இரவலர் இ்ன்மை
தீர  அவர்  தகுதியும்  குறிப்பும்   அறிந்து  ஆர வழங்குநர் இல்லை
யென்பது   பற்றி,  “இரவலர்  இனைய”  என்றார்.   பிறவா  நிலையும்
அதற்குரிய  மேலுலகும்   பெற்றா  னென்பார்,  “வா  ராச் சேட்புலம்
படர்ந்தோன்”   என்றார்.  “வாரா வுலகம் புகுதல்” (புறம். 341)  என்று
பிறரும்  கூறுதல்  காண்க.  “பாலறி   மரபி  னம்மூவீற்றும், ஆ வோ
வாகும்    செய்யுளுள்ளே”  (தொல்  .  வினை  :  14)   என்பதனால்,
படர்ந்தோனென நின்றது. படர்ந்தோ  னென்றது வினைமுற்று.

10 - 18. அளிக்கென ......... கலி மகிழானே.

உரை :   ஒள்வாள் உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை - ஒள்ளிய
வாட்    படையையும்   வன்மையுடைய  களிறுகளையுமுடைய  புலால்
நாற்றம்   பொருந்திய பாசறைக்கண்ணே ; நிலவின் அன்ன  வெள்வேல்
பாடினி.   நிலவின்   ஒளியைப்போல   வெள்ளொலி   செய்யும்  நின்
வேற்படையைப்    புகழ்ந்து  பாடும்  பாடினி  ;  முழவின்  போக்கிய
வெண்கை   -    முழங்கும்  முழவின்  தாளத்திற்கேற்ப   ஒத்தறுக்கும்
வெறுங்கையை  யசைத்துப்  பாடும்,   விழவின் அன்ன - விழாக்களம்
போன்ற   ;   நின்  கலி  மகிழான்  -  நின்னுடைய   ஆரவார மிக்க
திருவோலக்கத்தின் கண்ணே ; அளிக்க என  இரக்குவாரேன் - எம்மை
இதுகாறும்  புரந்த  வேள்பாரி  இறந்தானாதலின் எம்மை அளிப்பாயாக
என்று   இரந்து  வந்தேனில்லை  ;  எஞ்சிக்  கூறேன் - நின் புகழைக்
குன்றவும்  மிகை  படவும்   கூறமாட்டேன்  ;  ஈத்தது   இரங்கான்  -
செல்வக்  கடுங்கோ வாழியாதன் ஈதலால் பொருள் செலவாவது  குறித்து
மனம்     இரங்குவதிலன் ;    ஈத்தொறும்   மகிழான் - இடையறாது
ஈதலால்  இசை  மிகுவது  காரணமாக மகிழ்ச்சி யெய்துவதும் இலன் ;
ஈத்தொறும்  மா  வள்ளியன்  என  -  ஈயும்  போதெல்லாம்  பெரிய
வள்ளன்மை யுடையன் என்று ; நுவலும் நின் நல்லிசை தர வந்திசின்
-  உலகோர்  கூறும்  நினது  நல்ல  புகழ் எம்மை நின் பால் ஈர்ப்ப
வந்தேன் ; காண் எ - று.
 

பகைவரைப்  பொருது அவர் குருதி படிந்து கிடக்கும் வாட்படையும்,
அவரைத்    தம்   கோட்டாற்  குத்திக்   குருதிக்கறை  படிந்திருக்கும்
களிற்றுப்  படையும் சூழ்தலால் பாசறை புலால் நாறுதல்பற்றி, “புலாஅம்
பாசறை”   யென்றார்.  இனிப்  பழையவுரைகாரர்,  “புலாஅம்   பாசறை
யென்றது,  வீரரெல்லாரும்   போர்செய்து புண்பட்ட மிகுதியாற் புலால்
நாறுகின்ற   பாசறை  யென்றவா” றென்றும், “இச் சிறப்பானே  யிதற்குப்
புலாஅம் பாசறையென்று பெயராயிற்”  றென்றும் கூறுவர். இனி, இதற்கு
“ஒள்ளிய     வாளால்        வெட்டப்பட்ட     வன்மையையுடைய
களிறுகளையுடைய  புலால்   நாற்றம் வீசும் பாசறை” யென்பர் உ. வே.
சாமிநாதையர்.

வேந்தனது      வேற்படை கறை போக்கி யராவி நெய்  பூசப்பெற்று
வெள்ளொளி திகழ விருத்தலால், “நிலவி  னன்ன வெள்வேல்” என்றார்.
அவன்  வென்றி   பாடுமிடத்து வேல் முதலிய படைகளைப் பாடுதலும்
மரபாதலின் “வெள்வேல் பாடினி”  யென்றார். “பிறர் வேல் போலாதாகி
யிவ்வூர்,    மறவன்   வேலோ  பெருந்தகையுடைத்தே”  (புறம்.  332)
என்றற்றொடக்கத்துப்   புறப்பாட்டால் வேல்பாடும் மரபுண்மை காண்க.
வேல்   பாடினி,    வேலைப்பாடும்  பாடினி  யென்க.  “வேலையென
இரண்டாவது   விரித்துப்  பாடினியிற்  பாடுதலொடு  முடிக்க”   என்பர்
பழையவுரைகாரர்.   முழவிற்   போக்குதலாவது,  முழவிசைக்  கேற்பத்
தாளம்    அறுத்திசைத்தல்.  பாடியாடு  மிடத்துக்   கையால்,  பிண்டி,
பிணையல்,  தொழிற்கை  முதலிய அவிநயமின்றி இசைக்குத் தாளமிடுவ
தொன்றே    செய்தலின்,   “வெண்கை”   யென்றார்  பழையவுரையும்,
“வெண்கை  யென்றது பொருள்களை அவிநயிக்கும் தொழிற்கையல்லாத
வெறுமனே   தாளத்திற்  கிசைய  விடும்  எழிற்   கையினை”  யென்று
கூறுதல் காண்க.

பாசறைக்கண்    வேந்தன் வீற்றிருந்த திருவோலக்கம்  விழவுக்களம்
போன்றமையின்,  “விழவி    னன்ன   கலி  மகிழ்”  என்றார்.  “கலி
மகிழென்றது,  கலி மகிழையுடைய ஓலக்கத்தை” யென்பது பழையவுரை.

மாவண்  பாரி வாராச் சேட்புலம் படர்ந்தமையின்  புரப்பாரையின்றி
இன்மையால்  வருந்தி  “எம்மைக்   காத்தளிப்பாயாக” என்று நின்னை
இரக்க   வந்தே  னில்லை  யென்பார்,  “அளிக்கென  இரக்கு வாரேன்”
என்றும்,  என்   குறையையாதல்   நின் புகழையாதல் குன்றவும் மிகை
படவும்   கூறே  னென்பார்,  “எஞ்சிக்  கூறேன்”   என்றும்  கூறினார்.
கற்றோரை   யறிந்தேற்றுப்   புரக்கும்   வேந்தர்  பலர்  உளராயினும்,
அவரவர்    வரிசை   யறிந்து   ஈவோரை    நாடிச்   சேறல்   தமக்
கியல்பாதலால், “இரக்கு  வாரேன்” என்றார். “வரிசை யறிதலோ வரிதே
பெரிதும்,   ஈத  லெளிதே  மாவண்  டோன்றல்,  அது  நற் கறிந்தனை
யாயின்,    பொது      நோக்     கொழிமதி    புலவர்    மாட்டே”
(புறம்.   121)       என்று     அவர்       திருமுடிக்     காரிக்குக்
கூறுமாற்றால்   அவரது     உட்கோள்     அறியப்படும்.     இனிப்,
பழையவுரைகாரர்,  “இரக்கென்றது தன்மைவினை” யென்றும், “எஞ்சிக்
கூறேனென்றது, உண்மையின் எல்லையைக் கடந்து பொய்யே புகழ்ந்து
சொல்லேனென்றவாறு”  என்றும்  கூறுவர்.  பிறரும்,  “செய்யா கூறிக்
கிளத்தல்,  எய்யாதாகின்  றெஞ்,  சிறு  செந்நாவே”  என்று  கூறுதல்
காண்க.  மேலே,  தாம்  கேள்வியுற்றதை  எடுத்தோதுகின்றா ராதலின்,
வேந்தன்  இனிதேற்றுக்  கோடற்பொருட்டு,  “எஞ்சிக் கூறேன்” என்று
முகம்  புகுகின்றார்.  “ஈத்ததிரங்கான்  ஈத்தொறு  மகிழான், ஈத்தொறு
மாவள்ளியன்”  என்பது  உலகு  கூறும்  புகழுரை. ஈதலால் பொருள்
செலவாயினும்,   மேன்மேலும்   ஈட்டிக்கொள்ளும்   வன்மையுடைய
னாதலால், “ஈத்த திரங்கான்” என்றும், ஈயுந்தோறும் இன்பம் பெருகிய
வழியும்,  அதனை  நினையாது  ஈதல் சான்றோர் சென்னெறி யெனக்
கருதுமாறு   தோன்ற,   “ஈத்தொறு   மகிழான்”  என்றும்,  முற்பகல்
சென்றோரே  பிற்பகல்  செல்லினும்  “முன்னே  தந்தனெ னென்னாது
துன்னி,  வைகலும்  செல்லினும்  பொய்யலனாகி”  (புறம்.  171) மிக்க
பொருளை   வழங்குதலின்,   “ஈத்தொறும்  மாவள்ளியின்”  என்றும்
உலகம்   அவனைப்  புகழ்ந்துரைப்பது  கேட்டே  னென்பார்,  “என
நுவலும்  நின்  நல்லிசை”  யென்றார்.  யான்  வாரே னாயினும், நின்
நல்லிசைக் கேள்வி என் உண்ணின்று துரப்ப வந்தே னென்பார், “நின்
னல்லிசைதர   வந்திசினே”   என்றார்.  உலகவர்  என  ஒரு  சொல்
வருவிக்க.   “ஈவோரரிய  விவ்வுலகத்து,  வாழ்வோர்  வாழ”  வாழும்
நின்போன்றாரைக்   காண்டலின்   இன்பம்   பிறிதில்லை   யாதலின்
வந்தேன் என்றாரென்றுமாம். பிறாண்டும், “நின் நோன்றாள் வாழ்த்திக்,
காண்கு  வந்திசின்  கழறொடி  யண்ணல்” (பதிற். 64) என்று கூறுதல்
காண்க. பழையவுரைகாரர், “ஈத்தற்கென நான்காவது விரிக்க” என்றும்,
“ஈத்தொறு மகிழானென்றது, ஈயுந்தோ றெல்லாம் தான் அயலா யிருத்த
லல்லது ஈயா நின்றோமென்று ஒரு மகிழ்ச்சி யுடையனல்ல னென்றவா”
றென்றும்,   “நுவலும்   என்றதற்கு  உலகம்  நுவலுமென  வருவிக்க”
என்றும் கூறுவர்.
 

இதுகாறும்  கூறியவாற்றால், பெரு விறலும், கணவனும், உன்னத்துப்
பகைவனும்   எம்   கோவுமாகிய   மாவண்பாரி,  வாராச்  சேட்புலம்
படர்ந்தோன்  ;  அளிக்க  என  இரக்கு வாரேன் ; எஞ்சிக் கூறேன் ;
நின்  கலி  மகிழின்கண்ணே,  நின்  நல்லிசை  தர  வந்திசின் என்று
வினைமுடிபு   கொள்க.  பழையவுரைகாரர்,  “யான்  பாரி  சேட்புலம்
படர்ந்தோன்  ;  நீ  அளிக்கவெனச்  சொல்லி இரக்கென்று வந்து சில
புகழ்ந்து  சொல்லுகின்றேனுமல்லேன் ; அஃதன்றி, உண்மை யொழியப்
புகழ்ந்து   சொல்லுகின்றேனுமல்லேன்   ;   ஈத்ததற்கு   இரங்காமை
முதலாகிய  அப்   பாரி  குணங்கள்  நின்பாலும்  உளவாக,  உலகம்
சொல்லும்  நின்  புகழை  நின்பாலே தர வந்தேன், நின்  பாசறையின்
கலி மகிழின் கண்ணே என வினை முடிவு செய்க” என்று கூறுவர்.

“இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்பொடுபடுத்து அவன்
கொடைச் சிறப்புக் கூறியவா றாயிற்று”.


 மேல்மூலம்