கமழாநின்ற தேனைச் செய்யும்
வண்டுகள் வழங்கும் வழக்கமும் ஆகிய
இவற்றால் எழுந்த ஓசையோடே, பண் தொடர் வண்டு - பாடுகின்ற
பண்ணொலியைக் கேட்டுத் தம்மினம் என்று கருதி ஊரினின்று வருகின்ற
வண்டுகள், பரிய எதிர்வந்து ஊத - அங்ஙனம் பாடுபவர் வருந்தும்படி
அவரெதிரே மொய்த்துப் பாடாநிற்ப, கதுப்பின் கொண்டிய வண்டு இன்
குரல் ஊத - முன்னர் முல்லை முதலியவற்றை அணிந்தனர் எனக்
கூறப்பட்ட மகளிருடைய கூந்தலில் அம் மலர்களிற் றேனைக் கொள்ளை
கொண்டுண்டிருந்த வண்டுகளும் அவற்றோடே கூடி இன்குரலானே
ஆரவாரிப்ப, தென்திசை நோக்கித் திரிதர்வாய் - இவ்வாறாக
எல்லோரும் தெற்குத்திசையை நோக்கி மீள்கின்றபொழுது, மணிமாடத்து
உள் நின்று தூய பனி நீருடன் கலந்து - மதுரையின்கண் உள்ள அழகிய
மேனிலை மாடங்களின் அகத்திருந்து மகளிர்கள் தூவிய பனிநீர்
மணத்தோடே கலந்து, கால்திரிய - தென்றல்காற்று மணமுடையதாய்
மாறுதற்கு, ஆக்கும் புகை - அம் மகளிர் அம் மாடத்தின்கண் அகில்
முதலியவற்றைத் தீயிலிட்டு எழுப்பும் நறுமணப்புகை, நளிர்மலை
பூங்கொடித் தங்குபு மண்டு கால் சார்வா உகக்கும் - செறிந்த
மலையின்கண் பூங்கொடிகளிடத்தே தங்கிப் பின்னர் ஆண்டியங்கும்
காற்றினைப் பற்றுக்கோடாகக் கொண்டு வானிடத்தே ஏறிச்செல்லும்,
வளர் பனி ஆவி போன்ம் - மிக்க பனியாகிய ஆவியை ஒக்கும்;
(வி - ம்.) மதி - திங்கள் மால் - மயக்கம்.
கால்சீத்தல். ஒரு
சொன்னீர்மைத்து: போக்குதல் என்னும் பொருட்டு, வதிமாலை, புது
மாலை என்னு மீரிடத்தும் மாலை என்பது இயல்பு என்னும் பொருட்டு
நாள் அணி - அந் நீர்விழவுநாள் குறித்தணிந்த அணிகலன் என்க.
தோளணி முதலியன நீராட்டுக் கருதி முன்னர்க் களையப்பட்டனவாகலின்
மீண்டும் அணிந்தனர் என்க. நித்திலம்: முத்துமாலைக்கு ஆகுபெயர்
முதலியவற்றை அணிந்து என வருவித்துரைக்க. பாடுவார் - பாணர்.
ஆடுவார் - கூத்தர். விறலியர். பரவல்: வேண்டிக்கோடல் பழிச்சுதல்.
புகழ்தல். வருவோர் வரும்பொழுதே தெய்வத்தை வேண்டிக்கொண்டும்
யாற்றைப் புகழ்ந்துகொண்டும் வருகின்றனர் ஆகலின் அவர்தம் பரவும்
பழிச்சும் என்க. ஆடலுக்குத் துணையாக அமைந்த சீரும் பாணியும்
என்க. சீர் - தாளம்: முடிந்துவிடும் காலத்தினை உடையது. பாணி -
தாளந் தொடங்குங் காலத்தினை உடையது. இவ் வேற்றுமையுண்மையால்
சீர்ப் பாணி' என்றார். சீருடன் கூடிய பாணி என்க. தேனளி - தேனீ
தேனீயாற் செய்யப்படும் தேனுக்கு ஏற்ற அடைமொழிகள் தேனீயின்
மேலவாக நின்றன. வழக்கம் - இயக்கம்.
பரிய - வருந்தும்படி. கொண்டிய - கொள்ளை கொள்வனவாகிய.
கதுப்பின்கண் பூக்கொத்துக்களிற் றேனைக் கொள்ளைகொள்வன என்க.
குரல் - குரலாலே. திரிதர்தல் - திரிதல். |
|
|
|