இதுவுமது. பெயர் : நலம்பெறு திருமணி. 3 - 17. சாயறல் .......... கருவில். உரை : சாய் அறல் கடுக்கும் - நுண்ணிய கருமணலை யொக்கும் ; தாழ் இருங் கூந்தல் - காய்ந்த கரிய கூந்தலையும் ; கொடுமணம் பட்ட வினை மாண் அருங்கலம் - கொடுமணம் என்னும் ஊரிலே உண்டாகிய அரிய கலன்களையும் ; பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம் - பந்தர் என்னும் ஊரிடத்தே பெற்ற பலரும் புகழ்கின்ற முத்துக்களையும் ; வரை யகம் நண்ணி - பெருமலைகளை யடைந்து அவற்றிடத்தம் ; குறும்பொறை நாடி - சிறுபெரு மலைகளை யடைந்து அவற்றிடத்தும் தேடி ; தெரியுநர் கொண்ட - குற்றமற ஆராய்ந்துகொள்ளும் அறிவினை யுடையோர் கொண்ட ; சிரறுடைப் பைம்பொறி - சிதறிக் கிடத்தலையுடைய பசிய பொறிகளையும் ; கவைமரம் கடுக்கும் கவலையை மருப்பின் - கவைக்கோல்போலக் கிளைத்தலையுடைய கொம்பினையும் ; புள்ளி இரலைத்தோல் புள்ளியினையுமுடைய மான் தோலைக் கொண்டு ; ஊன் உதிர்த்து - அதன் உட்புறத்துத் தசையைக் களைந்து ; தீது களைந்து - ஏனை அழுக்குகளையும் போக்கி ; எஞ்சிய திகழ் விடு - எஞ்சி நின்ற ஒளி வீசுகின்ற ; பாண்டிற் பருதி போகிய புடை - வட்டமாக அறுத்த தோளின் விளிம்பிலே ; கிளை கட்டி - இனமாகச் சேரக் கட்டி ; எஃகுடை இரும்பின் - கூர்மையையுடைய வூசியால் ; வல்லோன் தொழில் வல்லவன் ; உள்ளமைத்து - உட்புறத்தே மணிகளைப் பதித்து அழகுற அணி செய்து ; சூடு நிலையுற்று - சூடுதற்குரிய நிலைமையினை யுறுவித்து ; சுடர்விடு தோற்றம் - ஒளி திகழ்கின்ற தோற்றத்தைப் பெறுவித்தலால் ; விசும் பாடு மரபின் - விசும்பிலே பறக்கும் முறைமையினையுடைய ; பருந்து ஊறு அளப்ப - பருந்தானது ஊனென்று கருதி யதனை யுற்றுக் கவர்தற்கு நினையுமாறு ; நலம் பெறு திருமணி - நலம் பெற்ற உயரிய அத்தோற்பணியாகிய மணியை ; கூட்டும் நற்றோள் - அணிகின்ற நல்ல தோளினையும் ; ஒடுங் கீ ரோதி - ஒடுங்கிய சுருள் என்னும் பகுதியான கூந்தலையும் ; ஒண்ணுதல் - ஒள்ளிய நெற்றியினையும் ; வேறுபடு திருவின் பிறப்பால் திருமகளின் வேறுபட்டா ளென்னும் சிறப்பெய்திய மாண்பினையுமுடைய நின் தேவியினுடைய ; நின்வழி வாழியர் - நின் குடுவழி நீடு வாழ்வதன் பொருட்டு ; கருவில் - கருவிடத்தேயமைந்து எ - று. மென்மையும் நுண்மையு முடைமைபற்றிக் கருமணலை “சாயறல்” எனல் வேண்டிற்று. தாழ் இருங் கூந்தல் - முதுகிடத்தே தாழ்ந்த கரிய கூந்தல் ; “புறந்தாழ் பிருளிய பிறங்குகுர லைம்பால்” (அகம். 126) என்று பிறருங் கூறுதல் காண்க . கூந்தலையும், தோளினையும் நுதலினையுமுடைய தேவியினது கருவில் எனக் கூட்டுக . தாழிருங் கூந்தலென்றவர் மறுபடியும் ஒடுங்கீரோதி யென்றது, கூந்தலின் நீட்சியும் நிறப்பொலிவும் பொதுப்படக் கூறி, அதனைச் சுருள் என்னும் பகுதியாக முடிக்கும் சிறப்பினை யுணர்த்தற்கு திருமகட்குரிய உருவும் பிற நலங்களும் பொருந்திப் பிறப்பொன்றினால் வேறுபடுவது குறித்துத் தேவியை, “வேறுபடு திரு” என்றார் . வேறுபடு திருவின் என்பதற்குப் பழையவுரைகாரர், “வேறுபடு திருவின் என்றது, இவளுக்குக் கூறிய குணங்களால் அவளின் வேறாகிய நின் தேவி என்றவா” றென்றும், “திருவின் என்னும் இன் அசைநிலை” யென்றும் கூறுவர். கொடுமணம், பந்தர் என்பன, அக்காலத்தே சிறப்புற்றிருந்த ஊர்கள் வினைமாண் அருங்கலம். தொழில்நலத்தால் மாண்புற்ற அணிகலன்கள் பலர், பலநாட்டவர் . வேள்விசெய்தற்கண், அதனைச் செய்வோர் நல்லிலக்கணம் அமைந்த புள்ளிமானின் தோலைத் தூய்மை செய்து போர்த்துக் கொள்பவாதலின், அதனை, மானிலக்கணம் தெரிந்தாரைக் கொண்டு பெறுதல் வேண்டி விடுத்தலின், அவரைத் “தெரியுநர்” என்றும், அவர்கள் அதனை நாடிப் பெறுமாறு கூறுவார். “வரையகம், பெருமலைத் தொடர். குறும்பொறை, சிறு குன்றுகள் நிறைந்த மலைப்பக்கம். கொச்சிநாட்டுப் பகுதிகளை இடைக்காலக் கல்வெட்டுக்கள் நெடும் பொறை நாடென்றும் குறும்பொறை நாடென்றும் (A.R. No. 321 of 1924) கூறுகின்றன. இவ்விடத்தை நண்ணி நாடுதலின், உயரிய மான்வகைகள் அவ்விடத்தே வாழ்தல் பெற்றாம் . நல்லிலக்கணம் அமைந்த மானின் நலம் கூறுவார் கிளைத்த கொம்புடைமையும் உடலெங்கும் சிதறிய புள்ளியுடைமையும் விதந்து, “பைம்பொறிக் கவைமரம் கடுக்கும் கவலைய மருப்பிற் புள்ளி யிரலை” யென்றார். “வரையென்றது பெருமலையை” யென்றும், குறும்பொறை யென்றது, “அதனை யணைந்த சிறு பொற்றைகளை” யென்றும், “தெரியுநர் கோடல், இலக்கணக்குற்ற மற ஆராய்ந்து கோடல்” என்றும், “பைம்பொறி யென்றது செவ்விகளையுடைய புள்ளிகளை” யென்றும், “மேற் புள்ளியிரலை யென்றதனை அதன் சாதிப் பெயர் கூறியவாறாகக் கொள்க” என்றும் பழையவுரை கூறும் . சிரறுதல் சிதறுதல் . கவலை, கவர்த்தல். வேள்வி செய்வோன் மான்தோலைப் போர்த்துக்கொள்ள, அவன் மனைவி அத்தோலை வட்டமாக அறுத்து அதனைச் சுற்றிலும் முத்துக்களையும் பிற வுயரிய மணிகளையும் கட்டி, நடுவே உயரிய மாணிக்கமணிகளைத் தைத்துத் தோளிடத்தே அணிவள்போலும். ஈண்டு ஆசிரியர் அரசமாதேவி இவ்வாறு அணிந்தாளென்றலின், மயிர் முதலியன மூடிப் பொலிவின்றி யிருக்கும் பகுதியைத் தீது என விலக்குதலால், “தீ துகளைந் தெஞ்சிய திகழ்விடு பாண்டிற் பருதி” என்றும், வட்டமான தோலைப் “பாண்டிற் பருதி” யென்றும், அதன் விளிம்பிலே கொடுமணத்துக் கலத்தையும் பந்தரிடத்துப் பெற்ற முத்தினையும் இனஞ்சேரக் கட்டினாரென்றற்கு, “புடைகிளை கட்டி” யென்றும், உள்ளிடத்தே தாமரை முதலிய பூவைப் போலும் அழகிய வேலைப்பாட்டினைச் சிவந்த மாணிக்கமணி கொண்டு செய்யும் தொழில் வல்லுநரை, “வல்லோன் எஃகுடை யிரும்பின் உள்ளமைத்து” என்றும், அவ்வாறு அமைத்தலால் சூடுதற்குரிய நிலையுறுவதால், “சூடு நிலையுற்று” என்றும் கூறினார். உறுவித்தெனற்பாலது, “உற்று” என வந்தது. சிவந்த மணிகள் இடையே பதிக்கப்பெற்றுச் செவ்வொளி கான்று திகழ்தல் கண்டு, ஊனென்று கருதிப் பருந்து கவர்ந்துசெல்லக் கருதுமென்பார், “விசும்பாடு மரபிற் பருந்தூறளப்ப” என்றார். ஊன் தேடி யுற்றுண்டு பயின்ற கூரிய பார்வையினையுடைய பருந்தினை மயக்குமாறு சிவந்த ஒளிகொண்டு விளங்கும் மணியாதல்பற்றி, “நலம் பெறு திருமணி” எனப்பட்டது. பொன்னிடைப் பதித்துப் பொலிவுறுத்தப் பெறும் மாணிக்கமணி, தோலிடைப் பதித்தவழியும் தன் நல்லொளி குன்றாது திகழும் சிறப்புக் குறித்து இவ்வாறு நலம்பெறு திருமணி யென்ற நலத்தால், இப் பாட்டிற்கு ‘நலம்பெறு திருமணி’ யென்று பெயராயிற்றென வறிக. இனிப் பழையவுரைகாரர், “நலம்பெறு திருமணியென்றது மணியறிவாரால் இதுவே நல்லதென்று சொல்லப்படுதலையுடைய திருமணி யென்றவாறு ; இச் சிறப்பானே இதற்கு நலம்பெறு திருமணியென்று பெயராயிற்று” என்பர். இதன்கட் கூறியவற்றைத் தொகுத்து நோக்கின், தாழிருங் கூந்தலையும், திருமணி கூட்டும் நற்றோளையும், ஓதியையும், ஒண்ணுதலையும், வேறுபடு திருவினையுமுடைய நின் தேவியின் கருவிலே என்பதாம். இனி, இப்பகுதிக்கண் வந்தவற்றிற்கு உரைக்குறிப்புக் கூறலுற்ற பழையவுரைகாரர், “கவலைய வென்னும் அகரம் செய்யுள் விகார” மென்றும், பாண்டி லென்றது, வட்டமாக அறுத்த தோலினை யென்றும், “பருதி போகிய புடை யென்றது, வட்டமாகப் போன அத்தோலது விளிம்பினை” யென்றும், “எஃகுடையிரும்பின் உள்ளமைத் தென்றது. கூர்மையையுடைய கருவிகளால் அத்தோலுட் செய்யும் தொழில்களெல்லாம் செய்தமைத் தென்றவா” றென்றும், அமைத்தென்றதனை “அமைப்பவெனத் திரிக்க” வென்றும், வல்லோனால் என விரித்து “வல்லோனால் நின் தேவி சூடுதல் நிலையுறுதலால் என்க” என்றும், “வல்லோன் யாகம் பண்ணுவிக்க வல்லவன்” என்றும், “தோற்ற மென்றது, தோற்றமுடைய அத்தோலினை” யென்றும் கூறுவர். கருவில் என்பதனோடு அமைந்தென ஒருசொல் வருவித்து, வாழியரென்ற முற்றெச்சத்துக்கு முடிபாக்காது. “வாழியரென்னும் வினையெச்சத்தினைச் சூடு நிலையுற்று என்னும் வினையொடு முடிக்க” என்பர் பழையவுரைகாரர். 18 - 21. எண்ணியல்..............பெற்றனை. உரை : எண் இயல் முற்றி - எண்ணப்படுகின்ற திங்கள் பத்தும் நிரம்பி ; ஈர் அறிவு புரிந்து - இருவகை யறிவும் அமைந்து ; சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும் - சால்பும் நடுவுநிலையு முள்ளிட்ட பிற நற்பண்புகளும் ; காவற் கமைந்த அரசு துறை போகிய வீறு சால் - நாடு காத்தற்குவேண்டும் அரசியலறிவுவகை பலவும் முற்றக்கற்றுத் துறைபோகிய சிறப்பும் நிறைந்த ; புதல்வற் பெற்றனை இவணர்க்கு - நன்மகனைப் பெற்றுள்ளாய் இந் நிலவுலகத்து வாழ்வார் பொருட்டு எ - று. கருவளர்தற்குரிய காலத்தை ஒவ்வொரு திங்களாக வெண்ணுப வாதலின், “எண்ணியல் முற்றி” யென்றார் . ஈரறிவு - இருவகை யறிவு ; அவை இயற்கையும் செயற்கையுமாகிய இருவகை யறிவுகள். இயற்கையாய கண்ணொளி யில்லார்க்கு ஏனைய ஞாயிற்றொளி முதலியன பயன்படாமை போல, இயற்கையாய உண்மையறிவில்லார்க்குக் கல்வி கேள்விகளானாம் செயற்கையறிவு பயன்படாதாகலின், “ஈரறிவு புரிந்து” என்றாரென்றுமாம் . இ்ம்மை மறுமை யறிவுகளுமாம். பெரிய அறிவெனினுமமையு மென்பர் பழையவுரைகாரர். சால்பு, நற்குணங்களின் நிறைவு ; அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற ஐந்தின் நிறைவு. அரசாளும் திறனும் கருவி்லே வாய்க்குந் திருவென்றற்கு, “காவற்கமைந்த அரசு துறை போகிய வீறு” என்றார். பிறந்த பி்ன்பே இவையாவும் பெறற் குரியவாயினும், இவற்றின் பேறு இனிது பொருந்துதற்குரிய நல்வாய்ப்புக் கருவிலே உண்டாவதாகலின், இவ்வாறு கூறினார் என அறிக. இக்கருத்தே, “பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த, மக்கட்பே றல்ல பிற” (.குறள் . 61) என்புழியாம் அமைந்துகிடத்தல் காண்க. பெற்றனை யென்பதைப் பழையவுரைகாரர் முற்றெச்சமாக்கி மேல் வருவனவற்றோடு முடிப்பர் . அரசனது புதல்வற் பேறு அவன் கோற்கீழ் வாழ்வார்க்கு ஏமமாதல்பற்றி, “இவணர்க்” கென்றார். மக்கட்பேறு, பெற்றோர்க்கே யன்றி இப் பெருநிலத்து வாழ்வார்க்கு நலம் பயக்கும் இயல்பிற் றென்பது பண்டைத் தமிழ் நன்மக்கள் கொள்கை . “தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து, மன்னுயிர்க் கெல்லாம் இனிது” (குறள். 68) என்று சான்றோர் கூறுதல் காண்க. 1 - 2. கேள்வி............................உவப்ப. உரை : கேள்வி கேட்டு - அருமறைப் பொருளை அறிவர் உரைப்பக் கேட்டு ; படிவம் ஒடியாது - அவர் உரைத்த விரதங்களை மேற்கொண்டு தவிராதொழுகி ; உயர்ந்தோர் உவப்ப - அறிவு ஒழுக்கங்களால் உயர்ந்த நன் மக்கள் மனமகிழும்படி ; வேள்வி வேட்டனை - வேள்விகளைச் செய்து முடித்தாய் எ - று. அருமறைப் பொருளை ஒருவர் தாமே கற்றுணர்தல் கூடாமையின், “கேள்வி கேட்டு” என்றார் . கேள்வி - அருமறைப் பொருள் ; கேட்டற்குரியது அதுவாகலின், கேட்ட பொருளை நடைமுறையில் தெளிந்து நல்லறிவு வைகரப் பெறுதற்கு விரத வொழுக்கம் வேண்டியிருத்தலால், “படிவ மொடியாது” என்றார். கேட்டவற்றை மனத்தால் ஒன்றியிருந்துணர்தற்குத் துணைசெய்வது படிவமென வுணர்க. கேள்விப்பயன் உயர்நிலை யொழுக் கத்துச் சான்றோர்க்கு உவகை பயப்பிப்பதாதலால், “உயர்ந் தோருவப்ப வேள்வி வேட்டனை” யென்றார் . “ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை, நான்மறை முதல்வர் சுற்றமாக, மன்ன ரேவல் செய்ய மன்னிய, வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே” (புறம். 26) என்று பிறரும் கூறுதல் காண்க. இனி, பழையவுரைகாரர், “கேள்வி கேட்டல் - யாகம் பண்ணுதற் குடலான விதி கேட்டல் ; படிவம் - யாகம் பண்ணுதற்கு உடலாக முன்பு செலுத்தும் விரதங்கள் . ஒடியாதென்பதை ஒடியாமல் எனத் திரிக்க” என்றும், “வேட்டனை என்றதனை வினையெச்சமுற்றாக்கி அவ்வினை யெச்சத்தினை அருங்கடன் இறுத்த என்னும் வினையொடு கூட்டுக” என்றும், “உயர்ந்தோர் தேவ” ரென்றும் கூறுவர். 22 - 28. அருங்கடன்..........................படிமையானே. உரை : அருங்கடன் இறுத்த - இந் நிலவுலகத்து வாழ்வார்க்கு அரசராயினார் செய்தற்குரிய அரிய கடன்களைச் செய்து முடித்த; செருப்புகல் முன்ப - போரை விரும்பும் வலியினையுடையோய் ; நின் வயின் அன்னவை மருண்டனென் அல்லேன் - நின்பால் கேள்வியும் வேள்வியும் புதல்வற்பேறுமாகிய அவையிற்றைக் கண்டு வியப்புற்ற னல்லேன் ; முழுதுணர்ந் தொழுக்கும் நரைமூதாளனை - உணரத் தகுவனவற்றை முழுதும் உணர்ந்து பிறர்க்கும் உணர்த்தி நன்னெறி யொழுகப்பண்ணும் நரையும் முதுமையுமுடைய புரோகிதனை ; நின் படிமையான் - நீ மேற்கொண்டிருக்கும் தவ வொழுக்கத்தால் ; வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் தெய்வமும் யாதும் தவம் உடையோர்க்கு என - கொடையும் குணவமைதியும் செல்வமும் மகப்பேறும் தெய்வவுணர்வும் பிறவும் முன்னைத் தவமுடையார்க்கே யுளவாவன என அறிவுறுத்தி; வேறுபடு நனந்தலை பெயரக் கூறினை - நாட்டின் வேறுபட்ட அகன்ற இடமாகிய காட்டிற்குத் தவங் குறித்துச் செல்லப் பணித்தனை ; பெரும - பெருமானே! இது கண்டன்றே யான் மருட்கை யெய்துவே னாயினேன் எ - று. அருங்கடன் இறுத்த முன்ப, செருப்புகல் முன்ப என இயையும். மகப்பேற்றால் இவணரையும், வேள்வி வேட்டலால் உயர்ந்தோரையும் ஓம்புதல்பற்றி “அருங்கடன் இறுத்த” என்றும், செருமேம்பட்டார்க்கன்றி இவ்வருங்கடன் எளிதில் இறுக்கலாகாமை தோன்ற, “செருப்புகல் முன்ப” என்றும் கூறினார். உயர் பொருளை யோதி யுணர்ந்தும் பிறர்க் குரைத்தும் தானொழுக வல்லவன் என்றற்குப் புரோகிதனை “முழுதுணர்ந் தொழுக்கும் நரைமூ தாளனை” என்றார் . நரைப்பும் முதுமையுமன்றி, வண்மையும் மாண்பு முதலாயின அவன்பால் பெறுக உளவாதல் வேண்டிச் சேரமான் இரக்கங் கொண்டு அவற்றைப் பெறுமாறு அறிவுக்கொடை வழங்கினான் என்பார், “வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் தெய்வமும் யாவதும் தவமுடையோர்க்கு என” அறிவுறுத்தினான் என்றார். எச்சம் புகழ்க் குரித்தாயினும், வண்மையும் மாண்பும் கூறவே அப் புகழும் அவற்றின்பால் அடங்குதலால் மக்கட் பேறாயி்ற்று . இனிப் பழையவுரைகாரர், “நரை மூதாளனை யென்றது, புரோகிதனை” யென்றும், “நரைமூதாளனைக் கூறினை யெனக் கூட்டி அவனைச் சொல்லி யேவினையென ஒருசொல் வருவித்து முடிக்க” என்றும், “மாண்பென்றது மாட்சிமையுடைய குணங்களை” யென்றும், “எச்சமென்றது பிள்ளைப்பேற்றினை” யென்றும், “தெய்வமென்றது தம்மால் வழிபடும் தெய்வத்தினை” யென்றும், “தவமுடையோர்க் கெனச் சொல்லி யென்க” என்றும், கூறினை யென்பது வினையெச்சமுற்” றென்றும், “வேறுபடு நனந்தலை யென்றது துறந்து போயிருக்கும் காட்டினை” யென்றும், “பெயர வென்றது அந்நரை மூதாளனைக் காட்டிலே பெயர வேண்டி” யென்றும் கூறுவர். புரோகிதன் சென்ற காட்டினை, “வேறுபடு நனந்தலை” யென்றார், ஐம்பொறிகளானும் ஆர நுகரும் நுகர்ச்சிக்கடனாகும் நாட்டினும், அவற்றை யடக்குதற்குத் துணையாகும் சிறப்புப்பற்றி வேறுபடுதலின், சேரமான், இவ்வாறு தன் படிமையான் புரோகிதனைத் துறவுமேற் கொள்ளப் பணித்தமை நோக்கின், அப் புரோகிதன் ஆன்றவிந்தடங்கும் சால்பிற் குறைபட்டமையும், அதனை நிறைத்துக்கோடற்கு வேந்தன் கண்ணோடி வேறுபடு நனந்தலைப் பெயர்த்தமையும் பெற்றாம் . இது கண்டன்றே யென்பது முதலாயின குறிப்பெச்சம். இதுகாறும் கூறியது ; செருப்புகல் முன்ப, பொரும, தாழிருங் கூந்தலையும், நற்றோளையும், ஓதியையும், நுதலையும், திருவினையு முடைய நின் தேவியின் கருவிலே, இயல் முற்றி, அறிவு புரிந்து, அரசு துறை போகிய புதல்வற் பெற்றனை இவணர் பொருட்டு ; உயர்ந்தோருவப்ப வேள்வி வேட்டனை ; அன்னவை கண்டு மருண்டனெனல்லேன் ; நரை மூதாளனை, நின்படிமையான் ; வேறுபடு நனந்தலைப் பெயரக் கூறினை ; இதுகண்டன்றே மருட்கை யெய்துவேனாயினேன் என்பதாம் . இனிப் பழையவுரை, “வேட்டனை யென்றும், பெற்றனை யென்றும் நீ செய்த யாகங்களாகிய அன்னவையிற்றிற்கு யான் மருண்டேனல்லேன், நின்னை நல்வழி யொழுகுவித்து நின்ற நரை மூதாளனை நின்படிமையானே இல்லற வொழுக்கினை யொழித்துத் துறவற வொழுக்கிலே செல்ல ஒழுகுவித்தனை ; அவ்வாறு செய்வித்த நின் பேரொழுக்கத்தையும் பேரறிவினையும் தெரிந்து யான் மருண்டேனென வினை முடிவு செய்க; என்று கூறும். “இதனாற் சொல்லியது; அவன் நல்லொழுக்கமும் அதற்கேற்ற நல்லறிவுடைமையும் கூறியவாறாயிற்று.” |