முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
 66



வாங்கிரு மருப்பிற் றீந்தொடை பழுனிய
இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணிப்
படர்ந்தனை செல்லு முதுவா யிரவல
இடியிசை முரசமொ டொன்றுமொழிந் தொன்னார்
 5




வேலுடைக் குழூஉச்சமந் ததைய நூறிக்
கொன்றுபுறம் பெற்ற பிணம்பயி லழுவத்துத்
தொன்றுதிறை தந்த களிற்றோடு நெல்லின்
அம்பண வளவை விரிந்துறை போகிய
ஆர்பத நல்கு மென்ப கறுத்தோர்
 10




உறுமுரண் டாங்கிய தாரருந் தகைப்பின்
நாண்மழைக் குழூஉச்சிமை கடுக்குந் தோன்றற்
றோன்மிசைத் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற்
றார்புரிந் தன்ன வாளுடை விழவிற்
போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த
 15




கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்பப்
பூத்த முல்லைப் புதல்சூழ் பறவை
கடத்திடைப் பிடவின் றொடைக்குலைச் சேக்கும்
வான்பளிங்கு விரைஇய செம்பரன் முரம்பின்
இலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
 20 அகன்கண் வைப்பி னாடுகிழ வோனே.

     துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும்
தூக்கும் அது. பெயர் - புதல்சூழ் பறவை
(16)

     (ப - ரை) 3. படர்ந்தனை யென்றது வினையெச்சமுற்று;
படர்தல் - நினைவு. 4. ஒன்றுமொழிதல் - வஞ்சினங் கூறல்.

     ஒன்றுமொழிந்து (4) கொன்றுபுறம்பெற்ற (6) எனக் கூட்டி,
ஒன்று மொழிதலும் கொன்று புறம்பெறுதலும் ஒன்னாரதன்றி
இவன் தொழிலாகவுரைக்க.

     ஒன்னாரது (4) குழு (5) எனக் கூட்டி, கொன்றதும்
புறம்பெற்றதும் அக்குழுவையேயாக வுரைக்க.

     7. திறை தந்தவென்றதற்கு அவன் ஒன்னார் திறையாகத்
தந்தவென வருவித்து உரைக்க. 8. அம்பணம் - மரக்கால்.
உறைபோதல் - 1உறையிட முடியாதொழிதல். அளவை விரியவெனத்
திரிக்க.

     நெல்லின் (7) ஆர்பதம் (9) என இருபெயரொட்டு.

     10. தாரருந் தகைப்பு - ஒழுங்குடைய மாற்றாராற்
குலைத்தற்கரிய படை வகுப்பு.

     11. நாண்மழை - பருவமழை. 12. தோலொடுவென ஒடு விரிக்க.

     13. தார் புரிந்தன்ன வாள் - பூமாலைகள் அசைந்தாற்போல
நுடங்குகின்ற வாள்.

     தகைப்பினையும் (10) எஃகினையுமுடைய (12) போர் (14) எனக்
கூட்டுக.

     15. கடவுள் வாகை - வெற்றிமடந்தையாகிய கடவுள் வாழும்
வாகை.

     14-6. கிழித்துக் குறுக நறுக்கி வாகையோடு இடைவைத்துத்
தொடுத்த பனங்குறுத்து முல்லைமுகைக்கு ஒப்பாகவும் வாகைவீ அம்
முல்லையைச் சூழ்ந்த வண்டிற்கு ஒப்பாகவும் உவமங்கொள்ளவைத்த
சிறப்பானே இதற்கு, 'புதல்சூழ் பறவை' என்று பெயராயிற்று.

     19. திருமணி பெறுவார் அந்நாட்டாராகக் கொள்க.

     அவனை நினைத்துச்செல்லு முதுவாயிரவலனே (3), நின்
நினைவிற் கேற்ப நாடுகிழவோன் தனக்குப் போரின்மையான் வென்று
கொடுப்பதின்றி (20) ஒன்னார் (4) பிணம்பயிலழுவத்துத் (6)
திறையாகத் தந்த களிற்றோடு தன்னாட்டு விளைந்த நெல்லாகிய (7)
உணவினைக் கொடா நின்றானென்று எல்லாரும் சொல்லுவார்கள் (9);
ஆதலால், அவன் பால் ஏகு எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புடன் படுத்துக்
கொடைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.

     'படர்ந்தனை செல்லும்' என்று பாணன் தன்னில்
நினைவன கூறினமையால், துறை பாணாற்றுப்படையன்றிச்
செந்துறைப்பாடாணாயிற்று.

     (கு - ரை) 1-2. வளைந்த கரிய தண்டினையுடைய, இனிய
நரம்புக் கட்டு இசையில் முதிர்ந்த, இடமுடைய பேரியாழென்னும்
யாழைப்பாலைப் பண்ணாக அமைத்து.

     3. சேரனை நினைந்து செல்லுகின்ற பேரறிவு வாய்ந்த
இரவலனே. படர்ந்தனை: முற்றெச்சம். முதுவாயிரவல: முருகு.
284; புறநா. 48 : 7.

     4-5. இடியினைப் போன்ற முரசத்தோடு வஞ்சினத்தைக் கூறி,
பகைவரது வேலைப்பெற்ற திரளுதலையுடைய போர் கெடும்படி
அழித்து.

     6. கொன்று அவர் முதுகுகாட்டி ஓடுதலைப்பெற்ற, பிணங்கள்
நெருங்கிய போர்க்களப்பரப்பில். 7. பழைய திறையாகத் தந்த ஆண்
யானைகளோடு நெல்லாகிய களிற்றைத் திறையாகத் தருதல்:
பதிற்.
90 : 6 - 7. ஒன்றுமொழிந்து (4) கொன்று புறம்பெற்ற (6) என
இயைக்க.

     8. அம்பணம்: பதிற். 71 : 5: ஐங்குறு. 43 : 1; சிலப். 14 :
209.

     8-9. மரக்காலின் அளவையால் அளந்து உறையிடமுடியாத
உணவை அளிப்பானென்று சொல்லுவார்.

     7-9. நெல்லின் ஆர்பதமென இயைக்க.

     9-10. கோபங்கொண்ட பகைவரது மிக்க மாறுபாட்டைத் தடுத்த,
ஒழுங்கையுடைய பகைவரால் குலைத்தற்கு முடியாத படைவகுப்பையும்.

     11-12. விடியற்காலத்தே மேகத்தின் கூட்டத்தையுடைய
சிகரத்தை ஒத்த தோற்றத்தையுடைய பரிசைப்படையின் மேலதாகி
எழுகின்ற ஒளி பரவி விளங்குகின்ற வேலையும்; பரிசைக்கு மேகம்
உவமை (பதிற். 52 : 5, உரை). எஃகு தோலின்மேற் றோன்றுதல்:
பதிற். 50 : 9.

     13. பூமாலைகள் அசைந்தாற்போலச் சுழலுதலையுடைய
வாள் விழாவையும் உடைய. வாளுக்குப் பூமாலை உவமை; "தூவலி
னனைந்த தொடலை யொள்வாள்" (ஐங்குறு. 206 : 3)

     தகைப்பினையும் (10) எஃகினையும் (12) விழவினையும் (13)
உடைய மள்ளர் (14) என இயைக்க.

     14-5. போர் உண்டாகின்ற வீரர், பனங்குருத்தோடு சேர்த்துத்
தொடுத்த, துர்க்கை வாழ்தலையுடைய வாகைமரத்தினது துய்களை
யுடைய பூவைப்போல. 14 - 6. பனந்தோட்டோடு பூவைத் தொடுத்தல்:
பதிற். 67 : 13; புறநா. 100 : 3 - 5, 265 : 2 - 3.

     16-7. பூத்த முல்லைக் கொடியினது புதலைச் சூழ்ந்த
வண்டாகிய பறவை, காட்டினிடத்தே பிடாமரத்தின்
தொடுத்தலையுடைய பூக்குலையிலே தங்குதற்கு இடமான.
முல்லைப்பூவிற்கு வெள்ளிய பனங்குருத்தின் துண்டுகளும்,
வாகைப் பூவிற்கு வண்டும் உவமை.

     18-20. உயர்ந்த பளிங்கு கலந்த சிவந்த பருக்கைக்
கற்களையுடைய மேட்டு நிலத்தில், விளங்குகின்ற கிரணங்களையுடைய
அழகிய மணியை அவ்விடத்தே வாழ்வார் பெறும் அகன்ற
இடத்தையுடைய ஊர்களையுடைய நாட்டுக்குரியோன்.

     காட்டில் மணி பெறுதல்: பதிற். 21 : 22, 58 : 18 - 9, உரை.

     நாடுகிழவோன் (20) களிற்றோடு நெல்லின் (7) ஆர்பதம்
நல்கும் என்ப (9) என முடிக்க.

     (பி - ம்) 2. யாழ்ப்பாலை. 3. கடறுழந்து செல்லும்.      (6)


     1உறையிடுதல் - தானியங்களை அளக்குங்கால்
     அத்தானியங்களைக் கொண்டே அளவு குறித்தல்
.




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

6. புதல் சூழ் பறவை
 
66.வாங்கிரு மருப்பிற் றீந்தொடை பழுனிய
இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணிப்
படர்ந்தனை செல்லு மதுவா யிரவல
இடியிசை முரசமொ டொன்றுமொழிந் தொன்னார்
 
5வேலுடைக் குழூஉச்சமந் ததைய நூறிக்
கொன்றுபுறம் பெற்ற பிணம்பயி லழுவத்துத்
தொன்று திறைதந்த களிற்றொடு நெல்லின்
அம்பண வளவை விரிந்துறை போக்கிய
ஆர்பத நல்கு மென்ப கறுத்தோர்
 
10உறுமுரண் டாங்கிய தாரருந் தகைப்பின்
நாண்மழைக் குழூஉச்சிமை கடுக்குந் தோன்றற்
றோன்மிசைத் தெழுதரும் விருந்திலங் கெஃகிற்
றார்புரிந் தன்ன வாளுடை விழவிற்
போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த
 
15கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்பப்
பூத்த முல்லை புதல்சூழ் பறவை
கடத்திடைப் பிடவின் றொடைக்குலைச் சேக்கும்
வான்பளிங்கு விரைஇய செம்பரன் முரம்பின்
இலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
 
20அகன்கண் வைப்பி னாடுகிழ வோனே.
 

 துறை  : செந்துறைப் பாடாண் பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்  : புதல் சூழ் பறவை.

 1 - 3. வாங்கு ........................ இரவல.

உரை : வாங்குஇருமருப்பின் - வளைந்த  கரியதண்டினையுடைய ;
தீந்தொடை  பழுனிய  -  இனிய இசைக்குரிய நரம்புகளால் நிறைந்த ;
இடன்   உடைப்   பேரியாழ்   -  இசையின்பத்துக்கு  இடமாகவுள்ள
பேரியாழிடத்தே  ;  பாலை  பண்ணி - பாலைப் பண்ணை யெழுப்பி ;
படர்ந்தனை  செல்லும்  -  சேரனை நினைந்து செல்லும் ; முது வாய்
இரவல - முதிய வாய்மையையுடைய இரவலனே எ - று.

பேரியாழின்     தண்டு   நீண்டு  வளைந்திருத்தலின், “வாங்கிரு
மருப்பின்”  என்றார்.  ஆயிரம் நரம்புகளை எல்லையாக வுடையதாய்
இசையாற்   பெறலாகும்  பேரின்பத்துக்கு  இடமாக  இருத்தல்  பற்றி
“இடனுடைப்   பேரியாழ்”  என்றும்,  இன்னிசை  பயக்கும்   நரப்புத்
தொடையால்   குறைபாடின்மை   தோன்ற,   “தீந்தொடை  பழுனிய”
என்றும்  கூறினார்.  இனி,  “இடனுடைப்  பேரியாழ் பாலை பண்ணி”
யென்று   ஈண்டு   இவர்  கூறியதுபோலவே,  ஏனைச்  சான்றோரும்,
“தொடைபடு   பேரியாழ்  பாலை  பண்ணி”  (பதிற்.  46)  யென்றும்,
“விரல்கவர்  பேரியாழ்  பாலை பண்ணி”(பதிற். 57) என்றும் கூறுவதை
நோக்கின்,   இப்பேரியாழ்   பாலைப்   பண்ணுக்கு   ஏற்ற   இசைக்
கருவியாதல் துணியப்படும். “படர்ந்தனை யென்றது வினையெச்சமுற்று
; படர்தல்  -  நினைவு”  என்பது  பழைய  வுரை.  “முதுவாயிரவல”
யென்பதற்குப்    புறநானூற்  றுரை   காரரும்  இவ்வாறே  கூறினார்.
முதுமை அறிவுடைமையாகக் கோடலு மொன்று.
 

9 - 20. கறுத்தோர் ................. கிழவோனே.

உரை : கறுத்தோர் உறுமுரண் தாங்கிய தார் அரும் தகைப்பின் -
வெகுண்டு  மேல்  வரும்  பகைவரது  மிக்க வலியைத் தடுத்தற்குரிய
ஒழுங்கினால்  அப்  பகைவரால்  அழித்தற்கரிய  படைவகுப்பையும் ;
நாண்மழைக்   குழூஉச்சிமை  கடுக்கும்  -  நாட்காலையிலே  மழைக்
கூட்டந்   தங்கிய   மலையுச்சியை  யொக்கும்  ;  தோன்றல்  தோல்
மிசைத்து  எழுதரும்  -  தோற்றத்தையுடைய  பரிசையினை   மேலே
தாங்கி  யெழுகின்ற  ;  விரிந்து  இலங்கு  எஃகின் -  ஒளி  விரிந்து
விளங்கும்  வேற்படையையும் ; தார் புரிந்தன்ன வாளுடை விழவின் -
மாலை   யுடலிற்   பின்னுவது   போல   வாள்  சுழற்றுகின்ற  வாள்
விழாவினையுமுடைய  ;  போர்படு  மள்ளர்  -  போர்க்கண் அன்றிப்
பிறவாற்றால்  இறத்தலை  விரும்பாத  வீரர் ; போந்தொடு தொடுத்த -
பனங்குருத்துடனே  சேர்த்துத்  தொடுத்த  ;  கடவுள் வாகைத் துய்வீ
ஏய்ப்ப  -  வெற்றித்  திரு விரும்பும் வாகையினது  துய்யினையுடைய
பூப்போல   ;   பூத்த   முல்லைப்   புதல்  சூழ்  பறவை  -  பூத்த
பூக்களையுடைய  முல்லைப்  புதரிடத்தே  மொய்க்கும்   வண்டினம் ;
கடத்திடை   பிடவின்   தொடைக்குலைச்   சேக்கும்   -  காட்டிலே
பிடவமரத்தின்  தொடுத்தது போலப் பூக்கும்  பூக்குலையிலே தங்கும் ;
வான்  பளிங்கு விரைஇய செம்பரல் முரம்பின் - உயரிய பளிங்குடன்
விரவிய  சிவந்த  பரல்கள்  கிடக்கின்ற  முரம்பு நிலத்திலே ; இலங்கு
கதிர்த்  திருமணி பெறூஉம் - அங்கு வாழ்வோர் விளங்குகின்ற ஒளிக்
கதிரையுடைய   அழகிய   மணிகளைப்  பெறுகின்ற  ;  கண்  அகல்
வைப்பின்  -  இடம்  அகன்ற  ஊர்களையுடைய ; நாடு கிழவோன் -
நாட்டிற்கு உரிய தலைமகனான செல்வக் கடுங்கோ வாழியாதன் எ- று.

கறுப்பு,     வெகுளி, கறுத்தோர், வெகுண்டுவரும் பகைவரென்பது
பெற்றாம்.  வலி  குறைந்தோர்க்கும்  வெகுளி  யுண்டாயவிடத்து அது
சிறிது  பெருகிக் காட்டுதலின், கறுத்து வந்தோர் வலியை “உறுமுரண்”
என்றார்.  அவரை  எதிரூன்றித்  தாங்கும்  படையின்  வலியெல்லாம்
அவரது  படையொழுங்கினை அடிப்படையாகக் கொண்டிருத்தல்பற்றி,
அதனைத்  “தாரருந்  தகைப்பு”  எனச்  சிறப்பித்தார். தார், ஒழுங்கு,
தாரால்   அரிய  தகைப்பினைச்  செய்தல்பற்றி  இவ்வாறு  கூறினார்.
“தாரருந்    தகைப்பு”    என்றதற்கு    “ஒழுங்குடைய  மாற்றாரால்
குலைத்தற்கரிய   படை   வகுப்பு”   என்று   பழையவுரை   கூறும்.
யானைமேலும்  குதிரைமேலும் வரும் வீரர், பகைவர் எறியும் அம்பும்
வேலும்  தடுத்தற்குத்  தம் பரிசையினை (கேடயத்தை) மேலே ஏந்தித்
தோன்றும்    தோற்றம்,   மலையுச்சியில்   நாட்காலையில்   படிந்து
தோன்றும்  மேகக்கூட்டத்தின்  தோற்றத்தை  யொத்தல்பற்றி  “நாண்
மழைக்   குழூஉச்சிமை   கடுக்குந்   தோன்றல்   தோல்”   என்றார்.
சேரனுடைய    வீரரேந்திச்   செல்லும்  வேல்  வாள் முதலியவற்றின்
நலங்கூறுவார், “விரிந்திலங்கு எஃகின்”  என்றார். வாள் விழவின்கண்,
வீரர்   வாளைச்  சுழற்றுமிடத்து  உடலெங்கும்  ஓடிச்  சுழலும் வாள்
உடலில்   பின்னிக்   கிடந்து   தோன்றும் மாலையின்  தோற்றத்தை
நல்குவது பற்றி, “தார் புரிந்தன்ன  வாளுடை   விழவின்”   என்றார்.
இதனை  இக்காலத்தும் தொண்டை  நாட்டில் கலைமகள் விழா நாளில்
வாட்பயிற்சியுடையார் செய்து காட்டும் வாள் விழாவிற் காணலாம்.
 

இனிப்    பழையவுரைகாரர், “நாண்மழை” யென்றது, “பருவமழை”
யென்றும், “தோலொடு வென ஒடு விரிக்க” என்றும், “தார் புரிந்தன்ன
வாள்”  என்றது, “பூமாலைகள் அசைந்தாற்போல அடங்குகின்ற வாள்”
என்றும் கூறுவர்.

போரில்     பகைவர்    எறியும்     படை     முதலியவற்றால்
புண்பட்டிறப்பதையே    விரும்புவாராதலின்,    “போர்படு   மள்ள”
ரென்றார்.  “நோற்றோர் மன்ற தாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்
கொள  விளிந்தோர்”  (அகம்.  61)  என மாமூலனார் கூறுதல் காண்க.
போர்ப்படு எனற்பாலது போர்படு என வந்தது. இனி, போரை விரும்பி
அதற்குரிய   நினைவு  செயல்களையுடைய  வீரரென்றற்கு   இவ்வாறு
கூறினாரென்றுமாம்.         தகைப்பினையும்,         எஃகினையும்
விழவினையுமுடைய      மள்ளர்      என்க.      போர்க்கேற்றுவர்
பழையவுரைகாரர்.

சேரர்க்குரிய     போந்தையொடு வெற்றிக்குரிய  வாகைப்பூவையும்
விரவித்தொடுத்த   மாலை   யுடைமைபற்றி,  “போந்தொடு  தொடுத்த
கடவுள்  வாகைத்  துய்வீ”  யென்றார். போந்து, பனந்தோடு, வெற்றித்
திரு  விரும்பும்  பூவாதலின்,  வாகைப்பூவினைக்,  “கடவுள்  வாகைத்
துய்வீ”    யென்றார்.    இனிப்    பழைய    வுரைகாரர்,   கடவுள்
வாகையென்றதற்கு,  “வெற்றி  மடந்தையாகிய கடவுள் வாழும் வாகை”
யென்பர்.

போந்தை  வெண்ணிறமாயும் வாகைப்பூ நீல நிறமாயும் இருத்தலின்,
போந்தொடு  தொடுத்த  வாகைப்  பூவிற்கு  முல்லைப்  புதல் சூழ்ந்த
வண்டினத்தையும்  உவமம்  கூறினார்.  வாகைப் பூ நீல நிறமுடைமை
பற்றியும்,   துய்யுடைமை   பற்றியும்   சான்றோர்   அதனை  மயிற்
கொண்டைக்கு  உவமித்து,  “குமரி வாகைக் கோலுடை நறுவீ, மடமாத்
தோகைக்  குடுமியிற்  றோன்றும்”  (குறுந்.  347)  என்றும்,  “வாகை
யொண்பூப்புரையு  முச்சிய  தோகை”  (பரி. 11: 7-8) என்றும் கூறுதல்
காண்க.  “மென்பூ  வாகை”  (அகம்.  136)  என்பதனால்,  வாகைப்பூ
மெல்லிதாதலும்  அறியப்படும்.  இனிப் பழைய வுரைகாரர், “கிழித்துக்
குறுக    நறுக்கி    வாகையோடு    இடை    வைத்துத்   தொடுத்த
பனங்குருத்துமுல்லை     முகைக்கு     ஒப்பாகவும்,       வாகைவீ
அம்முல்லையைச்  சூழ்ந்த  வண்டிற்கு  ஒப்பாகவும்  உவமங்கொள்ள
வைத்த  சிறப்பானே  இதற்குப்  புதல்சூழ் பறவையென்று பெயராயிற்”
றென்பர்.  பறவை,  சேக்கும் முரம்பின் என இயையும். முரம்பிடத்தே
மக்கள்    “இலங்கு   கதிர்த்திருமணி”   பெறுவர்   என்பதற்கேற்ப,
அவ்விடத்தின்  வளம்  கூறுவார், “வாள் பளிங்கு விரைஇய செம்பரல்
முரம்பு”  என்றார்.  பெறூஉம் நாடு என இயைக்க. அதன்கண் வைப்பு
என்பதனைக்    கண்ணகன்    வைப்பு   என   மாறுக.   நாட்டிற்கு
நலஞ்செய்வது  அதன்கண்ணுள்ள  ஊர்களே  யாதலின், “அகன்கண்
வைப்பின் நாடு” என்றார்.
 

4 - 9. இடி யிசை .............. என்ப.

உரை : இடி  யிசை   முரசமொடு   ஒன்று   மொழிந்து  -  இடி
முழக்கத்தைப்  போன்ற  ஓசையினைச்  செய்யும்  முரசுடனே தப்பாத
வஞ்சினத்தைக்  கூறிச்சென்று  ;  ஒன்னார் வேலுடைக் குழூஉச் சமம்
ததைய   நூறி   -   பகைவருடைய   வேலேந்திய   படைக்கூட்டம்
செய்யும்போர்  அறக்கெடும்படியழித்து  ;  கொன்று  -  அவர்களைக்
கொன்று    ;   புறம்   பெற்ற   -   அஞ்சினோர்  முதுகிட்டோடச்
செய்ததனாலுண்டாகிய  ;  பிணம் பயிலழுவத்து - பிணங்கள் நிறைந்த
போர்க்களத்தே ; தொன்று திறை தந்த களிற்றொடு - தோற்ற வேந்தர்
பழையதாகிய  திறையாகத்  தந்த யானையோடு ; அம்பண அளவை -
நெல்லையளக்கும்  மரக்கால்  ;  விரிந்து  உறை போகிய - தன் வாய்
விரிந்து  அதனைச்  சுற்றிலும்  புறத்தே  யிட்ட  செப்புறை  தேய்ந்து
கழன்றோடுமாறு  ;  நெல்லின் ஆர்பதம் நல்கும் என்ப - நெல்லாகிய
உணவை    நிறைய   அளந்து   கொடுப்பன்   என்று   அறிந்தோர்
சொல்லுவார்கள் எ - று.

முரசத்தின்    ஓசை இடியோசை போறலின், “இடியிசை” யென்றார்.
“இடிக்  குரல்  முரசம்”  என்று  சான்றோர்  பயில  வழங்குப. கூறிய
வஞ்சினம்  தப்பாமற் காக்கும் வாய்மையனாதல்பற்றி,  “ஒன்றுமொழிந்”
தென்றார்  ; “நிலந்திறம் பெயருங் காலை யாயினும், கிளந்த சொன்னீ
பொய்ப்பறி யலையே”(பதிற். 63) என்று பிறாண்டும் ஆசிரியர் சேரனது
வாய்மையைக்  கிளந்தோதியது  காண்க.  பழைய  வுரைகாரர், “ஒன்று
மொழிதல் வஞ்சினங்கூற” லென்றும், “ஒன்று மொழிந்து கொன்று புறம்
பெற்ற  எனக்  கூட்டி,  ஒன்று மொழிதலும் கொன்று புறம் பெறுதலும்
ஒன்னாரதன்றி  இவன்  தொழிலாக  வுரைக்க”  என்றும், “ஒன்னாரது
குழுவெனக்  கூட்டி, கொன்றதும் புறம் பெற்றதும் அக்குழுவையேயாக
வுரைக்க” என்றும் கூறுவர்.

“தொன்று   திறை தந்த” என்றதனால், ஈண்டுக் கூறிய வொன்னார்,
பண்டெல்லாம் சேரனுக்குத் திறை செலுத்திப் போந்த சிற்றரசரென்றும்,
அத்       திறையினைத்        தாராமையால்       பகைமையுற்ற
ஒன்னாராயினரென்றும்,   அவர்   வேலுடைக்   குழுவினை   இவன்
இப்போது    வென்று    புறம்பெற்று,    அவர்   செலுத்தவேண்டிய
பழந்திறையைப்  பெற்றானென்றும்  கொள்க பழையவுரைகாரர், “திறை
தந்த”  என்றதற்கு  அவன் ஒன்னார் திறையாகத்  தந்தவென வருவித்
துரைக்க” என்ப.

அம்பணம்,  மரக்கால், இது மூங்கிலாற் செய்யப்பட்டு வாய் கிழிந்து
விரியாவண்ணம்        செம்பினால்        வாயின்       புறத்தே
பட்டையிடப்பட்டிருக்கும்.    இஃது    இக்காலத்தும்    வடார்க்காடு
சில்லாவிலுள்ள    சவ்வாது    மலையடிவாரத்தே    வாழ்வாரிடத்தே
வழக்கிலுள்ளது.  இதனை  யம்பணமென்றும்,  செப்புப்   பட்டையைச்
செப்புறை   யென்றும்   கூறுப.   அளக்குந்தோறும்   அம்பணத்தின்.
நிறையப்  பெய்து  திணித்துத்  திணித்து  அளத்தலின்,  வாய்கிழிந்து
உறை  தேய்ந்து  நீங்குமாறு  தோன்ற, “அம்பண வளவை விரிந்துறை
போகிய”  என்றார்.  போகிய :  வினையெச்சம் ;  கெட   வென்னும்
பொருட்டு.     இனிப்   பழையவுரைகாரர், “உறை போதல், உறைவிட
முடியா   தொழித”  லென்றும்,  “அளவை  விரிய  வெனத்  திரிக்க”
என்றும்   கூறுவர்.   ஆரநிறைத்துக்   கொடுக்கும்  பதம்  ஆர்பதம்
எனப்பட்டது.  “நெல்லின்  ஆர்பதம்  என இருபெயரொட்டு” என்பர்
பழைய வுரைகாரர். அறிந்தோ ரென்பது சொல்லெச்சம்.
 

இதுகாறும்     கூறியது, பேரியாழ்  பாலைபண்ணிப்  படர்ந்தனை
செல்லும்  முதுவாய்  இரவல,  திருமணி  பெறூஉம்  நாடு கிழவோன்,
ஒன்னார்  சமம் ததைய நூறி, அவர் தொன்று திறை தந்த களிற்றொடு
நெல்லின்   ஆர்பதம்   நல்கும்   என்ப  ;  அவ்  வள்ளியோனைப்
பாடுவோமாக  என  வினைமுடிவு  செய்க. இனிப் பழைய வுரைகாரர்,
“அவனை    நினைத்துச்    செல்லும்    முதுவாயிரவலனே,    நின்
நினைவிற்கேற்ப  நாடு கிழவோன் தனக்குப் போரின்மையான் வென்று
கொடுப்பதின்றி,  ஒன்னார்  பிணம்  பயிலழுவத்துத் திறையாகத் தந்த
களிற்றொடு  தன்னாட்டு  விளைந்த நெல்லாகிய உணவினைக் கொடா
நின்றானென்று    எல்லாரும்   சொல்லுவார்களாதலால்,  அவன்பால்
ஏகெனக் கூட்டி வினை முடிவு செய்க” என்பர். என்பவர், பாணைனை
அவன்பால்   ஏகென்பது   பாணாற்றுப்படையாம்   ;  இது  பாடாண்
பாட்டாதலின்  ஆறறிந்து செல்லும் பாணனொடு சேரன் கொடை நலம்
கூறிப் பாடுவதே ஈண்டைக்குப் பொருந்துவதென வறிக.

“இதனாற் சொல்லியது ; அவன்  வென்றிச்  சிறப்பொடு  படுத்துக்
கொடைச் சிறப்புக் கூறியவாறாயிற்று”.

“படர்ந்தணை     செல்லும்  என்று  பாணன் தன்னில் நினைவன
கூறினமையின்,     துறை    பாணாற்றுப்படையன்றிச்    செந்துறைப்
பாடாணாயிற்று”.  அவ்வாறாயின்  வினை முடிபு, “ஆதலால், நெஞ்சே,
அவன்பால் செல்வாயாக” எனக் கூட்டி முடித்தல் வேண்டு மென்க.


 மேல்மூலம்