முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
68.



கால்கடிப் பாகக் கடலொலித் தாங்கு
வேறுபுலத் திறுத்த கட்டூர் நாப்பட்
கடுஞ்சிலை கடவுந் தழங்குகுரன் முரசம்
அகலிரு விசும்பி னாகத் ததிர
 5




வெவ்வரி நிலைஇய வெயிலெறிந் தல்ல
துண்ணா தடுக்கிய பொழுதுபல கழிய
நெஞ்சுபுக லூக்கத்தர் மெய்தயங் குயக்கத்
தின்னா ருறையுட் டாம்பெறி னல்லது
வேந்தூர் யானை வெண்கோடு கொண்டு
 10




கட்கொடி நுடங்கு மாவணம் புக்குடன்
அருங்க ணொடைமை தீர்ந்தபின் மகிழ்சிறந்து
நாம மறியா வேம வாழ்க்கை
வடபுல வாழ்நரிற் பெரிதமர்ந் தல்கலும்
இன்னகை மேய பல்லுறை பெறுபகொல்
 15




பாய லின்மையிற் பாசிழை ஞெகிழ
நெடும ணிஞ்சி நீணகர் வரைப்பின்
ஓவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல வெழுதிச்
செவ்விரல் சிவந்த வவ்வரிக் குடைச்சூல்
அணங்கெழி லரிவையர்ப் பிணிக்கும்
 20 மணங்கமழ் மார்பநின் றாணிழ லோரே.

     துறை : செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும்
அது. பெயர் - ஏம வாழ்க்கை
(
12)

     (ப - ரை) கால் கடிப்பாகக் கடல் ஒலித்தாங்கு (1) முரசும் (3)
அதிர (4) எனக் கூட்டுக.

     எயிலெறிந்து (5) என்ற எச்சத்திற்கு உண்ணாது (6) என்றது
இடமாக உண்டலென ஒரு தொழிற்பெயர் வருவித்து முடிக்க.

     உண்ணாது (6) என்றதனை உண்ணாமலெனத் திரித்து அதனை
அடுக்கிய வென்னும் வினையொடு முடித்துக் கழியவென்றதனைக்
கழியா நிற்கவென்னும் பொருளதாக்கி அதனைப் பெறின் (8) என்னும்
வினையொடு முடிக்க.

     7. ஊக்கத்தரென்றது வினையெச்சம் 11. கள் நொடைமை -
கள்விலை. 12. நாமம் அறியா ஏம வாழ்க்கையென்றது துன்பம் இடை
விரவின இன்பமன்றி இடையறாத இன்பமேயாய்ச் சேறலான வாழ்க்கை
யென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு 'ஏம வாழ்க்கை' என்று பெயராயிற்று.

     13. வடபுலம் - போகபூமியாகிய 1உத்தரகுரு.

     14. இன்னகை - இனிய இன்பம். பல்லுறை - பலநாள் உறைதல்.

     இன்னகை (14) அல்கலும் (13) மேய (14) எனக் கூட்டுக.

     பாசிழை ஞெகிழ (15) நாள்பல எழுதி (17) என முடிக்க.

     அரிவையர்ப் பிணிக்கும் (19) மணங்கமழ் மார்ப. நின் தாள்
நிழலோர் (20) உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய (6) இன்னார்
உறையுள்தாம் பெறினன்றி (8) இன்னகை (14) அல்கலும் (13) மேய
பல்லுறை பெறுபகொல்? பெறார் (14); அவர் அவ்வாறு அது
பெறினன்றி நின் மார்பாற் பிணிக்கப்பட்ட அரிவையரும் இன்னகை
அல்கலும் மேய பல்லுறை பெறுவது ஏதெனக் கூட்டி வினைமுடிவு
செய்க.

     இதனாற் சொல்லியது 2காம வேட்கையின் ஓடாத அவன்
வென்றி வேட்கைச்சிறப்புக் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. காற்றே அடிக்கும் குறுந்தடியாக அமையக் கடல்
ஒலித்தாற்போல.

     2. வேற்று நாட்டினிடத்தே சென்று தங்கிய பாசறையின் நடுவே.

     3-4. மிக்க ஓசையைப் பாசறை முழுதும் செலுத்துகின்ற
ஒலிக்கின்ற ஓசையையுடைய வெற்றி முரசும். மற்ற நான்கு பூதங்கள்
விரிதற்குக் காரணமான பெரிய ஆகாயத்தினிடத்தே அதிரும்படி
முழங்க.

     1-4. முரசின் ஒலிக்குக் கடலொலி உவமை: பதிற். 69 : 3 - 4;
"புணரி. குணில்வாய் முரசி னிரங்குந் துறைவன்" (குறுந்: 328 : 2 - 3)

     5-6. விரும்பத்தக்க சித்திரங்கள் நிலைபெற்ற மதிலை
அழித்தல்லது உண்ணுதலைச் செய்யாமற் பலவாக அடுக்கிய
பொழுதுகள் பல நீங்கா நிற்ப.

     7-8. நெஞ்சு விரும்பிய ஊக்கத்தையுடையராய். உடம்பு
அமையும்படிவந்த ஓய்வினையுடைய பகைவரது உறைவிடத்தைத்
தாம் பெற்றாலல்லாமல். மெய்தயங்குமயக்கம்: பதிற். 79 : 15.

     9-10. பகைவேந்தர் ஏறிச் செல்லும் யானையினது
வெண்கோட்டைக் கொண்டு கள்ளினது கொடி அசையும்
கடைத்தெருவிலே சேரப்புக்கு.

     கட்கொடி . . . . . ஆவணம்: ``கள்ளின் களிநவில்
கொடியொடு`` (மதுரைக். 372); ``நெடுங்கொடி நுடங்கு நறவுமலி
மறுகில்`` (அகநா. 126 : 10)

     11. பெறுதற்கு அரிய கள்ளிற்கு விலையாகக் கொடுத்து உண்ட
பிறகு மகிழ்ச்சி மிக்கு. 9 - 11. யானைக்கோட்டைக் கள்ளுக்கு
விலையாகத் தருதல் : பதிற். 30 : 11 - 2. உரை.

     12-3. துன்பத்தால் வரும் அச்சத்தை அறியாத இன்பமேயான
வாழ்வையுடைய வடக்கேயுள்ள நிலமாகிய உத்தரகுருவில்
வாழ்வாரைப் போலப் பெரிதும் விரும்பி நாள்தோறும்.

     14. இனிய இன்பம் பொருந்திய பல நாள் உறைதலைப்
பெறுவார்களோ?

     15. உறக்க மில்லாமையால் பசிய பொன்னாற் செய்த இழை
நழுவ; பாயல் - தூக்கம் (பதிற். 19 : 12 உரை); ‘`படலின் பாயல்
வௌவியோளே`` (ஐங்குறு. 195)

     16-7. உயர்ந்த. மண்ணாற் செய்யப்பட்ட மதிலையுடைய நீண்ட
அரண்மனையின் எல்லையில். சித்திரத்தை ஓத்த அழகையுடைய
உயர்ந்த சுவரில் தலைவன் பிரிந்து சென்ற நாட்களைக் கோடிட்டு
எழுதி; சுவரில் எழுதுதல்: குறுந். 358 ; 3. ஒப்பு. ஓவு: ஓவமென்பதன்
கடைக்குறை.

     18-9. இயல்பாகச் சிவந்த விரல் பின்னும் சிவந்த. அழகிய
வரிகளையுடைய சிலம்பையணிந்த. நோக்கினாரை வருத்துகின்ற
அழகையுடைய மகளிரை வசப்படுத்துகின்ற.

     20. நல்ல மணம் கமழ்கின்ற மார்ப. நினது தாளினது நிழலில்
வாழ்வோர்.

     தாணிழலோர் (20) ஊக்கத்தராய் (7) இன்னார் உறையுள்
பெறினல்லது (8) பல்லுறைபெறுபகொல் (15) என முடிவு செய்க.

     (பி - ம்) 18. குடச்சூல்.                     (8)


     1உத்தரகுரு: சிலப். 2: 10.

     2பதிற். 50, உரை.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

8. ஏமவாழ்க்கை
 
68.கால்கடிப் பாகக் கடலொலித் தாங்கு
வேறுபுலத் திறுத்த கட்டூர் நாப்பண் 
கடுஞ்சிலை கடவுந் தழங்குகுரன் முரசம்
அகலிரு விசும்பி னாகத் ததிர
 
5வெவ்வரி நிலைஇய வெயிலெறிந் தல்லது
உண்ணா தடுக்கிய பொழுதுபல கழிய
நெஞ்சுபுக லூக்கத்தர் மெய்தயங் குயக்கத்து
இன்னா ருறையுட் டாம்பெறி னல்லது
வேந்தூர் யானை வெண்கோடு கொண்டு
 
10கட்கொடி நுடங்கு மாவணம் புக்குடன்
அருங்க ணொடைமை தீர்ந்துபின் மகிழ்சிறந்து
நாம மறியா வேம வாழ்க்கை
வடபுல வாழ்நரிற் பெரிதமர்ந் தல்கலும்
இன்னகை மேய பல்லுறை பெறுபகொல
 
15பாய லின்மையிற் பாசிழை நெகிழ
நெடும ணிஞ்சி நீணகர் வரைப்பின்
ஓவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல வெழுதிச்
செவ்விரல் சிவந்த வவ்வரிக் குடைச்சூல்
அணங்கெழி லரிவையர்ப் பிணிக்கும்
 
20மணங்கமழ் மார்பநின் றாணிழ லோரே.
 

துறை : செந்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர் : ஏம வாழ்க்கை.

15 - 20. பாயல் ............ தாணிழலோரே.

உரை : பாயல்   -   இன்மையின்   -   பிரிவாற்றாது  உறக்கம்
பெறாமையால்  ;  பாசிழை - நெகிழ - அணிந்துள்ள பசிய  இழைகள்
நெகிழ்ந்து  நீங்க  வுடல்  மெலிந்து  ;  நெடுமண்  இஞ்சி  - உயரிய
மண்ணாற்  செய்யப்பட்ட  மதில்  சூழ்ந்த  ; நீள் நகர் வரைப்பின் -
நீண்ட  பெருமனையிடத்தே  ;  ஓவு உறழ் நெடுஞ்சுவர் - ஓவியத்தில்
தீட்டிக்  காட்டப்படுவதினும்  மேம்பட்ட  நெடிய  சுவரில் ; நாள் பல
எழுதி  -  பிரிவின் கண் மீண்டு போந்து கூடுதற்குக் குறித்த நாட்கள்
பலவும்  எழுதியெழுதி  ; செவ்விரல் சிவந்த இயல்பாகவே சிவந்துள்ள
விரல்  மிகச்  சிவந்த  ;  அவ் வரி - அழகிய வரிகளையும் ; குடைச்
சூல்  -  சிலம்பையும்  ;  அணங்  கெழில் - காண்போரை வருத்தும்
அழகையுமுடைய  ;  அரிவையர்ப்  பிணிக்கும் - மகளிர்  மனத்தைப்
பிணித்து நிற்கும் ; மணங்கமழ் மார்ப - சாந்தின் நறிய மணம் கமழும்
மார்பை யுடையோய் ; நின் தாள் நிழலோர் - நின் அடிப்பணி நின்று
வாழும் வீரர் எ - று.

பாயல்,    உறக்கம். “படலின் பாயல்” (ஐங். 195) என்புழிப் போல
பிரிவுத்  துயரத்தை  யாற்றாது  காதல்  மகளிர்  பலரும் வருந்துமாறு
தோன்ற,  “பாய  லின்மையின்”  என்றும், “பாசிழை நெகிழ” என்றும்
கூறினார்.  இவையிரண்டும்  முறையே “கண்டுயில் மறுத்தல்” எனவும்,
“உடம்பு  நனி  சுருங்கல்”  எனவும்  கூறப்படும் மெய்ப்பாடுகளாகும்.
காதலரைப்   பிரிந்த   மகளிர்  அவர்  பிரிந்த  நாட்களைச் சுவரில்
கோடிட்டுக்  குறித்தல்  மரபாதலின்,  “ஓவுறழ்  நெடுஞ்சுவர் நாள்பல
எழுதி”  என்றார்  ; “நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந், தாழல்
வாழி  தோழி”  (அகம். 61) என்று பிறரும் கூறுதல் காண்க. நெடுமண்
இஞ்சி  யென்புழி,  நெடுமை  உயர்ச்சி மேற்று. ஓவு, ஓவ மென்பதன்
கடைக்குறை   இயல்பாகவே   சிவந்த  விரல்  சுவரில்  பல  நாளும்
எழுதுவதால்   மிகச்  சிவந்து  தோன்றுதலால்,  “செவ்விரல்  சிவந்த”
என்றார்.   குடைச்சூல்,   சிலம்பு.   கண்டார்   மனத்தே  வேட்கை
விளைவித்து          வருத்தும்        இயல்புபற்றி,     எழிலை
“அணங்கெழில்”    எனச்    சிறப்பித்தார்.    “நின்னெழில்   நலம்
......நிற்கண்டார்ப் பேதுறூஉ மென்பதை யறிதியோ வறியாயோ” (கலி.56)
என  வருதல்  காண்க.   காதல்    மகளிர்  கிடந்துறங்கி   இன்புறும்
காமக்களனாய் அவரைப் பிரியாமைப் பிணிக்கும்  சிறப்புடைமை பற்றி,
மார்பை,   “அணங்கெழிலரிவையர்ப்   பிணிக்கும்  மார்பு”   என்றார்.
“வேட்டோர்க் கமிழ்தத்தன்ன கமழ்தார் மார்பு” (அகம். 332)  என்றும்,
“காதலர்  நல்கார்  நயவாராயினும்,  பல்காற்  காண்டலும் உள்ளத்துக்
கினிதே”  (குறுந்.  60)  என்றும், “ஊரன் மார்பே, பனித்துயில் செய்யு
மின்சா யற்றே” (ஐங். 14) என்றும் சான்றோர் கூறுமாற்றா லறிக.
 

இழை   நெகிழ, எழுதிச் சிவந்த அரிவையர், வரியும் குடைச்சூலும்
எழிலுமுடைய  அரிவையர் என்றும் இயையும்.  “பாசிழை நெகிழ நாள்
பல எழுதி யென முடிக்க” என்பர் பழைய வுரைகாரர்.

1 - 4. கால் கடிப்பாக .............. அதிர.

உரை : வேறு   புலத்து  இறுத்த  கட்டூர்  நாப்பண்  -  பகைவர்
நாட்டிடத்தே   சென்றமைத்துத்   தங்கிய  பாசறை  நடுவில்  ;  கால்
கடிப்பாக  -  மோதுகின்ற  காற்றாகிய  குறுந்தடி  அலைக்க  ;  கடல்
ஒலித்தாங்கு - கடலாகிய முரசு முழங்கியதுபோல ; கடுஞ்சிலை கடவும்
தழங்கு  குரல்  முரசம்  -  மிக்க முழக்கத்தைச் செய்யும்  ஒலிக்கின்ற
ஓசையையுடைய  முரசமானது ; அகல் இரு விசும்பின்  ஆகத்து அதிர
- விரிந்த பெரிய வானத் திடத்தே முழங்க எ - று.

போர்     குறித்துச்  செல்லும்  செலவினை    விதந்தோதுதலின்,
பாசறையின்  நிலைமையைக்  கூறுகின்றார்.  பகைப்புலத்தே   சென்று
அமைத்த பாசறை யென்றற்கு, “வேறு புலத் திறுத்த கட்டூர்”  என்றார்.
மோதுகின்ற     காற்றைக்      கடிப்பென்றாற்போலக்      கடலை
முரசமென்னாமையின்,  இஃது  ஏகதேச  வுருவகம்.  சிலை,  முழக்கம்
முரசின்  முழக்கம்  வீரரைப் போர்க்கட் செலுத்தும் குறிப்பிற்றாதலின்,
அதனைக்   “கடுஞ்சிலை”  யென்றும்  “கடவும்”  என்றும்  கூறினார்.
ஏவுதற்  குறிப்பிற்றாய  முழக்கம்  “சிலைப்பு”  எனப்படும் போலும் !
இனி,   வில்வீரரை   யேவும்  முரசு  முழக்க  மென்றற்கு  இவ்வாறு
கூறினாரென்றுமாம்.  கடலை  முரசமாகவும்  காற்றை  முரசு முழக்கும்
குறுந்தடியாகவும்  கூறுதல்  சான்றோர்  மரபு  ;  “கடுங்குரல்  முரசம்
காலுறு  கடலிற் கடிய வுரற” (பதிற். 66) “புணரி, குணில் வாய் முரசின்
இரங்குந்  துறைவன்”  (குறுந்.  328)  என்று  வருவன காண்க. “கால்
கடிப்பாகக்  கடல் ஒலித்தாங்கு முரசம் அதிரவெனக் கூட்டுக” என்பது
பழையவுரை.

5 - 8. வெவ்வரி ............ பெற னல்லது.

உரை : வெவ்வரி நிலைஇய எறிந்தல்லது - கண்டார் விரும்பத்தக்க
கோலங்கள்  நிலைபெற்ற  பகைவர்  மதிலை யழித்தன்றி ; உண்ணாது
அடுக்கிய    பொழுது    பல     கழிய   -    உணவு    உண்பது.
இல்லையென்று   உண்ணாது  கழித்த  நாட்கள் பல கழியவும்; நெஞ்சு
புகல்  ஊக்கத்தர்  -  தம்  நெஞ்சம்  போரே  விரும்புதலால் எழுந்த
ஊக்கத்தையுடையராய்   ;  மெய்   தயங்கு  உயக்கத்து   இன்னார் -
உடல்வலி குன்றி அசைவுற்று மெலியும்  மெலிவினையுடைய பகைவரது
;  உறையுள்  தாம் பெறின் அல்லது - உறைவிடத்தைத் தாம் வென்று
கைக்கொண்டாலன்றி எ - று.
 

வெவ்வரி யென்புழி வெம்மை வேண்டற்பொருட்டு, விரிக்கப்படுவது
வரியாயிற்று ; வரித்தல் கோலம் செய்தல் ; ஈண்டு ஓவியத்தின் மேற்று
;  “ஓவுறழ்  நெடுஞ் சுவர்” (பதிற். 68) எனப் பின்னரும் கூறுப. நாள்
பல  கழியினும் பொலிவு குலையாவண்ணம் எழுதப்பட்டமை  தோன்ற,
“நிலைஇய”   என்றார்.   எயிலெறிந்தல்லது   உணவுண்ணேம்   என
வஞ்சினம்  மொழிந்தமையின்,  அம்மொழி  தப்பாவண்ணம்  பகைவர்
மதிலை முற்றிநிற்றலின், “எயிலெறிந்தல்லது உண்ணாதடுக்கிய பொழுது
பல  கழிய”  என்றார். பிறரும், “இன்றினிது நுகர்ந்தனமாயின்  நாளை,
மண்புனை  யிஞ்சி  மதில்கடந்தல்லது, உண்குவ மல்லேம் புகாவெனக்
கூறிக்,  கண்ணி கண்ணிய வயவர்” (பதிற். 58) என்று கூறுதல் காண்க.
இழைத்த    வஞ்சினம்    தப்பாமை    முடித்தற்கு    நாள்    பல
கழிந்தனவாயினும்,  தலைநாளிற்போல  ஊக்கம்  சிறிதும்  குன்றாமை
தோன்ற,     “உண்ணாது    அடுக்கிய    பொழுது    பல   கழிய
நெஞ்சுபுகலூக்கத்தர்” என்றார். கழியவும் என்புழி உம்மை விகாரத்தால்
தொக்கது. ஊக்கத்தர் ; முற்றெச்சம்.

இனி,     பழையவுரைகாரர்,  “எயிலெறிந்து   என்ற  எச்சத்திற்கு
உண்ணாது   என்றது  இடமாக  உண்டடென  வொருதொழிற்  பெயர்
வருவித்து     முடிக்க”     என்றும்,    “உண்ணாது    என்றதனை
உண்ணாமலெனத் திரித்து, அதனை அடுக்கிய வென்றும்  வினையொடு
முடித்துக் கழிய வென்றதனைக் கழியாநிற்க வென்னும்  பொருளதாக்கி,
அதனைப்  பெறினென்னும் வினையொடு முடிக்க” என்றும், “ஊக்கத்த
ரென்றது வினையெச்ச” மென்றும் கூறுவர்.

தயங்குதல்,     அசைதல், மெய் தயங்கு உயக்கமாவது ஓய்வின்றிப்
பொருதலால்   மெய்  வலி  குன்றுதலால்  உண்டாகும்  அசைவுக்குக்
காரணமாகிய  மெலிவுநிலை. இதனை ஓய்ச்சலென்றும் கூறுப. “தும்பை
சான்ற  மெய்  தயங்  குயக்கத்து” (பதிற். 79) என்று பிறரும்  கூறுதல்
காண்க.  இவ்வண்ணம்  பெறும் உயக்கத்தை யெய்துபவர்  இன்னாமை
யெய்துத  லியல்பாதலால்,  அஃதெய்திநிற்கும்  பகைவரை “இன்னார்”
என்றார்.  உயக்கத்து இன்னார் என்பதனால், உயக்கத்தால் இன்னாமை
யடைந்திருக்கும்  பகைவரென்பதும், அவரை அன்னராக்கு  முகத்தால்
அவர்  உறையும்  இடத்தை  வென்றுகோடலும்  பெற்றாம்.  பெறவே,
அவ்வுறையுளைப்  பெற்ற  வீரர்  அவ்விடத்தே  இரவினும் பகலினும்
எப்போழ்தினும்     பகைவரது     தாக்குதலை    யெதிர்நோக்கியே
இருக்குமாறும் பெற்றாம்.

இன்னாருறையுள்     பெறினல்லது,  “இன்னகை  மேய  பல்லுறை
பெறுபகொல்”     என்பதனால்,    பெரும்பான்மையான    நாட்கள்
இன்னாருறையுள் பெறுதலிலேயே வீரர் கழித்தலை யறிக.
 

9 - 14. வேந்தூர் .......... பெறுப கொல்.

உரை : வேந்தூர்யானை  வெண்கோடு  கொண்டு - பகைவேந்தர்
எறிப்போந்த   களிற்றினைக்  கொன்று  அதன்  மருப்பினைக்  கைக்
கொண்டு   ;   கட்கொடி   நுடங்கும்   ஆவணம்  உடன்  புக்கு -
கள்ளுக்கடையின்   கொடி   யசைந்து   தோன்றும்  கடைத்தெருவை
உடனடைந்து   ;  அருங்  கள்  நொடைமை  தீர்ந்தபின்  -  அரிய
கள்ளுக்கு  விலையாகத்  தந்து  அக்  கள்ளைப் பெற்றுண்ட பின்பு ;
மகிழ் சிறந்து - மகிழ்ச்சி மிக்கு ; நாமம் அறியா ஏமவாழ்க்கை வடபுல
வாழ்நரின்     -    அச்சத்தை    யறியாத    இன்பமே    நுகரும்
வாழ்க்கையையுடைய  உத்தரகுருவில்  வாழும்  மக்களைப்  போல  ;
பெரிது  அமர்ந்து - மிக்க விருப்பமுற்று ; அல்கலும் இன்னகை மேய
பல்    உறை    பெறுபகொல்    -   நாடோறும்   இனிய  உவகை
பொருந்தியுறையும்  பொழுதுகள் பலபெறுவார்களோ ; பெறுதல் அரிது
போலும் எ - று.

போரில்லாக்   காலத்தே சேரனுடைய வீரர் காலங் கழிக்கும் திறம்
கூறுவார்,  நாடோறும் அவர்கள் பகைப்புலத்தே பகைவேந்தர் ஊர்ந்து
வரும்     களிற்றினைக்     கொன்று,     கொணர்ந்த    அவற்றின்
வெண்கோடுகளைக்  கள்ளிற்கு  விலையாகத்  தந்து, கள்ளைப் பெற்று
மகிழ்வது கூறுவார், “வெண்கோடு கொண்டு ஆவணம் புக்கு அருங்கள்
நொடைமை  தீர்ந்தபின்  மகிழ்  சிறந்து”  என்றார்.  வெண்கோட்டுக்
களிறுகளில்  சிறப்புடையவற்றையே  வேந்தர் ஊர்ந்து செல்பவாதலின்
அச்   சிறப்புடைமை   தோன்ற,  “வேந்தூர்  யானை  வெண்கோடு”
என்றார்.   கள்ளுக்கடையில்   கொடிகட்டி   வைத்தல்  இக்காலத்திற்
போலப் பண்டைக்காலத்தும் உண்மை யறிக ; “நெடுங்கொடி நுடங்கும்
நறவுமலி  மறுகில்”  (அகம்.  126)  என்று  பிறரும்  கூறுப.  உயர்ந்த
கோடுகளைத்   தந்தல்லது   பெறலாகாமை   தோன்ற,   “அருங்கண்
ணொடைமை”  யென்றார்.  எனவே,  கள்ளினது  இனிப்பும் களிப்பும்
கூறியவாறாயிற்று.  கட்கடைக்கு வீரர் தம் தோழரோடன்றித் தனித்துச்
செல்லா  ரென்றற்கு  “உடன்  புக்கு”  என்றார். “மதனுடை வேழத்து
வெண்கோடு    கொண்டு,   பொன்னுடை   நியமத்துப்  பிழிநொடை
கொடுக்கும்” (பதிற். 30) என்று பிறரும் கூறுதல் காண்க.

வடபுலம்    என்றது உத்தரகுரு வெனப்படும் ; அங்கு வாழ்வோர்
பகை  முதலிய  காரணமாகப்  பிறக்கும் அச்சம் யாதுமின்றி இன்பமே
துய்த்திருப்பவென்பவாகலின்,  “நாம  மறியா வேம வாழ்க்கை, வடபுல
வாழ்நரின்” என்றார் பழையவுரைகாரரும், “நாம மறியா ஏம வாழ்க்கை
யென்றது,    துன்பம்    இடைவிரவின   இன்பமன்றி   இடையறாத
இன்பமேயாய்ச்  சேறலான  வாழ்க்கை  யென்றவா”  றென்றும்,  “இச்
சிறப்பானே  இதற்கு  ஏம  வாழ்க்கையென்று  பெயராயிற்” றென்றும்,
“வடபுலம்,  போக  பூமியாகிய  உத்தரகுரு” என்றும் கூறுவர். இதனை
“அருந்தவங்  கொடுக்குஞ்  சுருங்காச்  செல்வத்து,  உத்தர  குருவம்”
(பெருங். 2:7:140-1) என்று கொங்குவேளிர் கூறுதல் காண்க. இன்னகை :
இனிய   இன்பம்   என்பது   பழையவுரை.   உறை,   ஆகுபெயரால்
உறையும்  பொழுதின்  மேலதாயிற்று.  உறைபெறுதல்  அரிது போலும்
என்பது   குறிப்பு.  எனவே,   வேந்தன்   நாடோறும்  போர்வேட்டு
வினைபுரிதலையே மேற்கொண்டிருந்தமை பெற்றாம்.
 

இதுகாறும் கூறியது ; அணங்கெழில் அரிவையர்ப் பிணிக்கும் மார்ப,
நின்  தாணிழல் வாழ்வோர், கட்டூர் நாப்பண், முரசம் அதிர, உண்ணா
தடுக்கியபொழுது    பல   கழியவும்,   இன்னார்   உறையுள்   தாம்
பெறினல்லது,  அல்கலும்  பெரிதமர்ந்து,  வடபுலவாழ்நரின் இன்னகை
மேய  பல்லுறை,  பெறுபகொல்லோ  ;  பெறுதல் அரிது போலும் என
வினைமுடிவு   செய்க.   இனிப்   பழையவுரைகாரர்,   “அரிவையர்ப்
பிணிக்கும் மணம் கமழ் மார்ப, நின் தாள்நிழலோர் உண்ணா தடுக்கிய
பொழுது  பல கழிய இன்னார் உறையுள் தாம் பெறினன்றி, இன்னகை
அல்கலும்  மேய பல்லுறை பெறுப கொல்? பெறார் ; அவர் அவ்வாறு
அது   பெறினன்றி   நின்  மார்பாற்  பிணிக்கப்பட்ட  அரிவையரும்
இன்னகை  அல்கலும்  மேய  பல்லுறை  பெறுவது ஏது எனக் கூட்டி
வினைமுடிவு செய்க” என்பர்.

“இதனாற் சொல்லியது ; காம வேட்கையின் ஓடாத அவன் வென்றி
வேட்கைச் சிறப்புக் கூறியவாறாயிற்று”.


 மேல்மூலம்