முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை

         மூன்றாம் பத்து பதிகம்

   இமைய வரம்பன் றம்பி யமைவர
உம்பற் காட்டைத் தன்கோ னிறீஇ
அகப்பா வெறிந்து பகற்றீ வேட்டு
மதியுறழ் மரபின் முதியரைத் தழீஇக்
  5 கண்ணகன் வைப்பின் மண்வகுத் தீத்துக்
கருங்களிற் றியானைப் புணர்நிரை நீட்டி
இருகட னீரு மொருபக லாடி
அயிரை பரைஇ யாற்றல்சான் முன்போ
டொடுங்கா நல்லிசை யுயர்ந்த கேள்வி
  10 நெடும்பார தாயனார் முந்துறக் காடுபோந்த

     பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம்: அடுநெய்யாவுதி,
கயிறு குறுமுகவை, ததைந்தகாஞ்சி, சீர்சால்வெள்ளி,
கானுணங்குகடுநெறி, காடுறுகடுநெறி, தொடர்ந்தகுவளை,
உருத்துவருமலிர்நிறை, வெண்கை மகளிர், புகன்றவாயம். இவை
பாட்டின் பதிகம்.

     பாடிப்பெற்ற பரிசில்: 'நீர் வேண்டியதுகொண்மின்' என 'யானும்
என்பார்ப்பனியும் சுவர்க்கம் புகல்வேண்டும்' என, 1பார்ப்பாரிற்
பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பிக்கப் பத்தாம்
பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார்.

     இமயவரம்பன்றம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.

     (கு - ரை) 2. தன் கோல் நிறீஇ - தன் செங்கோற்கீழே
அமைத்து.

     3. அகப்பா - ஓர் அரண். அகப்பா எறிந்தது: பதிற். 22 : 26;
நற். 14 : 4 - 5; சிலப். 28 : 144.

     4. தன் அறிவோடு ஒக்கும் முறையையுடைய பெரியோரைத்
தழுவிக்கொண்டு.

     6. யானைகள் பொருந்திய வரிசையை நீளமாக்கி. இப்பத்துக்கு
உரிய பாட்டுடைத் தலைவன் பெயரிலுள்ள பல்யானையென்ற தொடர்
இதனால் வந்ததுபோலும்.

     7. இருகடல் - மேல்கடலும் கீழ்கடலும்.

     8. அயிரை பரைஇ - அயிரையென்னும் மலையினிடத்தே
உள்ள துர்க்கையைப் பரவி. அயிரையைப் பராவுதல்: பதிற்.88 : 12,
90: 19. முன்பு - வலிமை.

     7-8. "உருகெழு மரபி னயிரை மண்ணி,
இருகடனீருமாடினோன்" (சிலப். 28 : 145 - 6)

     10. பாரதாயனார் - பாரத்துவாச கோத்திரத்தில் உதித்தவர்.
முந்து உற - துறவுபூண்டு முன்னே செல்ல.


     1யாகங்களைப் பண்ணிப் பெரிய சுவர்க்கத்து ஏறப்போம்
அந்தணர் (
மதுரைக். 494-5, ந.)





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

ஆசிரியர் பாலைக் கௌதமனார் பாடிய

மூன்றாம் பத்து

பதிகம்

இமைய வரம்பன் றம்பி யமைவர
உம்பற் காட்டைத் தன்கோ னிறீஇ
அகப்பா வெறிந்து பகற்றீ வேட்டு
மதியுறழ் மரபின் முதியரைத் தழீஇக்
கண்ணகன் வைப்பின் மண்வகுத் தீத்துக்
கருங்களிற் றியானைப் புணர்நிரை நீட்டி
இருகட னீரு மொருபக லாடி
அயிரை பரைஇ யாற்றல்சால் முன்போ
டொடுங்கா நல்லிசை யுயர்ந்த வேள்வி
நெடும்பார தாயனார் முந்துறக் காடுபோந்த
பல்யானைச் செல்கெழு குட்டுவனைப்

  

பாலைக்   கௌதமனார் பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம். அடு
நெய்யாவுதி,  கயிறுகுறு  முகவை,  ததைந்த காஞ்சி, சீர்சால் வெள்ளி,
கானுணங்கு  கடுநெறி,  காடுறு  கடுநெறி, தொடர்ந்த குவளை, உருத்து
வரு  மலிர்நிறை,  வெண்கை மகளிர், புகன்ற வாயம் இவை பாட்டின்
பதிகம்.  

பாடிப்   பெற்ற பரிசில், நீர் வேண்டியது கொண்மின் என, யானும்
என்   பார்ப்பனியும்  சுவர்க்கம்  புகல்வேண்டும்  என,  பார்ப்பாரிற்
பெரியோரைக்  கேட்டு  ஒன்பது  பெருவேள்வி  வேட்பிக்க,  பத்தாம்
பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினர்.  

இமயவரம்பன்    றம்பி   பல்யானைச்   செல்கெழு    குட்டுவன்
இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.

துறை  : செந்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணம் : ஒழுகு வண்ணம்.
தூக்கு : செந்தூக்கு.
பெயர் : புண்ணுமிழ் குருதி.
  

திணை : பாடாண்டிணை.  “பாடாண்  பகுதி கைக்கிளைப் புறனே
(தொல். பொ. 80) என்னும் தொல்காப்பிய நூற்பா வுரையில், ஆசிரியர்
பதிற்றுப்பத்தினுள்,   வஞ்சிப்பொருளும்   வாகைப்பொருளும்   வந்த
பாடாண்  பாட்டுக்கள்  சில  காட்டி,  “  இப்  பதிற்றுப்பத்து  நூறும்
இவ்வாறே    வருதலின்    பாடாண்டிணையே    யாயிற்று”  என்று
கூறியிருக்கின்றனர்.   அதனாற்றான்   இப்  பாட்டுகட்குத்   துறையும்
வண்ணமும்   தூக்கும்   பெயரும்  வகுத்தோர்  திணை  கூறிற்றிலர்
போலும்.  அல்லதூஉம்,  இறந்தொழிந்த  முதற்பத்தின்  முதற்பாட்டில்
திணைகாட்டிப்   பின்னர்   ஏனையிடங்களிற்  கூறிக்  கொள்ளுமாறு
விடுத்தனர் போலும்.  

துறை : செந்துறைப்  பாடாண்பாட்டு;   அஃதாவது,  “வழங்கியன்
மருங்கின்  வகைபட  நிலைஇ”  (பொ.  82)  என்னும் தொல்காப்பிய
நூற்பாவுரையில்   ஆசிரியர்   நச்சினார்க்கினியர்,  “செந்துறையாவது,
விகாரவகையான்  அமரராக்கிச்  செய்யும்  அறுமுறை  வாழ்த்தினைப்
போலாது, உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல்;
இது   செந்துறைப்   பாடாண்  பாட்டெனப்படும்”  என்பது  காண்க.
பாடாணென்பது,    “பாடுதல்   வினையையும்   பாடப்படும்   ஆண்
மகனையும்    நோக்காது    அவனது   ஒழுகலாறாகிய   திணையை
யுணர்த்தினமையின்,     வினைத்தொகைப்     புறத்துப்     பிறந்த
அன்மொழித்தொகை” யென்பர் நச்சினார்க்கினியர்.  

தூக்கு : செந்தூக்கு;  அஃதாவது  ஆசிரியப்பா.  “ஈற்றய லடியே
யாசிரிய  மருங்கின்,  தோற்ற முச்சீர்த் தாகுமென்ப” என்றதற் கேற்ப,
ஈண்டும்     எருத்தடி     முச்சீரினை    யுடைமையின்,    இதுவும்
ஆசிரியப்பாவாகிய   செந்தூக்காயிற்று.   “வஞ்சித்  தூக்கே செந்தூக்
கியற்றே”  (பொ.  383) என்ற நூற்பாவுரையில் ஆசிரியர் பேராசிரியர்.
செந்தூக்  கென்பதற்கு “ஆசிரியவடி” யென்றே பொருள் கூறியுள்ளார்.
இந்நூற்குத்  தூக்கு  வகுத்தோர்,  வேற்றடி விரவாது பாட்டு முழுதும்
அளவடியா  னியன்றவழிச்  செந்தூக்கென்றும்  வஞ்சியடி  முதலியன
விரவிவரின்  செந்தூக்கும்  வஞ்சித்தூக்கு  மென்றும்  கூறுவர். தூக்கு
என்பது  செய்யுள்  அடி வரையறை கொண்டு பாக்களைத் துணிப்பது.
அஃதாவது  பாவகையுள்  இன்ன  பாவெனத்  துணித்துக் கூறுவதென
வறிக.  

வண்ணம் : ஒழுகு  வண்ணம்.  இது  வண்ணவகை  இருபதினுள்
ஒன்று. இது, முடியாதது போன்று முடிந்து நிற்றலும் முடிந்தது போன்று
முடியாது   நிற்றலுமாகிய   அகப்பாட்டுப்  புறப்பாட்டு  வண்ணங்கள்
போலாது,  ஒழுகிய  வோசையாற் செல்வது. ‘ஒழுகு வண்ணம் ஓசையி
னொழுகும்’ (தொ. பொ. 538) என ஆசிரியர் கூறுதல் காண்க.  

“வண்ண    மென்பது சந்த வேறுபாடு” என்றும், யாப்புப் பொருள்
நோக்கிய வாறுபோல, இது பொருள் நோக்காது ஓசையே கோடலானும்,
அடியிறந்து  கோடலானும்  யாப்பெனப்  படாது” என்றும் பேராசிரியர்
விளக்குதலால்,  இது  செய்யுள்  வகையு ளடங்கா  தெனவும், எனவே
ஒரு  செய்யுளில்  ஒன்றே  யன்றிப்  பல வண்ணங்களும் வருமெனவு
மறிக.  

பெயர் : இப்  பாட்டிற்குப்  பெயர்  ‘புண்ணுமிழ் குருதி’ யென்பது.
“அருநிறந்  திறந்த  (அடி  8) என முன் வந்த  அடைச்  சிறப்பானும்,
“மணிநிற விருங்கழி நீர்நிறம் பெயர்ந்து, மனாலக் கலவைபோல” எனப்
பின்   வந்த  அடைச்  சிறப்பானும்  இதற்குப்  ‘புண்ணுமி்ழ்  குருதி’
யென்று   பெயராயிற்றெனப்   பழைய  வுரைகாரர்  இப்  பெயர்க்குக்
காரணம் காட்டுகின்றார்.  

1 - 6. வரை மருள்...............களிறூர்ந் தாங்கு.  

உரை : வரை மருள் புணரி - மலைபோல் எழும் அலைகள்; வான்
பிசிர் உடைய - வெள்ளிய சிறு துளிகளாக வுடையுமாறு, வளி பாய்ந்து
அட்ட - காற்றுப் போந்து அலைக்கப்பட்ட; துளங்கு இரும் கமம் சூல்
- ஓலிட்டலையும் நிறைந்த நீரும்; நளியிரும் பரப்பின் - மிக்க  பெரிய
இடப்பரப்புமுடைய;  மாக்  கடல்  முன்னி  - கரிய கடற்குள் சென்று;
அணங்கு   உடைஅவுணர்  -  பிறரை வருத்துதலையியல்பாகவுடைய
அவுணர்கள்;  ஏமம்  புணர்க்கும்  -  அரணாக நின்று பாதுகாவலைச்
செய்யும்;   சூ   ருடை  முழுமுதல்  தடிந்தசூ  ரவன்  மாவினுடைய
மாமரத்தினை  வேருடன்  வெட்டிக்  குறைத்த;  பேரிசை  கடுஞ்சின
விறல்வேள்  - மிக்க புகழும் கடிய சினமும் விறலுமுடைய செவ்வேள்;
களிறு   ஊர்ந்தாங்கு   -   பிணிமுக  மென்னும்  யானை  யிவர்ந்து
சிறப்பாய்ந்ததுபோல,  

“பிசிருடைய,     பிசிராகவுடைய      வென்றவா”     றென்பர்
பழையவுரைகாரர்.  

புணரி,    அலை; “குடகடல், வெண்டலைப் புணரிநின் மான்குளம்
பலைக்கும்”  (புறம்  31)  என  வருதல்  காண்க;  பிசிர்  - சிறுதுளி,
“வெண்டலைக்  குரூஉப்பிசி  ருடைய”  (பதிற். 42) எனப் பிறாண்டும்
வரும்.  “நளியிரும்  பரப்பின் மாக்கடல்” எனக் கடலின் பெருமையும்
பரப்பும்  கூறுதலின்,  அத்தகைய கடல் துளங்குதற்கு ஏதுக் கூறுவார்,
“வளிபாய்ந்தட்ட”  என்றும்,  அதன்  விளைவாக “வரைமருள் புணரி
வான்பிசிர்   உடைய”   என்றும்   கூறினார்.  முகிற்கூட்டம்  படிந்து
முகத்தலால்  குறைவதும், யாறுகளாலும் மழையாலும் புனல் வருதலால்
மிகுவதுமின்றி,    எஞ்ஞான்றும்    நிறைந்திருத்தலின்,   “கமஞ்சூல்
மாக்கடல்”   என்றார்.   கமஞ்சூல்,  நிறைந்த  நீர்;  சூல் போறலால்
சூலெனப் பட்டதென்பர் பழைய வுரைகாரர், “மழைகொளக் குறையாது
புனல்புக  மிகாது,  கரைபொரு  திரங்கும்  முந்நீர்”  (மதுரை. 424-5)
என்று  பிறரும்  கூறுதல்  காண்க.  பிறர்க்குத் துன்பம் செய்தலையே
யியல்பாகவுடையராதலின்,  “அணங்குடை  யவுணர்”  என்றார். சூரன்
ஓம்பிய  மாமரம்,”  அவுணர் தம்முடனே யெதிர்ந்தார் வலியிலே பாதி
தங்கள்   வலியிலே   கூடும்படி  மந்திரங்கொண்டிருந்து   சாதித்தது”
(முருகு.  59,60,  நச்)  பற்றி,  அதனை யவன் அவுணர்க்கு  ஏமமாகப்
புணர்த்து ஓம்பினா னென வறிக.  சூருடை     முழுமுதல்   என்றது,
சூரவன்மாத்  தனக்கரணாக வுடைய  மாவின்  முழுமுதல்  எ  -  று;
இனி,   சூரவன்மாத்  தான்  ஒரு  மாவாய்  நின்றானென்று   புராண
முண்டாயின்,  சூரனாதற்  றன்மையையுடைய மாவின்  முதலென்றவாறு
-  ப  -  ரை.   செவ்வேளது  கடுஞ்சினம்    அவுணரது    மாவின்
முழுமுதல் தடிதற்குத் துணையாய் அவுணரல்லாத ஏனை  நல்லோர்க்கு
நலம்   பயந்தமையின்,  “பேரிசைக்  கடுஞ்சின விறல்வேள்”   என்று
சிறப்பித்தார்.   “அவுணர்  நல்வல  மடங்கக்   கவிழிணர்,  மாமுதல்
தடிந்த  மறுவில் கொற்றத்து, எய்யா  நல்லிசைச்  செவ்வேற்  சேஎய்”
(முருகு. 59-61) என நக்கீரனார் கூறுதல்  காண்க.  முருகன்  கடற்குட்
புகுந்த,  அவுணர்  சூழ  வாழ்ந்த சூரவன்மாவை   யழித்த செய்தியை
நக்கீரனாரும், “பார் முதிர் பனிக்கடல்  கலங் கவுள் புக்குச்,  சூர்முதல்
தடிந்த சுடரிலை நெடுவேல்” (முருகு. 45-6) என்று  கூறுதலாலு  மறிக.
முருகவேள்  பிணிமுக  மென்னும்  களிறூர்தலை முருகாற்றுப்படைக்கு
நச்சினார்க்கினியா ரெழுதிய வுரையாலு மறிக.  

மாக்கடல்  முன்னி முழுமுதல் தடிந்த விறல்வேள் களிறூர்ந் தாங்கு.
“யானைப்   பொலனணி  யெருத்த  மேல்கொண்டு  பொலிந்த”  என
இயைத்துக் கொள்க.  

7 - 16. செவ்வாய் ................... சேரலாத.  

உரை : செவ்வாய்   எஃகம்    விலங்குநர்   அறுப்ப  -  கூரிய
வாயினையுடைய  வாட்படையானது  எதிர்த்துக்   குறுக்கிட்டு  நிற்கும்
பகைவரை  யறுக்க; அருநிறம் திறந்த புண் உமிழ் குருதியின்  அவரது
அரிய    மார்பு   பிளத்தலாலுண்டாகிய   புண்ணினின்   றொழுகும்
உதிரத்தால்;  இருங்கழி  மணிநிற  நீர்  - பெரிய கழியிடத்து நீலமணி
போலும் நீர்; நிறம் பெயர்ந்து - நிறம் மாறி; மனாலக் கலவை போல -
குங்குமக்    குழம்பினை   நிகர்க்க;   அரண்   கொன்று   பகைவர்
அரண்களையழித்து;  முரண்மிகு  சிறப்பின் - வலி மிகுந்து விளங்கும்
சிறப்பினால்;    உயர்ந்த   ஊக்கலை   -   உயர்ந்த   மனவெழுச்சி
யுடையையாய்  ;  பலர்  மொசிந்து ஓம்பிய - பகைவர் தாம் பலராய்க்
கூடிநின்று  காத்த;  அலர்  பூங்கடம்பின் - மலர்ந்த  பூக்களையுடைய
கடப்ப  மரத்தினை; கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் - காவலமைந்த
அடியோடு  தடிந்  தொழிக்குமாறு வீரரையேவி; வென்று எறி முழங்கு
பணை செய்த - போரை வென்று அறையும் முழங்குகின்ற முரசினைச்
செய்துகொண்ட;  வெல்போர்  -  வெல்லும் போரினையும்; நார் அரி
நறவின்  -  நாரால்  வடிக்கப்பட்ட  கள்ளினையும்;  ஆர மார்பின் -
ஆரமணிந்த  மார்பினையும்;  போர் அடு தானை - அஞ்சாது நின்று
அறப்போர் புரியும் தானையினையுமுடைய; சேரலாத - சேரலாதனே, -  

மணிநிற     நீரும் புண்ணுமிழ் குருதியும்  கலந்தவழி இங்குலிகக்
கலவையை  நிகர்க்கு  மென்பதே  சிறப்பாயினும், குருதி மேன்மேலும்
பெருகிப்  பாய்தலின்,  அதன்  செந்நிறமே மிகுவது கருதியே பழைய
வுரைகாரரும்  மனாலமென்றது,  குங்குமம்  என்றார். இங்குலிகத்தைக்
கூறலும்   குற்றமன்மையின்,  “சாதிங்குலிக     மென்பாரு   முளர்”
என்றார். “அஞ்சன  நிறநீக்கி யரத்தம்போர்த்  தமருழக்கி,  இங்குலிக
விறுவரை    போன்   றினக்களி    றிடைமிடைந்த,    குஞ்சரங்கள்
பாய்ந்திடலிற்   குமிழி  விட்டுமிழ்குருதி,   இங்குலிக   வருவிபோன்
றெவ்வாயுந்  தோன்றினவே”  (சீவக.  2239) என்று கூறினர்  பிறரும்.
நிறம்,  மார்பு.  வெலற்கருமை   பற்றி   வீரர்   மார்பு.   “அருநிற”
மெனப்பட்டது.

“அரணாவது,   மலையுங் காடும் நீரு மல்லாத அகநாட்டுட் செய்த
அருமதில்  ;  அது  வஞ்சனை  பலவும்  வாய்த்துத்  தோட்டி முண்
முதலியன   பதித்த  காவற்காடு  புறஞ்சூழ்ந்து,  இடங்கர்  முதலியன
உள்ளுடைத்தாகிய   கிடங்கு  புறஞ்சூழ்ந்து,  யவனர்  இயற்றிய  பல
பொறிகளும்  ஏனைய  பொறிகளும்  பதணமும் எய்ப்புழை ஞாயிலும்
ஏனைய  பிறவு  மமைந்து,  எழுவும்  சீப்பு முதலியவற்றால் வழுவின்
றமைந்த   வாயிற்   கோபுரமும்   பிற   வெந்திரங்களும்  பொருந்த
வியற்றப்பட்டதாம்”  என்பர்  ஆசிரியர் நச்சினார்க்கினியார். ஒருகால்
அழித்தவழி   இவை   மீட்டும்   முன்னைய  வலிபெறாத  வகையில்
அழித்தல்  வேண்டுதலின்,  கொலைவாய்பாட்டால், “அரண் கொன்று”
எனவும்,  அச்செயலால்  வேந்தர்க்கு  மறமும்  மானமும்  மிகுதலின்
“முரண்மிகு  சிறப்பின்”  எனவும்,  தன்னைத் தாக்க வருவோர் ஊக்க
மழிக்குங்  கருத்தால்  இயற்றப்பட்ட  இவ்வரணைக் கொல்லுந்தோறும்
வேந்தர்க்கு   ஊக்கம்   கிளர்ந்தெழுதலால்,   “உயர்ந்த  வூக்கலை”
யெனவும்  கூறினார்.  “உறுபகை  யூக்க  மழிப்ப தரண்” (குறள். 744)
என்று  திருவள்ளுவர்  கூறுதல் காண்க. ஊக்கம், ஊக்கலென நின்றது.
இவ்  வூக்க  மிகுதியால்  கடல்  கடந்து  சென்று  பலர் கூடிக் காத்து
பகைவர்  காவல்  மரமாகிய  கடம்பின் முழுமுதல் தடிந்து வென்றெறி
முரசுசெய்துகொண்டது   கூறலுறுகின்றாராதலின்,   ஊக்கலை   யென
முற்றெச்சமாக    மொழிந்தாரெனவறிக.    மொசிதல்,    மொய்த்தல்,
உவமைக்கண்,   செவ்வேள்  மாக்கடல்  முன்னி  மாமுதல்  தடிந்தது
கூறவே,   நெடுஞ்சேரலாதன்   முந்நீர்க்குட்  சென்று  கடம்பெறிந்தா
னென்பது    இனிது   விளக்க   மெய்திற்று.   கடம்பெறிந்து  முரசு
செய்துகொண்டதனை,   “சால்பெருந்   தானைச்   சேரலாதன்,  மால்
கடலோட்டிக்  கடம்பறுத்  தியற்றிய,  பண்ணமை  முரசு,” (அகம் 127,
147)   என  மாமூலரும்,  “துளங்குபிசி  ருடைய  மாக்கடல்  நீக்கிக்,
கடம்பறுத்  தியற்றிய  வியன்பணை” (பதிற்.17), “எங்கோ, இருமுந்நீர்த்
துருத்தியுள்,   முரணியோர்த்   தலைச்சென்று,   கடம்புமுத   றடிந்த
கடுஞ்சின    முன்பின்,    நெடுஞ்சேரலாதன்”   (பதிற்.   20)  என
இவ்வாசிரியரும்  கூறியிருத்தல்  காண்க.  சேரலாதன்  செய்த  போர்
பலவும்   அவற்கு   வெற்றியே  பயந்தமை  தோன்ற,  “வெல்போர்”
என்றும்,  அவன்  ஆணை  வழி நின்று அறப்போ ருடற்றும் இயல்பு
குறித்து, “போரடுதானை” யென்றும் சிறப்பித்தார்.  

17 - 25.மார்புவலி........கடந்தே.  

உரை : கவிர்ததை  சிலம்பில்  துஞ்சும்  கவரி - முருக்க மரங்கள்
செறிந்த  மலையிடத்தே  இரவில்  உறங்கும்  கவரிமான்கள்;  நரந்தம்
பரந்து  இலங்கு  அருவியொடு கனவும் - பகற்போதில் தாம் மேய்ந்த
நரந்தம்  புற்களையும்,  அவை  வளர்ந்திருக்கும்  பரந்து   விளங்கும்
அருவிகளையும்  கனவிற் கண்டு மகிழும்; ஆரியர்  துவன்றிய ஆரியர்
நிறைந்து வாழும்; பேரிசை இமயம் தென்னம் குமரியொடு ஆயிடை -
பெரிய  புகழையுடைய  இமயம்     தெற்கின்கண்   ணுள்ள   குமரி
யாகிய இவற்றிற்கு இடைப்பட்ட   நாட்டிலுள்ள;    மன்   மீக்கூறுநர்
மன்னர்களுள்  செருக்குற்று  மீக்கூறும்  மன்னர்களின்;  மறம்   தபக்
கடந்து - மறம்  கெட்டழியுமாறு  வஞ்சியாது பொருது வென்று; மார்பு
மலி   பைந்தார் -  மார்பிற்  கிடக்கும்  பசிய  மாலை;  ஓடையொடு
விளங்கும் - ஓடை யளவும்  தாழ்ந்து  அதனோடு  விளங்கும்;  வலன்
உயர் மருப்பின் - வெற்றியாலுயர்ந்த மருப்பினையுடைய; பழிதீர்யானை
- குற்றமில்லாத யானையின்; பொலன் அணி யெருத்தம் மேல்கொண்டு
பொலிந்த  -  பொன்னரிமாலை  யணிந்த  பிடரின் மேல் ஏறியிருந்து
சிறக்கும்; நின் பலர் புகழ் செல்வம் -  நின்னுடைய  பலரும்  புகழும்
செல்வச் சிறப்பினை; இனிது கண்டிகும் - யாம் இனிது காண்கின்றோம்,
நீ வாழ்க என்றவாறு.  

கவரிமானும்      நரந்தம்     புல்லும்      இமயமலைச்சாரலில்
மிகுதியாகவுண்மையின்  இவற்றை விதந்தோதினார். “நரந்தை நறும்புல்
மேய்ந்த கவரி, குவளைப் பைஞ்சுளை பருகி யயல, தகரத் தண்ணிழல்
பிணையொடு  வதியும்,  வடதிசை  யதுவே வான்றோ யிமயம்” (புறம்.
132) என்று ஏணிச்சேரி முடமோசியாரும் கூறுவர்.  

மேல்கொண்டு   பொலிந்த நின் செல்வம் என முடிக்க. கவிர்ததை
சிலம்பிற்  றுஞ்சு  மென்றது,  ஆண்டுறையும்  ஆரிய  ராணையானே
முருக்கென்னும்  முள்ளுடை  மரமும் “மயிர்நீப்பின் வாழாக் கவரிமா”
(குறள்.  969)  என்று  சிறப்பிக்கப்பட்ட  தன்  மயிர்க்கும்  வருத்தம்
செய்யாமையால்,   அக்கவிர்  ததைந்த  சிலம்பின்கண்ணே  இனிதாக
வுறங்குமென்றும்,  அருவியொடு  நரந்தம் கனவு மென்றது, அவ்வாரிய
ராணையானே  பிற  விலங்கானும்  மக்களானும் வருத்தமின்றிப் பகற்
காலத்துத்  தான்  நுகர்ந்த அருவியையும் நரந்தத்தையுமே கனவினும்
காணும்  என்றும்,  குமரியொடு  என்னும் ஒடு எண்ணொடு; ஆயிடை
யென்றது,   இமயம்   குமரியாகிய   அவற்றுக்கு   இடை   என்றும்,
அவ்வென்னும்  வகரவீற்றுப்பெயர் ஆயிடையென முடிந்தது என்றும்,
மன்னென்றதனை  அரசென்றது போல அஃறிணைப் பெயராக்கி, அம்
மன்களில் மீக்கூறுமெனக் கொள்க என்றும் கூறுவர் பழையவுரைகாரர்.  

இனி,     நெடுஞ்சேரலாதன் இமயம்வரை  தன்  புகழைப் பரப்பி,
ஆங்கே    மறம்    செருக்கிய    ஆரிய    மன்னரை    வென்று
மேம்பட்டானாதலின், “ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம், தென்னங்
குமரியொடாயிடை,  மன்மீக்  கூறுநர்  மறந்தபக் கடந்தே” யென்றார்.
“ஆரிய   ரலறத்   தாக்கிப்   பேரிசைத்,   தொன்றுமுதிர்  வடவரை
வணங்குவிற் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்” (அகம்.
396)  என  ஆசிரியர் பரணரும், “வலம்படு முரசிற் சேரலாதன், முந்நீ
ரோட்டிக்  கடம்பெறிந்  திமயத்து,  முன்னோர்  மருள  வணங்குவிற்
பொறித்து”  (அகம்.  127) என ஆசிரியர் மாமூலனாரும் கூறியிருத்தல்
காண்க.   இவ்  விருவகை  வெற்றிகளுள்,  இமயத்தில் விற்பொறித்து
ஆரியமன்னரை  வென்று  பெற்ற  வெற்றி  பழமைத் தாயினமையின்,
அதனைக்     குறிப்பா     யுணர்த்தி,     கடம்பர்பால்     பெற்ற
வெற்றியினை     விரியக்   கூறினாரென   வறிக.   அரசு  என்பது
உயர்திணைப்  பொருண்மைக்கண் வந்த அஃறிணைச் சொல்லாதலின்,
அதுபோலவே,    மன்னென்பதும்    உயர்திணைப்   பொருட்டாகிய
“அஃறிணைப்  பெயராக்கி”  மீக்கூறு மென்பதனோடு முடிக்க வெனப்
பழைய   வுரைகாரர்  கூறினர்;  “உயர்திணை  மருங்கின்  நிலையின
வாயினும், அஃறிணை  மருங்கிற் கிளந்தாங்கியலும்” (தொல்.சொல் :56)
என்பது  விதி.  மறந்தபக்   கடந்து (25)  முழங்குபணை  செய்த (14)
என  மாறிக்  கூட்டுக. இங்ஙனம் மாறாது எருத்த மேல் கொண்டு (19)
என்னும்  வினையொடு  மாறி முடிப்பாரு முளர் என்பது பழையவுரை.
ஆரியமன்னரை மறந் தபக் கடந்த செய்திக்குப் பின்பே கடம்பெறிந்து
முரசு செய்த செய்தி நிகழ்தலின், எவ்வழிக் கூட்டினும் பொருள் நலம்
குன்றாமை யறிக.

சேரலாத  (16), கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்கு (6), யானை
(18)  யெருத்த  மேல்கொண்டு பொலிந்த நின் (19) பலர்புகழ் செல்வம்
கண்டிகும்  (20)  என  மாறிக்  கூட்டி  வினைமுடிவு செய்க. இதனாற்
சொல்லியது,   அவன்   வெற்றிச்   செல்வச்சிறப்புக்  கூறியவாறாயிற்
றென்பது  பழையவுரை.  செவ்வேள் கடல் புகுந்து சூருடை முழுமுதல்
தடிந்து களிறூர்ந்தது போலச் சேரலாதனும் கடல்புகுந்து கடம்பு முதல்
தடிந்து யானையெருத்தம் மேல்கொண்டு பொலிந்ததும், ஆரியமன்னர்
மறந்தபக்   கடந்ததும்   கூறியது  அவன்  வெற்றிச்  சிறப்பு;  “நின்
பலர்புகழ் செல்வம் இனிது கண்டிகும்” என்பது செல்வச்சிறப்பு.


 மேல்மூலம்