பக்கம் எண் :

பரிபாடல்- வையை176

மாடத்தின்கண் மகளிர் கையிலுள்ள தூபக்காலினின்றும் எழுந்து
காற்றிற்கலந்து பரவும் புகைக்கு மலையிற் பூங்கொடிக்கண் தங்கிப் பின்
காற்றாலே மேலெழும் பனியாவி உவமை.

      'காறிரியவாக்கும் புகை' என்பதே நல்ல பாடம்: 'காறிரியவார்க்கும்
புகை' என்றும் பாடம்.

      (பரிமே.) நீக்கி வேய்ந்து அணிந்து திரிதர்வாய் என்க. இனி
அவ்வின்பங்கட்கு ஏதுவாகிய வையையை வாழ்த்தி முடிக்கின்றான்.

126 - 131: இலம்படு.................................தொழவே

      (இ - ள்.) வருந்தாது - உயிர்கள் பசியாலும் பிணியாலும்
வருந்தாமல் வாழும் பொருட்டு, வரும்புனல் விருந்து அயர் கூடல்தானே
பெருகி வாராநின்ற வையைப் புதுநீர்க்கு இவ்வண்ணம் விருந்து செய்யும்
மதுரைநகரின்கண், கறை அரு அறை இசை உரிமை வயிரியர் - குற்றம்
அரியவாகிய இசைக்கின்ற இசைப்பாடலுக்கு உரிமையுடைய பாணரும்
கூத்தரும், அமர் ஆயமொடு ஒருங்கு ஏத்தினர் தொழ - தம்மை
விரும்பும் கூட்டத்தோடு ஒருங்கே இன்றுபோல என்றென்றும் ஏத்தி
வணங்கும்படி, இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமர - வறுமையாற்
பற்றப்பட்ட புலவருடைய இரத்தற்கேந்திய கைகள் நிரம்பும்படி, பொலம்
சொரி வழுதியின் - பொன்னைச் சொரியாநின்ற நம் பாண்டிய
மன்னனைப்போலவே, புனல் - இவ் வையைநீர், இறை பரப்பி -
அப் பாண்டியனுடைய இறைமைத் தன்மையை உலகெலாம் பரவச் செய்து
மேலும், செய்யில் பொலம் பரப்பும் செய்வினை - அவனுடைய
நாட்டின்கண் உள்ள கழனிகள் தோறும் பொன்னையும் பரப்பாநின்ற
அதன் இயல்பு வினை, ஓயற்க - என்றென்றும் மாறாமல் நிகழ்வதாக.

      (வி - ம்.) இலம்படுதல் - வறுமையுறுதல். இலம்பாடு - வறுமை.
பொலம் - பொன். வழுதி - பாண்டியமன்னன். வழுதிபோல என்க.
செய் - கழனி. இறை - இறைமைத்தன்மை: அஃதாவது செங்கோன்மை.
'நீருயர நெல்லுயரும் நெல்லுயரக் கோலுயரு' 'மாகலின் இறைமை பரப்பி'
என்றார். வருந்தாது என்றது, உயிர்கள் வருத்தமுறாதபடி என்றவாறு,
அருங்கறை - அரிய கறையினையுடைய: கறையில்லாத என்றவாறு. கறை
- குற்றம். அறையிசை - இசைக்கும் இசை. வயிரியர் - கூத்தர், பாணர்
முதலியோர், இசையுரிமை வயிரியர் என மாறுக.

      (பரிமே.) 128. செய்வினை - இயல்புவினை.

      129. வரும்புனல் - தானே வரும் புனல்.

      130. வயிரியர் - பாணரும் கூத்தரும்.