(வி-ம்.) நீர் மணி - நீரோட்டமுடைய மணி என்க. மணி நிறைந்தன்று என இவ்வாறு பலப்பல கூறும் அவருரை என்க. மலிந்தன்று - மலிந்தது ; மிக்கது. கவின் - அழகு ; நீராடலாற் பெற்ற புத்தொளியாகிய அழகு என்க. நீராடாதார் கவினிலும் இக் கவின் வேறாகச் சிறத்தலின், 'போரேற்றன்று' என்றார். போரேற்றன்று - மாறுபட்டது.
உரைமிக்கது ; அதனினும் கவின் மிக்கது என்க. அளறு - சேறு. பட்டன்று - பட்டது. உயர்ந்தன்று - உயர்ந்தது. பொசி புனல் - ஒழுகும் நீர். கடி - சிறப்பு. விசும்பு - வானுலகம் ; வானுலகத்தினுங் காட்டில் இந் நீர் விழவினால் மதுரை சிறத்தலின், இவ் விழாப் பெறாத வானுலகம் சிறப்பிலதாயிற்று என்க. ஆங்க : அசை.
(பரிமே.) இவ்வின்பங்கட் கெல்லாம் காரணமாகிய வையையை வாழ்த்தி முடிக்கின்றாள்.
100-102 : இன்பமும் . . . . . . . மலர்தலையுலகே
(இ-ள்.) வையை அழுங்கல் மூதூர் - வையையே ! இவ் வாரவாரமுடைய பழைதாகிய மதுரையில் வாழுமக்களுக்கு, இன்பமும் கவினும் நன்பல நன்பல நன்பல - நின்னால் இன்பமும் அழகும் பல நல்லன பல நல்லன பல நல்லன உளவாயின, இம் மலர்தலை உலகு நின்புகழ் கொள்ளாது - ஆதலால் இம் மண்ணுலகம் அகன்ற இடைமுடைத்தாயினும் நின்புகழ் அதனினும் சால விரிந்ததாகலின், நினது புகழைத் தன்கண் அடக்கமாட்டாது.
(வி-ம்.) அழுங்கல் - ஆரவாரம். மூதூர் - பழைதாகிய ஊர் என்றது மதுரையை. வையை : அண்மைவிளி.
உலகம் அகலிட முடைத்தாயினும் என்பார் 'மலர்தலை உலகு' என்றார்.
(பரிமே.) 101. அடுக்கு பன்மைபற்றி வந்தது.
|