பக்கம் எண் :

பரிபாடல்- வையை174

நின்ற வேலானும் வாளானும் மறமைந்தர் தம் பகைவரோடு
மாறுபட்டுநின்று போர்செய்தலானும், களிறு போர் உற்ற களம்போல -
யானைகள் தம்மிற் போர்செய்தலானும் கலங்கிய போர்க்களத்தைப்
போன்றிருத்தலான், தெளிவின்று - தெளிவில்லாதாயிற்று;

      (வி - ம்.) தண்டி - விரும்பி. தண்டின் - வாழைத்தண்டினாலே.
தாய - தாவி. கண்டல் - தாழை: பூவிற்கு ஆகுபெயர். திரை நுரை -
திரையின் மேலும் நுரையின்மேலும் என்க. திமில் - ஒரு மரத்தோணி.
ஓய்வார் - செலுத்துவார். உழவின் - உழப்பினாலே. புனல் எதிர் மாறாடி
என மாறுக. பைய - மெல்ல. சிற்றிலில் அட்ட சிற்றடிசில் என்க. இட்டு
என்னும் செய்தெனெச்சத்தை இட எனத் திரித்துக் கொள்க. இடுவார்
போன்று பின் மறுப்பாராகிய சிறுகிடையார் என்க. இங்ஙனம் செய்தல்
அசதியாடி நகைத்தற் பொருட்டு. களவு கொள்ளுதல் - உடையோர்
அறியாவாறு கவர்ந்துகோடல். ஓடிக் கரைநின்று அவர் அறிந்துவந்து
கேட்புழிப் பாய்வார் என்க. எஃகம் - வேல். ஒளிறு - ஒளி. மைந்தர்
வாட்போர் செய்தகளமும் யானை தம்முட் பொருதகளமும் போலத்
தெளிவின்று என்க. நீர்ப்புனல் - நீர்மையுடைய புனல்.

      இதுவரையில் மைந்தர் செயல் கூறப்பட்டது; மேலே எல்லாரும்
நீராடி மீண்டமை கூறப்படும்.

      (பரிமே.) 102, (வெய்ய திமில்) - விசையையுடைய ஓடம்.

112 - 125: மதிமாலை......................................புகை

      (இ - ள்.) மதி மாலை மால் இருள் கால்சீப்ப - திங்கள் மண்டிலம்
தோன்றி மாலைக்காலத்தே மயக்கத்தைச் செய்கின்ற
இருளைப்போக்காநிற்ப, கூடல் வதி மாலை - மதுரையின் கண்ணே
தங்கும் இயல்பினை நினைந்து, மாறும் தொழிலான் - எல்லோரும்
அவ்விடத்தினின்று மீண்டுபோகுந் தொழிலுடனே, புதுமாலை நாள் அணி
நீக்கி - புதிய இயல்பினையுடைய அத்திருநாள் கருதி அணிந்த
ஆடையணிகலன்களை அகற்றி, மாலை நகைப்பூ வேய்ந்து - அம்
மாலைக்காலத்தே மலராநின்ற முல்லை மல்லிகை முதலிய
மலர்களையணிந்து, தோளணி தோடு சுடர் இழை நித்திலம் -
தோளின்கண் அணியும் தொடியும் தோடும் ஒளிமிக்க அணிகலனாகிய
முத்துவடமும் ஆகிய இன்னோரன்ன அணிகலன்களையும்
அணிந்துகொண்டு, பாடுவார் பாடல் பரவல் பழிச்சுதல் ஆடுவார் ஆடல்
அமர்ந்த சீர்ப்பாணி - அவர் தம்முள் பாடுந்தொழிலை யுடையார்
பாடாநின்ற பாடலும் பரவுவார் பரவும் புகழ்வார் புகழ்ச்சியும்
ஆடுதற்குரியார் ஆடும் ஆடலும் அவ்வாடலுக்குப் பொருந்தின சீருடன்
கூடிய தாளமும், நல்ல கமழ் தேன் அளிவழக்கம் எல்லாமும் -
மகளிர்தங் கூந்தலிலே ஆரவாரிக்கின்ற நறுமணங்