நெஞ்சத்தை நீத்தா ணெறிசெல்வான் பின்னிறை
அஞ்சிக் கழியாமோ அன்புற்றா லென்மரும்
55 பூணார நோக்கிப் புணர்முலைபார்த் தானுவன்
நாணா ளவனையிந் நாரிகை யென்மரும்
அமிர்தன நோக்கத் தணங்கொருத்தி பார்ப்பக்
கமழ்கோதை கோலாப் புடைத்துத்தன் மார்பில்
இழையினைக் கையாத் திறுகிறுக்கி வாங்கிப்
60 பிழையினை என்னப் பிழையொன்றுங் காணான்
தொழுது பிழைகேட்குந் தூயவனைக் காண்மின்
பார்த்தா ளொருத்தி நினையெனப் பார்த்தவளைப்
பொய்ச்சூளா ளென்ப தறியேன்யா னென்றிரந்து
மெய்ச்சூ ளுறுவானை மெல்லியல் பொய்ச்சூளென்
65 றொல்லுவ சொல்லா துரைவழுவச் சொல்ல
உறைத்துஞ் செறுத்து முணர்த்து வானைப்
புல்லா தூடிப் புலந்து நின்றவள்
பூவெழில் வண்ணநீர் பூரித்த வட்டெறிய
வேலெழி லுண்க ணெறிநோக்கம் பட்டபுண்
70 பாய்குருதி சோரப் பகையின் றுளஞ்சோர
நில்லாது நீங்கி நிலஞ்சோர வல்லாந்து
மல்லா ரகலம் வடுவஞ்சி மம்மர்கூர்ந்
தெல்லாத் துனியு மிறப்பத்தன் காதலன்
நல்லே ரெழிலாகஞ் சேர்வித்த லெஞ்ஞான்றும்
75 வல்லதால் வையைப் புனல்
எனவாங்கு
மல்லிகை மௌவன் மணங்கமழ் சண்பகம்
அல்லி கழுநீ ரரவிந்த மாம்பல்
குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி
80 நல்லிணர் நாக நறவஞ் சுரபுன்னை
எல்லாங் கமழு மிருசார் கரைகலிழத்
தேறித் தெளிந்து செறியிருள் மான்மலைப்
பாறைப் பரப்பிற் பரந்த சிறைநின்று
துறக்கத் தொழிலைத்தன் னீர்நிழற் காட்டும்
85 காரடு காலைக் கலிழ்செங் குருதித்தே
போரடு தானையான் யாறு ;
|
|