பக்கம் எண் :

பரிபாடல்- வையை153

சென்றனர்; சிலர் குதிரையில் ஏறிச்சென்றனர்; சிலர் பிடி மேலேறிச்
செலுத்தினர்; சிலர் ஆற்றிடைக்குறையிற் சென்று தங் காதலரைத்
தழுவிக் கொண்டனர்; சிலர் யாமத்து உண்டான ஊடலின் குறையாகிய
தேனை உண்டனர்; சிலர் காமக் கணிச்சி உடைத்தலால் ஊடல் தீர்ந்து
திரை வீழ்த்துப் படுக்கையிற் சேர்ந்தனர்; முகைப்பருவத்து மகளிர் தம்
காதற் கணவர் தம்மை நாடி வந்து எதிர்ந்து இன்புறும்படி நீராடல்
குறித்துச் சென்றனர்; அவர் தமக்குக் காவலாகிய பாட்டியரையும்
கடந்துபோய் வையைப் புனலை எதிர்கொண்டனர்.

      41 - 55: மதுரையில் இங்ஙனம் நிகழும்போது ஒரு களிறு
தன்பக்கத்தே வரும் பிடியைக் கண்டு மயங்கித் தன் மேலிருந்த மைந்தர்
செலுத்தும்வழிச் செல்லாமல் ஒரு புலி முக மாடத்தின் அருகே நின்றது;
அப்பிடியும் அக் களிற்றை விரும்பித் தன்மேலிருந்த மகளிரோடே
அக் களிற்றைத் தொடர்ந்து அப் புலிமுக மாடத்தருகே சென்று ஆங்கு
மாடத்தில் இயற்றி வைத்திருந்த புலியுருவத்தை மெய்யான புலி என்று
கருதி, அப் புலி களிற்றின்மேற் பாயும் என்னும் அச்சத்தானே தன்
மேலிருந்த மகளிர் நடுங்கும்படி பாகருக்கு அடங்காமல் சிதைந்தது;
அது கண்ட களிறும் அவ்வாறே சிதைந்தது; அது கண்ட பாகர்
அக் களிற்றினை அம் மாடத்தருகினின்றும் பெயர்த்துப் பிடியை
அணைவித்தனர்; பிடியும் களிறும் அமைதியுற்றன; மகளிரும்
நடுக்கம் தீர்ந்தனர்.

      56 - 68: ஊடலை மேற்கொண்ட மகளிரும் மைந்தரும், ஆண்டு
எழுந்த இன்னிசைகள் தமது திண்மையை உடைத்துக் காமவிருப்பத்தை
மிகுவித்தலானே, ஊடல் தீர்தற்கு அவாவுடையராகியும் தோல்வி கருதி
ஊடல்தீர்தற்கு நாணினர்; அதனாற் கூடி முயங்காமல் இன்னல் உற்றனர்.

      69 - 70: காமம் மிக்கு எழ, அதனால் உண்டான களிப்புத் தம்
கண்ணிற் புலப்படாநிற்பவும், ஊரவர்க்கு அஞ்சிச் சிலர் அதனை ஒளித்தனர்.

      இவ்வாறாக, இவ் வையைப்புனல் கள்ளையும் காமத்தையும்
பொருந்திக் கரையற்ற இன்ப வெள்ளத்தைத் தந்தது.

      71 - 94: நீராடலின்கண் இளைத்த மகளிர் புணையை விட்டுக்
கரையேறினர்; அகிற்புகையாலே தம் முடம்பின் ஈரத்தைப் புலர்த்தி
மார்பிலே கலவைக் குழம்பைப் பூசினர்; அதன்மணம் திசையெலாம்
கமழ்ந்தது; சில மகளிர் வள்ளத்தில் மதுவைப் பெய்து தம்
வாயில்வைத்துப் பருகினர்; சிலர் வெண்டுகிலாலே போர்த்துக்
கொண்டனர்; சிலர் கூந்தலில் ஆடையைச் சுற்றி