இரண்டாம் பாடல்
திருமால்
பொருட்சுருக்கம்
1 - 4: ஒன்றற்கொன்று மாறிவரும் இயல்புடைய திங்களும்
ஞாயிறும் கெட்டு, விண்ணுலகமும் வெறும் பாழாகி விடப் பின்னர்,
வானமும் கெட்டு இல்லையாகச் சிதைந்தொடுங்கிய ஊழிக்காலங்கள்
பற்பல முறைமுறையாகக் கழிந்தனவாக;
5 - 12: அவ் வூழிகளின் பின்னர், அப் பாழினின்றும்
வானந்தோன்றிய முதற்பூதத்தின் ஊழியும், அவ் வானத்தினின்றும்
காற்றுத்தோன்றிக் கிளர்ந்து வீசாநிற்கும் இரண்டாம் பூதத்தின் ஊழியும்,
அந்தக் காற்றினின்றும் தீத்தோன்றிச் சுடர்வீசிய மூன்றாம் பூதத்தின்
ஊழியும் அந்தத் தீயினின்றும் பனியும் மழையும் தோன்றிப் பெய்த
நான்காம் பூதத்தின் ஊழியும்;
13 - 19: ஒடுங்குங்காலத்தே நீரினுள் முழுகி யொடுங்கிய
பெரிய
நிலமாகிய ஐந்தாம் பூதம் மீண்டும் அவ் வெள்ளத்தினூடே பீடுபெற்றுத்
திரண்டு செறிந்த ஐந்தாம் ஊழியும், பற்பல எண்ணிறந்தனவாகக்
கழிந்தபின்னர், இந் நிலத்தின் கண்ணே உயிர்கள் தோன்றும் பொருட்டுத்
திருமாலே! நீ பன்றி உருவம்கொண்டு நீரினுள் முழுகிக்கிடந்த
நிலத்தினை மேலே கொணர்ந்து தந்த காரணத்தானே இந்த ஊழிக்காலம்
'வராக கற்பம்' என நின்பெயரடுத்து நின்றது. இப் பெயர் நீ பல்வேறு
ஊழிகளிற் செய்த செயல்களுள் வைத்து ஒரு செயலையே
உணர்த்தாநிற்கும். இச் செயல்போன்று நீ செய்த செயல்களை யாவரே
அறியவல்லார்? அறிவாரிலராகலான் நினது பழைமைக்குரிய ஊழிகள்
உணரப்படாவாயின. ஆழி முதல்வனே! நின் திருவடிகளை வணங்கி
வாழ்த்துவோம்.
20 - 27: பெருமானே! நின்னை இளையன் என்பார்க்கும்
பிறப்பாலே நீ பலதேவனுக்கு இளையனாதலின், இளையனாகவும்
கருதப்படும் நிலைமை உடையை; நினது பண்டை நிலைமை கருதி நீ
யாவரினும் முதியை என்பார்க்கும் முதியனாகவும் உள்ளனை, இனி
நின்னை ஞானக்கேள்வியான் ஆராயுமிடத்து நீ எங்கும் பரந்து
எவ்வுயிர்க்கும் உள்ளுயிராயிருத்தல் புலனாம்; இங்ஙனம்
இளையனாதலும் முதியனாதலும் யாண்டுமிருத்தலுமாகிய இம் முரண்பட்ட
நிலைமைகள் நினக்கே யுரிய நினது பழைமையான சிறப்புக்களேயாம்; |
|
|
|