பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்136

பொழிலையே ஒப்பாவார். ஆதலால் அவரே தவறுடையர்; நீ
தவறுடையை அல்லை; நின்னை எய்தும் திருவுடைய மகளிர் தோளில்
வைகி அளிசெய்யும் இயல்பும் நினக்கில்லை. ஆதலால் நின் மாணலம்
யான் உண்ணக் கடவனோ" என ஊடி நீங்கினாள். அதுகண்ட
முருகவேள் அத் தேவசேனையின் அடியில் வீழ்ந்து வணங்கினார்.
தேவசேனையும் ஊடல் தீர்ந்து அவரைத் தழுவிக் கொண்டாள்.

      39 - 49: அஃதறிந்த வள்ளி முருகவேளைச் சினந்து, 'இனி
அவள்பாற் செல்லாதே!' என, அவர் கைகளைக் கட்டி மாலையைக்
கோலாகக் கொண்டு புடைத்தாள். அதனைக் கண்டு, தேவசேனை மயிலும்
வள்ளியின் மயிலும் தம்முட் பகைத்து எதிர்த்தன; அங்ஙனமே அவர்
கிளிகளும் பகைத்தன; வள்ளியின் குன்றத்திலுள்ள வண்டுகள்
தேவசேனையின் கொண்டையிலிருந்த வண்டுகளின் மேற்பாய்ந்து
பொருதன; இருவருடைய தோழிகளும் தம்முட் பகைத்துப்
போரிடுவாராயினர்.

      50 - 55. வள்ளியின் தோழியர் மதங்கொண்ட களிற்றி யானையின்
இயல்புடையராய்க் குதிரைகள் போன்று நடந்து வந்தனர்;
தேர்ப்படைபோல வடிக்கயிற்றைக் கொண்டுவந்தனர்; வில்லை
விளைத்தனர்; வாளேந்தி நின்றனர்; தோள்வளையாகிய
ஆழிப்படையைச் சுழற்றினர்.

      56 - 69. இவர் நிலைகண்டு தேவசேனையின் தோழியர் அஞ்சி
முருகனைச் சூழ்ந்துகொண்டு சுனைநீருட் கரந்து நீராடினர்; வண்டுகளாகி
முரன்றனர்; மயிலாகி ஆடினர்; குயிலாகிக் கூவினர்; பலவகையாய்த்
துன்பமுற்றனர்; இப் போரின்கண் வள்ளியின் தோழியரே வாகை
சூடுதலானே திருப்பரங்குன்றம் முருகவேளுக்கு இயைந்தது.

      70 - 78: சூர்மாத்தடிந்த வேலையுடைய வீரனே! நின்
பரங்குன்றத்தின்கண், ஆடல் பயின்றோர் அவ்வாடல் பயின்றோரை
வென்றனர்; பாடல் பயின்றோர் அப் பாடல் பயின்றோரை வென்றனர்;
சூதாடுவோரைச் சூதாடுவோர் வென்றார்; இங்ஙனமே பிற
கல்வியுடையோர் பிற கல்வியுடையோரை வென்றனர்; இவ் வென்றியின்
அறிகுறியாகச் சுனைப்பக்கத்தே வெற்றிக்கொடி நின்று திகழ்ந்தது.

      79 - 85: வேற்படையை யுடையோனே! வெற்றியுடையோனே!,
குமரவேளே!, அன்புடைய யாம் நின் திருவடிக்கண் உறையும்செயல்
நாடோறும் பொலிந்து பயன் தருதலோடு