பக்கம் எண் :

பரிபாடல்- வையை218

வட்டின்கண் நீரை யெறியாது வட்டினையே எறிந்தாள் என்க. பூரித்தல்
- நிறைத்தல்: நோக்க வேல்பட்ட புண் என மாறுக. நோக்கமாகிய
வேல்பட்ட புண். குருதிபோலச் சோர என உவமச்சொல் வருவித்
தோதுக. பகையின்று - பகைத்தல் இன்றி: இன்றி என்னும்
வினையெஞ்சிகரம் உகரமாயிற்று. சினந்து நிற்றலால் எதிர்நிற்பின்
அவள் சினம் பெருகும் என்று எதிர்நில்லாது நீங்கி வணங்கினான் என்க.

      வணங்கற்கு நிலத்தில் வீழ்ந்தவனை ஏறுண்டு வீழ்ந்தான் எனக்
கருதி அஞ்சி மயங்கிப் புலவி யொழிய மார்பஞ் சேர்ந்தாள் என்க.
மம்மர் - மயக்கம். ஏர் - அழகு. ஆகம் - மார்பு: உடம்புமாம்.
எஞ்ஞான்றும்- எப்பொழுதும்.

      சேர்ந்தாள் என்பது வருவித்துக் கூறப்பட்டது.

      (பரிமே.) நீரை எறிய வட்டை எறிந்தது. ஊடு, விளையாட்டு
ஒழிந்தமையின்.

      (ஊடலுண்டாகிய காரணத்தால் மேலே விளையாட்டும் ஒழிந்தமையால்
வட்டினையே எறிந்துவிட்டாள் என்பதாம்.)

      76. என - என்று காட்ட: ஆங்கு: அசை.

77 - 86: மல்லிகை . . . . . . . . . யாறு

      (இ-ள்.) (86) போரடு தானையான் யாறு - போரின்கண் பகைவரை
வெல்லும் படையினையுடைய பாண்டியனுடைய இவ் வையையாறு,
மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம் அல்லி கழுநீர் அரவிந்தம்
ஆம்பல் முல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி - மல்லிகைமலரும்
முல்லைமலரும் நறுமணம் கமழாநின்ற சண்பகமலரும் வெள்ளல்லிமலரும்
செங்கழுநாமலரும் தாமரை மலரும் அரக்காம்பல் மலரும்
கஞ்சங்குல்லைமலரும் மகிழமலரும் குருக்கத்தி மலரும் பாதிரிமலரும்,
நல் இணர் நாகம் நறவம் சுரபுன்னை எல்லாம் கமழும் . நன்றாகிய
பூங்கொத்துக்களையுடைய நாக மரத்தினது மலரும் நறவமலரும்
சுரபுன்னை மலரும் ஆகிய இவ்வெல்லாமலரும் கமழ்தற்கிடமான,
இருசார் கரை கலிழ - இரு மருங்கிலுள்ள கரையை மோதிக் கலங்கிப்
பின்னர், பாறைப் பரப்பின் பரந்த சிறை நின்று -
பாறைக்கல்லினையுடைய நிலம் போன்று அசையாத பரந்த
கல்லணையானே தடையுண்டு தேங்கி நின்று, இருள் செறி மால்
மாலை - இருள் செறிதற்கிடமான மயக்கத்தையுடைய மாலைப்பொழுதிலே,
தேறித் தெளிந்து - மிகத்தெளிந்து, துறக்கத்
தொழிலைத் தன் நீர்நிழல் காட்டும் - வானுலகத்தே நிகழும் தொழிலைத்
தனது அந் நீர்நிழலிலே காட்டாநிற்கும், கார் அடு காலை -
அவ் விருளை ஓட்டும் காலைப் பொழுதிலே, கலிழ் செங்குருதித்தே -
கலங்கிய சிவந்த குருதியினது தன்மையுடையதாகும்;