முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
76.



களிறுடைப் பெருஞ்சமந் ததைய வெஃகுயர்த்
தொளிறுவாண் மன்னர் துதைநிலை கொன்று
முரசுகடிப் படைய வருந்துறை போகிப்
பெருங்கட னீந்திய மரம்வலி யுறுக்கும்
 5




பண்ணிய விலைஞர் போலப் புண்ணொரீ இப்
பெருங்கைத் தொழுதியின் வன்றுயர் கழிப்பி
இரந்தோர் வாழ நல்கி யிரப்போர்க்
கீத றண்டா மாசித றிருக்கை
கண்டனென் செல்கு வந்தனென் கால்கொண்டு
 10




கருவி வானந் தண்டளி சொரிந்தெனப்
பல்விதை யுழவிற் சில்லே ராளர்
பனித்துறைப் புகன்றைப் பாங்குடைத் தெரியல்
கழுவுறு கலிங்கங் கடுப்பச் சூடி
இலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
 15
அகன்கண் வைப்பி னாடுகிழ வோயே.

     இதுவும் - அது. பெயர் - மாசிதறிருக்கை (8)

     (ப - ரை) 4. கடல் நீந்திய மரம் - மரக்கலம்.

     8. மா சிதறு இருக்கையென்றது பகைவரிடத்துக் கொள்ளப்பட்ட
மாக்களை வரையாது அளவிறக்கக் கொடுக்கும் பாசறையிருக்கை
யென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'மாசித றிருக்கை' என்று பெயராயிற்று.

     தண்டளி சொரிந்தென (10) ஏராளர் (11) கதிர்த்திருமணி
பெறூஉம் (14) நாடு (15) எனக்கூட்டி, மழை பெய்தலானே ஏராளர்
உழுது விளைத்துக் கோடலேயன்றி உழுத இடங்கள்தோறும்
ஒளியையுடைய திருமணிகளை எடுத்துக் கொள்ளும் நாடென
வுரைக்க.

     11. பல் விதை உழவின் சில்லேராளரென்றது பல விதையுழவாற்
பெரியராயிருப்பினும் தம் குலத்தானும் ஒழுக்கத்தாலும் சிறிய
ஏராளரென்றவாறு.

     சின்மையை, 1சின்னூலென்றதுபோல ஈண்டுச்சிறுமையாகக்
கொள்க.

     பகன்றைத் தெரியல் (12) கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடித் (13)
திருமணி பெறூஉம் (14) எனக் கூட்டி, பகன்றைமாலையைக் கழுவுறு
கலிங்கம் ஒப்பச் சூடிக்கொண்டு நின்று தி'ருமணிகளை
எடுக்குமெனவுரைக்க.

     நாடுகிழவோய் (15), மன்னர் (2) பெருஞ்சமம் ததைய
எஃகுயர்த்து (1) அம்மன்னர் பலர் கூடிச் செறிந்த நிலைமையைக்
கொன்று (2) அருந்துறை போகிக் (3) கடலை நீந்தின மரக்கலத்தினை
அழிவுசேராது வலியுறுக்கும் (4) பண்டவாணிகரைப் போலக் (5)
கைத்தொழுதியின் (6) புண்ணை ஒருவுவித்து (5) வலியதுயரைக்
கழித்துப் போரிடத்து வினையிலிருத்தலே 2வினோதமாகக் கொண்டு
(6) இரந்தோர் வாழ நல்கிப் பின்னும் இரப்போர்க்கு (7) ஈதலின்
மாறாத மாசித றிருக்கையைக் (8) கண்டுபோவேன் வந்தேன் (9) எனக்
கூட்டி வினை முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்பும் கொடைச்
சிறப்பும் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. ஆண்யானைகளையுடைய பெரிய போர்
சிதைதலால் வேலையுயர்த்து. வென்றபின் வேலை உயர்த்தல்:
புறநா
. 58 : 29; பு. வெ. 199,

     2. விளங்குகின்ற வாளையுடைய அரசர் தம்மில் ஒன்றுகூடின
நிலையை அழித்து. 3. வெற்றிமுரசு குறுந்தடியால் அடிக்கடிப்படுதலை
அடையும்படி அரிய போர்த்துறையை முடித்து.

     4-5. பெரிய கடலில் நீந்திய மரக்கலத்தைப் பழுதுபார்த்து
அதற்கு வன்மையைச் சேர்க்கும், பண்டங்களை விலைக்கு விற்கும்
வாணிகரைப் போலப் புண்ணை ஒருவுவித்து. ஒரீஇ: பிறவினைப்
பொருளில் வந்தது.

     6. பெரிய துதிக்கையுடைய யானைத் தொகுதியின் வலிய
துயரைப் போக்கி.

     4-6. யானைக்கு மரக்கலமும் அதன் புண்ணைப் போக்கும்
அரசனுக்கு வாணிகரும் உவமை.

     7-9. முன்பு வந்து இரந்தோர் மகிழும்படி கொடுத்து, பின்
வந்து இரப்போருக்கு ஈதலினின்றும் மாறாத, குதிரைகளை வீசும்
இருக்கையைக்கண்டு செல்வேனாகி வந்தேன்.

     மா சிதறுதல்: "நாளீண்டிய நல்லகவர்க்குத், தேரோடு மாசிதறி"
(மதுரைக். 223 - 4)

     9-10. பெய்யத்தொடங்கி மின் முதலிய தொகுதியையுடைய
மேகம் குளிர்ந்த துளியைச் சொரிந்ததாக, அதனால்.

     11. பலவாக விதைத்தலையுடைய உழவினையும் சிறிய ஏரையும்
உடையோர். சின்மை சிறுமை என்னும் பொருளில் வந்தது.

     12. குளிர்ச்சியையுடைய நீர்த்துறையினிடத்தேயுள்ள பகன்றைப்
பூவினது நன்மையையுடைய மாலையை.

     13. வெளுத்தலுற்ற வெள்ளிய ஆடையைப் போலச் சூடி.
பகன்றைக்குக் கலிங்கம்: "போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன
அகன்றுமடி கலிங்க முடீஇ" (புறநா. 393 : 17 - 8). பகன்றை
மலரைச் சூடுதல்: மலைபடு. 459; ஐங்குறு. 87 : 1.

     14-5. விளங்குகின்ற கிரணத்தையுடைய அழகிய மணியைப்
பெறுதற்கு இடமான, அகன்ற இடத்தையுடைய ஊர்களையுடைய
நாட்டுக்கு உரிமையை யுடையோய்.

     (பி - ம்) 2. ததைநிலை. 4. பண்ணிய வினைவர்.      (6)


     1சின்னூல் - நேமிநாதம்; "சின்னூ லுரைத்த குணவீர பண்டிதன்"
(தொண்டை மண்டல சதகம்)
     2வினோதம் - பொழுது போக்கு.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

6. மா சித றிருக்கை
 
76.களிறுடைப் பெருஞ்சமந் ததைய வெஃ.குயர்த்
தொளிறுவாண் மன்னர் துதைநிலை கொன்று
முரசுகடிப் படைய வருந்துறைப் போகிப்
பெருங்கட னீந்திய மரம்வலி யுறுக்கும்
 
5பண்ணிய விலைஞர் போலப் புண்ணொரீஇப்
பெருங்கைத் தொழுதியின் வன்றுயர் கழிப்பி
இறந்தோர் வாழ நல்கி யிரப்போர்க்
கீத றண்டா மாசித றிருக்கை
கண்டனென் செல்கு வந்தனென் கால்கொண்டு
 
10கருவி வானந் தண்டளி சொரிந்தெனப்
பல்விதை யுழவிற் சில்லே ராளர்
பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல்
கழுவுறு கலிங்கக் கடுப்பச் சூடி
இலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
 
15அகன்கண் வைப்பி னாடுகிழ வோயே .
 

இதுவுமது

பெயர் : மா சித றிருக்கை.

9 - 15 கால் கொண்டு...........................நாடுகிழ வோயே .

உரை :  கருவி வானம் கால் கொண்டு  தண்தளி   சொரிந்தென
தொகுதி  கொண்ட மழை மேகம் நாற்றிசையும் காலிறங்கித் தண்ணிய
மழையைப்  பெய்ததாக  ;  பல்  விதை  உழவின்  சில்  ஏராளர்  -
மிகுதியாக விதைத்தற்கேற்பப் பரந்த உழுநிலங்களையுடைய சிலவாகிய
ஏர்களை  யுடைய  உழவர்  ;  பனித்துறைப்  பகன்றைப் பாங்குடைத்
தெரியல்  -  குளிர்ந்த  நீர்த்துறையிடத்தே  மலர்ந்துள்ள  பகன்றைப்
பூவாற்றொடுத்த  அழகுடைய  மாலையை;  கழுவுறு கலிங்கம் கடுப்பச்
சூடி   -  வெளுக்கப்பட்ட  வெள்ளாடை  போலத்  தலையிற்  சூடிக்
கொண்டு   ;   இலங்கு  கதிர்த்   திருமணி   பெறூஉம்  -  உழும்
படைச்சாலிடத்தே    விளங்குகின்ற    கதிர்களையுடைய    அழகிய
மணிகளைப்  பெறுகின்ற  ;  அதன்கண் வைப்பின் நாடு கிழவோய் -
அகன்ற இடமுடைய ஊர்கள் பொருந்திய நாட்டுக்கு உரியோனே எ-று.
 

இடி, மின்னல், மழை முதலியவற்றின்  தொகுதியாதல்பற்றி, “கருவி
வானம்” எனப்பட்டது. மழை முகில் நாற்றிசையும் பரவுமிடத்துக்  கால்
விட்டிறங்குதல்        கண்கூடாதலின்   “கால்கொண்டு”   என்றார்.
கால்கொண்டென்பதற்குப்    பெய்தலைத்  தொடங்கி  யென்றலுமாம்.
விதையின்  பெருமையை  நோக்க,  உழுதற்குரிய ஏர்கள் சிறியவாதல்
பற்றி,   “பல்விதை   யுழவிற்   சில்லேராளர்”   என்றார் .  “அகல
வுழுவதினும்    ஆழ    வுழுதல்    வேண்டுமாதலால்  அதற்கேற்ற
பெருமையுடைய  வாகாது  சிறுமையுடை  மைபற்றியே  சில்லேராளர்”
என்று  கூறல்  வேண்டிற்று  .  சின்மை,  சிறுமை  குறித்து  நின்றது.
பழையவுரைகாரரும்,  “சின்மையைச் சின்னூ லென்றது போல ஈண்டுச்
சிறுமையாகக் கொள்க” என்றார். சில்லேராளர் உழுத படைச்சால் மிக
ஆழமுடைத்தன்    றாயினும்,   அதன்கண்ணும்   அவர்கள்   மிக்க
விளைபயனேயன்றி   உயரிய  மணிகளைப்  பெறுகின்றார்களென்பார்,
“சில்லேராளர் இலங்குகதிர்த் திருமணி பெறூ உம் நாடு” என்றார்.

பகன்றைமலர்க்கு     வெளுத்த  ஆடையை  உவமை  கூறுதலும்,
ஆடைக்கு  அம்மலரை  யுவமை  கூறுதலும்  சான்றோர் வழக்காகும்
“போதுவிரி  பகன்றைப்  புதுமல  ரன்ன, அகன்றுமடி கலிங்க முடீஇச்
செல்வமும்,   கேடின்று  நல்குமதி  பெரும”  (புறம் .  393)  என்று
நல்லிறையனார்  என்னும்  சான்றோர் கூறுதல் காண்க. பகன்றையைக்
கண்ணியாகத்தொடுத்தணிதலே     பெரும்பான்மை    வழக்காதலின்,
தெரியலென்றது   கண்ணியெனக்   கொள்ளப்பட்டது  ;  “பகன்றைக்
கண்ணிப்   பல்லான்  கோலவர்”  (ஐங்.  87)  என்றும்,  “பகன்றைக்
கண்ணிப்  பழையர்”  (மலைபடு.  459)  என்றும்  வருதல்  காண்க .
சலவை   செய்யப்பட்ட  ஆடை  யென்றற்குக்  “கழுவுறு  கலிங்கம்”
என்றார்.   உயர்ந்த   மணி   யென்பார்,   “திருமணி”  யென்றார்  .
பெருவருவாயுடைமை  தோன்ற,  அகன்கண்  வைப்பின்  நாடு என்று
சிறப்பிக்கப்பட்டது.

இனிப்   பழையவுரைகாரர், “தண்டளி சொரிந்தென ஏராளர் கதிர்த்
திருமணி  பெறூஉம்  நாடு  எனக்கூட்டி, மழை பெய்தலானே ஏராளர்
உழுது    விளைத்துக்கோடலே   யன்றி   உழுத   இடங்கள்தோறும்
ஒளியையுடைய    திருமணிகளை    யெடுத்துக்கொள்ளும்   நாடென
வுரைக்க”   என்றும்,   “பல்விதை   யுழவின்  சில்லே  ராளரென்றது,
பலவிதை  யுழவாற் பெரியாராயினும் தம் குலத்தானும் ஒழுக்கத்தானும்
சிறிய  ஏராள  ரென்றவா”  றென்றும,்  “பகன்றைத்  தெரியல் கழுவுறு
கலிங்கம்  கடுப்பச் சூடித் திருமணி பெறூஉம் எனக் கூட்டி, பகன்றை
மாலையைக்   கழுவுறு   கலிங்கம்   ஒப்பச்   சூடிக்கொண்டு  நின்று
திருமணிகளை யெடுக்குமென வுரைக்க” என்றும் கூறுவர்.

1 - 9. களிறுடைப் பெருஞ் சமம்......................வந்தனென் .

உரை :   களிறு  உடைப்  பெருஞ்சமம்  ததைய - களிறுகளைக்
கொண்டு  செய்யும்  பெரிய  போர்  கெடுமாறு  ;  எஃகு  உயர்த்து-
வேலும்  வாளும்  ஏந்திச்சென்று  ; ஒளிறு வாள் மன்னர் துதைநிலை
கொன்று  -  விளங்குகின்ற  வாளையுடைய  பகை  மன்னர்  தம்மிற்
கூடிநின்று  பொரும்  போர்நிலையைக்  கொன்றழித்து ; முரசு கடிப்பு
அடைய  -  வெற்றி  முரசை  அதன்  கடிப்பு  அறைந்து  முழக்க ;
அருந்துறை போகி - செய்தற்கரிய போர் செயற்குரிய துறை முற்றவும்
கடைபோகச்         சென்று ;          பெருங்கடல்      நீந்திய

மரம்   வலியுறுக்கும்  பண்ணிய விலைஞர்  போல - கடலைக்கடந்து
சென்று    மீளுதலால்   பழுதுற்ற   மரக்கலத்தின்  பழுது  போக்கிப்
பண்டுபோல  வலியுடைத்தாக்கும் கடல் வாணிகர்போல ; பெருங்கைத்
தொழுதியின்  புண்ணொரீஇவன் துயர் - கழிப்பிபெரிய கையையுடைய
யானைக்  கூட்டம்  உற்ற போர்ப்புண்களை ஆற்றி அவற்றால் அவை
துன்புற்ற  வலிய  துயரத்தையும்  போக்கி  ; இரந்தோர் வாழ நல்கி -
முற்போதில்  வந்து  இரந்தவர்  வறுமை நீங்கி வாழுமாறு கொடுத்து ;
இரப்போர்க்கு  - பிற்போதில் வந்து இரப்போருக்கும்;ஈதல் தண்டாத -
ஈதலின்  குன்றாத;  மா  சிதறு  இருக்கை  - குதிரைகளை வரையாது
வழங்கும் நின் பாசறை இருப்பினை ; கண்டனென் செல்கு வந்தனென்
- கண்டு போவான் வந்தேன் எ - று.

களிறுடைமை போர்க்குப் பெருமை தருதலின், “களிறுடைப் பெருஞ்
சமம்” என்றார்; “யானையுடைய படைகாண்டல் முன்னினிதே” (இனி .
40:5)   என்று  சான்றோர்  கூறுதல்  காண்க  .  ததைதல்,  கெடுதல்;
“வேலுடைக்  குழூஉச்  சமந்ததைய  நூறி”  (பதிற். 66) எனப் பிறரும்
கூறுதல்   காண்க.   துதை   நிலை,  கூடியிருக்கும்  அணி  வகுப்பு.
அணிநிலையை   யழித்த   வழி,  வீரர்  படையும்  பிற  படைகளும்
ஒழுங்கின்றித்  தாறுமாறாய்ச்  சிதறி  எளிதில் அழிவராதலின், “துதை
நிலை  கொன்று”  என்றார்  .  சிதைத்தென்னாது “கொன்” றென்றார்.
மறுவலும் துதைந்து நிலைபெறா வகையில் அழித்தமை தோன்ற, முரசு
கடிப்பு  அடைய  என்றது.  முரசு  முழங்க  என்றவாறு போர் முறை
வெட்சி முதலாகப் பல்வகைப்படுதலின், “அருந்துறைபோகி” என்றார் .
பெருங்கடலைப்   பகைவர்   படைக்கும்,   மரக்கலத்தைக்  களிற்றுத்
தொழுதிக்கும்,   பண்ணிய   விலைஞரைச்   சேரமான்   வீரருக்கும்
உவமமாகக்   கொள்க  .  பெருங்காற்றும்  பேரலையும்  மோதுதலால்
கட்டுத்தளர்ந்த   கலத்தைக்   ,   கரைசேர்ந்ததும்  கட்டுடைத்தாக்கி
வலியுறுத்தல்  கலஞ் செலுத்துவோர்க்கு இன்றியமையாச் செய்தியாகும்.
பெருங்கடல்    நீந்திய    மரமென்றது,    மரக்கலத்தை   பல்வேறு
பண்டங்களையும்   கலத்திற்கொண்டு  வேறு  நாடு  சென்று  விற்றுப்
பொருளீட்டுதல்   பற்றிக்   கலத்திற்  செல்லும்  கடல்  வாணிகரைப்
“பண்ணிய   விலைஞர்”  என்றார்.  யானைகட்குப்  போரிலுண்டாகிய
புண்ணால்  மிக்க துயருண்டாவதையறிந்து புண்ணை யாற்று முகத்தால்
துயர்  போக்குதலால்,  “புண்ணொரீஇ  வன்றுயர்  கழிப்பி” யென்றார்.
வன்றுயர்   என்றதனால்,   உற்ற  புண்  பெரும்  புண்ணென்  றறிக.
இரந்தோர்  இரப்போர்  என  இறப்பினும்  எதிர்வினும்  கூறியதனால்
பிற்பொழுது     முற்பொழுது    கொள்ளப்பட்டன.     முற்பொழுது
வந்திரந்தோர்    களிறு    பெற்றுச்   சென்றமையின்,   பிற்பொழுது
வருவோர்க்குக்    குதிரைகளை    வழங்கலானானென   வுணர்க   .
எண்ணிறந்தனவாதலின்,  குதிரைகளைச்  சிதறினான் என்றார் ; இவை
பகைவரிடத்தே  பெற்றனவாம்  .  இனி, பழையவுரைகாரரும், “மா சித
றிருக்கை   யென்றது   பகைவரிடத்துக்   கொள்ளப்பட்ட  மாக்களை
வரையாது  அளவிறக்கக்  கொடுக்கும் பாசறை யிருக்கை யென்றவாறு”
என்றும்,   “இச்   சிறப்பானே   இதற்கு   மாசித   றிருக்கையென்று
பெயராயிற்” றென்றும் கூறுவர் .
 

இதுகாறும்     கூறியது : வானம் தளி சொரிந்தெனச் சில்லேராளர்
பகன்றைத்  தெரியல்  கலிங்கம்  கடுப்பச்  சூடித் திருமணி பெறூஉம்
அகன்கண்   வைப்பின்   நாடு   கிழவோய்,   பெருஞ்சமம்  ததைய
எஃகுயர்த்து,   மன்னர்   துதைநிலை   கொன்று,  அருந்துறைபோகி,
பண்ணிய  விலைஞர்போலப் பெருங்கைத் தொழுதியின் புண்ணொரீஇ
வன்றுயர் கழிப்பி, இரந்தோர் வாழ நல்கி, இரப்போர்க்கு ஈதல் தண்டா
மாசிதறிருக்கை    கண்டனென்   செல்கு   வந்தனென்   என்பதாம்.
பழையவுரைகாரர்,  “நாடு  கிழவோய்,  மன்னர்  பெருஞ்சமம் ததைய
எஃகுயர்த்து   அம்மன்னர்   பலர்  கூடிச்  செறிந்த  நிலைமையைக்
கொன்று  அருந்துறை போகிக் கடலை நீந்தின மரக்கலத்தினை அறிவு
சேராது  வலியுறுக்கும்  பண்டவாணிகரைப்போலக்  கைத்தொழுதியின்
புண்ணை   ஒருவுவித்து   வலிய   துயரைக்   கழித்துப் போரிடத்து
வினையிலிருத்தலே  விநோதமாகக்கொண்டு  இரந்தோர் வாழ நல்கிப்
பின்னும் இரப்போர்க்கு ஈதலின் மாறாத மா சித றிருக்கையைக் கண்டு
போவேன் வந்தேன் எனக் கூட்டி வினை முடிவு செய்க” என்பர்.

“இதனாற் சொல்லியது   : அவன்  வென்றிச்  சிறப்பும்  கொடைச்
சிறப்பும் கூறியவாறாம்.”


 மேல்மூலம்