இதுவுமது. பெயர் : அரு வி யாம்பல். 1 - 7. பார்ப்பார்க்கல்லது ......... பொய்ப்பறி யலையே. உரை : பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலை - பார்ப்பாரையன்றிப் பிறரைப் பணிதல் இல்லாய் ; பணியா உள்ளமொடு அணிவரக்கெழீஇ - இவ்வாறு பணியாத மனவெழுச்சியால் அழகுறப் பொருந்தியும் ; நட்டோர்க் கல்லது - உயிரொத்த நண்பர்க் கல்லது ; கண் அஞ்சலை - பிறர்க்குக் கண்ணோடி அஞ்சுவது இல்லாய் ; வணங்கு சிலை பொருத நின் மணங் கமழ் அகலம் - வளைந்த இந்திர வில் போலும் மாலை கிடந்தலைக்கும் சாந்துபூசி மணங் கமழும் நின் மார்பை ; மகளிர்க் கல்லது மலர்ப்பு அறியலை - உரிமை மகளிர்க்கு இன்பந் தருதற்கு விரித்துக் காட்டுவதன்றிப் பிற பகைவர்க்குக் காட்டுவதில்லாய் ; நிலம் திறம் பெயரும் காலையாயினும் - நிலவகைகள் தம் இயல்பில் திரிந்து நெடுங்காலமெய்தினும் ; கிளந்த சொல் - வாயாற் சொல்லிய சொல் ; நீ பொய்ப்பு அறியலை - பொய்படுவதை நீ அறியாய் எ - று. பார்ப்பனராவார் ஓதல் முதலிய அறுவகை யொழுக்கங்களையுடையோர். அவர்க்குப் பணியவேண்டுமென்பது பண்டையோர் கொள்கை. “இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த, நான்மறை முனிவ ரேந்துகையெதிரே” (புறம். 6) என்று பிறரும் கூறுதல் காண்க. எனோர்க்குப் பணியாமை மானமாதலின், “பணியா வுள்ளமொடு” என்றார். அவ்வுள்ளம் மானமுடைய அறவேந்தர்க்கு அழகு செய்தலின், “அணிவரக் கெழீஇ” என்றார். பணியா வுள்ளமு டையார்க்கு அச்சம் பிறவாதாயினும், உயிரொத்த நண்புடையாரைக் கண்ணோட்டத்தால் அஞ்சுவரென்பது தோன்ற நிற்கும் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. கண்ணஞ்சல், கண்ணோட்டத்தால் அஞ்சுதல். ஒடு, ஆனுருபின் பொருட்டு. தார், வணங்கிய சிலை போறலின் “வணங்கு சிலை” யென்றும், மகளிர் முயக்கத்தால் மலைத்தவழி விரித்துக் காட்டியின்புறத்தலின், “வணங்குசிலை பொருத மணங்கம ழகலம் மகளிர்க்கல்லது மலர்ப்பறியலை” யென்றும் கூறினார். “மகளிர் மலைத்தலல்லது மள்ளர், மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப” (புறம். 10) என்று பிறரும் கூறுதல் காண்க. இனி, இதற்கு வில்லை வணக்கி அம்பு தொடுக்கும் செயலால் உராய்ந்த மார்பு என்று கூறி, “மாண் வினைச் சாப மார்புற வாங்கி, ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை” (பதிற். 90) என்பதனைக் காட்டுவர் உ. வே. சாமிநாதையர். பழையவுரைகாரரும், “அகலம் மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே என்றது, நின்னொடு பொருவாரின்மையின் நின் அகலத்தை நின் ‘மகளிர் போகத்துக்கு இடமாக வல்லது மலர்வித்தலையறியாயென, ‘மகளிர் மலைத்தலல்லது மள்ளர், மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப’ என்றது போலக் கொள்க” என்று கூறுதல் காண்க. பணியாவுள்ள மென்றதற்கு, “நட்பு நின்ற நிலையின் ஒருநாளும் தாழ்வுபடாதவுள்ளமென்றவா” றென்றும், “கெழீஇ யென்னும் எச்சத்தினை நட்டலென்னும் தொழிலொடு முடிக்க” என்றும் பழையவுரை கூறும். நிலவகை, குறிஞ்சி முதலாகக் கூறப்படுவன. பொய்யாவழி நிலம் திறம் பெயர்ந்து கெடுதற்குரிய கால மெய்துமாயினும், சொன்னசொல் பொய்ப்பதிலன் எனச் சேரமானுடைய வாய்மையைச் சிறப்பிப்பார், “நிலந்திறம் பெயரும் காலையாயினும், கிளந்த சொல்நீ பொய்ப் பறியலை” என்றார். உம்மை, எதிர்மறை. “நிலம்புடை பெயர்வதாயினும் கூறிய, சொற்புடை பெயர்தலோ விலரே” (நற். 389) என்று பிறரும் கூறுதல் காண்க. மணங்கம ழகலம் என்புழிக் கமழ்தற் கேதுவாகிய சாந்தின் பூச்சு வருவிக்கப்பட்டது. 8 - 12. சிறியிலை ................. போரோயே. உரை : சிறியிலை உழிஞைத் தெரியல் சூடி - சிறிய இலைகளையுடைய உழிஞைப்பூ மாலையை யணிந்து ; கொண்டி மிகை பட - பகைப் புலத்தே கொள்ளத்தக்க பொருள் மிக வுண்டாமாறு ; தண் தமிழ் செறித்து - தண்ணிய தமிழ் வீரர்களாலாகிய தன் படையை மேன்மேற் செலுத்தி ; குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி - மலைகள் நிலை தளர முழங்கும் இடியேறு போலச் சினந்து சென்று; ஒரு முற்று இருவரோட்டிய - ஒரு வளைப்பில் இரு பேரரசர்களை வென்று புறங்கண்ட ; ஒள்வாள் செருமிகு தானை- ஒள்ளிய வாளேந்திச் செய்யும் போரில் மேம்பட்ட தானையினையும் ; வெல் போரோய் - வெல்லுகின்ற போரினையுமுடையோனே எ - று. செய்வது உழிஞைப்போர் என்றற்கு “உழிஞைத் தெரியல் சூடி” யென்றார். இப் போரால் பகைவருடைய முழுமுத லரணத்தைக் கொண்டவழி, மிக்க பெருஞ் செல்வம் கொள்ளையாகப் பெறப்படுதலின், “கொண்டி மிகைபட” என்றும், முற்றலிலும் கோடலிலும் தலைசிறந்தவராதல்பற்றித் தமிழ் வீரரையே மிகுதியாகச் செலுத்தினமை தோன்ற, “தண்டமிழ் செறித்து” என்றும், சேரவேந்தன் தானும் அவ் வீரருடன் சென்று அவர்க்குத் தலைமை தாங்கிப் பொரும் திறத்தை, “குன்றுநிலை தளர்க்கும் உருமின் சீறி ஒருமுற் றிருவ ரோட்டிய வெல்போரோயே” என்றும் கூறினார். அவன் சீற்றத்தால் மலைபோலும் மதிலும் பிற அரண்களும் அழிவது கண்டு, “குன்றுநிலை தளர்க்கும் உருமின் சீறி” என்றும், தன்னால் வளைக்கப்பட்ட பேரரசனையும் அவற்குத் துணையாகப் போந்தானொரு பேரரசனையும் முற்றிச் செய்த தன் ஒரு போர் வினையால் வென்று புறங்கண்டமை தோன்ற, “ஒருமுற் றிருவ ரோட்டிய வெல்போரோய்” என்றும் கூறினார். “தமிழ் செறித்து” என்றதனால், இருவர் தமிழரல்ல ரென்பது பெற்றாம். ஓட்டிய வெல் போரோய், செருமிகு தானை வெல்போரோய் என இயையும். தெரியல் சூடி, தமிழ் செறித்து, சீறி, இருவரோட்டிய வெல்போரோய் என்றது, சேரமானது போர்வன்மை விளக்கி நின்றது. சிறிய விலை சிறியிலை யென நின்றது. இது கடைக்குறை யென்பர் பழைய வுரைகாரர். தமிழ்செறித்தென்றது, “மாற்றாரது தமிழ்ப் படை யெல்லாம் இடையறப்படுத்தி” யென்றும், “ஒரு முற்று ஒரு வளைப்பு” என்றும் “இருவர் சோழனும் பாண்டியனும்” என்றும், “இருவரை யென்னும் உருபு விகாரத்தால் தொக்கது” என்றும் பழைய வுரைகாரர் கூறுவர். சேரர் படையும் தமிழ்ப்படை யாதலின், சோழ பாண்டியர் படையைமட்டில் தமி்ழ்ப்படையெனல் பொருந்தாமையாலும், செறித்து என்றற்கு இடையறப்படுத்தி என்பது பொருளன்றாதலானும் பழையவுரை பொருந்தாமை யுணர்க. பழைய வுரைகாரர் கூறுவதே பொருளாயின், செறித்தென்பதன்றி, தமிழ்செறுத்தென்பது பாடமாதல் வேண்டும். அவ்வாறு பாடமின்று. தமிழ் வேந்தரிடையே நிகழும் போரிற் செறியும் தமிழ்வீரரை, “தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து” (புறம். 19) என்று சான்றோர் கிளந்தோதுப, “அருந்தமி ழாற்ற லறிந்தில ராங்கென” (சிலப். 26 : 161) என்றும், “தென்றமி ழாற்றல், அறியாது மலைந்த வாரிய வரசரை” என்றும் சேர வேந்தர் தம்மைத் தமிழரென்றே கூறுதல் காண்க. இனி, “ஒள்வாள் செருமிகு தானை வெல்போ ரோயே” என்றது, சேரமானது தானைச்சிறப்பை யுணர்த்துகின்றது. விற்படை சேரர்க்கே சிறப்பாக வுரியதாயினும், ஒள்ளிய வாளேந்திச் செய்யும் போரினும் இத்தானை சிறப்புற்றுப் பல போர்களில் வென்றி மேம்பட்டதென்றற்கு, “ஒள்வாள் செருமிகு தானை” யென்றார். 13 - 15 ஆடு பெற்று .................. வென்றோய். உரை : ஆடுபெற்றழிந்தமள்ளர் - பிற வேந்தர்க்குப் படை வீரராயிருந்து பல போர்களில் வெற்றிபெற்றும் நின்னொடு பொருது வீறழிந்த வீரர் ; மாறி - பகைவ ரிடத்தினின்றும் மாறி நின் தாணிழல் விழைந்து போந்து ; நீ கண்டனையேம் என்றனர் - நீ கருதியதனையே யாமும் கருதியொழுகும் கருத்துடையே மாயினேம் என்று சூள் மொழிந் தமைந்தனர் ; நீயும் நும் நுகம் கொண்டு இனும் வென்றோய் - நீயும் நும் குலத்தோர்க்குச் சிறப்பாக வுரியவாகிய வன்மையும் கண்ணோட்டமும் கொண்டு மேலும் பல போர்களில் வென்றி சிறந்தாய் எ-று. பெற்று என்புழிச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. அழிந்த என்பதற்கு எழுவாய் வருவிக்கப்பட்டது. முன்னைப் போர்களில் ஆடுபெறுதற் கேதுவாயிருந்த தோள்வலி நின்னொடு பொரற்கு ஆற்றாமையின், மள்ளர் வீறழிந்தன ரென்பார், “ஆடுபெற்றும் அழிந்த மள்ளர்” என்றும், அழிந்த வீற்றினை மறுவலும் பெற விழைவதே வீரர்க்குக் குறிக்கோளாதலாலும், அதனைப் பெறற்கு அரணும் துணையுமாகும் பெருவிறலுடையார் வழிநின்று வாழ்வதையே வாழ்க்கையாகக் கருதுபவாதலாலும், “மாறி நீ கண்டனையேம் என்றனர்” என்றும், தாம் பகையிடத்திருந்து மாறுகின்றமையின், தம் நினைவு சொல் செயல்களைத் தலைமகன் அயிராமைப் பொருட்டுச் சூளுறவு முதலியன செய்தமை தோன்ற, “நீ கண்டனையேம் என்றனர்” என அவர் கூற்றைக் கொண்டெடுத்துங் கூறினார். நீ கண்டனையேம் என்றது, “யான் கண்டனைய ரென்னிளையரும்” (புறம். 191) என்றாற்போல வந்தது. இடைக்காலத்தில் இவ்வாறே வீரர்கள் சூளுறவு செய்த செயல்களைத் திருக்கோயிலூர் வட்டத்து எலவானாசூர் முதலிய இடங்களிற் காணப்படும் கல்வெட்டுக்கள் (A. R. No. 500 of 1937 38) கூறுகின்றன. அம்மள்ளரது வினைத்தூய்மையும் மேலும் பல போர்களைச் செய்து அறிந்தாளும் சேரனது ஆட்சித்திறமும் தோன்ற, “நீயும் நும் நுகம் கொண்டு இனும் வென்றோ” யென்றார். இனிப் பழையவுரைகாரர், “ஆடுபெற்றழிந்த மள்ளரென்றது, முன்பு பிறரொடு பொருது வென்றி பெற்றுப் பின் நினக்கு அழிந்த மள்ளரென்றவா” றென்றும், “மாறி யென்றது நின்னொடு கைம்மாறி யென்றவா” றென்றும், “நீ கண்டனையே மென்றது, இன்றுமுதல் நின்னாலே படைக்கப்பட்டாற் போல்வே மென்றவா” றென்றும் கூறுவர். நுகம், வன்மை மேற்றாயினும், அதற்கு அழகுதரும் கண்ணோட்டத்தையும் அகப்படுத்து நின்றது பழையவுரைகாரரும், “நின் பெருமையும் கண்ணோட்டமுமாகிய நும் நுகம்” என்பது காண்க. நுக மென்றற்கு வலியென்றே கொண்டு, நுங்கள் படைக்கு வலியாகக் கொண்டெனினுமையும். நுகம் வலிமைப் பொருட்டாதலை, “வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேலெழினி” (குறுந். 80) என ஒளவையார் கூறுமாற்றாலறிக. 15 - 21. அதனால் ................ பலவே. உரை : அதனால் - இன்ன இயல்புகளையுடையை யாதனால்; சேரலர் மருக - சேரர்குடித் தோன்றலே ; செல்வக் கோவே செல்வக் கடுங்கோவே ; கால் எடுத்த திரை முழங்கு குரல் வேலி நனந்தலை உலகம் - காற்றால் சுருட்டப்பட்ட அலைகள் முழங்கும் முழக்கத்தையுடைய கடலைச் சுற்றெல்லையாகவுடைய அகன்ற உலகத்தே வாழும் நன்மக்கள் ; செய்த நன்று உண்டெனின் - செய்த அறம் நிலைபெறுவ தென்றால் ; வாழியாத - செல்வக்கடுங்கோ வாழியாதனே ; அடையடுப்பு அறியா அரு வி ஆம்பல் - இலையடுத்தலை யறியாத பூவல்லாத ஆம்பலென்னும் எண்ணும், பல ஆயிர வெள்ள வூழி - பல ஆயிரங்களாகப் பெருகிய வெள்ளமென்னும் எண்ணும் ஆகிய ஊழிகள் ; வாழிய - நீ வாழ்வாயாக எ - று. அதனால் என்பது, “சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள் ; அதனால் கொண்டா னுவக்கும்” என்புழிப் போலும் சுட்டு முதலாகிய காரணக் கிளவி. இயல்பு பலவற்றையும் தொகுத்து “அதனால்” என்றதும், ஆசிரியர் உள்ளம் அவற்றையுடைய செல்வக் கடுங்கோவை வாழ்த்துதற்கு விழைந்தமையின், “செல்வக் கோவே சேரலர் மருக” என்று சிறப்பித்தும், உலகம் சான்றோர் செய்யும் அறத்தால் நிலைபெறுகிறதென்பது உண்மையாயின், அவர் நெறிநின்றொழுகும் நீயும் நிலை பெறுக என்பார், “நனந்தலை யுலகம் செய்தநன் றுண்டெனின்” என்றும், “அரு வி யாம்பல் ஆயிர வெள்ள வூழி, வாழி யாத வாழிய பலவே” யென்றும் கூறினார். இவ்வாறே, “இவ்வுலகத்துச், சான்றோர் செய்த நன்றுண் டாயின், கொண்டன் மாமழை பொழிந்த, நுண்பஃறுளியினும் வாழிய பலவே” (புறம். 34) என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆசிரியர் ஆலந்தூர் கிழார் வாழ்த்துவதும் காண்க. அடை, இலை. ஆம்பலென்னும் எண்ணுப் பெயர்க்கு “அடையடுப்பறியா அருவியாம்பல்” என்பது வெளிப்படை. அரு வீ என்பது அரு வி யெனக் குறுகிற்று ; இஃது “அருங்கேடன்” (குறள். 210) என்புழிப் போலப் பூவல்லாத என்பதுபட நின்றது அருமை, இன்மை குறித்து நின்றது. இனிப் பழைய வுரைகாரரும், “அருவி யாம்ப லென்றது வீ அரிய எண்ணாம்ப லென்றவா” றென்றும், “வீ யென்பது குறுகிற்” றென்றும், “அருவி, பண்புத் தொகை” யென்றும், “அடையடுப்பறியா அரு வி யாம்பல் எனக் கூறிய இச் சிறப்பானே இதற்கு அருவியாம்ப லென்று பெயராயிற்” றென்றும், “பல ஆம்பலென மாறிக் கூட்டுக” என்றும் கூறுவர். இதுகாறும் கூறியவாற்றால், செல்வக் கடுங்கோ வாழியாத, நீ பார்ப்பார்க்கல்லது பணிபறியலை ; நட்டோர்க்கல்லது கண்ணஞ்சலை ; அகலம் மகளிர்க்கல்லது மலர்ப்பறியலை ; கிளந்த சொல் பொய்ப்பறியலை ; வெல்போரோய் ; வென்றோய் ; அதனால், சேரர் மருக, செல்வக் கோவே, வாழியாத, சான்றோர் உலகத்துச் செய்த நன்றுண்டெனின் ஆம்பலும் பல வெள்ளமுமாகிய வூழிகள் வாழிய என வினை முடிவு செய்க. இனிப் பழையவுரைகாரர், “நீ பணிபறியலை, கண்ணஞ்சலை, நின் அகலம் மலர்ப்பறியலை, பொய்ப்பறியலை ; இவை நின்னியல்பு ; இவையேயன்றி வெல்போரோய் முன் பிறர்பால் வெற்றி பெற்று நினக்கு அழிந்த மள்ளர் நின்னொடு பகைமாறி, நீ கண்டனையே மென்று தாழ்வு கூற, அதற்கேற்ப நீயும் நின் பெருமையும் கண்ணோட்டமுமாகிய நும் நுகம், கொண்டு இன்னும் வென்றிகூர்ந்தனை ; நின் குணங்கள் இவ்வாறாகிய அதனானே, செல்வக் கோவே, சேரலர் மருகனே, வாழியாதனே, உலகம் செய்த நன்று உண்டெனில், பல ஆம்பலாகிய ஆயிரவெள்ளவூழி வாழ்க என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க” என்றும், “வாழியாத வென்னும் விளி செல்வக்கோவே என்பது முதலிய விளிகளின்பின் நிற்க வேண்டுதலின் மாறாயிற்” றென்றும் கூறுவர். “இதனாற் சொல்லியது ; அவன் பல குணங்களையும் ஒருங்குகூறி வாழ்த்தியவாறாயிற்று”. |