பக்கம் எண் :

பரிபாடல்- வையை220

என்க. சிவந்த பிண்டிக் கடிமலர் என மாறுக. கடிமலர் - புதுமலர் ; அன்றலர்ந்த மலர். "கடியென் கிளவி, வரைவே கூர்மை, காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீரைந்தும், மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே" (உரி-85.) என்பவாகலின், கடிமலர் அப்பொருட்டாதலறிக. ஞால - தூங்க. செரீஇ - செருகி. விடுமலர் - கட்டுவிட்ட மலர். அஃதாவது மலர்ந்த மலர். அடிமேலடிமேல் ஒதுங்குதல் - அடிமேலடியிட்டு நடந்து சேறல்.

      ஒருத்தி ஒருவன் அடிமேலடியிட்டுச் செல்கின்றவள் அவன் தனது கொங்கை எழிலைக் காணும் பொருட்டு ஒருபால் ஒதுங்கித் தனது கைகளை உயரத் தூக்கித் தலை மாலையைத் திருத்தாநின்றாள் ; இங்ஙனம் செய்தால் அவள் முன்செல்பவன் அவள் காதலனே ஆதல் வேண்டும் என்றவாறு. கேள் - காதலன்.

      மேலே வையையைப் புகழ்ந்து வாழ்த்தி முடிக்கின்றாள்.

      (பரிமே.) 92. இவள் செய்த இக்குறிப்புத் தொழிலால், இவன் இந் நல்லவள் கொழுநனாயிருந்தான், இதனைக் காண்மின்.

      நெஞ்சம் பிணிப்பதோர் அவயவம் காண்டல் குறித்து, அவள் செய்தலால் இது குறிப்புத் தொழிலாயிற்று.

      (நெஞ்சம் பிணிப்பதோர் அவயவம் என்றது, கொங்கையை - கைகளை உயரத் தூக்கிக் கண்ணியைத் திருத்துங்கால் அவ்வவயவ எழில் நன்கு தோன்றுமாதலின், அங்ஙனம் செய்தாள் என்பது கருத்து.)

93 - 99 : துகில்சேர் . . . . . . . . . .விழவுப்புனலாங்க

      (இ-ள்.) நீர்மணி துகில் சேர் மலர்போல் புனல் நிறைந்தன்று - நீராடிய மகளிர் அணிகலன்களினின்றும் உதிர்ந்த நீரோட்டத்தையுடைய மணிகள் அவர் ஆடையின்கண் இயற்றப்பட்ட பூத்தொழில்போல நிறைந்து காணப்பட்டன, என அவர் உரை மூதூர் மலிந்தன்று - என்று இவ்வாறு நீராடியோர் பலப் பல மொழிந்த வார்த்தை பழைதாகிய மதுரையின்கண் சென்று மிக்கது, உரையினும் கவின் உயர்ந்தன்று - நீராடியவர் வார்த்தையினுங் காட்டில் அவர் நீராட்டத்தானே எய்திய அழகு மிக்கது, நவின்று போர் ஏற்றன்று - அங்ஙனம் மிக்கு அவ்வழகு பிறர் அழகோடு மாறுபாட்டினைக் கொண்டது, மணல் மார்பு அழி தகரச்சாந்தின் அளறு பட்டன்று - நீராடிய மகளிரின் மார்பினின்றும் வழிந்து வீழ்ந்த தகரச் சாந்தினாலே வையையாற்றின் மணல் சேறாந்தன்மை பட்டது, கரை துகில் பொசி புனலில் கார் ஏற்றன்று - அவ்வையையாற்றின் கரைகள் நீராடிக் கரைசேர்ந்தாருடைய ஆடையினின்றும் ஒழுகும் நீராலே கார்காலத்துத் தன்மை பெற்றது, புனல் விழவு விசும்பு கடிவிட்டன்று - இந் நீராட்டு விழவு இம் மதுரையில் நடத்தலாலே வானுலகம் சிறப்பொழிந்தது.