முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
79.



உயிர்போற் றலையே செருவத் தானே
கொடைபோற் றலையே யிரவலர் நடுவட்
பெரியோர்ப் பேணிச் சிறியோரை யளித்தி
நின்வயிற் பிரிந்த நல்லிசை கனவினும்
 5




பிறர்நசை யறியா வயங்குசெந் நாவிற்
படியோர்த் தேய்த்த வாண்மைத் தொடியோர்
தோளிடைக் குழைந்த கோதை மார்ப
அனைய வளப்பருங் குரையை யதனால்
நின்னோடு வாரார் தந்நிலத் தொழிந்து
 10




கொல்களிற் றியானை யெருத்தம் புல்லென
வில்குலை யறுத்துக் கோலின் வாரா
வெல்போர் வேந்தர் முரசுகண் போழ்ந்தவர்
அரசுவா வழைப்பக் கோடறுத் தியற்றிய
அணங்குடை மரபிற் கட்டின்மே லிருந்து
 15




தும்பை சான்ற மெய்தயங் குயக்கத்து
நிறம்படு குருதி புறம்படி னல்லது
மடையெதிர் கொள்ளா வஞ்சுவரு மரபிற்
கடவு ளயிரையி னிலைஇக்
கேடில வாக பெருமநின் புகழே.

     துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும்
தூக்கும் அது. பெயர் - நிறம்படு குருதி
(16)

     (ப - ரை) 4. பிரிந்த நின்வயின் நல்லிசையெனக் கூட்டுக;
பிரிதல் - தன்னைவிட்டுத் திக்கு 1விதிக்குக்களிலே போதல்.

     இசை (4) அறியா (5) என முற்றாக அறுத்துரைக்க.

     9. நின்னொடுவாரார் தந்நிலத்து ஒழிந்தென்றது நின்னை
வழிபட்டு நின்னொடு ஒழுகாதிருத்தலேயன்றித் தந்நிலத்திலே
வேறுபட்டு நின்றென்றவாறு.

     யானையெருத்தம் புல்லென (10) வில்குலையறுத்துக்
கோலின்வாரா (11) வேந்தர் (12) என்றது முன்பு நின்வழி ஒழுகாது
ஒழிந்திருந்தவழிப் பின்பு தாம் களத்து நின்போர் வலிகொண்டு இனி
நின்வழி ஒழுகுதுமெனச் சொல்லித் தாம் ஏறிய யானையெருத்தம்
புல்லென வில்லின் நாணியை அறுத்து நின்செங்கோல் வழி ஒழுகாத
வேந்தரென்றவாறு.

     13. 2அழைத்தல் - வருத்தத்தாற் கதறுதல்.

     தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து (15) நிறம்படு குருதி
(16) என்றது வீரருடைய, தும்பை சூடியதற்கேற்ப நின்று
பொருதலாற்றலையுடைய உடலானது அசையும்படி வந்த
ஓய்வினையுடைய நிறங்களைத் திறந்து விட்ட குருதியென்றவாறு.

     அல்லாத இடங்களிற் குருதிகொள்ளாமையின், 3நிறங்களைத்
திறக்க ஆண்டு உண்டான குருதியென்பதாயிற்று.

     இச்சிறப்பானே இதற்கு, 'நிறம்படுகுருதி' என்று பெயராயிற்று.

     4கோடறுத்து இயற்றிய (13) கட்டின்மேலிருந்து (14) நிறம்படு
குருதி புறம்படினல்லது (16) மடை எதிர்கொள்ளாக் (17) கடவுள் (18)
எனக் கூட்டி, அவ்வாறு செய்ததொருகட்டில் கொடுவந்திட்டதன்
மேலிருந்து அவ்வாறு கொடுப்பதொரு பலியுண்டாயினல்லது பலி
கொள்ளாக் கடவுளென உரைக்க.

     கட்டின்மேலிருந்தலல்லது (14) குருதிபுறம்படினல்லது (16) என
அல்ல தென்பதனை இரண்டிடத்தும் கூட்டிக் கொள்க.

     18. கடவுளென்றது அவனால் இவ்வாறு வழிபடும்
கொற்றவையை; அயிரை - அக்கொற்றவை உறைவதொரு மலை.

     கோதைமார்ப (7), செருவத்துஉயிர்போற்றலை (1); இரவலர்
நடுவண் கொடை போற்றலை (2); பெரியோரைப் பேணிச்சிறியோரை
அளித்தி (3), அனைய நின்குணங்கள் அளப்பரியை; நீ அவ்வாறு
ஒழுகுதலாற் (8) பிரிந்த நின்வயின் நல்லிசை இனிக் கனவிலும் (4)
பிறர் நச்சுதலறியா; அவ்வாறு அறியாமையின் (5), பெரும,
அவ்வாறாகிய நின்புகழ் (19) நிலைஇ நின்னிடத்துக் கேடிலவாக (18)
என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க.

     'அனையவளப்பருங்குரையை' (8) என்றது 'சிறியோரையளித்தி'
(3) என்றதன் பின்னே நிற்கவேண்டுதலின், மாறாயிற்று.

     இதனாற் சொல்லியது, அவன் பலகுணங்களும் ஒருங்கு
புகழ்ந்து வாழ்த்தியவாறாயிற்று.

     (கு - ரை) 1. போரில் உயிரைப் பொருளாக எண்ணமாட்டாய்.

     2. இரப்பாராகிய பரிசிலர்நடுவே கொடையைப் பாதுகாக்க
மாட்டாய்; என்றது அளவிறந்து கொடுப்பாயென்றபடி.

     3. நின்னைக் காட்டிலும் பெரியோர்களைப் பாதுகாத்துச்
சிறியோர்களுக்கு அருள் செய்வாய்.

     4-5. நின்பால் நின்றும் பிரிந்து பல திசைகளிற் சென்ற
நின் நல்லிசைகள் கனவினிடத்தாயினும் பிறரை விரும்புதலையறியா;
அறியா: முற்று. கல்வி, வீரம், கொடை முதலிய காரணங்களால் இசை
பலவகைப் படுதலிற் பன்மையாற் கூறினார்; பதிற். 12 : 8, உரை.

     6. படியோர்த் தேய்த்த ஆண்மை: மலைபடு. 423.

     6-7. மகளிர் தோளிடைக்குழைந்த தார்: புறநா. 73 : 13-4,
குறிப்புரை.

     5-7. விளங்கிய பொய்கூறாத நாவினையும், பகைவரை
அழித்த ஆண்மையையும் உடைய வளையை யணிந்த மகளிருடைய
தோளினிடத்தே குழைந்த மாலையை யணிந்த மார்பை உடையோய்.
படியோர்-பிரதியோரென்னும் வடமொழித்திரிவு (அகநா. 22 : 5,
உரை). நாவினையும் ஆண்மையையும் உடைய மார்ப என இயையும்.

     8. அப்படிப்பட்ட நின்குணங்கள் அளத்தற்கரியை; அதனால்,
குரை: அசைச்சொல்.

     9-10. நின்னொடு இணங்கி வருதலிலராகித் தம்முடைய
நாடுகளில் தங்கியிருந்து, பின்பு போர்க்களத்தே நின்வன்மைகண்டும்,
கொல்லுகின்ற களிறாகிய பட்டத்து யானையின் பிடரிக்கழுத்துப்
பொலி வழிய; "யானை யெருத்தம் பொலியக் குடைநிழற் கீழ்ச்,
சேனைத் தலைவராய்ச் சென்றோரும்" (நாலடி. 3) என்பதற்கு மாறான
நிலையைக் கூறியபடி.

     11-2. வில்லின் நாணையறுத்து நினது செங்கோலின்கீழ் அடங்கி
வாராத, முன்புவெல்லும் போரைச்செய்த அரசருடைய முரசின்
கண்ணைக் கிழித்து. குலை - நாண்; "குலையிழி பறியாச் சாபத்து
வயவர்" (பதிற். 24 : 12)

     12-4. அவருடைய பட்டத்து யானை வருத்தத்தாற் கதறும்படி
அதனுடைய கொம்பை வெட்டி அதனால் இயற்றப்பட்ட
தெய்வத்தன்மையுடைய இயல்பைப்பெற்ற கட்டிலின்மேலிருந்தல்லது;
புறம்படினல்ல தென்பதிலுள்ள அல்லதென்பதை இருந்தென்பதனோடும்
கூட்டுக.

     15. தாம் தும்பைப் பூவைச் சூடியதற்கேற்ப நின்று பொருகின்ற
ஆற்றலையுடைய உடலானது அசையும்படி வந்த ஓய்வினையுடைய.

     16. உயிர்நிலையினின்றும் உண்டான இரத்தம் பலியாக
அளிக்கப்படும் பொருள்மேற் பட்டாலல்லாமல். "அருநிறந் திறந்த
புண்ணுமிழ் குருதி" (பதிற். 11 : 8)

     17-8. நிவேதனமாக அளிக்கப்படும் பொருளை ஏற்றுக்
கொள்ளாத அச்சம் வருகின்ற முறைமையையுடைய துர்க்கை வாழும்
அயிரை மலையைப் போல நிலைபெற்று. அயிரைமலையிலுள்ள
துர்க்கை சேரர்களால் வழிபடப் பெற்றமை; பதிற். 3-ஆம்
பத்துப்பதிகம், 8, உரை: "கண்ணுதலோன் காப்பக் கடன்மேனி
மால்காப்ப, எண்ணிருதோ ளேந்திழையாடான் காப்ப" (தொல். புறத்.
35, ந. மேற்.) என்னும் புறநிலைவாழ்த்துச் செய்யுளிலும் துர்க்கை
வழிபடப் பெற்றமை காண்க.

     19. பெருமானே, நின்னுடைய புகழ்கள் அழிவில்லாமல்
விளங்குக.

      18-9. நின்புகழ் அயிரையின் விளங்குக என்றாராயினும்
சேரனை வாழ்த்துதலே கருத்தாகக் கொள்க. (பதிற். 70 : 26 - 7)

     மலைபோல் நிலைபெறுக வென்றல்: "பூமலி நாவற்
பொழிலகத்துப் போய்நின்ற, மாமலைபோன் மன்னுக நீ"
(பு. வெ. 226)

     (பி - ம்) 4. பிறந்த. 8. அனையையளப் 9. வாரார்நின்னிலத்
தெளிந்து.
                                   (9)


     1விதிக்கு - கோணத்திசை.
     2அழைப்பு - பொருள்புணரா ஓசை (திருச்சிற. 102, பேர்.)
     3நிறம் - உயிர்நிலை; "அறந்திறந்த வாயி லடைத்ததா லண்ணல்,
நிறந்திறந்த நீளிலை வேல்" (
பு. வெ. 80).
     4"உலமரு நெஞ்சி னொட்டா மன்னவ ரூர்ந்த யானை, வலமருப்
பீர்ந்து செய்த மணிகிளர் கட்டில்" (
சீவக. 2566)




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

9. நிறம்படு குருதி
 
79.உயிர்போற் றலையே செருவத் தானே
கொடைபோற் றலையே யிரவலர் நடுவண்
பெரியோர்ப் பேணிச் சிறியோரை யளித்தி
நின்வயிற் பிரிந்த நல்லிசை கனவினும்
  
5பிறர்நசை யறியா வயங்குசெந் நாவின்
படியோர்த் தேய்த்த வாண்மைத் தொடியோர்
தோளிடைக் குழைந்த கோதை மார்ப
அனைய வளப்பருங் குரையை யதனால்
நின்னொடு வாரார் தந்நிலத் தொழிந்து
  
10கொல்களிற் றியானை யெருத்தம் புல்லென
வில்குலை யறுத்துக் கோலின் வாரா
வெல்போர் வேந்தர் முரசுகண் போழ்ந்தவர்
அரசுவா வழைப்பக் கோடறுத் தியற்றிய
அணங்குடை மரபிற் கட்டின்மே லிருந்து
 
15தும்பை சான்ற மெய்தயங் குயக்கத்து
நிறம்படு குருதி புறம்படி னல்லது
மடையெதிர் கொள்ளா வஞ்சுவரு மரபிற்
கடவு ளயிரையி னிலைஇக்
கேடில வாக பெருமநின் புகழே.
 

துறை  : செந்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்   : நிறம்படுகுருதி.

 1 - 8. உயிர் ............. குரையை.   

உரை :  வயங்கு செந் நாவின் - மெய்ம்மைமொழியால் விளக்கம்
பொருந்திய  செவ்விய நாவினையும் ; படியோர் தேயத்த ஆண்மை -
வணங்காதாரை   வலியழித்த   ஆண்மையினையும்   ;  தொடயோர்
தோளிடைக்   குழைந்த  கோதை  மார்ப  -  தொடியணிந்த  மகளிர்
தோளைக்     கூடுதலால்    குழைந்த       மாலை      யணிந்த
மார்பையுமுடைய  வேந்தே; செருவத்தான் உயிர் போற்றலை-போரிலே
நீ உயிரைப் பொருளாகக் கருதிற்றிலை ;  இரவலர்  நடுவண் கொடை
போற்றலை  - பரிசில்  வேண்டிவரும்   இரப்போர்     கூட்டத்திலே
கொடுக்குஞ்   செயலில் எதனையும்  என்றும்  வரைதலை  யறியாய் ;
பெரியோர்ப்    பேணிச்  சிறியோரை   அளித்தி - பெரியோர்களைத்
தமராகப்    பேணிக்கொண்டு    ஆற்றலாற்     சிறியராயினாரையும்
புறக்கணியாது அருள் செய்கின்றாய் ; பிரிந்த  நின்  வயின்  நல்லிசை
- எல்லாத்  திசையினும்  சென்று பரவியிருக்கும்  நின் நல்ல புகழ்கள்;
கனவினும் பிறர் நசை யறியா - கனவிலும்  தம்மை  விரும்பும் பிறரை
விரும்பிச்  செல்லாவாயின ; அனைய    அளப்பருங்    குரையை -
அத்   தன்மையவாகிய  அளத்தற்கரிய     குணஞ்     செயல்களை
யுடையையாயிருக்கின்றாய் எ - று.
 

நாவிற்கு     விளக்கம், தான் வழங்கும் மெய்ம்மை மொழியாலும்,
செம்மை,  யாதொன்றும் தீமையிலாத சொல்லுதலாலுமாதலின் “வயங்கு
செந்நாவின்”  என்றார்.  பாடியர்,  படியோரென  நின்றது  ; படியார்,
வணங்காதார்  ;  “படியோர்த் தேய்த்த பணிவி லாண்மை”1 (மலைபடு.
423)  என்று  பிறரும் கூறுதல் காண்க. படிதல், வணங்குதல். “படியோ
ரென்றது  பிரதியோ  ரென்னும்  வடமொழித் திரிவு” (அகம். 22) என
அகநானூற்று  அரும்பதவுரைகாரர்  கூறியது  சொன்னிலை  யுணராது
கூறியதாகலின் பொருந்தாமை யறிக. மகளிர் முயக்கிடை மார்பிலணிந்த
தாருமாலையுங்  குழையுமாதலின்  “தொடியோர் தோளிடைக் குழைந்த
கோதை  மார்ப”  என்றார்  ;  “காதல் கொள்ளாப், பல்லிருங் கூந்தல்
மகளிர்,  ஒல்லா  முயக்கிடைக் குழைக வென்தாரே” (புறம். 73) எனச்
சோழன் நலங்கிள்ளி கூற்றாலும் ஈதறியப்படும்.

செரு     : அம்முப்பெற்றுச் செருவமென வந்தது ; செருவின்கண்
பிறக்கும்  புகழ்  மேற்  சென்ற  வேட்கையால் உயிரைப் பொருளாகக்
கருதிற்றிலனாதல்,  “உயிர்  போற்றலையே செருவத்தானே” என்றார் ;
“சுழலுமிசை   வேண்டி   வேண்டா  வுயிரார்”  (குறள்.  777)  எனச்
சான்றோர்  கூறுதல்  காண்க. ஈத்துவக்கும் இன்பத்தாலும் ஈகைக்கண்
இசை  நிற்பதாலும் வரையாது வழங்கும் வண்மையுடையனாதல் கண்கு
“கொடை   போற்றலையே   இரவலர்   நடுவண்”  என்றார்.  கொடை
போற்றாமையாவது   “இன்று   செலினுந்  தருமே  சிறுவரை,  நின்று
செலினுந்  தருமே  பின்னும்,  முன்னே தந்தனெ னென்னாது துன்னி,
வைகலும்   செலினும்   பொய்யல   னாகி”  (புறம்.  171)  இரப்போர்
வேண்டிய  வேண்டியாங்கு  வழங்குவது. பெரியாரைப் பேணிக்கொளல்
அரசர்க்குப் பெருவன்மையாதலால், “பெரியோர்ப் பேணி” யென்றார் ;
“தம்மிற்  பெரியார்  தமரா  வொழுகுதல், வன்மையு ளெல்லாந் தலை”
(குறள்.  444) எனச் சான்றோரும் பணித்தார். சிறியோரென்றது அறிவு,
ஆண்மை,     பொருள்,     படை     முதலியவற்றால்    தன்னிற்
சிறுமையுடையாரை.   அவரை    யளித்தோம்பலும்   செங்கோன்மை
யாதலின்,    “சிறியோரை   யளித்தி      யென்றார்  ;     “வல்லா
ராயினும்        வல்லுநராயினும்,          வருந்தி       வந்தோர் 
மருங்கு   நோக்கி,  அருள  வல்லை  யாகுமதி”  (புறம்.  27)  எனச்
சான்றோர்   கூறும்   முதுமொழிக்   காஞ்சியானு  மறிக.  நின்வயின்
நல்லிசை,  பிரிந்த  நல்லிசையென  இயையும். புகழ்வரும் வாயில்கள்
கல்வி,  ஆண்மை  முதலாகப்  பலவாதலின், புகழும் பலவாதல் பற்றி,
“நல்லிசை  யறியா”  எனப்  பன்மையாற் கூறினார். ஒருவன் புகழ்க்கு
அவன்  காரணமாயினும், அவனைத் தனக்கு ஆதாரமாகக் கொள்ளாது
அவனிற்  பிரிந்துசென்று  உலகத்தை  ஆதாரமாகக் கொண்டு அவன்
மடியினும்  தான்  மடியாது  நின்று  நிலவுவது  புகழ்க்கியல்பாதலின்,
“நின்வயிற்    பிரிந்த   நல்லிசை”   யென்றார்.   புகழ்   தன்னைச்
செய்தோனிற்    பிரியாது   அவனோடே   கிடக்குமாயின்,   அவன்
பொன்றுங்காற்  றானும் பொன்றுமென்பதுபட்டுக் குற்றமாய் முடிதலின்,
“பிரிந்த   நல்லிசை”   எனச்  சிறப்பித்தார்.  இக்  கருத்தே  பற்றிப்
பழையவுரைகாரரும்,  “பிரிந்த நின் வயின் நல்லிசை யெனக் கூட்டுக”
என்றும்,  “பிரிதல்  தன்னைவிட்டுத்  திக்கு  விதிக்குகளிலே போதல்”
என்றும்  கூறுதல்  காண்க.  “நின்  வயிற்  பிரிந்த நல்லிசை” யெனக்
கிடந்தபடியே   கொண்டு,  “நின்பானின்றும்  பிரிந்து  சென்ற  நினது
நல்லிசைகள்”  என்பாரு  முளர்  ;  நின் பானின்றும் பிரிந்து சென்ற
என்ற   வழி   நின்னின்  நீங்கிய  புகழென்றாகிப்  பொருள்  சிறவா
தொழிதலின்,  அது  பொருளன்மை யறிக. நீ பெற்றுள்ள புகழ்களைப்
பிறர்   கனவினும்  பெற்றறியோர்  என்பார்,  புகழ்  மேலேற்றி,  நின்
நல்லிசை”  கனவினும்  பிறர்  நசை  யறியா” என்றார், “நசை யறியா”
என்றதனால்,  நின்  பகைமைக்கஞ்சிப்  பிறர்  கனவினும்  நீ  பெற்ற
புகழ்களைப் பெறுதற்கு விரும்புவதிலர் என்பது கூறியவாறாயிற்று.
 

இவ்வாறு     உயிர்  போற்றாமையால்   ஆண்மையும்,  கொடை
போற்றாமையால்     வண்மையும்,        பெரியோர்ப்     பேணிச்
சிறியோரையளித்தலால்  செங்கோன்மையும்  பிறவும் அளத்தற்கரியவா
யிருத்தலால்,   ஏனைய   பிறவும்    அத்தன்மையனவே   யென்பார்,
“அனைய வளப்பருங் குரையை” யென்றார்.

8 - 19. அதனால் ............ நின் புகழே.

உரை :  அதனால் - ஆதலால் ;   நின்னொடு  வாரார்  -  நின்
விருப்பப்படி  யொழுகுதற்  கிசையாமல் ;    தம்  நிலத்து  ஒழிந்து -
நினக்கு மாறுபட்டுத்தங்கள் நாட்டிலேயேயிருந்து ; கொல்களிற்றுயானை
எருத்தம்  புல்லென  வில்குலை  யறுத்து  - நின்னை யெதிர்த்த பிற
வேந்தர்  தாம்  ஏறிவந்த  கொல்லுகின்ற  களிற்று  யானையின் பிடரி
புல்லென்னுமாறு  அவர்  ஏற்றுப்  பொருத  வில்லின் நாணை யறுத்து
அவரைக்  கொன்று  நீ  வெற்றி மேம்படக் கண்டும் ; கோலின் வாரா
வெல்  போர்  வேந்தர்  - நின் செங்கோற் கீழ்ப் பணிந்து வருதலைச்
செய்யாது  வெல்கின்ற போர் செய்தலையுடைய வேந்தரது ; முரசுகண்
போழ்ந்து  - முழக்கும் முரசின் கண்ணைக் கிழித்து ; அவர் அரசுவா
அழைப்ப  -  அவர்களுடைய  பட்டத்தியானை  கதறக் கதற ; கோடு
அறுத்து        இயற்றிய          அணங்குடை          மரபின்

கட்டின்     மேல் இருந்து - அதன் கோட்டினை   யறுத்துச்  செய்த
தெய்வத்தன்  மை பொருந்திய முறைமையினையுடைய  கட்டிலின்மேல்
இருந்து  ; தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து - தும்பை சூ டிப்
பொருதலி்ல்  அமைந்த  மெய்யிடத்தே  யுண்டாகி  ய அசைவுபற்றிப்
பிறந்த  ஓய்ச்சலுடன்  ;  நிறம்படு  குருதி  புறம்  படின்  அல்லது -
மார்பிற்பட்ட.    புண்ணிடத்    தொழுகும்   குருதியாற்    புறத்தே
தெளிக்கப்பட்டாலன்றி  ;  மடை  எதிர்கொள்ளா  -  கொடுக்கப்படும்
படைச்சலை  (பலியை)  யேற்றுக்கொள்ளாத  ;  அஞ்சு வருமரபின் -
அச்சம்  பொருந்திய  முறைமையினையுடைய;  கடவுள் அயிரையின் -
கொற்றவை   வீற்றிருக்கின்ற   அயிரை   மலைபோல  ;  பெரும  -
பெருமானே  ;  நின்  புகழ் நிலைஇக் கேடிலவாக - நின் புகழ்களும்
நிலை பெற்றுக் கெடாது விளங்குவனவாக எ - று.

அதனால்     என்பதனை   நிலைஇக் கேடிலவாக என்பதனோடு
இயைக்க.   தம்   மனத்துள்ள   மாறுபாட்டால்   நின்  விருப்புவழி
யொழுகுதற்கு இசைந்திலரென்பார், “வாரார்” என்றார். வாராது இருந்த
நிலை  இஃதென்றற்குத் “தந்நிலத் தொழிந்து” என்றார். ஒழிந்தெனவே,
அவர்பால்   செயலறுதி   பெறப்பட்டது.   இனிப்  பழையவுரைகாரர்,
“நின்னொடு  வாரார்  தந்நிலத்  தொழிந்தென்றது  நின்னை வழிபட்டு
நின்னொடு  ஒழுகாதிருத்தலேயன்றித் தம் நிலத்திலே வேறுபட்டு நின்
றென்றவா” றென்பர்.

நின்   விருப்புவழி யொழுகுதற்கு இசைவின்றித் தம் நிலத்தே வறி
திருத்தலும்  மானமாதலின்  போர்க்கு  வரலானார்  ; அது செய்யாது
பணிந்து   நின்  கோற்கீழ்  வரற்பாலர்  என்பார்,  “கோலின்  வாரா”
என்றார்.  கோலின்  வருதலே செயற்பாற் றென்பதற்கு ஏதுக் கூறுவார்,
இடையிலே  நிகழ்ந்த  நிகழ்ச்சியை யெடுத்தோதலுற்று, “கொல்களிற்று
யானை  யெருத்தம்  புல்லென  வில்குலை யறுத்து” என்றார். அறுப்ப
வென்பது  அறுத்தென  நின்றது. கண்டும் என ஒரு சொல் வருவிக்க,
“யானை   யெருத்தம்   பொலியக்   குடைநிழற்   கீழ்ச்,   சேனைத்
தலைவராய்”  (நாலடி.  3)  வந்தாராதலின்,  வந்த  அவரை  வென்று
மேம்பட்ட  செய்தியை,  “யானை  யெருத்தம்  புல்லென  வில்குலை
யறுத்து”  என்றார். கோலின் வாராத வேந்தர் போர் குறித்து வந்தமை
தோன்ற,  “வெல்  போர் வேந்தர்” என்றார். இனிப் பழையவுரைகாரர்,
“யானை  யெருத்தம்  புல்லென  வில்குலை  யறுத்துக் கோலின் வாரா
வேந்தரென்றது, முன்பு நின் வழி யொழுகாது ஒழிந்திருந்தவழிப் பின்பு
தாம் களத்து நின் போர்வலிகண்டு இனி நின் வழி யொழுகுது மெனச்
சொல்லித்   தாம்   ஏறிய  யானை  யெருத்தம்  புல்லென  வில்லின்
நாணியை  யறுத்து  நின் செங்கோல்வழி யொழுகாத வேந்தரென்றவா”
றென்பர்.

பகை     வேந்தரை   “வெல் போர் வேந்தர்” என்றார், இதற்கு
முன்பெல்லாம்  அவர் செய்த  போரனைத்தினும் வென்றியே யெய்தி
வந்தமையும்,    அச்செருக்கே     பற்றுக்கோடாக     இப்போதும்
வந்தாரென்பதும்  உணர்த்துதற்கு.   இப்   போரில்  தோற்றமையால்
அவரது  முரசும் களத்தே  யொழிந்த  தென்றற்கு, “அவர் முரசுகண்
கிழித்து” என்றார்.
 

இதுகாறும்  தாம் பெற்றுப்போந்த வென்றியால் தம்மையே வியந்து
தம்  பட்டத்தியானைமேல்  வந்தவர்,  போரிற்பட்டு  வீழ்ந்தமையின்,
அவரது  அவ்  யானையைப் பற்றி அஃது ஆற்றாது கதறிப் புலம்பிப்
பிளிற  அதன்  கோட்டினை  யறுத்து  அதனால் பலிக்கட்டில் செய்து
கொண்ட   செய்தியை   “அரசுவா  வழைப்பக்  கோடறுத்  தியற்றிய
கட்டில்”     என்றும்,    கொற்றவைக்குப்    பலியிடுவது    குறித்து
விழுப்புண்பட்ட வீரர் அதன்மீதிருந்து தம் மார்பிற் புண்ணினொழுகும்
குருதி  தெளித்து  மடை  கொடுப்ப,  தெய்வமும்  அதனை விரும்பி
யேற்பது  குறித்து  அக்  கட்டிலை,  “அணங்குடை  மரபிற் கட்டில்”
என்றும்,  அதன்  மீதிருந்து,  குருதி  விரவிய மடை கொடுப்பினன்றி
யேலாத   தெய்வம்  அஞ்சத்தகும்  முறைமை  யுடைத்தாதல்  பற்றி,
“அஞ்சுவரு மரபிற் கடவுள்” என்றும் கூறினார்.

தும்பை     சூடிப் பொரும் வீரர், பகைவரை யெறிகையில் தாமும்
முகத்தினும் மார்பினும் புண்பட்டு மெய்தளர ஓய்ச்ச லெய்தியபோதும்
தம்   மார்பிற்  புண்ணின்  குருதியைச்  சிறிதும்  தயங்காது  அள்ளி
மடையின்  புறத்தே  தெறிப்பவாதலின்,  “தும்பை  சான்ற மெய்தயங்
குயக்கத்து  நிறம்படு  குருதி”  யென்றார். பழையவுரைகாரர், “தும்பை
சான்ற  மெய்தயங்குயக்கத்து  நிறம்படு  குருதி யென்றது, வீரருடைய,
தும்பை  சூடியதற்கேற்ப  நின்று  பொருதலாற்றலையுடைய உடலானது
அசையும்படி   வந்த  ஓய்வினையுடைய  நிறங்களைத்  திறந்துவிட்ட
குருதி   யென்றவா”   றென்றும்,   “அல்லாத   இடங்களிற்   குருதி
கொள்ளாமையின்   நிறங்களைத்   திறக்க   ஆண்டுண்டான  குருதி
யென்பதாயிற்”   றென்றும்,   “இச்   சிறப்பானே   இதற்கு  நிறம்படு
குருதியென்று பெயராயிற்” றென்றும் கூறுவர்.

இவ்வாறே, “கோடறுத் தியற்றிய கட்டின்மேலிருந்து நிறம்படு குருதி
புறம்படி   னல்லது  மடை  யெதிர்கொள்ளாக்  கடவுள்  எனக்கூட்டி,
அவ்வாறு   செய்ததொரு   கட்டில்   கொடுவந்திட்  டதன்மேலிருந்து
அவ்வாறு   கொடுப்பதொரு   பலியுண்டாயினல்லது   பலிகொள்ளாக்
கடவுளென   வுரைக்க”   என்றும்,   “கட்டில்மேலிருந்தல்லது  குருதி
புறம்படி  னல்லது  என அல்ல தென்பதனை இரண்டிடத்தும் கூட்டிக்
கொள்க” என்றும் கூறுவர்.

“நிறம்படு     குருதி  புறம்படி  னல்லது மடை யெதிர்கொள்ளாக்
கடவுள்”  எனவே,  கொற்றவை யென்பது  பெற்றாம். அயிரை, சிராப்
பள்ளிக்கு  மேற்கில் காவிரியி்ன்  தெற்கிலுள்ளதொரு குன்று ; இதனை
இக்காலத்தார்       ஐவர்மலையென்று       வழங்குமென்பாருமுளர்
பழையவுரைகாரர்,  “அது  கொற்றவை யுறைவ தொருமலை” யென்பர்.
அயிரை   மலை   நின்று   நிலைபெறுவதுபோல   நின்  புகழ்களும்
நிலைபெற்று விளங்குக என்பார், “அயிரையின் நிலைஇக் கேடிலவாக
நின் புகழே” யென்றார்.

இதுகாறும்     கூறியவாற்றால்,  நாவினையும் ஆண்மையினையும்
மார்பினையுமுடையோய்   பெரும,   செருவத்து  உயிர்  போற்றலை;
இரவலர்   நடுவண்   கொடை  போற்றலை  ; பெரியோர்ப்  பேணிச்
சிறியோரை  யளித்தி  ;  நின்வயி்ன்  நல்லிசை கனவிலும் பிறர் நசை
யறியா  ;  அனைய  அளப்பருங் குரையை ; அதனால் நின் புகழ்கள்
அயிரையின்     நிலைஇக்     கேடிலவாக    என்பதாம்.    இனிப்
பழையவுரைகாரர் “கோதை மார்ப, செருவத்து உயிர்

போற்றலை; இரவலர் நடுவண் கொடை போற்றலை ;   பெரியோரைப்
பேணிச் சிறியோரை யளித்தி ; அனைய நின் குணங்கள் அளப்பரியை
;  நீ  அவ்வாறொழுகுதலால்,  பிரிந்த  நின்வயின்  நல்லிசை  இனிக்
கனவிலும்  பிறர்  நச்சுதலறியா  ; அவ்வாறு அறியாமையின், பெரும,
நி்ன்  புகழ்  நிலைஇ  நின்னிடத்துக்  கேடிலவாக  என மாறிக் கூட்டி
வினைமுடிவு   செய்க”  என்றும்,  “அனைய  வளப்பருங்  குரையை
யென்றது, சிறியோரை யளித்தி என்றதன் பின்னே நிற்க வேண்டுதலின்
மாறாயிற்” றென்றும் கூறுவர்.

“இதனாற்  சொல்லியது: அவன் பல குணங்களும் ஒருங்கு புகழ்ந்து
வாழ்த்தியவாறாயிற்று.”
 


1. மறவேந்தர்க்குப்   படியாமையாவது   ஒட்டாத    பகைவரை
வணங்கிப்  பின்னில்லாமை ; அதனையுடைய வேந்தர் படியோர்
எனப்பட்டனரென அறிக.


 மேல்மூலம்