அவைதாம், புண்ணுமிழ்குருதி, மறம்வீங்கு பல்புகழ், பூத்த நெய்தல் சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயிலின் பாயல், வலம்படு வியன்பணை, கூந்தல் விறலியர், வளனறு பைதிரம், அட்டுமலர் மார்பன் - இவை பாட்டின் பதிகம். பாடிப் பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐஞ்ஞூறூர் பிரமதாயம் கொடுத்து முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான் அக் கோ. இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான்.
1. இப்பதிகமும், ஏனைப் பத்துக்களிற் காணப்படும் பதிகங்களும் பதிற்றுப்பத்து மூலம் மட்டில் உள்ள ஏடுகளிற் காணப்படவில்லை. பழைய உரையோடு கூடிய ஏடுகளிற்றான் காணப்படுகின்றன. |