முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
          ஒன்பதாம் பத்து பதிகம்

 



குட்டுவ னிரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
வேண்மா ளந்துவஞ் செள்ளை யீன்றமகன்
வெருவரு தானையொடு வெய்துறச் செய்துசென்
றிருபெரு வேந்தரும் விச்சியும் வீழ
 5




அருமிளைக் கல்லகத் தைந்தெயி லெறிந்து
பொத்தி யாண்ட பெருஞ்சோ ழனையும்
வித்தை யாண்டவிளம் பழையன் மாறனையும்
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று
வஞ்சி மூதூர்த் தந்துபிறர்க் குதவி
 10




மந்திரமரபிற் றெய்வம் பேணி
மெய்யூரமைச்சியன் மையூர் கிழானைப்
புரையறு கேள்விப் புரோசு மயக்கி
அருந்திறன் மரபிற் பெருஞ்சதுக் கமர்ந்த
வெந்திறற் பூதரைத் தந்திவ ணிறீஇ
 15



ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு
மன்னுயிர் காத்த மறுவில் செங்கோல்
இன்னிசை முரசி னிளஞ்சேர லிரும்பொறையைப்
பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப்பாட்டு.

     அவைதாம்: நிழல்விடு கட்டி, வினை நவில் யானை,
பஃறோற்றொழுதி, தொழினவில்யானை, நாடுகாணெடுவரை,
வெந்திறற்றடக்கை, வெண்டலைச் செம்புனல், கல்கால்கவணை,
துவராக்கூந்தல், வலிகெழு தடக்கை: இவை பாட்டின் பதிகம்.

     பாடிப் பெற்ற பரிசில்: 1மருளில் லார்க்கு 2மருளக்
கொடுக்கவென்று உவகையின் முப்பத்தீராயிரம் காணம்கொடுத்து
அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து ஏரும்
இன்பமும் இயல்வரப் பரப்பி எண்ணற்கு ஆகா 3அருங்கல வெறுக்கையோடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக் 4காப்புமறம்
தான்விட்டான் அக்கோ5.

     குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை பதினாறாண்டு
வீற்றிருந்தான்.

     (கு - ரை) 3. பகைவர் அஞ்சுதல் வருகின்ற சேனையோடு
கொடுமையுறச்செய்து புறப்பட்டு.

     4. சோழனும் பாண்டியனுமாகிய இரண்டு பெரிய அரசரோடு
விச்சி என்னும் குறுநில மன்னன் இறக்கும்படி; விச்சி - ஒருமலை; அதனையுடைய தலைவனுக்கு ஆயிற்று; ‘’வில்கெழு தானை விச்சியர் பெருமகன், வேந்தரொடு பொருத ஞான்றை’’ (குறுந். 328 : 5 - 6) என்பதிற் குறிக்கப்பட்டது இப்போர் போலும். விச்சி: ‘’விளங்கு
மணிக் கொடும்பூண் விச்சிக்கோவே’’ (புறநா. 200 : 8) 5. பகைவர்
புகுதற்கு அரிய காவற்காட்டையுடைய மலையிடத்தமைந்த
ஐந்து மதில்களை அழித்து.

     6. பொத்தி என்னும் புலவரை ஆண்ட கோப்பெருஞ்
சோழனையும்; ‘’கோழியோனே கோப்பெருஞ் சோழன்,
பொத்தினண்பிற் பொத்தியோடு கெழீஇ, வாயார் பெருநகை
வைகலு நக்கே’’ (புறநா. 212 : 8 - 10)

     7. வித்தையென்னும் புலவரை ஆண்ட இளம்பழையன்
மாறனையும்; வித்தை: ஒரு புலவரது பெயர்போலும்;
கல்வியுமாம்.

     8. தான்கூறிய சபதம் நிறைவேறும்படி வென்று; வைத்த
வஞ்சினமென்பது, ‘’இன்னது பிழைப்பினிதுவாகியரெனத்,
துன்னருஞ் சிறப்பின் வஞ்சினம்’’ (தொல். புறத். 24) என்பதனாலும், ‘தான் செய்யக்கருதியது பொய்த்துத் தனக்குவருங் குற்றத்தால
உயிர் முதலியன துறப்பனென்றல்’ என்னும் அதன் உரையாலும்
அறியப்படும்.

     9. வஞ்சியென்னும் பெயரையுடைய பழமையான ஊரிலே
அவர்களை வென்று கைக்கொண்ட பொருள்களைக் கொண்டுவந்து அவற்றைப் பிறர்க்குக் கொடுத்து. 10. மந்திரங்களால் வழிபட
வேண்டிய முறைப்படியே தெய்வங்களை வழிபட்டு.

     11. மெய்ம்மை பரவிய அமைச்சர்க்குரிய இயல்புகளையுடைய
மையூர் கிழானென்னும் அமைச்சனை. கிழானென்பதனால் இவர்
வேளாளரென்பது அறியப்படும்.

     12. குற்றம் நீங்கிய கேள்விச் செல்வத்தையுடைய தன்
புரோகிதனைக் காட்டிலும் அறநெறியை அறிபவனாகச் செய்து.
புரோசு மயக்கி: பதிற். 7-ஆம் பதிகம்.

     13-4. அரிய திறலையுடைய இயல்பினைப்பெற்ற பெரிய
நாற்சந்தியில் விரும்பி இருக்கும் கொடிய திறலையுடைய பூதங்களை
இவ்வுலகத்தே கொண்டுவந்து நிறுத்தி. சதுக்கமர்ந்த பூதமென்றது
அமராபதியிலுள்ள பூதங்களை. சதுக்கு - சதுக்கம்; நாற்சாந்தி:

     15. நூல்களில் ஆராயப்பட்ட இயல்பினையுடைய
களவேள்வியாற் சாந்தியைச் செய்து. சாந்தி வேட்டு: ‘களவேள்வியாற்
சாந்திசெய்து விழவெடுத்தலானே’ (சிலப். உரைபெறுகட்டுரை:
அடியார்.)

     14-5. ‘சதுக்கப் பூதரை வஞ்சியுட் டந்து, மதுக்கொள் வேள்வி
வேட்டோ னாயினும்’’ (சிலப். 28 : 147 - 8)

     16-7. நிலைபெற்ற உயிர்களைக் காப்பாற்றிய குற்றம் இல்லாத
செங்கோலையும், இனிய ஓசையையுடைய முரசினையும் உடைய
இளஞ்சேரலிரும்பொறையை.

     (பி - ம்) 1. வம்மையூர்கிழான், மேயூர்கிழான்.


     1மருள் - மயக்கம்.
     2மருள - ஆச்சரியமடையும்படி
     3அருங்கல வெறுக்கை - அரிய ஆபரணமாகிய செல்வம்.
     4காப்புப்புறமென்றிருப்பிற் சிறக்கும். புறம் - கொடை; சிறுபுற
மென்றது சிறுகொடையை’ (7-ஆம் பதிகம் உரை). காப்புப்புறம் -
காத்தற்குரிய கொடை.

     5கண்ணபிரான் குசேலருக்குச் செய்த உதவி இங்கே நினைவிற்கு
வருகின்றது.




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

ஆசிரியர் பெருங்குன்றூர் கிழார் பாடிய

ஒன்பதாம் பத்து

பதிகம்
 

குட்டுவ னிரும்பொறைக்கு மையூர் கிழான்
வேண்மா ளந்துவஞ் செள்ளை யீன்றமகன்
வெருவரு தானையொடு வெய்துறச் செய்துசென்
றிருபெரு வேந்தரும் விச்சியும் வீழ
 
5அருமிளைக் கல்லகத் தைந்தெயி லெறிந்து
பொத்தி யாண்ட பெருஞ் சோழனையும்
வித்தை யாண்ட விளம்பழையன் மாறனையும்
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று
வஞ்சி மூதூர்த் தந்து பிறர்க்குதவி
 
10மந்திர மரபிற் றெய்வம் பேணி
மெய்யூ ரமைச்சியன் மையூர் கிழானைப்
புரையறு கேள்விப் புரோசு மயக்கி
அருந்திறன் மரபிற் பெருஞ்சதுக் கமர்ந்த
வெந்திறற் பூதரைத் தந்திவ ணிறீஇ
 
15ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு
மன்னுயிர் காத்த மறுவில் செங்கோல்
இன்னிசை முரசி னிளஞ்சேர லிரும்பொறையைப்
 

பெருங்குன்றூர் கிழார் பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம் : நிழல்
விடு  கட்டி,  வினைநவில்  யானை,  பஃறோற்றொழுதி,  தொழினவில்
யானை,   நாடுகண்  நெடுவரை,  வெந்திறற்  றடக்கை,  வெண்டலைச்
செம்புனல்,  கல்கால்  கவணை,  துவராக் கூந்தல், வலிகெழு தடக்கை.
இவை பாட்டின் பதிகம்.

பாடிப்பெற்ற பரிசில் : மருளில்லார்க்கு மருளக் கொடுக்க  வென்று
உவகையின் முப்பத்தீராயிம்  காணங்  கொடுத்து,  அவர் அறியாமை
ஊரும்  மனையும்  வளமிகப்  படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப்
பரப்பி,  எண்ணற்காகா  அருங்கல  வெறுக்கையொடு  பன்னூறாயிரம்
பாற்பட வகுத்துக் காப்பு தான்விட்டான் அக் கோ.

குடக் கோ இளஞ்சேர லிரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான்.


 மேல்மூலம்