70.
|
களிறுகடைஇய
தாள்
மாவுடற்றிய வடிம்பு
சமந்ததைந்த வேல்
கல்லலைத்த தோள் |
5
|
வில்லலைத்த
நல்வலத்து
வண்டிசை கடாவாத் தண்பனம் போந்தைக்
குவிமுகி ழூசி வெண்டோடு கொண்டு
தீஞ்சுனை நீர்மலர் மலைந்து மதஞ்செருக்கி
உடைநிலை நீல்லமர் கடந்து மறங்கெடுத்துக் |
10
|
கடுங்சின
வேந்தர் செம்ம றொலைத்த
வலம்படு வான்கழல் வயவர் பெரும
நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர்
புறஞ்சொற் கேளாப் புரை தீ ரொண்மைப்
பெண்மை சான்று பெருமட நிலைஇக் |
15
|
கற்பிறை
கொண்ட கமழுஞ் சுடர்நுதற்
புரையோள் கணவ பூண்கிளர் மார்ப
தொலையாக் கொள்கை சுற்றஞ் சுற்ற
வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி
உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை |
20 |
வணங்கிய
சாயல் வணங்கா வாண்மை
இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித்
தொல்கட னிறுத்த வெல்போ ரண்ணல்
மாடோ ருறையு முலகமுங் கேட்ப
இழுமென விழிதரும் பறைக்குல லருவி |
25
|
முழுமுதன்
மிசைய கோடுதொறுந் துவன்றும்
அயிரை நெடுவரை போலத்
தொலையா தாகநீ வாழு நாளே. |
துறை
- செந்துறைப் பாடாண்பாட்டு, வண்ணம் - ஒழுகுவண்ணம், தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்,
பெயர் - பறைக்குர லருவி (24)
(ப
- ரை) 3.
சமம் ததைந்த வேலென்றது மாற்றார் செய்யும்
சமங்கள் சிதைதற்குக் காரணமாகிய வேலென்றவாறு.
வேலென்றது
வேல்வென்றியினை.
4, கல்லலைத்த
தோளென்றது வலியுடைமையாற்
கல்லையலைத்த தோளென்றவாறு. ..................................................................................................
.......................தாகவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் வென்றி கூறிய திறத்தானே
அவற்குள்ள சிறப்புக்களைக் கூறிப் பின்னை வாழ்த்தியவாறாயிற்று.
(கு
- ரை) 1. போர்க் களத்தே ஆண் யானையைச்
செலுத்திய
தாளையும். மு. புறநா. 7 : 1.
2. குதிரைகளோடு
பொருத காலின் விளம்பையும்;
"கடுமாகடைஇய விடுபரி வடிம்பின்" (புறநா.
378 : 4)
3. பகைவர்
செய்யும் போர் கெடுதற்குக் காரணமான
வேல்வெற்றியையும். 4. உலகக்கல்லை வருத்திய தோளையும்;
"ஆயிரர், தொட்டெடுக்க லாவுலம்மொர் தோளி னேந்தி யாடினான்"
(சீவக. 690). 5. வில்லை வருத்திய நல்ல
வெற்றியையும்.
6-7.
வண்டு பாட்டைப் பாடுதலில்லாத குளிர்ந்த பனையினது
குவிந்த அரும்பு போன்ற கூர்மையையுடைய வெள்ளிய குருத்தை
அணிந்து கொண்டு; "வட்கர் போகிய வளரிளம் போந்தை, உச்சிக்
கொண்ட வூசி வெண் டோடு" (புறநா. 100 :
3 - 4)
8. கண்ணுக்கு
இனிதாகிய சுனையிலுள்ள குவளையாகிய
நீர்ப்பூவைச் சூடி மதம் மிக்கு; "வெண்டோட் டசைத்த வொண்பூங்
குவளையர்" (பதிற். 58 : 2)
9. பகையரசருடைய
நிலையாகிய நல்ல போரை வென்று
அவரது மாறுபாட்டைக் கெடுத்து. நிலை நல்லமர் - நாடோறும்
செய்து வரும் நல்ல போர் (பதிற்.
4-ஆம் பதிகவுரை)
10-11.
மிக்க சினத்தையுடைய பகையரசரது தலைமையை
அழித்த வென்றி உண்டாதற்குக் காரணமான சிறந்த கழலை அணிந்த
வீரர்களுடைய தலைவனே. கழலணிதல் வெற்றிக்குக் காரணமாதல்:
"கடுங்கண் மறவன் கழல்புனைந்தான் காலை, நெடுங்கடைய நேரார்
நிரை" (பு. வெ. 2)
தோடுகொண்டு
(7) செருக்கிக் (8) கடந்து கெடுத்துத் (9)
தொலைத்த (10) வயவர் பெரும என முடிக்க. வயவர் பெரும:
அனைத்தும் ஒரு பெயர்.
1-11.
தாளையும், வடிம்பையும், வேலையும், தோளையும்
வலத்தையும் உடைய பெரும என இயையும்.
12. விளையாட்டிடத்தும்
பொய் கூறுதலை யறியாமைக்குக்
காரணமான வாய்மையையும்; நகை - விளையாட்டு; "நகையுள்ளு
மின்னா திகழ்ச்சி" (குறள். 995)
12-3.
பகைவரது புறங்கூறுஞ் சொல்லைக்கேளாத, குற்றம்
நீங்கிய சிறந்த அறிவையும் உடைய; "நல்ல போலவும் நயவ
போலவும், தொல்லோர் சென்ற நெறிய போலவும், காத னெஞ்சினும்
மிடைபுகற் கலமரும், ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளாது"
(புறநா.58 : 24 - 7)
14.
கட்புலனுக்கு தோன்றும் அமைதித் தன்மை மிக்குப்
பெரிய மடமென்னும் குணம் நிலைபெற்று; 'பெண்மையாவது
கட்புலனாயதோர் அமைதித்தன்மை' (தொல்.
கிளவி. 57, ந.). மடன்
- செவிலியர் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை' (தொல்.
களவு. 8, ந.)
15-6.
கற்பு என்னும் குணம் தங்குதல்கொண்ட, மணம்
பரக்கின்ற ஒளி விடுகின்ற நெற்றியையுடைய உயர்ந்தோளுடைய
கணவ, ஏழரசர் முடியாற் செய்த ஆரமாகிய ஆபரணம் விளங்குகின்ற
மார்பையுடையோய்.
வாய்மையையும்
(12) ஒண்மையையும் உடைய (13) புரையோன்
கணவ என முடிக்க; புரையோள் கணவ: அனைத்தும் ஒரு பெயராய்
நின்றது; "செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை, மறுவில் கற்பின்
வாணுதல் கணவன்" (முருகு. 5 - 6,
ந.)
18. 'கேள்வியின்'
என்றிப்பின் நன்று.
17-8.
அழியாத கோட்பாட்டையுடைய மந்திரி முதலிய
சுற்றத்தார் சூழவிருப்ப, வேள்விகளைச் செய்ததனால் தேவர்களை
உண்பித்தாய். சுற்றஞ் சுற்றல்: "சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல்
செல்வந்தான், பெற்றத்தாற் பெற்ற பயன்" (குறள்,
524)
18-9.
வேதத்தை ஓதினமையால் உயர்ந்த நிலையையுடைய
தேவருலகத்திலுள்ள முனிவரை இன்புறச் செய்தாய். 20.மு.
பதிற்
48 : 9.
20-22.
பெரியோரிடத்தே வணங்கிய மென்மையையும்
பகைவர்க்கு வணங்காத ஆண்மையையும் உடைய இளந்துணையாகிய
புதல்வர்களைப் பெற்றமையால் நின் குலத்து முன்னோர்களான
பிதிரர்களைக் காப்பாற்றி, இல்லறத்தார்க்கு உரிய பழைய கடன்களைச்
செய்து முடித்த, வெல்லும் போரைச் செய்யும் தலைவனே. பேணி
இறுத்தவென்க.
ஒருவன்
பிறக்கும் பொழுதே உண்டாகும் கடன்களாதலால்,
'தொல்கடன்' என்றார்.
17-22.
இவ்வடிகளில் இல்லறத்தாரால் இயல்பாக இறுக்கப்படும்
தேவர் கடன், முனிவர் கடன், தென்புலத்தார் கடன் என்னும்
மூவகைக் கடன்களும் கூறப்பட்டன (குறள். 7-ஆம்
அதி.
அவதாரிகை, பரிமேல்.)
24. பறைக்குரலருவி
(புறநா.
126 : 8, 229 : 14; சிலப். .25 : 28)
23-4.
கற்பக முதலிய செல்வத்தையுடைய தேவர் வாழும்
உலகமும் கேட்கும்படி, இழுமென்னும் அனுகரண ஓசை
உண்டாகும்படி கீழே இறங்குகின்ற பறையோசையைப் போன்ற
ஓசையையுடைய அருவிகள்.
இழுமென
இழிதரும் அருவி: முருகு. 316; "இழுமென்றது
வந்தீங்கிழியு மருவி" (சிலப். குன்றக்.)
25-7.
பெரியனவாகிய உச்சியையுடைய சிகரங்கள் தோறும்
நிறைந்து விளங்கும் அயிரையென்னும் உயர்ந்த மலையைப்போல, நீ
வாழும் நாள் அழிவில்லாததாகுக.
மலைபோல
வாழ்கவென்றல்: "நடுக்கின்றி நிலியரோ வத்தை
யடுக்கத்து................................பொற்கோட் டிமயமும் பொதியமும்
போன்றே" (புறநா. 2 : 20 - 24); "விளங்கொளி
யிமய மென்னும்,
பொன்னெடுங் குன்றம் போலப் பூமிமே னிலவி" (சீவக.
2417)
(பி
- ம்) 6. கவண்டிசை. 26. நேருயர் நெடுவரை.
(10)
இதன்
பதிகத்து ஒரு தந்தை (2) என்றது பொறையன்
பெருந்தேவியின் பிதாவுடையது ஒரு பெயர்.
6-7.
வேள்வி ஆக்கிய பொழுதின் அறத்துறை போகியென்றது
யாகம் பண்ணின காலத்திலே மற்றுள்ள அறத்துறைகளையும் செய்து
முடித்தென்றவாறு.
8. மாயவண்ணனை
மனனுறப்பெற்று என்றது திருமாலை
வழிபட்டு அவனுடைய மனம் தன்பாலே ஆம்படி பெற்றென்றவாறு.
9. ஒகந்தூரீத்து
என்றது அம்மாயவண்ணனுக்கு ஒகந்தூரென்ற
ஓர் ஊரைக் கொடுத்தென்றவாறு.
10. புரோசு
மயக்கி யென்றது தன் புரோகிதனிலும் தான்
அறநெறி யறிந்தென்றவாறு. சிறுபுறமென்றது சிறுகொடை.
|