துறை : பாணாற்றுப் படை. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : வெண்போழ்க் கண்ணி. 5 - 12. கொல்படை.....................கொன்று. உரை : கொல் படை தெரிய - ஏந்திய படை யழிந்தவர் வேறு படைகளை ஆராய ; வெல் கொடி நுடங்க - வென்றி குறித்துயர்த்த கொடியானது விண்ணிலே யசைய ; வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப - ஒளிக்கதிர் வீசும் மணி பதித்த கொம்பென்னும் வாச்சியத்தோடு வலம்புரிச்சங்குகள் முழங்க ; பல்களிற்று இனநிரை - பலவாகிய களிறுகளின் கூட்டமான வரிசை ; புலம் பெயர்ந்து இயல்வர - தத்தமக்குரிய இடத்தினின்றும் பெயர்ந்து போர் நிகழும் இடம் நோக்கித் திரிய ; அமர்க்கண் அமைந்த - போரிடுதற் கமைந்த ; நிணம் அவிர் பரப்பில் - பொருது வீழ்ந்த மக்கள் மாக்களினுடைய நிணம் விளங்கும் பரந்த களத்திலே ; குழூஉ - கூட்டமாகிய ; சிறை யெருவை - பெரிய சிறகுகளை யுடைய பருந்துகள் ; குருதி ஆர - பிணங்களின் குருதியை யுண்ண ; தலை துமிந்து எஞ்சிய ஆண்மலி யூபமொடு - தலை வெட்டுண்டதால் எஞ்சி நிற்கும் குறையுடலாகிய ஆண்மை மலிந்தாடும் கவந்தத்தோடு ; உருவில் பேய்மகள் கவலை கவற்ற - அழகிய வடிவில்லாத பேய்மகள் காண்போர் வருந்துமாறு அச்சுறுத்த ; நாடு உடல் நடுங்க - நாட்டிலுள்ளோர் அஞ்சி நடுங்க; பல் செருக் கொன்று - பல போர்களிலும் எதிர்த்தோரை வென்றழித்து எ - று. கொல்படை, கொல்லுதற்குரிய வேலும் வாளும் பிறவுமாம். தெரியவெனவே, ஏந்திய படை போர்த்தொழிலில் முரிந்தழிந்தமை பெற்றாம். இனிப் பழைய வுரைகாரர், 2”சொட்டையாளர் படைதெரிய வென ஒரு சொல் வருவிக்க” என்பர் . செய்யும் போர்களிலெல்லாம் வென்றியே எய்துதலின், “வெல்கொடி நுடங்க” என்றார் ; பழைய வுரைகாரர், “ வெல்கொடி நுடங்க வென்றது மாற்றாரெதிரே அவர் கண்டு நடுங்கும்படி பண்டு வென்ற கொடி நுடங்க வென்றவா” றென்பர் . வயிர், கொம்பு என்னும் இசைக்கருவி. இது “விரிக்கும் வழி விரித்த” லென்பதனால் அம்முப் பெற்று வயிரமென நின்றது. இது வளையொடு இணைத்தே கூறப்படுதல் இயல்பாதலின், “வயங்கு கதிர் வயிரமொடு வலம்புரி யார்ப்ப” என்றார் . இக் கொம்பு வயிரத்தை யுடைய மரத்தாற் செய்து ஒளி திகழக் கடைச்சலிடப்படுமாறு தோன்ற, “வயங்குகதிர் வயிர” மென்றார் போலும் . “திண்காழ் வயிரெழுந் திசைப்ப” (மருகு. 119) என்று பிறரும் கூறுதல் காண்க. இதனோசை மயிலினது அகவலோசையையும் அன்றிலின் குரலையும் ஒத்திருக்கு மென்பர். யானைகள் இயல்பாகவே தம்மில் அணியணியாக நிரை வகுத்துச் செல்லும் சிறப்புடையவாகலின், அவற்றின் குழுவினை நிரை யென்றே சான்றோர் வழங்குப . அவ்வழக்கே ஈண்டும் “பல்களிற் றினநிரை” யெனக் கூறப்படுகிறது . இவை போர்த்துறை பயின்றவையாதலின், போர் நிகழும் இடம் நோக்கிப் பெயர்ந்து சென்றுகொண் டிருப்பது தோன்ற, “புலம் பெயர்ந்து இயல்வர” என்றார் . பழைய வுரைகாரரும் “களிற்றின்நிரை களத்திலே போர்வேட்டுப் புடை பெயர்ந்து திரிய என்றவா” றென்பர். அமர்க்கண் அமைந்த பரப்பு, நிணம் அவிர் பரப்பு என இயையும் . நான்காவதன்கண் ஏழாவது மயங்கிற்று ; நிணமவிர் என மாறுக. நிண மென்றதற் கேற்ப இயைபுடைய சொற்கள் வருவிக்கப்பட்டன. பழையவுரைகாரர், “அமர்க்கண் அமைந்த பரம்பென்றது அமர் செய்யும் இடத்திற்கு இடம் போந்த பரப்” பென்பர் . இனி, கண்ணென்பதனை இடமாக்கி, அமர்செய்யு மிடமெனக் கோடலுமொன்று . நிணம் மிக்கு மலையெனக் குவிந்து கிடக்குமாறு தோன்ற, “நிணமவிர் பரப்” பென்றார் . நிணமும் ஊனும் தின்ற பருந்துகட்கு உடலினின்று சொரிந்தோடும் குருதியே உண்ணுநீரானமையின், “குழூஉச் சிறை யெருவை குருதி யார” என்றார் ; “குருதிபடிந்துண்ட காகம்” (கள. 1) என்று பிறரும் கூறுதல் காண்க குழூஉ வாகிய எருவை யென்க. தலை வெட்டப்பட்ட வழி எஞ்சி நிற்கும் முண்டம் (கவந்தம்) துள்ளியாடுதற்கு ஏதுக் கூறுவார், “ஆண் மலி யூப” மென்றார். யூபம், தூண் . ஈண்டு அது கவந்தத்துக்காயிற்று. உடலை நெறிப்படுத் தியக்கும் தலையொழியினும், அவ்வுடற்கண் கிளர்ந்து நின்ற ஆண்மைத் துடிப்பு உடனே ஒழியாமைபற்றி, “ஆண்மலி” யென்றா ரென்க. பழையவுரையும், “ஆண்மை மிக்க யூப” மென்றே கூறுகிறது. பேய்மகளைச் சவந் தின் பெண்டு என்றலும் வழக்கு. உலறிய தலையும், பிறழ் பல்லும், பேழ் வாயும், சுழல் விழியும், சூர்த்த நோக்கும், பிணர் வயிறும் உடையளாதலின், “உருவில் பேய்மகள் என்றும், அவள் தோற்றம் காண்பார்க்கும் பேரச்சம் தந்து நெஞ்சு நோவச் செய்தல்பற்றி “கவலை கவற்ற” என்றும் கூறினார். கவலை : பெயர், கவல்வித்தற் பொருட்டாய கவற்றல், வினை. போரில் ஈடுபட்டார்க்கன்றி நாட்டிடத்தே யிருக்கும் மக்களனை வர்க்கும் பேரிழவும் பெருந் துன்பமும் உண்டாதலால், “நாடுடனடுங்க” என வேண்டாது கூறினார். உண்டாகிய போர் பலவற்றினும் மீட்டும் போருண்டாகாவாறு அதற்கேதுவாயினோரை வேரறக் கொன்று வென்றி யெய்தியது தோன்ற, “பல செருவென்” றென்னாது, “கொன்” றென்றாரென வறிக. படையழிந்தவர் படை தெரிய, கொடி நுடங்க, வயிரமொடு வலம்புரியார்ப்ப, இனநிரை இயல்வர, எருவை குருதியார, யூபமொடு பேய்மகள் கவலை கவற்ற, நாடு நடுங்க, பல்செருக் கொன்று என இயைத்து, மேல்வரும் “மெய் சிதைந்து, மறைத்த சான்றோர்” (18) என்பதனோடு கூட்டிக்கொள்க. இனிப் பழைய வுரைகாரர், “கொல் படை யென்பது முதல் இய்ல்வர என்பது ஈறாக நின்ற வினையெச்சம் நான்கினையும் நிகழ்காலப் பொருட்டாக்கிச் செருக்கொன்று என்னும் வினையொடு முடிக்க” என்றும், “குருதியாரப், பேய்கள் கவலை கவற்ற, நாடுடன் நடுங்க என நின்ற வினையெச்சங்கள் மூன்றனையும், ஆரும்படி, கவலை கவற்றும்படி, நாடுடன் நடுங்கும்படி யென எதிர்காலப் பொருட்டாகிக் கொன்றென்னும் வினையொடு முடிக்க” என்றும், கொன்றென்றும் வினையெச்சத்தினை மெய் சிதைந்து என்னும் வினையொடு மாறிக் கூட்டுக” என்றும் கூறுவர். 13 - 18. நாறிணர் .............. பெருமகன். உரை : நாறுஇணர்க்கொன்றைவெண்போழ்கண்ணியர் - மணம் கமழ்கின்ற கொன்றைப்பூவின் கொத்துக்களை விரவித்தொடுத்த வெள்ளிய பனந்தோட்டாலாகிய கண்ணியினையுடையராய் ; வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர் - வாளின் வாய் உண்டு பண்ணிய மாட்சிமைப்பட்ட வடுக்களாகிய வரி பொருந்திய முகத்தை யுடையராய் ; நெறிபடு மருப்பின் இருங்கண் மூரியொடு - நெறிப்புடைய கொம்பும் பெரிய கண்ணுமுடைய எருத்துக்களோடு ; வளை தலை மாத்த - வளைந்த தலையையுடைய ஏனை விலங்குகளின் இறைச்சிகளையுடைய ; தாழ் கரும்பாசவர் தாழ்ந்த இழிந்த பாசவர் ; எஃகாடு ஊனம் கடுப்ப - கத்தியால் இறைச்சியை வெட்டுதற்குக் கொண்ட அடிமணை போல ; மெய் சிதைந்து - மெய்வடுவும் தழும்பு முறுதலால் ; சாந்து எழில் மறைத்த மெய் சான்றோர் - பூசிய சந்தனத்தின் பொலிவு தோன்றாதபடி மறைத்த மார்பினையுடைய சான்றோர்க்கு பெருமகன் - தலைவனும்; சேரர்க்குச் சிறப்பாக வுரித்தாகிய பனந்தோட்டுடன் உழிஞை, வாகை, தும்பை முதலிய போர்ப்பூவும் பிற பூக்களும் விரவித் தொடுத்தணிவது இயல்பாதலால், கொன்றை கலந்து தொடுத்த போந்தைக் கண்ணியை, “நாறிணர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணி” யென்றார். வாளால் வெட்டுண்டு வடுப்பட்டது வரிவரியாக முதுகொழிய ஏனை முகத்தினும் மார்பினும் காணப்படுவதுபற்றி, “வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்” என்றார். வாள் வாயால் உண்டாகிய புண்ணின் வடுவினை வரியென்றா ராதலின், அதற்கேற்பப் புண்படுத்திய வாளின் செயலை, “வாள்முகம் பொறித்த” என்றும், முகத்தின்கண் உண்டாகிய புண்வடு வீரர்க்கு அழகும் மாட்சிமையும் பயத்தலின், பொறித்தல் என்ற வினைக்கேற்ப வரி யென்றே யொழியாது, “மாண் வரி” என்றும் சிறப்பித்தார். முகத்துக்கும் மார்புக்கும் பொதுவாக யாக்கை யென்றாராயினும், “மெய் சிதைந்து சாந்தெழின் மறைத்த சான்றோர்” என மார்பினைச் சிறப்பித் தோதுதலின் முகத்துக்காயிற்று. பழைய வுரைகாரரும், “மெய் சிதைந்து உடலுருவப் பட்டமை கீழே சொன்னமையால், “வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கைய” ரென்பதற்கு வாள்முகத்திலே பொறித்த மாண் வரியையுடைய யாக்கையரென முகத்தில் வடுவாக்கி யுரைக்க” என்பது காண்க. பாசவர், இறைச்சி விற்பவர.் எருதுகளையும் ஏனை ஆடு மான் முதலிய விலங்குகளையும் கொன்று அவற்றின் இறைச்சிகளை விற்பது பற்றி அவரைத் “தாழ் பாசவர்” என்றும், கொலைவினை யுடைமையால், “கரும் பாசவர்” என்றும் கூறினார். எஃகு, ஈண்டு இறைச்சியைத் துண்டிக்கும் கத்திமேற்று . இறைச்சியைத் துண்டிப்பதற்கு அடியிலே வைக்கும் மரக் கட்டையில் அக் கத்தியின் வெட்டுப்பட்டு மேடு பள்ளமுமாய் வரிபோன்று கிடப்பதுபற்றி, வீரர் மார்புக்கு அதனை உவமம் கூறுவார், “ஊனம் கடுப்ப” என்றார். “ஊனமர் குறடுபோல விரும்புண்டு மிகுத்த மார்பு” (சீவக. 2281) எனப் பிற்காலச் சான்றோர் கூறுவது காண்க . ஊனம், ஊன்கறி வெட்டு மணைக்கட்டை. சிதைந்து, காரணப் பொருட்டாய வினையெச்சம். பூசிய சாந்தம் மார்பின் வடு விளையும் தழும்பினையும் மறைக்கமாட்டாமையின், தன் பொலிவு தோன்றற்கு இடம் பெறாமையால், அச் சாந்தின் பொலிவை மார்பின் சிதைவுகள் மறைத்துத் தாம் மேம்பட்டுத் தோன்ற விளங்கும் மார்பினையுடைய சான்றோர் என்றற்கு, “சாந்தெழில் மறைத்த சான்றோர்” என்றார் இதனாற் பயன், உவகைச் சுவையினும் வீரச் சுவையே மிக விரும்பும் இயல்பின ரென்றவாறு மார்பு என ஒருசொல் வருவித்து, சாந்தெழில் மறைத்த மார்பையுடைய சான்றோர் என இயைத்துரைத்துக்கொள்க. மெய் சிதைந்து சாந்தெழில் மறைத்த என்றதற்குப் பழையவுரைகாரர், “மெய்யானது சிதைந்து அச் சிதைந்த வடுக்களானே பூசின சாந்தின் அழகை மறைத்த என்றவா” றென்பர். சான்றோர் பெருமகன், உயர்திணை ஆறாம் வேற்றுமைத் தொகை ; “அதுவென் உருபுகெடக் குகரம் வருமே” (தொல். வேற். மயங். 11) என்றதனால் சான்றோர்க்கென விரிக்கப்படுவதாயிற்று . இது, கண்ணியரும் யாக்கையருமாகிய சான்றோர் பெருமகன் என இயையும். 19 - 23. மலர்ந்த ...........................செலினே. உரை : மலர்ந்த காந்தள் - பூத்திருக்கும் காந்தட் பூ ; சூர் நசைத்தா அய் - தெய்வத்தால் விரும்பப்படுவதாதலால் ; மாறாது ஊதிய - நீங்காது படிந்து தாதுண்ட ; கடும் பறைத் தும்பி விரைந்து பறத்தலை யுடைய தும்பியானது ; பறை பண்ணழியும் அப்பறக்கும் இயல்பு கெடும் பாடு சால் நெடுவரை - பெருமை யமைந்த நெடிய மலையாகிய ; கல் உயர் நேரிப் பொருநன் - கற்களால் உயர்ந்த நேரிமலைக்குரிய வாழியாதனை ; பாடினை செலின் - பாடிச் செல்குவையாயின் எ - று. காந்தட்பூவைத் தெய்வம் விரும்புதலின் வண்டினம் மூசுதலில்லை யென்பது, “சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்” (முருகு . 43) என்பதனாலும் துணியப்படும். தும்பி மாறாது ஊதியதற்கு ஏது கடிய சிறகுகளையுடைமைபற்றி யெழுந்த செருக்கே யென்றற்குக் “கடும்பறைத் தும்பி” யென்றார். நசைத்தாய்அய், நசைத்தாதலாலே, தும்பி மாறாது ஊதியதனால் எய்திய பயன் இதுவென்பார், “பறை பண்ணழியும்” என்றார். பண், பறத்தற்குரிய இயல்பு ; அஃதாவது, பறத்தற்கேற்பச் சிறகுகள் அசைந்து கொடுத்தல். இனி, காந்தள், வேங்கை, சண்பகம் (சம்பை) முதலிய பூக்களில் தும்பியினம் படிந்து தாதுண்ணா வென்றும், உண்டால் சிறகுகள் உதிர்ந்துவிடும் என்றும் நூலோர் கூறுதலின், “பறை பண்ணழியும்” என்றாரென்றுமாம். பாடு, பெருமை. இனிப் பழைய வுரைகாரர், மாறாதூதிய வென்றது, “இது சூரியனுடையதென்று அறிந்தும் நீங்காது ஊதிய வென்றவா” றென்றும் “சூர் நசைத்தா யென்றதனைச் சூர் நசைத்தாக வெனத் திரித்துக் காந்தள் சூரானது நச்சுதலையுடைத் தாகலானே யென வுரைக்க” என்றும் கூறுவர். மலர்ந்த காந்தளைச் சூர் நச்சுதலால் ஊதலாகாதென்று அறிந்து மாறாது தும்பி கடும்பறைச் செருக்கால் ஊதித் தன்பறை பண்ணழியும் என்றதனால், செல்வக் கடுங்கோ வாழியாதன் கண்டு விரும்பிக் காக்கப்படுதலால் நேரி மலையைப் பகைவேந்தர் வலியுடையே மென்னும் செருக்கால் கொள்ளக் கருதி முயல்வ ராயின், அவ்வலி யிழந்து கெடுவரென்பது வலியுறுத்தவாறாம். 1 - 4. கொடு மணம் ................ பெறுகுவை. உரை : கடன் அறி மரபின் கைவல் பாண- இசை வல்லோர்க்குரிய கடமைகளை நன்கறிந்த முறைமையால் யாழ் வாசித்தலில் கைவன்மை வாய்ந்த பாணனே ; நெடுமொழி ஒக்கலொடு - நெடிய புகழ்பெற்ற நின் சுற்றத்தாருடனே ; கொடுமணம் - கொடுமணமென்னு மூரிடத்தும் ; பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர் - பந்தரென்னும் பெயரையுடைய பெரிய புகழையுடைய பழையவூரிடத்தும் ; பட்ட - பெறப்படுவனவாகிய ; தென்கடல் முத்தமொடு நன்கலம் பெறுவை - தென்கடலில் எடுக்கப்படும் முத்துக்களோடு நல்ல அணிகலங்களையும் பெறுவாய் எ - று. யாழ் இசைத்தற்கு வேண்டும் நெறிமுறைகளை நன்கறிந்து இசைப்பவனே யாழ்வல்லோ னாதலால், “கடனறி மரபின் கைவல் - பாணர் என்றார். “கைவல் பாண்மகன் கடனறிந் தியங்க” (சிறுபாண். 37) என்று பிறரும் கூறுதல் காண்க . தமது கைவன்மையால் அரசர் முதலாயினார்பால் மாராயம் பெற்ற புகழ்மிக்க சுற்றத்தா ரென்றற்கு, “நெடுமொழி யொக்கல்” என்றார். “மாராயம் பெற்ற நெடுமொழி” (தொல். புறத். 8) என்று ஆசிரியர் கூறுதல் காண்க. மாராயம் பெற்றதனால் உலகவர் மீக்கூறும் புகழ் “நெடுமொழி” யெனப்பட்டது. கொடுமணம், பந்தர் என்ற இரண்டும் அக்காலத்தே முறையே நன்கலங்கட்கும் உயரிய முத்துக்கட்கும் சீரிய இடங்களாகத் திகழ்ந்தன போலும். “கொடுமணம் பட்ட வினைமா ணருங்கலம், பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்” (பதிற். 74) என அரிசில் கிழாரும் ஓதுதல் காண்க. இதனால், “தென்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை” யெனப் பொதுப்படக் கூறினாராயினும், கொடுமணம் பட்ட நன்கலமும், பந்தர்ப் பெயரிய மூதூர்ப் பட்ட தென்கடன் முத்தும் பெறுகுவை யென இயைத்துக் கொள்க. இதுகாறும் கூறியது, கொன்றை வெண்போழ்க் கண்ணியரும், யாக்கையரும், பல்செருக் கொன்று, மெய் சிதைந்து சாந்தெழில் மறைத்த சான்றோருமாகிய வீரர்க்குப் பெருமகனும், நேரிப் பொருநனும் ஆகிய செல்வக் கோமானைப் பாடினை செலின், கடனறி மரபின் கைவல் பாண, நீ நின் நெடுமொழி யொக்கலொடு கொடுமணம் பட்ட நன்கலனும் பந்தர் மூதூர்ப்பட்ட தென்கடல் முத்தும் பெறுகுவை யென்று வினைமுடிபு கொள்க. இனிப் பழையவுரைகாரர், “பந்தர்ப் பெயரிய மூதூர்த் தென்கடல் முத்தமொடு கொடுமணம் பட்ட நன்கலம் பெறுகுவை யென மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது ; அவன் கொடைச்சிறப்புக் கூறியவாறாயிற்று”.
1. தொல்படை பா. வே. 2. சொட்டை, ஒரு வகைப் படைக்கருவி |