முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
75.



இரும்புலி கொன்று பெருங்களி றடூஉம்
அரும்பொறி வயமா னனையை பல்வேற்
பொலந்தார் யானை யியறேர்ப் பொறைய
வேந்தரும் வேளிரும் பிறருங் கீழ்ப்பணிந்து
 5




நின்வழிப் படாஅ ராயி னென்மிக்
கறையுறு கரும்பின் றீஞ்சேற் றியாணர்
வருநர் வரையா வளம்வீங் கிருக்கை
வன்புலந் தழீஇ மென்பா றோறும்
அரும்பறை வினைஞர் புல்லிகல் படுத்துக்
 10




கள்ளுடை நியமத் தொள்விலை கொடுக்கும்
வெள்வர குழுத கொள்ளுடைக் கரம்பைச்
செந்நெல் வல்சி யறியார் தத்தம்
பாடல் சான்ற வைப்பின்
நாடுட னாடல் யாவண தவர்க்கே.

     இதுவும் - அது. பெயர் - தீஞ்சேற் றியாணர் (6)

     (ப - ரை) 5-6. நெல்மிக்கு 1அறையுறு கரும்பென்றது
நெல்லின் கண்ணே அந்நெல்லை நெருக்கி மிக எழுந்தமையானே
அறுக்கலுற்ற கரும்பென்றவாறு.

     இனி, அந்நெற்றான் கரும்பின் மிக எழுந்து அதனை
நெருக்கினமையால் அந்நெல்லிற்கு இடமுண்டாக அறுத்த
கரும்பெனினுமாம்.

     6. தீஞ்சேறு - இனியபாகு. யாணரென்றது அத்தீஞ்சேற்றது
இடையறவின்மையை.

     இச்சிறப்பானே இதற்கு, 'தீஞ்சேற் றியாணர்' என்று
பெயராயிற்று.

     வளம்வீங்கிருக்கையாகிய (7) மென்பால் (8) எனக் கூட்டுக.

     2மென்பால் - மருதம்.

     பொறைய, நீ (3) புலிகொன்று களிறடூஉம் (1) வயமான்
அனையை; அதனால் (2), வேந்தரும் வேளிரும் பிறரும்
நின்னடிக்கீழ்ப் பணிந்து தமக்குரிய (4) மென்பால்கள்தோறும் இருந்து
முன் பணிந்தவாற்றிற்கேற்ப (8) நின்வழியொழுகாராயின், அவர்கள் (5)
வெள்வரகுழுத கொள்ளுடைக் கரம்பையாகிய (11) வன்பாலிலே
கெட்டுப்போயிருந்து ஆண்டு விளைந்த வெள்வரகு உண்பதன்றித்
தாம் பண்டு உண்ணும் (8) செல்நெல்வல்சி உண்ணக்கிடையாதபடி
மிடிபடுகின்றார் (12); தத்தம் நாட்டினை ஒருங்கு ஆளுதல் அவர்க்கு
யாவணது (14) என வினை முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-2. பெரிய புலியைக் கொன்று பெரிய களிற்றை
கொன்று வீழ்த்துகின்ற, அரிய வரிகளையுடைய சிங்கத்தைப்
போல்வாய். பொறிவயமான்: "வரிகிளர் வயமான்" (அகநா. கடவுள்.14)

     3. பொலந்தார் யானை: முருகு. 79, 4.

     2-3. பலவாகிய வேற்படையையும், பொன்னாற் செய்த
மாலையை அணிந்த யானைப்படையையும், இயலுகின்ற
தேர்ப்படையையும் உடைய சேரனே. 4 - 5. முடியுடைய அரசரும்
குறுநில மன்னரும் மற்றையோரும் கீழ்ப்பணிந்து நின்வழியிலே
வாராராயின்.

     5-7. நெல் மிக்கு வளர அறுத்தலுற்ற கரும்பினது இனிய
பாகின் இடையறாத வருவாயை, அவ்விடத்தே வருபவர்க்கு
வரையாமல் வீசும் செல்வம் மிக்க குடியிருப்பையுடைய. நெல்லும்
கரும்பும் நிலவளத்தைப் புலப்படுத்துவன. கரும்பாலையிற் சாற்றை
வழங்கல்; "விசய மடூஉம் புகைசூ ழாலைதொறும், கரும்பின் றீஞ்சாறு
விரும்பினிர் மிசைமின்" (பெரும்பாண். 261 - 2)

     8. காட்டைத் தம் இருப்பிடமாகக் கொண்டு, மருத நிலங்கள்
தோறும். மென்பால் பின்வரும் நாட்டிற்குச் (14) சினை.

     9. அரிய பறையையுடைய தொழில் செய்வோர், புல்லிய
போரிலே பகைவரைத் தோல்விடையச் செய்து அவர் பாற் பெற்ற
பொருள்களை.

     10. கள்ளை விற்றலையுடைய கடைத் தெருவில் சிறந்த
விலையின் பொருட்டுக் கொடுக்கும்.

     விலை கொடுக்கும் (10) நாடு (14) என இயையும்.

     11. கவடி வித்துதற்கு உழுத குடைவேலையுடைய கரம்பை
நிலத்திலிருத்தலே யன்றி. வெள்வரகும் கொள்ளும் வித்தல்: புறநா.
392 : 10; பு. வெ. 120.

     12-4. செந்நெல்லாகிய உணவை அறியாராய்த் தங்கள்
தங்களுடைய, பாடல் அமைந்த ஊர்களையுடைய நாடுகளை ஒருங்கு
ஆளுதல் அவர்க்கு எங்கேயுள்ளது?

     குடியிருப்பையுடைய (7) மென்பால்தோறும் (8)
விலைகொடுக்கும் (10) வைப்பின் (13) நாடு (14) என இயைக்க.

     நின் வழிப்படாஅராயின் (5) நாடுடன் ஆளுதல் யாவணது (14)
என்க.

     (பி - ம்.) 8. தழீஇய மென்பால். 11. கல்லுடைக் கரம்பை.

     9. புலவிகல் படுத்து. 12. அறியாருடன.                (5)


     1பொருந. 193.
     2மென்பால்: புறநா. 42 : 18, உரை.




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

5. தீஞ்சேற்றியாணர்
 
75.இரும்புலி கொன்று பெருங்களி றடூஉம்
அரும்பொறி வயமா னனையை பல்வேற்
பொலந்தார் யானை யியறேர்ப் பொறைய
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து
 
5நின்வழிப் படாஅ ராயி னென்மிக்(கு)
அறையுறு கரும்பின் தீஞ்சேற்றி யாணர்
வருநர் வரையா வளம்வீங் கிருக்கை
வன்புலந் தழீஇய மென்பா றோறும்
மருபுல வினைஞர் புலவிகல் படுத்துக்
1
 
10கள்ளுடை நியமத் தொள்விலை கொடுக்கும்
வெள்வர குழுத கொள்ளுடைக் கரம்பைச்
செந்நெல் வல்சி யறியார் தத்தம்
பாடல் சான்ற வைப்பின்
நாடுட னாடல் யாவண தவர்க்கே .
 

இதுவுமது.

பெயர் : தீஞ்சேற்றியாணர்.

1 - 3. இரும்புலி........................பொறைய . 

உரை :  பல்வேல் பொலந்தார்  யானை இயல் தேர்ப் பொறைய -
பலவாகிய   வேற்படையும்   பொன்னரிமாலை  யணிந்த  யானையும்
இயலுகின்ற  தேருமுடைய பெருஞ் சேரலிரும் பொறையே ; இரும்புலி
கொன்று  -  பெரிய  புலியைக்  கொன்று ; பெருங் களிறு அடூஉம் -
அதனாலும்   சோர்வடையாது   உடன்  சென்று  பெரியயானையைக்
கொல்லுகின்ற;   அரும்   பொறி   வயமான்  அனையை  -  அரிய
வரிகளையும் வலியையுமுடைய அரிமாவினை ஒப்பாய் ;

பெருங் களிற்றினும் இரும்புலி வலி மிகவுடைத்தாதலின், அதனைக்
கொன்றும் சோர்வடையாதே இடையறவின்றிப் பெருங் களிற்றினையும்
கொல்லும்   பெருவலியுடைமை   தோன்ற,   “இரும்புலி   கொன்று
பெருங்களிறு  அடூஉம்”  என்றார் . அரிமாவிற்குப் பொறையனையும்,
புலிக்கு    ஏனை    வேந்தரையும்    பெருங்களிற்றுக்கு    வேளிர்
முதலாயினாரையும் கொள்க . பொலந்தார், பொன்னரிமாலை

4 - 7. வேந்தரும்........................வீங்கிருக்கை.

உரை :  வேந்தரும் வேளிரும்  பிறரும் கீழ்ப்பணிந்து  நின்வழிப்
படாஅ   ராயின்   -  முடிவேந்தரும்  குறுநில  மன்னரும்  பிறரும்
நின்னைக்  கீழ்ப்பணிந்து  நின்  விருப்பின்வழி ஒழுகாராயின்;  நெல்
மிக்கு  -  நெல்  மிக்கு  விளைய ;  அறையுறு கரும்பின் தீஞ்சேற்று
யாணர்   -   அதற்கிடையூறாக  வளர்ந்து   முற்றியிருத்தல்   பற்றி
வெட்டப்பட்ட கரும்பினது தீவிய சாறாகிய புது வருவாயினை ; வருநர்
வரையா  வளம்  வீங்கு  இருக்கை  -  அவ்விடத்தே  வருவோர்க்கு
வரையாது வழங்கும் செல்வம் மிகுந்த  இருக்கைகள் (ஊர்கள்) என்க.

நெல்மிக்கு விளைதலால்  அதனையும்,  கரும்பின் தீஞ்சாறு மேன்
மேலும் பெருகுதலால் அதனையும் வருவோர்க்கு வரையாது வழங்குப
என்பதாம்.   அறையுறு  கரும்பு,  அறுத்தலைப்  பொருந்திய கரும்பு.
இறுத்தல்  இறையென  வருதல்போல,  அறுத்தல் அறையென வந்தது.
நெல்லுக்கு  வேலியாக   நட்ட   கரும்பு  மிக  வளர்ந்து  நெல்லின்
வளர்ச்சியைக்  கெடுத்தலால்,   அறுக்கப்பட்ட   கரும்பு   என்றற்கு
“அறையுறு  கரும்பு”  என்றாரென்க. பழையவுரைகாரரும், “நெல்மிக்கு
அறையுறு கரும்பென்றது,  நெல்லின்கண்ணே  அந்நெல்லை நெருக்கி
மிக எழுந்தமையானே அறுக்கலுற்ற     கரும்பென்றவாறு”  என்றும்,
“இனி,       அந்நெற்றான்  கரும்பின்  மிக   எழுந்து    அதனை
நெருக்கினமையால் அந் நெல்லிற்கு இடமுண்டாக   அறுத்த  கரும்பு
எனினுமாம்”    என்றும்   உரைப்பர்  வரையாது  வழங்கிய வழியும்
வளம் குன்றாமைபற்றி, “வரையா வளம் வீங்கிருக்கை” என்றார். மிக்கு
என்பதை மிக வெனத் திரிக்க.
 

“தீஞ்சேறு     இனிய  பாகு”  என்றும்,  “யாணரென்றது,  அத்
தீஞ்சேற்றது   இடையற  வின்மையை”  என்றும்  “இச்  சிறப்பானே
இதற்குத்  தீஞ்சேற்றியாணர்  என்று  பெயராயிற்”  றென்றும் பழைய
வுரைகாரர் கூறுவர்.

நெல்லுக்கு     வேலியாக  நட்ட  கரும்பு  மிக வளர்ந்து அதன்
வளர்ச்சி்க்கு    இடையூறாவது   கண்டு   அதனைத்   தடிந்துபெற்ற
தீஞ்சேற்றியாணரை  வருநர்க்கு  வரையாது  வழங்குவரென்றது, குடி
புறந்தாராது   அவர்க்கு  இடையூறு  விளைக்கும் கொடுங்கோலரசை
வென்று, அவர்பாற் பெற்ற பொருளை வருநர்க்கு வரையாது வழங்கும்
சேரமானது நற்செயல் உள்ளுறுத் துரைத்தவாறு.

8 - 14. வன்புலம்............................தவர்க்கே .

உரை :  வன்புலம்தழீஇயமென்பால்தோறும் -   வன்னிலங்களைச்
சாரவுள்ள  மருத நிலங்கள் தோறும் ; மருபுல வினைஞர் - வித்தியது
முளையாத  களர் நிலத்தே தொழிலினைச் செய்யும் மறவர் ; புலவிகல்
படுத்து   -  அம்  மருதவயல்களைக்  கோடல்  குறித்து  நிகழ்த்தும்
மாறுபாட்டைக்கெடுத்தழித்து;கள்ளுடைநியமத்து  ஒள்விலைகொடுக்கும்
- அவர்பாற் பெற்றுக் கள் விற்கும் கடைகளில் கள்ளிற்கு விலையாகக்
கொடுக்கும்  ;  வெள் வரகு  உழுத கொள்ளுடைக் கரம்பை - உழுது
வித்திய   வெள்ளைவரகும்   கொள்ளும்   விளையும்  கரம்பையாய்
விடுதலால்;செந்நெல்  வல்சி அறியார் - அவ்வரகும் கொள்ளு மல்லது
செந்நெற்சோறு பெறாது வருந்துப வாகலின், அவர்க்கு - அவ் வேந்தர்
முதலாயினார்க்கு    ;    தத்தம்   பாடல்   சான்றவைப்பின்   நாடு
தத்தம்முடைய   புலவர்   பாடும்புகழ்   அமைந்த  ஊர்களையுடைய
நாட்டை  ;  உடன் ஆடல் யாவணது - ஒருங்கு ஆளுவது எங்ஙனம்
கூடும் எ - று.

எளிதில் உழுது வித்துதற்காகாத வன்னிலத்தைச் சார்ந்துள்ள மருத
வயல்களை,  “வன்புலந்  தழீஇய  மென்பால்”  என்றார். மென்பாலில்
நல்ல விளைவு உண்டாதலின், அதனைக் கோடற்கு ஏனை வன்புலத்து
வாழும்   மருநிலத்தார்  விரும்பி  முயல்ப  வாதலாலும்,  அக்காலை
மென்புலத்து  வாழ்நர்  அவரொடு  பொருப வாதலாலும், அப்போரில்
தோற்கும் மருபுல  வினைஞர்  தம்பால்  உள்ள  வரகும் கொள்ளும்
தண்டமாகத்  தருபவாதலாலும், “மருபுல  வினைஞர் புலவிகல் படுத்து”
என்றும்,       அத்       தண்டப்பொருளும்       கள்விலைக்கே
பயன்படுகிறதென்பார்,  “கள்ளுடை  நியமத்து  ஒள்விலை கொடுக்கும்
வெள்வர   குழுதகொள்”  என்றும்  கூறினார். மருபுலம்,  களர்நிலம்
“மருநில  முழுத்தில்  எரு  மிகப்பெய்து, வித்திட்டாங்கே விளைபயன்
கொள்ளச் சித்தத்துன்னும் மத்தர்  போலவும்” (திருக்கழுமல மும்மணி.
22:16-8) எனப் பட்டினத்தடிகள் கூறுவது   காண்க.  வன்புலந் தழீஇய
மென்பா  லென்றலின்,  வன்புலத்தார்   மென்புலத்தின்மேல் வழக்குத்
தொடுப்பராதலால்,  அதனைப்    “புலவிகல்”   என்றார்.   மென்புல
வினைஞரால் புல்லியவாகக்    கருதப்படும்    வரகும்    கொள்ளும்
வன்புலத்தார்க்கு  ஒண்பொருளாதலால்,  கள்ளிற்கு  அவற்றை உயரிய
பொருளாகக்  கொடுப்ப  ரென்பார், “ஒள்விலை கொடுக்கும்” என்றார்.
அவ்  வளம்   வீங்கு  இருக்கைகள் வெள்வரகும் கொள்ளும் வித்தும்
கரம்பையாய்   விடுதலால்,  “வெள்வர குழுத கொள்ளுடைக் கரம்பை”
யென்றார்   கரம்பை  யென்புழி ஆதலின் என ஒரு சொல் வருவிக்க .
வளம் வீங்கிருக்கை,  கரம்பையாதலின், என இயையும். நன்னிலங்களை
யழித்துக்  கழுதை   யேர்பூட்டி  வெள்வரகும்  கொள்ளும்  வித்துதல்
பண்டையோர்  முறை  ;  “இருங்களந்தோறும், வெள்வாய்க் கழுதைப்
புல்லினம் பூட்டி, வெள்ளை  வரகும் கொள்ளும் வித்தும், வைகலுழவ”
(புறம்  .  392)  என்று  சான்றோர்  கூறுதல் காண்க . இவ்வாறு தாம்
இருக்கும்    இருக்கைகள்    கரம்பையாய்    விடுதலால்,   வேந்தர்
முதலாயினார்     செந்நெல்லுணவின்றி   வறுமையுற்று   வலிகுன்றின
ரென்பார்,  “செந்நெல்  வல்சி  யறியார்”  என்றும், எனவே, அவர்தம்
நாட்டை  இனிதாளுதல்  இல்லை யென்றற்கு, “நாடுட னாடல் யாவண
தவர்க்கே”  யென்றும்  கூறினார்.  “பாடல்  சான்ற  வைப்பின் நாடு”
என்றது, நாட்டின் நன்மை கூறி யிரங்கியது.
 

இதுகாறுங்     கூறியது  : பொறைய,  நீ  அரும்பொறி  வயமான்
அனையை   ;  வேந்தரும்  வேளிரும்  பிறரும்  கீழ்ப்பணிந்து  நின்
வழிப்படாராயின், அவருடைய வளம் வீங்கிருக்கை, கரம்பை யாதலின்,
செந்நெல்   வல்சி   யறியாராய்த்   தத்தம்  நாடுடனாடல்  அவர்க்கு
யாவணதாம்   என்பதாம்.  இனிப்  பழையவுரைகாரர்,  வன்புலந்தழீஇ
யென்று  பாடங்  கொண்டு,  அதனைக் கரம்பையொடு கூட்டி, இருந்து
என  ஒரு  சொல்  வருவித்து,  வன்புலம்  தழீஇ  யிருந்து  என்றும்,
மென்பால்தோறும்  இருந்து  என்றும்  இயைத்து,  “பொறைய, நீ புலி
கொன்று  களிறடூஉம்  வயமான்  அனையை  ; அதனால் வேந்தரும்
வேளிரும்     பிறரும்    நின்னடிக்    கீழ்ப்பணிந்து,    தமக்குரிய
மென்பால்கடோறும்  இருந்து  முன்  பணிந்தவாற்றிற் கேற்ப நின்வழி
யொழுகாராயின்,     அவர்கள்     வெள்வரகுழுத   கொள்ளுடைக்
கரம்பையாகிய  வன்பாலிலே கெட்டுப்போ யிருந்து ஆண்டு விளைந்த
வெள்வரகு   உண்பதன்றித்  தாம்  பண்டுண்ணும்  செந்நெல்  வல்சி
உண்ணக்கிடையாதபடி  மிடிபடுகின்றார்  ; தத்தம் நாட்டினை ஒருங்கு
ஆளுதல் அவர்க்கு யாவணது என வினை முடிவு செய்க” என்பர் .

“இதனாற் சொல்லியது அவன்    வென்றிச் சிறப்புக் கூறியவாறா
யிற்று”


1. அரும்பறை வினைஞர் புல்லிகல் படுத்து - பாட வேறுபாடு.


 மேல்மூலம்