62.
|
இழையணிந் தெழுதரும் பல்களிற்றுத் தொழுதியோடு
மழையென மருளு மாயிரும் பஃறோல்
எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவியொடு
மைந்துடை யாரெயில் புடைபட வளைஇ |
5
|
வந்துபுறத்
திறுக்கும் பசும்பிசி ரொள்ளழல்
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர்திகழ்
பொல்லா மயலொடு பாடிமிழ் புழிதரும்
மடங்கல் வண்ணங் கொண்ட கடுந்திறற்
றுப்புத்துறை போகிய கொற்ற வேந்தே |
10
|
புனல்பொரு
கிடங்கின் வரைபோ லிஞ்சி
அணங்குடைத் தடக்கையர் தோட்டி செப்பிப்
பணிந்துதிறை தருபநின் பகைவ ராயிற்
புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பி
வளனுடைச் செறுவின் விளைந்தவை யுதிர்ந்த |
15
|
களனறு
குப்பை காஞ்சிச் சேர்த்தி
அரிய லார்கை வன்கை வினைநர்
அருவி யாம்பன் மலைந்த சென்னியர்
ஆடுசிறை வரிவண் டோப்பும்
பாடல் சான்றவவ ரகன்றலை நாடே. |
துறை
- செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமு தூக்கும்
அது. பெயர் - வரைபோ லிஞ்சி (10)
(ப
- ரை) 2.
பஃறோலொடுவென்னும் ஒடு விகாரத்தால்
தொக்கதாக்கி விரிக்க.
5.
புறத்திறுக்குமென்றதற்கு நின் தானை புறத்திறுக்குமென
வருவிக்க.
ஞாயிறு
பல்கிய மாயமொடு (6) உழிதரு (7) மடங்கல் (8) எனக்
கூட்டி உலகம் கடல்கொண்டு கிடந்த காலத்து அக்கடல் நீரெல்லாம்
வற்ற எறித்தற்குத் தோன்றும் ஆதித்தர் பலவான மாயத்தோடே கூடி
அந்நீர் வற்றும்படி திரிதரு வடவைத் தீயென்றுரைக்க.
மாயம்
போறலான் மாயமெனப்பட்டது.
சுடர்திகழ்பு
(6) ஒல்லா மயலொடு பாடிமிழ்பு உழிதரு (7)
மடங்கல் (8) என்றது சுடர் திகழ்ந்து உயிர்கட்குப் பொறுக்க முடியாத
மயக்கத்தைச் செய்தலோடே ஒலித்துத் திரிதரும் மடங்கலென்றவாறு.
ஒள்ளழல்
(5) மடங்கல் வண்ணம் கொண்ட (8) எனக்கூட்டி,
ஒள்ளழலானது மடங்கலாகிய அழலின் வண்ணத்தைக் கொள்கைக்கு
காரணமாய் நின்றவெனவுரைக்க.
இனி
ஞாயிறுபலவாதலை (6) அவன் பகைவர் நாட்டில்
1உற்பாதமாகத் தோன்றும் ஆதித்தர் பலராக்கி, மடங்கல் (8)
என்றதனைக் கூற்ற மாக்கி, சுடர்திகழ்பு என்றதனைத் திகழவெனத்
திரித்து, ஒள்ளழலானது ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர்திகழ
மடங்கல்வண்ணங் கொண்ட வேந்தேயென உரைப்பாரும் உளர்.
தடக்கையராகிய
(11) நின் பகைவர் (12) என மாறிக் கூட்டுக.
வரைபோல்
இஞ்சியை அரணாகவுடையராயிருந்தே (10)
திறைதருப (12) எனச் சொன்ன சிறப்பானே இதற்கு, 'வரைபோ
லிஞ்சி' என்று பெயராயிற்று.
திறைதருபவாயின்
(12) நாடு பாடல் சான்ற (19) எனக் கூட்டுக.
சான்ற (19) என்றது முற்று.
14.
விளைந்தென்றதனை விளையவெனத் திரிக்க. 15. களனறு
குப்பையென்றது களத்திற் கடாவிடுதற்றொழிலற்ற 2தூற்றுப்பொலியை.
பரப்பி:
(13) என்னும் வினையெச்சத்தினைச் சேர்த்தி (15)
என்னும் வினையொடு முடித்து, அதனை வரிவண்டோப்பும் (18)
என்னும் வினையொடு முடிக்க.
18-9.
வண்டோப்பு நாடென மாறிக் கூட்டுக.
கொற்றவேந்தே
(9) நின்பகைவர் (12) தோட்டி செப்பிப் (11)
பணிந்து திறை தருபவாயின் (12) அவர் அகன்றலைநாடு பாடல்
சான்ற (19) என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக்
கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1-9. சேரன் பகைவரை வெல்லுதல்.
1.
ஓடை முதலிய ஆபரணங்களை அணிந்து எழுகின்ற
பலவாகிய ஆண்யானைகளின் தொகுதியோடும்.
2.
மேகமென்று மயங்குதற்குக் காரணமான கரிய பெரிய
பலவாகிய கிடுகுபடையோடும்; தொழுதியோடு என்பதிலுள்ள
ஒடுவைத்தோலொடு என்றும் கூட்டுக. (பதிற்.
52 : 5, உரை);
"மழையுருவின தோல்பரப்பி" (புறநா. 16 :
2) "புரைதவ வுயரிய
மழைமருள் பஃறோல்" (மலைபடு. 377); "எயிலூர்
பஃறோல்
போலச், சென்மழை தவழுமவர் நன்மலை நாட்டே" (நற்.
197 :
11 - 2)
3.
அம்பு முதலியன பக்கரை முதலிய கலனையை அறுத்த
கத்திரிகையிட்டு நறுக்கின பிடரிமயிரையுடைய குதிரைப்படையோடும்;
"தோறுமிபு, வைந்நுனைப் பகழிமூழ்கலிற் செவிசாய்த், துண்ணா
துயங்கு மாசிந் தித்தும்" (முல்லைப். 72
- 4). மு. பதிற். 64 : 9.
4.
வன்மையையுடைய அரிய மதில்களைப் பக்கத்தே
நெருங்கும்படி வளைத்து. 5. வந்து அவ்விடத்தே நினது சேனை
தங்கும்; தங்கும்: முற்று. பசிய பிசிரையுடைய ஒளியையுடைய
நெருப்பு.
6.
ஊழியினிறுதிக் காலத்தில் சூரியர்கள் பலவாகத் தோன்றி
மாயத்தோடு ஒளி திகழப்பெற்று. 7. உயிர்களுக்குப் பொறுத்தற்கு
இயலாத மயக்கத்தைச் செய்தலோடு ஒலியைச் செய்து திரிகின்ற.
8.
ஊழித்தீயின் வண்ணத்தைக் கொள்ளுதற்குக் காரணமான
கடிய திறலால்.
5-8.
ஒள்ளழல் மாயமொடு சுடர்திகழ்பு, மயலொடு, பாடிமிழ்பு,
உழிதரு மடங்கல் என முடிக்க. கொண்ட; காரணப் பொருளில் வந்த
பெயரெச்சம்.
9.
பகைமையின் துறைகளெல்லாம் முற்ற முடித்த
வெற்றியையுடைய அரசே; "துப்புத்துறை போகிய துணிவுடை
யாண்மை" (பதிற். 14 : 6). 8 - 9. சேரனுக்கு
வடவைத்தீ உவமை.
10-11.
தன்னிடத்துள்ள நீர் மதிலைப் பொருகின்ற
அகழியினையும் மலையைப் போன்ற மதிலையும் உடைய, தம்
பகைவரை வருத்து தலையுடைய பெரிய கையையுடையராய்
வணக்கத்தைச் சொல்லி; "தோட்டியின் வணக்கம் வேட்டவன்
விரும்பி" (பெருங். 1. 45 : 64). தோட்டி
வளைந்திருத்தலின்
வணக்கத்திற்குப் பெயராயிற்று. வரை போலிஞ்சி: பதிற்.
16 :
1, உரை.
12.
நின்னுடைய பகைவர் வணங்கித் திறை கொடுப்பாராயின்.
13.
புல்லையுடைய அகன்ற முல்லைநிலத்தில் பல பசுக்களைப்
பரவச் செய்து. மு. பதிற். 21 : 21.
14-5.
வளப்பத்தையுடைய வயல்களில் விளைந்த
பயிர்களினின்றும் உதிர்ந்த, களத்தில் கடாவிடுதலில்லாத தூற்றாப்
பொலியைக் காஞ்சிமரத்தின் நிழலில் தொகுத்து.
16.
"கள்ளா ருவகைக் கலிமகி ழுழவர்" (அகநா.
346 : 5)
16-8.
கள்ளை யுண்ணுதலையுடைய வலிய கையையுடைய
தொழில் செய்யும் உழவர், நீரினிடத்தே வளர்ந்த
ஆம்பற்பூவைத் தலையின் கண்ணே சூடியவராய், அதனிடத்தே
மொய்த்தற்கு வரும் ஆடுகின்ற சிறகையும் கோடுகளையுமுடைய
வண்டுகளை ஓட்டுதற்கு இடமான.
அருவியாம்பல்:
பதிற். 71 : 2.
19.
அப்பகைவருடைய அகன்ற இடத்தையுடைய நாடுகள்,
பாடல் மிக்கன ஆகும்.
(பி
- ம்.) 6. மல்கிய. 7. எழுதரு. 11. கொட்டி
செப்பி. 12.
பகைஞர். (2)
1வெங்கதிர்க்கனலி
துற்றவும் - வெய்ய சுடரையுடைய ஞாயிறு
பலவிடத்தும் செறிந்து தோன்றவும்' (புறநா.
41 : 6, உரை)
2பொலி
- நெற்குவியல்; "பகடூர் பிழிந்த பின்றைத் துகடப,
வையுந் துரும்பு நீக்கிப் பைதறக், குடகாற் றெறிந்த குப்பை"
(பெரும்பாண். 238 - 40) |