71.
|
அறாஅ
யாண ரகன்கட் செறுவின்
அருவி யாம்ப னெய்தலொ பரிந்து
செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப்பக டுதிர்த்த மென்செந் நெல்லின் |
5
|
அம்பண
வளவை யுறைகுவித் தாங்குக்
கடுந்தே றுறு கிளை மொசிந்தன துஞ்சும்
செழுங்கூடு கிளைத்த விளந்துணை மகாரின்
அலந்தனர் பெருமநின் னுடற்றி யோரே
ஊரெரி கவா வுருத்தெழுந் துரைஇப் |
10
|
போர்சுடு
கமழ்புகை மாதிர மறைப்ப
மதில்வாய்த், தோன்ற லீயாது தம்பழி யூக்குநர்
குண்டுக ணகழிய குறுந்தாண் ஞாயில்
ஆரெயிற் றோட்டி வௌவினை யேறொடு
கன்றுடை யாயந் தரீஇப் புகல்சிறந்து |
15
|
புலவுவில்
லிளைய ரங்கை விடுப்ப
மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ
ஆன்பயம் வாழ்நர் கழுவு டலைமடங்கப்
பதிபா ழாக வேறுபுலம் படர்ந்து
விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு வற்றென |
20
|
அருஞ்சமத்
தருநிலை தாங்கிய புகர்நுதற்
பெருங்களிற் றியானையொ டருங்கலந் தராஅர்
மெய்பனி கூரா வணங்கெனப் பராவலிற்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்
திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் னூழி |
25
|
உரவரு
மடவரு மறிவுதெரிந் தெண்ணி
அறிந்தனை யருளா யாயின்
யாரிவ ணெடுந்தகை வாழு மோரே. |
துறை
- செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு - நெந்தூக்கு.
பெயர் - குறுந்தாண் ஞாயில். (12)
(ப
- ரை) 2.
1அருவியாம்பல் - நீரின் ஆம்பல்; என்றதனாற்
பயன் நீர்க்குறைவற்ற ஆம்பலென்பதாம்; எண்ணின் ஆம்பலை
நீக்குதற்கென்பதுமொன்று.
ஆம்பலொடு
நெய்தலோடு (2) நெல்லை (4) அரிந்து (2) என்று
கொள்க.
அரிந்து
(2) பகடு உதிர்த்த (4) எனக் கூட்டிப் பகட்டானென
உருபு விதிக்க.
3.
செறுவினை மகளிர் மலிந்த வெக்கையென்றது உழவர் பெண்
மக்கள் விளையாடுதற்கு வயலிற் பயிர் கொள்ளாததோரிடம்
இன்மையின். ஆண்டு அவர்கள் மிக்க களமென்றவாறு. வெக்கை -
கடாவிடுங்களம்.
4.
நெல்லிற்கு மென்மை - சோற்றது மென்மை. செந்நெலென்றது
2செந்நெல்லென்னும் சாதியை. 5. அளவைக்கென நான்காவது விரிக்க.
6.
கடுந்தேறு உறு கிளை - கடிதாகத் தெறுதலையுடைய மிக்க
குளவியினம். மொசிந்தனவென்றது மொய்த்தனவாயென்னும்
வினையெச்சமுற்று. 9, உருத்து எழுந்து உரைஇ ஊர் எரி கவரவெனக்
கூட்டுக.
ஊரெரி
கவரப் (9) போர்சுடு கமழ்புகை மாதிரமறைப்பத் (10)
தோட்டி வௌவி (13) என முடிக்க.
11.
3தோன்றலீயாதென்றது தோன்றாதென்னும் வினையெச்சத்திரி
சொல்; தோன்றலீயாமலெனத் திரிக்க.
12.
குறுந்தாண் ஞாயிலென்றது இடையிடையே மதிலின்
அடியிடங்களைப் பார்க்க அவற்றிற் குறுகிக்குறுகி யிருக்கும்
படியையுடைய ஞாயிலென்றவாறு.
இவ்வாறு
கூறின சாதிப்பண்பானும் படியைத் தாளென்று கூறின
படியானும் இதற்கு, 'குறுந்தாண் ஞாயில்' என்று
பெயராயிற்று.
13.
வௌவினையென்றது வினையெச்சமுற்று.
14.
ஆயம் தழீஇயென்றது ஆயங்களை நீ
4புலவுவில்லிளையர்க்குக் கொடுப்ப (15) என்றவாறு.
தரீஇயென்பதனைத் தரவெனத் திரிக்க.
15.
இளையர் அங்கை விடுப்பவென்றது இளையர்
அவ்வாயத்தைத் தங்கள் அங்கையினின்றும் பிறர்க்கு
விடுப்பவென்றவாறு.
16.
கயிறாடாவென்னும் பெயரெச்சமறையை வைகலென்னும்
தொழிற்பெயரோடு முடிக்க. வைகல் - கழிதல். வைகற்பொழுது:
இருபெயரொட்டு.
17.
வாழ்நர் - வாழ்பவர்; இடையர். பயத்தானென விரிக்க.
கழுவுளாவான் அவ்விடையர்க்குத் தலைவனாய் அக்காலத்துக் குறும்பு
செய்திருந்தான் ஒருவன். முன்னர் எயில் (13) என்றது அவன் தனக்கு
அரணாகக் கொண்டிருந்த மதிலினை.
18.
வேறுபுலம் பதி பாழாகப் படர்ந்தென்றது அக்கழுவுள் தலை
மடங்குகையாலே அவனை விட்டு வேறு திறையிடாக் குறும்பர்
நாட்டிலே அந்நாட்டுப்பதி பாழாகச் சென்றவாறு.
படர்ந்து
(18) திறைகொண்டு பெயர்தி (24) எனக் கூட்டுக.
19.
5விருந்தின் வாழ்க்கை - நாடோறும் புதிதாகக தாங்கள்
தேடுகின்ற பொருள். பெருந்திரு - முன்னே தேடிக் கிடந்த பொருள்.
அற்றெனவென்றது அற்றதெனக் கருதியென்றவாறு. அற்றதென்பது
கடைக்குறைந்தது.
23.
6பாசம் - பேய். 25. உரவரையும் மடவரையும் என்னும்
7இரண்டாவது விகாரத்தால் தொக்கது. அறிவு - அவர்களறிவு.
27.
வாழுமோரென்புழி, உம்மை அசைநிலை.
ஆரெயிற்றோட்டி
வௌவி அதனையுடைய (13) கழுவுள்
தலைமடங்கு கையாலே (17) வேறுபுலம் படர்ந்து அவ்வேறுபுலத்து
நினக்கு (18) யானையோடு அருங்கலம் திறையிடார்தம் (21) விருந்தின்
வாழ்க்கையொடு பெருந்திருவற்றதெனக் கருதித் தங்கள் (19)
மெய்ந்நடுக்கமிக்கு நின்னை அணங்கெனக் கருதிப் பலபடப்
பரவுதலான் (22) பேய்தான் பற்றினாருயிரை வௌவாது தனக்கு அவர்
பலியிட்டுழி அப்பலிகொண்டு பெயருமாறுபோல நீயும் அவருயிரை
வௌவாது (23) திறைகொண்டு பெயராநின்றாய் (24); இஃதன்றே
இதுபொழுது நீ செய்கின்றது; நின்னை உடற்றியோர்(8) கடுந்தேறு
உறுகிளை துஞ்சும் (6) கூடு கிளைத்த இளந்துணைமகாரைப்போலப்
(7) பெருமானே, அலந்தார்கள் (8); இனிமேல் உள்ளத்து உரவரையும்
மடவரையும் அவரவர் அறிவினைத் தெரிந்து எண்ணி (25)
அவர்களிடத்துச் செய்யும் அருளறிந்து அருளாயாயின் (26),
நெடுந்தகாய், இவண் வாழ்பவர் யார் (27)? நின் ஊழி வாழ்க. (24)
எனக் கூட்டி வினை முடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக்கூறி அவற்குப்
பகைவர்மேல் அருள்பிறப்பித்த வாறாயிற்று.
(கு
- ரை) நீங்காத புது வருவாயையுடைய அகன்ற
இடத்தையுடைய வாயில்.
2.
நீரிலே நின்ற ஆம்பலொடும் நெய்தற்பூவோடும் நெல்லை
அறுத்து.
3.
வயலில் தொழில் செய்யும் மகளிர், அவ்விடத்தே
இடமில்லாமையால் மிக நெருங்கிய கடாவிடும் களத்தில்;
வெக்கை - கடாவிடும் களம்.
4.
பருமையையுடைய எருமைகளால் உதிர்க்கப்பட்ட மெல்லிய
செல்நெல்லினது; "ஈடுசால் போர்பழித் தெருமைப் போத்தினால்,
மாடுறத் தெழித்துவை களைந்து காலுறீஇச், சேடுறக் கூப்பிய செந்நெற்
குப்பைகள்" (சீவக. 59). நெல்லுக்கு மென்மையாவது
சோற்றினது
மென்மை.
5.
மரக்காலால் அளத்தற்பொருட்டு உறையாகக் குவித்தாற்
போல; "நெல்லின் அம்பண வளவை விரிந்துறை போகிய, ஆர்பதம்"
(பதிற். 66 : 7 - 9)
4-6.
செந்நெல்லுக்குக் குளவி: "கடுப்புடைப் பறவைச் சாதியன்ன
பைதற விளைந்த பெருஞ்செந் நெல்லின்" (பெரும்பாண்.
229 - 30)
6-7.
கடுமையாகக் கொட்டுதலையுடைய குளவியினது மிக்க
கிளை தம்மிற் கூடினவாய்த் தூங்கும், செழுமையான கூட்டைக்
கலைத்த இளந்துணை ஆகிய பிள்ளைகளைப்போல.
8.
பெருமானே, நின்னோடு மாறுபட்ட பகைவர் பின் மிக்க
துன்பமுற்றனர்.
1-8.
சேரனுக்குக் குளவிக்கூடும் அவன் பகைவர்க்கு
இளந்துணை மகாரும் உவமை.
9.
சினங்கொண்டு புறப்பட்டுப் புடைபெயர்ந்து உலாவி
ஊர்களை நெருப்பு விரும்பி உண்ணச் செய்தலால்: உரைஇ - உலாவி;
"போர்க் குரைஇப்புகன்று கழித்தவாள்" (புறநா.
97 : 1)
10.
போரின்கண்ணே பகைவர் ஊர்களைச் சுடுகின்ற
கமழ்கின்ற புகை திசைகளை மறைப்ப; எரிபரந்தெடுத்தலென்றும்,
உழபுலவஞ்சியென்றும் இது கூறப்படும்.
11.
மதிலினிடத்தே வெளியே தோன்றாமல் தமது பழியைச்
செய்ய முயல்பவரது; மதில் பின்வரும் கழுவுள் (17) என்னும்
தலைவனுடையது.
12.
ஆழ்ந்த இடத்தையுடைய அகழியையுடைய, குறிய
படிகளையுடைய முடக்கறைகளைப்பெற்ற; ஞாயில் - இஃது அம்புகள்
வைக்கப் பெற்றிருக்கும் முடக்கறை; "ஏப்புழை ஞாயில்", "அம்புடை
ஞாயில்" (பு. வெ. 86, 118) என்று கூறப்படும்.
13.
அருமையான மதிலினது காவலைக் கைப்பற்றிக்
கொண்டாய்; தோட்டி - காவல்; 'நீ, உடன்றோர் மன்னெயி றோட்டி
வையா" (பதிற். 25 : 5)
12-3.
அகழிய எயில், ஞாயில் எனத் தனித்தனி இயைக்க.
13-4.
காளைகளொடு கன்றுகளையுடைய பசுவின் மந்தையை நீ
கைப்பற்றித் தருதலால் விருப்பம் மிக்கு; தரீஇ - தர; எச்சத்திரிபு. இது
மன்னுறு தொழிலாகிய வெட்சியில் பாதீடென்னும் துறையாகும்.
ஏறும்
ஆநீரையும்: "விடையாயம்" (பு. வெ.
1)
15.
எய்த அம்பினையே மீட்டும் எய்தலால் புலால் நாறும்
வில்லையுடைய வீரர் தம் அழகிய கையினின்றும் அவ்வாயுதத்தை
விடுப்ப. புலவுவில் (பதிற். 15 : 12, உரை).
இளையர் - வீரர்;
"இளையோர்க்கு மலர்ந்த மார்பினை" (சிறுபாண்.
232)
16.
மத்தினிடத்தே கயிறு ஆடாத, கழிதலையுடைய
பொழுதுகளை நினைத்து; "மத்துரறியமனை யின்னிய மிமிழா"
(பதிற். 26 : 3)
17.
ஆனினது பயத்தால் வாழ்கின்ற இடையர் தலைவனான
கழுவு ளென்பவன் தலைவணங்குதலால்; ஆன்பயம் வாழ்நர்:
"ஆய்மகள், அளவிலை யுணவிற் கிளையுட னருத்தி" (பெரும்பாண்.
162-3); "அளைவிலை யுணவி னாய்ச்சியர் தம்மொடும்" (சிலப்.
16 : 3). மடங்க: காரணப் பொருளில் வந்தது. கழுவுளது ஊர்
காமூரென்றும், அது பதினான்குகுடி வேளிரால்
அழிக்கப்பட்டதென்றும் தெரிகின்றது (அகநா.
135 : 11 - 3,
365 : 11 - 2). "பொருமுர ணெய்திய கழுவுள் புறம்பெற்று" (பதிற்.
88 : 7)
18
ஊர்கள் பாழாகும்படி வேறு நாடுகளிலே சென்று.
19.
புதிதாகத் தாம் தேடும்செல்வத்தோடு தம் முன்னோர் தேடி
வைத்த பெரிய செல்வம் அற்றதெனக் கருதி. 20. தாங்குதற்கு அரிய
போரில் அரியநிலையைத் தடுத்த, புள்ளிகள் பொருந்திய
நெற்றியையுடைய.
21.
பெரிய ஆண்யானைகளோடு அருமையான
ஆபரணங்களைத் திறையாகத் தருதலில்லாதவருடைய (பதிற்.
90 : 6 - 7)
தரார்
(21) விருந்தின் வாழ்க்கையோடு பெருந்திரு அற்றென
(19) என இயைக்க.
22.
உடம்பு நடுங்குதல் மிக்கு, வருத்தும் தெய்வமென்று
நின்னைப் பரவுதலால்.
23-4.
தன்னாற் பற்றப்பட்டாரது உயிரைக் கொள்ளாமல்
தனக்கு இட்ட பலியை மட்டும் ஏற்றுக்கொண்டு நீங்கும் பேய்போலத்
திறைக் கொண்டு நீ மீண்டு செல்கின்றாய்; பால்வரை தெய்வத்தால்
நினக்கு அறுதியிடப்பட்ட நின் நாள்கள் வாழ்க. பேய் பலியைக்
கொள்ளுதல்: மணி. 7 : 84 - 5. நின்னூழி
வாழ்க: மதுரைக்.
781 - 2.
பேய்
பலியைப் பெற்றே போதலிற் சுரமஞ்சரியின் இன்பத்தைப்
பெற்றே போகின்ற சீவகனுக்கு உவமையாயிற்றென்பதற்கு மேற்கொள்
(சீவக. 2010, ந.)
25-6.
அறிவுடையோரையும், அறிவில்லாதோரையும்
அவர்களுடைய அறிவை ஆராய்ந்து நினைத்து அறிந்தனையாய்
அருள் செய்யா தொழிவாயாயின். உரவர், மடவர்: பதிற்.
73 : 1.
27.
நெடுந்தகாய், இவ்வுலகத்தில் வாழ்வோர் யார்?
மு.
'பிண்டம் மேய இருபெரு வேந்தருள் ஒருவர் ஒருவர்
மிகை கண்டு அஞ்சிக் கருமச் சூழ்ச்சியால் திறைகொடுப்ப அதனை
வாங்கினார்க்கு உளதாகிய விளக்கம்' (தொல்:
புறத். 8, ந.)
(பி
- ம்) 3.
செறிவளை. 17. தலைமயங்க. 18. வேற்றுப்புலம்
22. பராலின். (1)
1பதிற்
.63 : 19 ல் வரும் 'அருவியாம்பல்' என்பதற்கு வேறு
உரை கூறினார்.
2வெண்ணெல்லும்
உண்டாதலின் செந்நெல்லென்னும் சாதி
என்றார்.
3பதிற்.
12 : 7, உரை.
4'ஒள்வான்
மலைந்தார், ஒற்றாய்ந்துரைத்தார், புள்வாய்ப்பச்
சொன்னார்' (பு. வெ. 14)
முதலியோர.்
5விருந்து-புதுமை
(தொல்.
செய்.239)
6சீவக.653.
7தொல்.
தொகைமரபு, 15.
|