முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
                 ஆறாம் பத்து பதிகம்

 



குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் றேவி யீன்றமகன்
தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுட் டந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக்
 5




கபிலையொடு குடநாட் டோரூ ரீத்து
வான வரம்பனெனப் பேரினது விளக்கி
ஏனை மழவரைச் செருவிற் சுருக்கி
மன்னரை யோட்டிக்
குழவிக்கொள் வாரிற் குடிபுறந் தந்து
 10


நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்
ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை
யாத்த செய்யு ளடங்கிய கொள்கைக்

     காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடினார்
பத்துப்பாட்டு.

     அவைதாம்: வடுவடு நுண்ணயிர், சிறுசெங்குவளை,
குண்டுகண்ணகழி, நில்லாத்தானை, துஞ்சும்பந்தர்,
வேந்துமெய்ம்மறந்த வாழ்ச்சி, சில்வளைவிறலி, ஏவிளங்கு தடக்கை,
மாகூர்திங்கள், மரம்படுதீங்கணி. இவை பாட்டின் பதிகம்.

     பாடிப் பெற்றபரிசில்: கலனணிகவென்று அவர்க்கு ஒன்பது
1காப்பொன்னும் நூறாயிரங்காணமுங்கொடுத்துத் தன்பக்கத்துக்
கொண்டான் அக்கோ.

     ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டியாண்டு
வீற்றிருந்தான்.

     (கு - ரை) 1. குடக்கோ - குடநாட்டிலுள்ளார்க்குத் தலைவன்.

     3. தண்டாரணியம் - தண்டகாரணியம் என்பதன் சிதைவு;
"தண்டாரணியத்துத் தாபதப் பள்ளி" (சீவக. 337).
கோட்பட்டவருடைய - பகைவரால் கொள்ளப்பட்ட மலையாடுகளை.

     4. தொண்டியுள் தந்து - மேல்கடற்கரையிலுள்ள தொண்டி
நகரத்தே கொண்டுவந்து; "திண்டேர்ப் பொறையன் றொண்டி"
"விறற்போர்க் குட்டுவன், தெண்டிரைப் பரப்பற் றொண்டி" (அகநா.
60 : 7, 290 : 12 - 3)

     3-4. இவ்வடிகளில் தலைவன் பெயர்க் காரணம்
அமைந்துள்ளது.

     4-5. அந்தணருக்குப் பசுக்களோடு குடநாட்டிலுள்ள ஓரூரைக்
கொடுத்து; இது 'கபிலை கண்ணிய வேள்விநிலை' (தொல். புறத். 35)
எனப்படும்.

     6. வானத்தைத் தன் ஆணைக்கு எல்லையாக உடையவனென்று
தன்பேரை இனிதாக விளங்கச் செய்து.
      
     7. மற்ற மழவரென்னும் வகையாரைப் போரிற் கொன்று
குறையச் செய்து.

     8. பகையரசர்களைப் போர்க்களத்தினின்றும் புறங்கொடுத்து
ஓடச்செய்து. 9. குழந்தையைப் பாதுகாப்பாரைப் போலக் குடிகளைக
காப்பாற்றி (புறநா. 4 : 18, 5 : 7, குறிப்புரை.)

     10. அறத்தையே ஆராய்தல் அமைந்த அன்புடைய
நெஞ்சினையுடைய.

     12. ஐம்புலன்களும் அடங்கிய கோட்பாட்டையுடைய.

     (பி - ம்.) 11. ஆடுகோட்பாடு சேரலாதன்.


     1கா: ஒரு நிறையின் பெயர்; "காவெ னிறையும்" (தொல்.
தொகை மரபு. 27). காணம் - பொற்காசு; 'காண மிலியெனக்
கையுதிர்க்கோடலும்' (
மணி. 16; 10); பழங்காசு (சீவக. 1: 117. ந.)




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடிய
 
ஆறாம் பத்து
 
பதிகம்

  

குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் றேவி யீன்றமகன்
தண்டா ரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுட் டந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்கு
 
5கபிலையொரு குடநாட் டோரூ ரீத்து
வான வரம்பனெனப் பேரினிது விளக்கி
ஏனை மழவரைச் செருவிற் சுருக்கி
மன்னரை யோட்டிக்
குழவி கொள்வாரிற் குடிபுறந் தந்து
 
10நாடல் சான்ற நயனுடைய நெஞ்சின்
ஆடுகோட் பாட்டுச் சேர லாதனை
யாத்த செய்யு ளடங்கிய கொள்கைக்
 
  

காக்கைபாடினியார்     நச்செள்ளையார்    பாடினர் பத்துப்பாட்டு.
அவைதாம், வடுவடு நுண்ணயிர், சிறுசெங்குவளை,  குண்டுகண் ணகழி,
நில்லாத  தானை,  துஞ்சும்  பந்தர்,  வேந்து  மெய்ம்மறந்த வாழ்ச்சி,
சில்வளை  விறலி,  ஏவிளங்கு  தடக்கை,  மாகூர்  திங்கள்,  மரம்படு
தீங்கனி ; இவை பாட்டின் பதிகம்.

பாடிப்     பெற்ற பரிசில் : ‘கல னணிக’ என்று அவர்க்கு ஒன்பது
காப்பொன்னும்  நூறாயிரங்  காணமும்  கொடுத்துத்  தன்   பக்கத்துக்
கொண்டான் அக் கோ.

ஆடுகோட்     பாட்டுச்     சேரலாதன்    முப்பத்தெட்டியாண்டு
வீற்றிருந்தான்.


 மேல்மூலம்