பன்னிரண்டாம் பாடல்
-----
வையை
பொருட் சுருக்கம்
இப் பாடல் தலைமகன் கேட்பத் தோழி இயற்பழித்தது.
1-8: சையமலையில் மழை பெய்தமையால் வையை அம்
மலைச்
சாரலில் உதிர்ந்த மலர்கள் தன்மேற்பரக்க நாக முதலிய மரங்களை
வருத்தி, தகர முதலியவற்றை ஏந்திவருகின்ற வரவு கடல் பொங்கி
வருவதனை ஒத்தது.
9-29: அந் நீர், மதுரை மதிலை மோதும் எனக்கேட்டு
அம்
மதுரை மக்களுட் சிலர் அணிகலன்களையும்; பொற்பூவையும்
அணிந்தனர்; சிலர், அகிற்சாந்தைப் பூசினர்; சிலர் கூந்தலைக்
குழலாகமுடிந்தனர்; சிலர் கூந்தலின்கண் வெட்டிவேர் விரவிய
மலர்மாலையை அணிந்தனர்; சிலர், நீராடற்கேற்ற ஆடைகளை
அணிந்தனர்; சிலர் முத்துமாலைகளை அணிந்தனர்; சிலர், மணநெய்
தடவிக்கொண்டனர்; சிலர், தம்மழகைக் கண்ணாடியில் நோக்கினர்; சிலர்,
தாம்பூலம் மென்றனர்; சிலர், வளையலையும் தொடிகளையும் அணிந்தனர்;
சிலர், கட்டு வடத்தையும் கான் மோதிரத்தையும் அணிந்தனர்; சிலர்,
மாலை அணிந்தனர்; சிலர், மணப்பொருளை மெய்யிலணிந்தனர்;
இவ்வாறு ஒப்பனை செய்து கொண்டு, மகளிர் குதிரைகளையும் பிடியையும்
ஏறிச் செலுத்தினர்; ஆடவருட் சிலர் குதிரைகளையும் களிறுகளையும்
தேர்களையும் ஊர்ந்து சென்றனர்.
30-39: இவ்வாறாக மக்கள் விரைந்து வந்து குழுமினர்;
நீராடல்
சிறப்புறும்படியும், யாவரும் தன்னைப் புகழும்படியும், வையை நீர் வந்தது;
அதனைக் காண்போர் திரள் அதன் கரையை ஒத்தது; அந் நீர் கடந்து
பெருகிற்று; முன்னர் வந்தோர் பின்னர் வந்தோர்க்குத் தாம்
கண்டவற்றைப் பின் வருமாறு கூறாநின்றனர்:-
வையை நீர்த்துறையில் நிரலாக நின்றவர் மொழிகள்
ஒன்றையொன் றொவ்வாது ஒரே காலத்தில் எழுந்தன; அவற்றைத்
தெளிவாக யாருங் கேட்டிலர்; இவற்றைக் கேட்க முடியாமைக்குக்
காரணம், ஆண்டெழுந்த இசைக்கருவிகளின் ஓசையே; ஆயினும்,
யாம் கேட்டவை சிலவுள; அவற்றைக் கூறுவேம். |
|
|
|