பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்149

தொழில் பயின்றோர் வெல்லாநிற்பவும், பாடல்பயின்றோரைப் பாணர்
செறுப்பவும் - இசைப்பாடல் பயின்றோரை அவ்விசைப் பாடல் வல்லோர்
வெல்லாநிற்பவும், வல்லாரை வல்லார் செறுப்பவும் - சூதாடுவாரை
அச் சூதுப்போராடுவோர் வெல்லா நிற்பவும், அல்லாரை அல்லார்
செறுப்பவும் - மேற் கூறப்பட்டோர் அல்லாத பிற
கல்விகளையுடையோரை அவ்வக்கல்வியுடையோர் வெல்லாநிற்பவும்,
ஓர் சொல்லாய் - இக் கல்விவென்றிகளால் ஆகிய ஒப்பற்ற புகழுக்கு
அறிகுறியாகி, செம்மைப் புதுப்புனல் தடாகம் ஏற்ற தண் சுனைப்
பாங்கர்ப் படாகை நின்றன்று - செவ்விய புதிய நீரானே நிறைந்த
தடாகத்தை ஒத்த சுனையின் பக்கத்தே கொடி உயர்த்து நின்றது;

      (வி - ம்.) நவிலுதல் - பயிலுதல். ஆடல் நவின்றோரை அவர்
போர் செறுப்பவும் என்றது. ஆடல் வென்றியை, இதனை,

"கைகால் புருவங்கண் பாணி நடைதூக்குக்
கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு - பெய்பூப்
படுகளிவண் டார்ப்பப் பயில்வளைநின் றாடும்
தொடுகழன் மன்னன் துடி"
(பு - வெ. 359)
எனவரும் புறப்பொருள் வெண்பாவான் உணர்க.

      'பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்' என்றது.
பாடல் வென்றியை. இதனை,

"வண்டுறையும் கூந்தல் வடிக்கண்ணாள் பாடினாள்
வெண்டுறையும் செந்துறையும் வேற்றுமையாக் - கண்டறியக்
கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடையாழ்
அந்நரம்பும் அச்சுவையும் ஆய்ந்து" (பு - வெ. 360)

எனவரும் வெண்பாவான் உணர்க.

      'வல்லாரை வல்லார் செறுப்பவும்' என்றது சூதுவென்றியினை.
இதனை,

"கழகத் தியலும் கவற்றின் நிலையும்
அளகத் திருநுதலாள் ஆய்ந்து - புழகத்து
பாய வகையால் பணிதம் பலவென்றாள்
ஆய வகையும் அறிந்து"
(புற. வெ. 358)
என்னும் வெண்பாவான் உணர்க.

      அல்லார் என்றது இக் கல்வியல்லது பிற கல்வியுடையார்
என்றவாறு. அவையாவன:-குதிரைவென்றி, தேர்வென்றி, யாழ்வென்றி
முதலியன.