முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
73.





உரவோ ரெண்ணினு மடவோ ரெண்ணினும்
பிறர்க்குநீ வாயி னல்லது நினக்குப்
பிறருவம மாகா வொருபெரு வேந்தே
........................................................................
........................................................................
மருதஞ் சான்ற மலர்தலை விளைவயற்
 5




செய்யு ணாரை யொய்யு மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார்
குறும்பல் யாணர்க் குரவை யயரும்
காவிரி மண்டிய சேய்விரி வனப்பிற்
புகாஅர்ச் செல்வ பூழியர் மெய்ம்மறை
 10




கழைவிரிந் தெழுதரு மழைதவழ் நெடுங்கோட்டுக்
கொல்லிப் பொருந கொடித்தேர்ப் பொறையநின்
வளனு மாண்மையுங் கைவண் மையும்
மாந்த ரளவிறந் தனவெனப் பன்னாள்
யான்சென் றுரைப்பவுந் தேறார் பிறரும்
 15


சான்றோ ருரைப்பத் தெளிகுவர் கொல்லென
ஆங்குமதி மருளக் காண்குவல்
யாங்குரைப் பேனென வருந்துவல் யானே.

     இதுவும் அது. பெயர் - நிறந்திகழ் பாசிழை.

     (ப - ரை) 1[கூந்தலையுடைய மகளிர், ஒண்ணுதல்பொலிந்த
மகளிரெனக் கூட்டுக.

     நிறந்திகழ் பாசிழையென்றது 2தன்னின் அழுத்திய மணியினும்
தன் நிறம் திகழும் பசும்பொன்னிழை யென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'நிறந்திகழ் பாசிழை' என்று
பெயராயிற்று.

     உயிர்திணைமகளிர் நெஞ்சத்துமென உம்மையை மாறிக் கூட்டுக.

     தெய்வமென்றது தெய்வத்தன்மையை.

     தெய்வந்தரூஉம் ஆன்றோரெனக் கூட்டுக. குலமகளிரை உயர்
3திணை மகளிரென்று முன்னே கூறினமையான் ஆன்றோரென்றது
பரத்தையரையாம்; அவர்களை ஆன்றோரென்றது தம் 4துறைக்கு
வேண்டுவன அமைந்தாரென்றவாறு.] 4. மருதமென்றது
மருதநிலத்தன்மையை.

     6-7. இரவும்பகலும் குரவை அயருமெனக் கூட்டுக.

     குறும்பல்குரவையென்றது ஒன்று ஆடும் இடத்திற்கு ஒன்று
அணியதாய் அவைதாம் பலவாயிருக்கின்ற குரவையென்றவாறு.

     குரவையாரும் (7) புகார் (9) எனவும் காவிரி மண்டிய
புகாரெனவும் கூட்டுக.

     14. உரைப்பவுமென்ற உம்மை தாமே அறியக்கடவதனை யாம்
சொல்லவும் அறிகிலரெனச் சிறப்பும்மை. பிறருமென்ற உம்மை
அசைநிலை. 'சான்றோர்.........................கொல்லென' என்றதன் பின்
கருதினென ஒரு சொல் வருவித்து அதனைக் காண்குவலென்னும்
வினையொடு முடிக்க.

     பெருவேந்தே (3), புகார்ச்செல்வ, பூழியர் மெய்ம்மறை (9),
கொல்லிப் பொருந, பொறைய (11), நின் பகைவர் நின் (11) வளனும்
ஆண்மையும் கைவண்மையும் (12), உலகத்துமக்கள் அளவைக்
கடந்தன; அவனோடு மாறுபடுவது நுமக்கு உறுதியென்றெனப்
பன்னாள் (13) யான் சொல்லவும் தேறிற்றிலர் (14); தேறாராயினும்
உலகத்து மதிப்புடைய சான்றோர் சொல்லத் தாம் தேறுவரோவெனக்
கருதின் (15) அவர் சொன்னவிடத்தும் அவர்கள் மதிமருண்டதுவே
காணாநின்றேன் (16); ஆகலான் நின் பெருமையை அவர்கட்கு
யாங்கு உரைப்பேனென வருந்தாநின்றேன் யான் (17); இஃது என்னுறு
குறை; இதனை அறிந்து நீ அவர்பால் அருளவேண்டுவலென
வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிக்கு அடியாகிய
செல்வமும் ஆண்மையும் 5கைவண்மையும் உடன் கூறியவற்றான்
அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. உரவோர், மடவோர்; பதிற். 71:25; குறுந்.
20 : 3-4.

     உரன் அறிவென்னும் பொருளில் வந்தது (சிறுபாண்.
189-90, .)

     1-3. அறிவுடையோரை எண்ணினாலும், அறிவில்லாதோரை
எண்ணினாலும் பிறர்க்கு நீ உவமையாகப் பொருந்தினால் அல்லாமல்,
நினக்குப் பிறரை உவமமாகக் கூறுதற்கு இயலாத ஒப்பற்ற
பெருமையையுடைய அரசே; "உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை"
(தொல். உவம. 3) என்பதனால் உவமையாகக் கூறப்படும் பொருள்
உயர்ந்ததாதலின் சேரனுடைய பெருமை விளக்கப்பட்டது; முருகு.
276; மதுரைக். 42. .; புறநா. 377 : 10 - 11 என்பவற்றைப் பார்க்க.

     4. மருதம் சான்ற வயல்: மதுரைக். 270.

     4-5. ஊடலாகிய உரிப்பொருள் அமைந்த அகன்ற
இடத்தையுடைய விளைகின்ற வயல்களாகிய செய்களில், பயிரை
அழிக்கின்ற நாரையைத் துரத்தும் மகளிர். ஒய்தல்: பதிற்.
29 : 2 - 7.

     மகளிர் நாரையைத் துரத்துதல்: பதிற். 29 : 2 - 7.

     6-7. பசிய பொன்னாற்செய்த ஆபரணங்களைக் களைதல்
இல்லாதவராகி, ஒன்றுக்கு ஒன்று அண்மையிலுள்ளதாகி அவைதாம்
பலவாயிருக்கின்ற புதிதுபுதிதான குரவைக் கூத்தை இரவிலும்
பகலிலும் நிகழ்த்துதற்கு இடமான. இரவும் பகலும் அயருமென
இயைக்க; 'குறும்பல்லூர் நெடுஞ் சோணாட்டு - ஒன்றற்கு ஒன்று
அண்ணிதாகிப் பலவாகிய ஊர்களையுைடைய பெரிய சோழநாட்டில'
(பட்டினப். 28, ந.)

     9. பூழியர் மெய்ம்மறை: பதிற். 90 : 27.

     8-9. காவிரி மிக்குச் சென்ற, நெடுந்தூரத்தே விரிகின்ற
அழகினையுடைய புகார் நகரத்தையுடைய செல்வ,
பூழிநாட்டிலுள்ளார்க்குக் கவசம் போன்றாய். இதனாற் சோழநாடும்,
பூழிநாடும் இவன் ஆட்சிக்கு உட்பட்டமை தெரிகின்றது.

     11. கொல்லிப்பொருந: புறநா. 22 : 28; சிலப். குன்றக்.
பாட்டுமடையிறுதி. 10-11. மூங்கில் விரிந்து எழுகின்ற மேகங்கள்
தவழும் உயர்ந்த சிகரங்களையுடைய கொல்லிமலைக்குத் தலைவ;
கொடிகளையணிந்த தேரையுடைய சேரனே.

  11-4. நின்னுடைய செல்வமும் வீரமும் கொடையும் மக்களின்
  அளவைக் கடந்தனவென்று தாமே அறியவேண்டியவராக
  இருந்தும் யான் பலநாள் சென்று நின்பகைவரிடத்துச்
  சொல்லவும் அவர் அதனைத் தெளியமாட்டாராயினார்.

     14-5. பிறராகிய சான்றோர் அவற்றை எடுத்துச் சொல்லத்
தெளிவாரோ எனக் கருதினால். பிறரும்: உம்மை அசைநிலை.
கொல்லென என்பதன்பின் கருதினென்பதை அவாய்நிலையால்
வருவித்து முடிக்க.

     16. அச்சான்றோர் கூறவும் பகைவரது புத்தி மயங்கக்
காண்பேன்.

     17. ஆதலால் யான் எவ்வாறு அவர்மனம் தெளியும் வண்ணம்
உரைப்பேனென்று வருந்துவேன்; இதனை அறிந்து நீ அவர்பால்
அருள் செய்தல் வேண்டும்.

     (பி - ம்) 2. நீயாயின். 5. ஒப்புமகளிர். 8. சேய்வரி. 14.
யாஞ்சென்று.
                                
     (3)


     1[ ]இவ்விருதலைப் பகரத்திற்கு உட்பட்ட உரைக்குரிய மூலம்
ஒரு பிரதியிலும் கிடைக்கவில்லை.

     2"மின்னி, மணிபொரு பசும்பொன்" (கலித். 143 : 3 - 4)

     3திணை - குலம்.

     4சிலப், 14 : 166 - 7, ’42 : 138 - 9; மணி, 2 : 18 - 32;
பெருங். 1. 35; 84 - 6.
    

    
5வென்றிக்கு வண்மை அடியாதல்: ‘அருளிலர்
கொடாமைவல்லராகுக வென்றதனாற் பயன், அவையுடையோர் தத்தம்
பகைவரை வெல்வராதலால், பகையெதிர்ந்தோர் அவையிலராக
என்பதாம்’ (
புறநா, 27 : 17 - 9, உரை)





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

3. நிறந்திகழ் பாசிழை
 
73.உரவோ ரெண்ணினு ம வோ ரெண்ணினும்
பிறர்க்கு நீவாயி னல்லது நினக்குப்
பிறருவம மாகா வொருபெரு வேந்தே
மருதஞ் சான்ற மலர்தலை விளைவயற்
 
5செய்யு ணாரை யொய்யு மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார்
குறும்பல் யாணர்க் குரவை யயரும்
காவிரி மண்டிய சேய்விரி வனப்பிற்
புகாஅர்ச் செல்வ பூழியர் மெய்ம்மறை  

 
10

கழைவிரிந் தெழுதரு மழைதவழ் நெடுங்கோட்டுக்
கொல்லிப் பொருத கொடித்தேர்ப் பொறையநின்
வளனு மாண்மையுங் கைவண் மையும்
மாந்த ரளவிறந் தனவெனப் பன்னாள்
யான்சென் றுரைப்பவுந் தேறார் பிறரும்
 

15சான்றோ ருரைப்பவுந் தெளிகுவர் கொல்லென
ஆங்குமதி மருளக் காண்குவல்
யாங்குரைப் பேனென வருந்துவல் யானே.
 

இதுவுமது.

பெயர்  : நிறந்திகழ் பாசிழை.

1 - 3. உரவோர் ................ வேந்தே.

உரை :   உரவோர்  எண்ணினும்     மடவோர்   எண்ணினும்-
அறிவுடையோரை  யெண்ணினாலும்   அஃது  இல்லாத  மடவோரை
யெண்ணினாலும்  ;  பிறர்க்கு  நீ உவமம் வாயினல்லது - பிறர்க்கு நீ
உவமமாக  வாய்ப்பதன்றி ; நினக்குப் பிறர் உவமமாகா நினக்குப் பிறர்
உவமமாகலாகாத  ;  ஒரு  பெரு வேந்தே - ஒப்பற்ற பெருமையுடைய
வேந்தே எ - று.

உயர்ந்தோர்     மடவோர்    என்ற   இருதிறத்தோர்  பெருமை
கூறலுறுவார்க்கு     அவரின்       உயர்ந்தோரை       யுவமமாக
வுரைத்தல்வேண்டுமென்பது  பொருளிலக்கண மாதலின் (தொல். உவம.
3),  உயர்வற  வுயர்ந்த நின்னையே  அவர்கட்கு உவமமாக வுரைத்தற்
கமைந்தனை   யென்பார்,   “பிறர்க்கு   நீ  வாயினல்லது  நினக்குப்
பிறருவமமாகா வேந்தே” யென்றும், ஆகாமைக்கு ஏது நினது உயர்வற
வுயர்ந்த  பெருமையென்பார்,  “ஒரு பெருவேந்தே” என்றும் கூறினார்.
உரவோர்,  படை  மடம்படுதலறியாத  அறிவுத்திண்மை  யுடையோர் ;
மடவோர்,  கொடைக்கண் மடம் படுவர் ; “கொடைமடம் படுதலல்லது,
படைமடம்  படான்  பிறர்  படைமயக்குறினே”  (புறம்.  142)  என்று
சான்றோர்  கூறுதல்  காண்க. பெருமை, உயர்வு குறித்து நின்றது. இனி
உரவோர்தாம்    எண்    ணினும்    மடவோர்தாம்    எண்ணினும்,
இருதிறத்தோரும்     நின்னையே    உவமமாகக்    கொண்டுரைப்ப
ரென்றுமாம்.

4 - 9. மருதம் ............மெய்ம்மறை.

உரை :  மருதம் சான்ற - மருத வளம் அமைந்த ;  மலர்  தலை
விளைவயற் செய்யுள் - விரிந்த இடத்தையுடைய விளை புலங்களாகிய
கழனிக்கண்ணே  யுலவும்  ;  நாரை  ஒய்யும்  மகளிர்  - நாரைகளை
யோப்பும்  மகளிர்  ;  இரவும்  பகலும்  பாசிழை  களையார் - இரவு
பகலென்ற  இருபோதினும்  தாமணிந்த  பசிய  பொன்னாற்  செய்த -
இழைகளைக்களையாராய்  ;  குறும்பல்  யாணர்க்குரவை  யயரும்  -
ஒன்றற்கொன்று  அணித்தாய்ப்  பலவாகிய  இடங்களிலே புதிய புதிய
குரவைக்கூத்தினையாடி  மகிழும்  ; காவிரி மண்டிய - காவிரியாற்றின்
நீர்  மிக்குள்ள  ;  சேய்  விரி  வனப்பின்  -நெடுந்தொலைவிலேயே
விரிந்து தோன்றும் அழகினையுடைய    ;  புகார்ச்   செல்வ - புகார்
நகரத்தையுடைய செல்வனே  ; பூழியர் மெய்ம்மறை - பூழிநாட்டார்க்கு
மெய்புகு கருவி போன்றவனே எ - று.
 

மருதத்திணைக்குரிய பொருள் பலவும் குறைவற நிறைந்திருக்குமாறு
தோன்ற,   “மருதஞ்   சான்ற   மலர்தலை   விளைவயல்”  என்றும்,
ஆங்குறையும்  உழவர்  மகளிர்  வயற்கண்  விளைபயிரை  நாரைகள்
மிதித்துச் சிதைக் காவண்ணம்  ஒப்பும் செய்கையினராதலை, “செய்யுள்
நாரை  யொய்யும்  மகளிர்”,  என்றும்  கூறினார்.  விந்திய  வொன்று
ஆயிரமாக    விளைதலின்,   செல்வக்   களிப்பால்   இரவு   பகல்
எஞ்ஞான்றும்  விளையாட்டினை   விரும்பி யொழுகுகின்றா ரென்பார்,
“இரவும்  பகலும்  பாசிழை  களையார்,  குறும்பல்  யாணர்க் குரவை
யயரும்”  என்றார்  பழையவுரைகாரர், “இரவும் பகலும் குரவை யயரு
மெனக் கூட்டுக” வென்றும், “மருத மென்றது,  மருதநிலத் தன்மையை”
யென்றும்,  “குறும்பல்  குரவை  யென்றது, ஒன்று  ஆடும் இடத்திற்கு
ஒன்று   அணியதாய்   அவைதாம்  பலவா    யிருக்கின்ற   குரவை
யென்றவாறு”  என்றும்,  “குரவை யயரும்  புகார்   எனவும்,  காவிரி
மண்டிய புகார் எனவும் கூட்டுக” என்றும் கூறுவர்.

காவிரி     பாய்தலால் நீர்வளம்  சிறத்தலின், வானளவா வுயர்ந்த
சோலைகளும்   கொடிமாடப்   பெருமனைகளும்  சேய்மைக்கண்ணே
காண்பார்க்கு  அழகிய  தமது காட்சியினை வழங்கும் சிறப்பு விளங்க,
“சேய்விரி   வனப்பிற்   புகார்” என்றும்,  அதனாற்  செல்வ  மிகுதி
தோன்ற,  “செல்வ” என்றும் கூறினார் . பூழியர், பூழி நாட்டார் ; இந்
நாடும்  சேரர்க்குரியது; “பல்வேற் பூழியர் கோவே” (பதிற். 84) என்று
பிறரும் சேரவேந்தரைக் கூறுதல் காண்க .

10 - 11. கழை................................பொறைய.

உரை :  கழை விரிந்து எழுதரு - மூங்கில்கள் விரிந்தெழு கின்ற ;
மழை   தவழ   நெடுங்கோட்டு   -   மேகங்கள்  தவழும்   நெடிய
உச்சியையுடைய ; கொல்லிப் பொருந - கொல்லிமலைக்குத் தலைவனே
;  கொடித்  தேர்ப்  பொறைய  - கொடி யுயர்த்திய தேர்களையுடைய
மலைநாட்டரசே எ - று.

மூங்கில்கள்  விரிந்து வளரும் இயல்பினவாதலின், “விரிந்தெழுதரு”
என்றார். கொல்லி, கொல்லிமலை ; இதனைச் சூழ்ந்த நாடு, கொல்லிக்
கூற்றமென்றும் வழங்கும். பொறை, மலை . சேரநாடு மலைநாடாதலின்,
சேரர் பொறைய ரெனவும் கூறப்படுவர்.

11 - 17. நின் வளனும்................யானே.

உரை :  நின்  வளனும்  ஆண்மையும்  கைவண்மையும்  மாந்தர்
அளவிறந்தன  என  -  நின்னுடைய செல்வமும் வீரமும்  கொடையும்
மக்கள்   ஆராய்ச்சியெல்லையைக்  கடந்தனவாகும்  என்று  ;  யான்
பன்னாள்  சென்று  உரைப்பவும்  தேறார் - யான் பலநாளும் சென்று
உரைத்தேனாகவும்   நின்   பகைவர்   தெளியாராயினார்  ;  பிறரும்
சான்றோர் உரைப்பத் தெளிகுவர் கொல்லென-பிறராகிய சான்றோரைக்
கொண்டு தெரிவிப்பின் அவர் தெளிவரென முயன்றவழியும் ; ஆங்கும்
மதிமருளக்   காண்குவல்   -  அப்போழ்தும்  அவர்  அறிவுமயங்கி
யிருப்பதையே   கண்டேன்   ;   யாங்கு  உரைப்பேன்  என  யான்
வருந்துவல்  -  அதனால்  அவர்கட்கு  எவ்வாறு  கூறித் தெளிவிக்க
முடியுமென்று நினைந்து வருந்துகின்றேன் எ - று.
 

வளம்     முதலியன முறையே பொருள்வலி, தன்   தோள் வலி,
துணைவலி,  படைவலி  முதலியவற்றைச்  சுட்டி நிற்றலால், இவற்றைத்
தாம்  எடுத்தோதியவாற்றை, “மாந்தர் அளவிறந்தன வெனப் பன்னாள்
யான்     சென்றுரைப்பவும்”     என்றார்.      ஒருநாளொழியினும்
பன்னாளுரைப்பின் அறிவு தெளிகுவ ரென்னும் துணிவால், “பன்னாள்
சென்று  உரைப்பவும்  தேறார்”  என்றார் உரைப்பவும் என்ற உம்மை
தாமே   அறியக்கடவதனை   யாம்   சொல்லவும் கூறுவோர்  தகுதி
நோக்கும்  மெல்லியர்  போலும் என்று கருதிப் பிறராகிய சான்றோரை
விடுத்தவழியும், அவர்பால் மயக்கமே புலப்படுவதாயிற் றென்பார்,

“ஆங்கும்   மதிமருளக் காண்குவல்” என்றும், அத்துணை மடமை
நிறைந்தோரை  ஒறுப்பது   அறமாகாதாகலின்,   அவர்   பொருட்டு
இரங்குவதல்லது       பிறிதொன்றும்          செய்தற்கின்மையின்,
“வருந்துவல்யானே”  என்றும் கூறினார். யாங்குரைப்பேனென மீட்டும்
அவர்கட்குத்  தகுவன  கூறித் தெருட்டற்கண் தம் விழைவிருப்பதைப்
புலப்படுத்துவதனால்,  அவர்பால் அருளலையே வேண்டினா ரென்பது
கருத்தாயிற்று.

“சான்றோர்     உரைப்பத் தெளிகுவர் கொல்லென என்றதன்பின்,
கருதின்  என  ஒரு சொல் வருவி்த்து அதனைக் காண்குவ லென்னும்
வினையொடு முடிக்க” என்பர் பழையவுரைகாரர்.

இதுகாறுங்    கூறியது ; ஒருபெரு வேந்தே புகார்ச்செல்வ, பூழியர்
மெய்ம்மறை,    கொல்லிப்    பொருந.   கொடித்தேர்ப்   பொறைய,
நின்வளனும்   ஆண்மையும்  கை வண்மையும் மாந்தர் அளவிறந்தன
எனப்  பன்னாள்  சென்று யான் உரைப்பவும் நின் பகைவர் தேறார் ;
பிற சான்றோருரைப்பத் தெளிகுவர் கொல்லென முயன்றவழி ஆங்கும்
மதி  மருளக்  காண்குவல்  ;  யாங்குரைப்பேன்  என  வருந்துவல் ;
ஆகவே  அவரை  அறியாமை  யுடையர்  என்றெண்ணி  அருளுதல்
வேண்டும்  என்று  முடிக்க.  இனிப்  பழையவுரை,  “பெரு  வேந்தே,
புகார்ச்  செல்வ,  பூழியர் மெய்ம்மறை, கொல்லிப் பொருந, பொறைய,
நின் பகைவர் நின் வளனும் ஆண்மையும் கை வண்மையும் உலகத்து
மக்கள்   அளவைக்  கடந்தன  ;  அவனொடு  மாறுபடுவது  நுமக்கு
உறுதியன்றெனப்   பன்னாள்   யான்   சொல்லவும்   தேறிற்றிலர்  ;
தேறாராயினும்  உலகத்து  மதிப்புடைய  சான்றோர்  சொல்லத்  தாம்
தேறுவரோ  வெனக்  கருதின்  அவர்  சொன்னவிடத்தும்  அவர்கள்
மதிமருண்டதுவே  காணா  நின்றேன்  ; ஆகலான் நின் பெருமையை
அவர்கட்கு  யாங்குரைப்பேனென  வருந்தா  நின்றேன் யான் ; இஃது
என்னுறு   குறை   ;   இதனை   யறிந்து  நீ  அவர்  பால்  அருள
வேண்டுவலென வினைமுடிவு செய்க”, என்று கூறும்.
 

“இதனாற்  சொல்லியது, அவன் வென்றிக்கு அடியாகிய செல்வமும்
நுண்மையும்   கைவண்மையும் உடன்கூறியவாற்றான் அவன் வென்றிச்
சிறப்புக் கூறியவாறாயிற்று.”


 மேல்மூலம்