முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
80.



வான்மருப்பிற் களிற்றியானை
மாமலையிற் கணங்கொண்டவர்
எடுத்தெறிந்த விறன்முரசம்
கார்மழையிற் கடிதுமுழங்கச்
 5




சாந்துபுலர்ந்த வியன்மார்பிற்
றொடிசுடர் வரும் வலிமுன்கைப்
புண்ணுடை யெறுழ்த்தோட் புடையலங் கழற்காற்
பிறக்கடி யொதுங்காப் பூட்கை யொள்வாள்
ஒடிவி றெவ்வ ரெதிர்நின் றுரைஇ
 10




இடுக திறையே புரவெதிர்ந் தோற்கென
அம்புடை வலத்த ருயர்ந்தோர் பரவ
அனையை யாகன் மாறே பகைவர்
கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவிக்
கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி
 15


புலவரைத் தோன்றல் யாவது சினப்போர்
நிலவரை நிறீஇய நல்லிசைத்
தொலையாக் கற்பநின் றெம்முனை யானே.

     துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகு வண்ணம். தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.
பெயர் - புண்ணுடை யெறுழ்த்தோள்
(7)

     (ப - ரை) 2. கணங்கொள்ளவெனத் திரிக்க. அவரென்றது
பகைவரை. 7. புண்ணுடை எறுழ்த்தோளென்றது எப்பொழுதும்
பொருது புண்ணறாத வலிய தோளென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'புண்ணுடை யெறுழ்த்தோள்' என்று
பெயராயிற்று.

     10. புரவெதிர்ந்தோற்கென்றது கொடையேற்றிருக்கின்ற
அவனுக்கென்ற வாறு.

     கொடி (14) தோன்றல் (15) என்றதனை எழுவாயும்
பயனிலையுமாகக் கொள்க.

     நின் தெம்முனைப் (17) புலவரையான் (15) என மாறிக் கூட்டுக.

     தொலையாக்கற்ப (17), நின் வீரராகிய உயர்ந்தோர் (11)
நின்தெவ்வராகிய அவருடைய (2) களிற்றியானை (1) மலையிற்
கணங்கொள்ளா நிற்க (2), முரசம் (3) கடிதுமுழங்கா நிற்க (4)
அவையிற்றை ஒன்றும் மதியாதே நின்னொடு ஒடிவில் தெவ்வராகிய
அவர் எதிர்நின்று பெயரா (9) இப்புரவெதிர்ந்தோனுக்குத்
திறையையிடுகவெனச் சொல்லி நின்னைப் (10) பரவும்படி நீ (11)
அதற்கேற்ற தன்மையையுடைய யானபடியாலே (12) நின்தெம்முனைப்
(17) புலவெல்லையில் நின் (15) பகைவர் (12) தேர் மிசைக்கொடி (14)
போரைக் குறித்துத் தோன்றல் யாவது (15) எனக் கூட்டி வினை
முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது, அவன் கொடைச்சிறப்போடு படுத்து
வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.

     தெம்முனைப் (17) புலவரைப் (15) பகைவர் (12) கொடி (14)
தோன்றல் யாவது (15) என 1எதிரூன்றுவாரின்மை தோன்றக் கூறிய
அதனால், வஞ்சித்துறைப் பாடாணாயிற்று.

     முன்னர் ஆறடியும் வஞ்சியடியாய் வந்தமையானே,
வஞ்சித்தூக்கு மாயிற்று.

     (கு - ரை) 1-2. வெள்ளிய கொம்பையுடைய ஆண்யானைகள்
பெரிய மலைகளைப் போலத் தொகுதிகொள்ள; கொண்டு - கொள்ள;
எச்சத்திரிபு.

     2-4. பகைவர் குறுந்தடியை எடுத்து அடித்த, வெற்றியைத்
தரும் முரசம் கார்காலத்து மேகத்தைப் போல மிக்கு ஒலிப்ப.
செய்யுளாதலின் அவரென்னும் சுட்டுப்பெயர் முதலில் வந்தது.
விறல்முரசம்: பதிற். 17. 5, உரை.

     5-9. பகைவரது இயல்பு.

     5-6. பூசிய சந்தனம் புலர்ந்த அகன்ற மார்பினையும், வீரவளை
ஒளிவிடும் வன்மையையுடைய முன்கையையும்.

     7. புடையலங்கழற்கால்: புறநா. 99 : 5. 8. "அடியொதுங்கிப்
பிற்பெயராப், படையோர்க்கு முருகயர" (மதுரைக். 37 - 8)

     7-8. எப்பொழுதும் போர் செய்தலால் புண்களையுடைய
வன்மையைப் பெற்ற தோள்களையும், பனைமாலையையும்,
கழலையணிந்த கால்களையும், பின்னே அடியிடாமைக்குக்
காரணமான மேற்கோளையும், ஒள்ளிய வாளையும் உடைய.

     9. பகைமையினின்றும் தவிர்தல் இல்லாத நின் பகைவரது
எதிரே நின்று உலாவி. 10 - 11. பாதுகாத்தலை ஏற்றுக்கொள்பவனாகிய
எம் அரசனுக்குத் திறையை இடுகவென்று. அம்புடைய
வெற்றியையுடையராகி உயர்ந்தோராகிய நின் வீரர் நின்னைப்
பரவாநிற்ப.

     12. நீ அதற்கேற்ற தன்மையையுடையை யாதலால்.

     13. "காலியக் கன்ன கதழ்பரி கடைஇ" (மதுரைக். 440)

     12-3. பகைவரது, காற்று எழுந்தாற்போன்ற விரைந்த
செலவையுடைய குதிரைகளால் இழுக்கப்பட்ட, விரைந்த
ஓட்டத்தையுடைய உயர்ந்த தேரின்மீது அசைகின்ற கொடிகள்.

     17. தொலையாக் கற்ப: பதிற். 43 : 31.

     15-7. சினத்தாற் செய்யும் போரையும், நிலவெல்லையில்
நிறுத்திய நல்லிசையையும் அழிவில்லாத கல்வியையும் உடையாய்,
நின்பகைவரது நிலவெல்லையில் தோன்றுதல் எங்கேயுள்ளது?

     கற்ப, நின்தெம்முனைப் (17) புலவரையான் (15) நுடங்குகொடி
(14) தோன்றல் யாவது (15) என மாறிக் கூட்டுக.

     மு. திறைகொடுத்தோரது குறைபாடு கூறியது (தொல். புறத்.
8, ந.) (10)

     இதன் பதிகத்துக் கொல்லிக்கூற்றம் (3) என்றது
கொல்லிமலையைச் சூழ்ந்த மலைகளையுடைய நாட்டினை.

     3. நீர்கூர்மீமிசை என்றது அந்நாட்டு நீர்மிக்க மலையின்
உச்சியை.

     9. நொச்சிதந்து என்றது தகடூர் மதிலைக்
கைக்கொண்டென்றவாறு.


     1எதிரூன்றுவார் - காஞ்சித் திணைக்கு உரியோர்.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

10. புண்ணுடை யெறுழ்த்தோள்
 
80.வான்மருப்பிற் களிற்றியானை
மாமலையிற் கணங்கொண்டவர்
எடுத்தெறிந்த விறன்முரசம்
கார்மழையிற் கடிதுமுழங்கச்
 
5சாந்துபுலர்ந்த வியன்மார்பிற்
றொடிசுடர்வரும் வலிமுன்கைப்
புண்ணுடை யெறுழ்த்தோட் புடையலங்கழற்காற்
பிறக்கடி யொதுங்காப் பூட்கை யொள்வாள்
ஒடிவி றெவ்வ ரெதிர்நின்று றுரைஇ
  
10இடுக திறையே புரவெதிர்ந் தோற்கென
அம்புடை வலத்த ருயர்ந்தோர் பரவ
அனையை யாகன் மாறே பகைவர்
கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவிக்
கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி
 
15புலவரைத் தோன்றல் யாவது சினப்போர்
நிலவரை நிறீஇய நல்லிசைத்
தொலையாக் கற்பநின் றெம்முனை யானே.

 

துறை  : வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணம்  : ஒழுகுவண்ணம்.
தூக்கு  : செந்தூக்கும்வஞ்சித்தூக்கும்.
பெயர்  : புண்ணுடையெறுழ்த்தோள்.
 

1 - 4. வான்மருப்பின் .............. முழங்க.

உரை :   வால்   மருப்பின்    களிற்றியானை      மாமலையின்
கணங்கொண்டு   -  வெள்ளிய  மருப்பினையுடைய  போர்க்களிறுகள்
பெரிய  மலைபோல கூடித் தொக்கு நிற்ப ; அவர் எடுத்தெறிந்த விறல்
முரசம் - பகைவர் மேற்கொண்டு முழங்கிய வெற்றி முரசமானது ; கார்
மழையின்  கடிது  முழங்க  -  கார்  காலத்து  முகில்  போல  மிக்கு
முழங்கவும் எ - று.

போர்க்குரிய     ஆண்மை  நலம் சிறந்து நிற்கும்  யானைகளைக்
“களிற்றி  யானை”  யென்றார்.  மலையின்,  இன்  ஒப்புப் பொருட்டு.
அவர்  என்பது “ஒடிவில் தெவ்வர்” (9) என்றதனைச் சுட்டி நிற்றலின்,
சுட்டு   :   செய்யுளாதலின்   முற்பட  வந்தது.  கொள்ள  வென்பது
கொண்டெனத்  திரிந்து நின்றது. பழையவுரைகாரரும், “கணங் கொள்ள
வெனத்  திரிக்க”  என்றும்,  “அவ  ரென்றது  பகைவரை” யென்றும்
கூறுவர்.   எடு்த்தெறிதல்,   தம்  முற்றுகை  தோன்ற  மேற்கொண்டு
முழக்குதல். வெற்றி குறித்து முழக்கும் முரசாதலின்

“விறல்  முரசம்” என்றார் ; பலி பெறும் சிறப்புப் பற்றி  இங்ஙனம்
கூறினாரெனினுமாம். மிகுதிப்  பொருட்டாய கடி யென்னு  முரிச்சொல்
கடிது எனத் திரிந்து நின்றது.

5 - 9. சாந்து...............நின்று.

உரை :  சாந்து புலர்ந்த வியன் மார்பின் - பூசிய சாந்து  புலர்ந்த
அகன்ற    மார்பினையும்    ;   தொடி   சுடர்வரும்   வலிமுன்கை
தொடியணிந்தமையால்     அதன்    ஒளிதிகழும்    வலிபொருந்திய
முன்கையினையும்    ;   புண்ணுடை   எறுழ்த்தோள்   -   ஆறாத
விழுப்புண்ணையுடைய வலிய தோளினையும் ; புடையலங் கழற்கால் -
அத்   தோளிடத்தேயணிந்த   மாலையொடு   வீரகண்டை  யணிந்த
காலினையும்  ; பிறக்கடியொதுங்காப் பூட்கை - முன் வைத்த காலைப்
பின்   வையாத   மேற்கோளினையும்   ;   ஒள்வாள்   -  ஒள்ளிய
வாட்படையினையுமுடைய  ; ஒடிவில் தெவ்வர் எதிர்நின்று வணங்காத
பகைவர் முன்னே அஞ்சாது நி்ன்று ; எ - று.

ஆடவர்க்கு     அகன்ற மார்பு சிறப்புத் தருவதாகலின்,  அதனை
விதந்து,  “சாந்து  புலர்ந்த  வியன் மார்பின்” என்றார். தொடி, தோள்
வளை.  இவர்கள்  ஏந்தி  யடும்  வாட்படையை  “ஒள்வாள்”  எனச்
சிறப்பித்தலின்,   அதற்கேற்ப,   “வலின்முன்  கை”  யென்றார்.  பல
போர்களைச்  செய்து  வென்றி  மேம்பட்டோரென்றற்கு,  அவர் உற்ற
புண்ணை    விதந்து,    “புண்ணுடை   யெறுழ்த்தோள்”   என்றும்,
புண்ணுடைத்தாகியும் வலி குறைந்த தின்றென்றற்குப் புண்ணுடைத்தோ
ளென்னாது,     “எறுழ்த்தோ”    ளென்றும்    கூறினார்.    இனிப்
பழையவுரைகாரர், “புண்ணுடை யெறுழ்த்தோ ளென்றது, எப்பொழுதும்
பொருது   புண்ணறாத   வலிய   தோளென்றவா”   றென்றும், “இச்
சிறப்பானே  இதற்குப் புண்ணுடை யெறுழ்த்தோள் என்று பெயராயிற்”
றென்றும் கூறுவர்.
 

புடையலங்கழல் : உம்மைத்தொகை. புடையல் - மாலை. “ஈகையங்
கழற்கால்   இரும்பனம்புடையல்”  (புறம்.  99)  என்றும்,  “மாயிரும்
புடையல்  மாக்கழல்    புனைந்து” (பதிற். 37) என்றும், “இரும்பனம்
புடைய   லீகை   வான்கழல்”    (பதிற்.  42) என்றும், “இரும்பனம்
புடையலொடு   வான்கழல் சிவப்ப” (பதிற். 57) என்றும், “புடையலங்
கழற்கால் புல்லி” (அகம். 295)  என்றும்   இப்புடையல்   கழலொடு
பிணைத்தே கூறப்படுதலின், இது கழலணியும்  வீரர் அடையாளமாகச்
சூடும் பூமாலையாதல்   துணியப்படும்.   இரும்பனம்  புடையலெனத்
தெரித்து மொழிவதும்,    “புடையல்”   என   வாளாது  கூறுவதும்
இக்  கருத்தை   வலியுறுத்துகின்றன.    ஈண்டுத்    தெவ்வர் சூடிய
புடையலைத்   தெரித்து   மொழியாமையின்,    பனம்புடையலெனக்
கோடல் பொருந்தாமை யறிக.

அடிபிறக்கிடாத     மேற்கோள் வீரர்க்கு இன்றியமை யாமையின்,
“பிறக்கடி  யொதுங்காப்  பூட்கை”  என்றார் .  “அடியொதுங்கிப் பிற்
பெயராப்  படையோர்  (மதுரை. 37-8) என்று பிறரும் கூறுப. ஒடிதல்,
மறங்குன்றிப் பகைவர்க்கு வணங்குதல் ; அறைபோதலுமாம்.

இத்தகைய ஒடிவில் தெவ்வர் விறல் முரசம் முழங்க முற்றுகையிட்டு
நிற்பவும்,  அவர்முன்  சிறிதும்  அச்சமிலராய்  நின்று  வீறு  பேசும்
சேரமான்    வீரர்    மறநிலையை    “எதிர்நின்று”    என்பதனால்
தோற்றுவிக்கின்றார்.

9 - 17. உரைஇ....................தெம்முனையானே.

உரை :  உயர்ந்தோர் - நின்தானை வீரராகிய  உயர்ந்தோர்கள் ;
அம்புடை   வலத்தர்   -   இடக்   கையில்  வில்லும்  வலக்கையில்
அம்புமுடையராய்  ;  உரைஇ  - அத் தெவ்வர் முன்னே நின்று இரு
மருங்கும்  உலாவி  ;  புரவு எதிர்ந்தோற்கு  திறை  இடுக  -  திறை
செலுத்தித்  தன்  கோற்கீழ்ப்  பணிந்து  நிற்பார்க்குப் பாதுகாப்பினை
வழங்குதற்கு     ஏறட்டுக்கொண்டு   நிற்கும்    எங்கள்    பெருஞ்
சேரலிரும்பொறைக்கு நுங்கள் திறையினைச் செலுத்துவீராமின் ; எனப்
பரவ  - என்று நின்கொடையும் அளியும் தெறலும் பிறவும் பாராட்டிக்
கூற  ;  அனையை யாகன் மாறே - நீயும் அவர் கூறும் நலமெல்லாம்
உடையை  யாதலினாலே  ;  சினப் போர் - சினங் கொண்டு செய்யும்
போரினையும் ; நிலவரை நிறீஇய நல்லிசை நிலவுலகத்தே நிறுவப்பட்ட
நல்ல இசையினையும் ; தொலையாக் கற்ப - கேடில்லாத கல்வியினையு
முடையாய் ; நின் தெம்முனை யான் - நீ பகைகொண் டாற்றும் போர்
முனையாகிய;  புல வரை - தங்கள் நிலவெல்லையிற்றானும் ; பகைவர்
நின்  பகைவரது  ;  கால்  கிளர்ந்தன்ன  கதழ் பரிப் புரவி - காற்றுக்
கிளர்ந்து  சென்றாற் போலும் விரைந்த செலவினையுடைய குதிரைகள்
பூட்டிய  ;  கடும்பரி  நெடுந்தேர் மீமீசை - கடுஞ் செலவினையுடைய
நெடிய  தேர்  மீது  கட்டிய  ;  நுடங்கு  கொடி தோன்றுதல் யாவது
அசைகின்ற   கொடி   தோன்றுவது  எங்ஙனமாகும்  ;  இனி அஃது
எவ்வாற்றானும் தோன்றாது காண் எ - று.
 

போர் வீரர்க்கு வேண்டும் உயர்குணங்களெல்லாம் ஒருங்குடைமை
பற்றி “உயர்ந்தோர்” என்றார். பகை வீரருடைய மார்பு முதலியவற்றை
விதந்து   கூறிய   ஆசிரியர்,   அவர்களை   உயர்ந்தோ  ரென்றது,
அவர்கட்கு  அக் கூறிய சிறப்பனைத்தும் ஆரவார மாத்திரையே என
வற்புறுத்தியவாறு  .  அம்புடை வலத்தரெனவே, வில்லுடைமை தானே
பெறப்படுமாகலின்,  அது  கூறாராயினார்.  இனி,  அம்புடை வலத்தர்
என்றற்கு,  அம்பினாலாகிய வெற்றியையுடைய ரென்றுமாம் . தெவ்வர்
முன்  நின்று இவ்வுயர்ந்தோர்  சேரனுடைய தலைமைப்பண்புகளையும்
ஆண்மை வண்மைகளையும் பரவிக் கூறலுற்றோர், தம் கூற்று பகைவர்
படைப்பரப்பு   முற்றும்  கேட்டல்  வேண்டி  இருமருங்கும்  உலவிச்
சென்று  உரைத்தார்  என்றற்கு  “உரைஇ”  யென்றும், படை திரண்டு
போர்   குறித்து   வந்தீராயினும்    திறையிடின்  எங்கள்  இறைவன்
நுங்களைப்  பொறுத்துப்  புரவு  பூண்பன்  என்பார், “இடுக திறையே
புரவெதிர்ந்    தோற்கே”     என்றார்கள்    என்றும்     கூறினர்.
அவ்வுயர்ந்தோர்  நின்னைப்  பற்றிக்  கூறிய  அனைத்தும்  மெய்யே
யென்பார்,  “அனையை  யாகன்  மாறே”  யென்றார். மாறு, மூன்றாம்
வேற்றுமைப் பொருட்டு.

பகைவரது     குதிரையின் திறம் கூறுவர். “கால்கிளர்ந்    தன்ன
கடும்பரிப்  புரவி”  யென்றும், அவற்றைப் பூட்டும் தேரும் இத்தகைய
தென்றற்குக்  “கடும்புரி  நெடுந்தேர்”  என்றும்,  “கால்கிளர்ந்  தன்ன
வேழம்”  (முருகு)  என்றும்  சான்றோர் விரைந்த நடைக்குக் காற்றை
உவமம்  கூறுவது காண்க . சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது . நின்
நல்லிசை நிலவரை முழுதும் பரவி நிலைபெறுதலின், பகைவரது கொடி
நுடங்குதற்கும்   இடனில்லை   என்பது   கூறியவாறு   .  நல்லிசை
நிறுவுதற்கேற்ற  கல்வியும்  மிக  வுடையாய்  என்பார்,  “தொலையாக்
கற்ப” என்றார்.

இனி,      பழையவுரைகாரர்,        “புரவெதிர்ந்தோற்கென்றது
கொடையேற்றிருக்கின்ற    அவனுக்கென்றவா”   றென்றும்,   “கொடி
தோன்றல் என்றதனை எழுவாயும் பயனிலையுமாகக் கொள்க” என்றும்,
“நின்  தெம்முனைப்  புலவரையான்  என  மாறிக்  கூட்டுக” என்றும்
கூறுவர்.

இதுகாறும்  கூறியது, களிற்றியானை கணங்கொள்ள, அவர் எறிந்த
முரசம் முழங்கவும்,  மார்பினையும், முன்கையினையும், தோளினையும்,
புடையலையும்,  கழற்காலையும், பூட்கையினையும், வாளினையுமுடைய
ஒடிவில்  தெவ்வர்  எதிர்நின்று, உயர்ந்தோர், அம்புடைய வலத்தராய்
உரைஇ  புரவெதிர்ந்தோற்கு  இடுக திறையே யெனப்பரவ, அனையை
யாகன்மாறே, சினப்போரும் நல்லிசையும் கற்பினையு முடையாய், நின்
தெம்முனையாகிய  புலவரையில், பகைவர் கதழ்பரிப் புரவிக் கடுந்தேர்
மீமிசை    நெடுங்கொடி   தோன்றல்   யாவது   என்பதாம்.   இனி
பழையவுரைகாரர்,  “தொலையாக்  கற்ப,  நின் வீரராகிய உயர்ந்தோர்
நின்   தெவ்வராகிய  அவருடைய  களிற்றியானை  மலையிற்  கணங்
கொள்ளா  நிற்க, முரசம் கடிது முழங்காநிற்க, அவை யிற்றை ஒன்றும்
மதியாதே நின்னோடு ஒடிவில் தெவ்வராகிய அவர் எதிர்நின்று பெயரா
இப்புர   வெதிர்ந்தோனுக்குத்   திறையை   யிடுக  வெனச்  சொல்லி
நின்னைப்     பரவும்படி     நீ     அதற்கேற்ற       தன்மையை
யுடையையானபடியாலே  நின்  தெம்முனைப்பல  வெல்லையில்  நின்
பகைவர் தேர்மிசைக் கொடி போரைக் குறித்துத் தோன்றல் யாது எனக்
கூட்டி வினை முடிவு செய்க" என்பர்.
 

இதனாற் சொல்லிய  அவன் கொடைச் சிறப்பொடுபடுத்து வென்றிச்
சிறப்புக் கூறியவாறாயிற்று.

“தெம்முனைப்   புலவரைப் பகைவர்கொடி தோன்றல் யாவது என
எதிரூன்றுவாரின்மை   தோன்றக்    கூறிய    வதனால்    வஞ்சித்
துறைப்பாடாணாயிற்று.

“முன்னர்     ஆறடியும்     வஞ்சியடியாய்     வந்தமையானே
வஞ்சித்தூக்குமாயிற்று”.

இருவகைத் தூக்கும் விரவிவந்ததாயினும் ஆசிரிய நடையே பெற்று
இனிய  ஓசைகொண்டு  வருதலின்  ஒழுகு  வண்ணமாயிற்று ; “ஒழுகு
வண்ணம் ஓசையினொழுகும்” (தொல். செய். 224) என்றாராகலின்.


 மேல்மூலம்