பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்226

காத்தருளுகின்றான் எனவரும் இவ்வுவமை. பொருள்களின் அழகினை
நினைந்தின்புறுக. வியன்மதி - முழுவெண்டிங்கள். அணங்கு - வருத்தம்.
பகைவரைத் துன்புறுத்தும் என்க. இதன்கண் இறைவனுடைய
அருளுருவமும் அவனது அளியுடைமையும் தெறலுடைமையும் நன்கு
கூறப்பட்டன வாதலுணர்க.

      (பரிமே.) 6. அணங்குதல் - அசுரரை வருத்துதல்.

7-13: பருவம் . . . . . . . உரிமை நன்குடைத்து

      (இ-ள்.) பருவம் வாய்த்தலின், இருவிசும்பு அணிந்த இருவேறு
மண்டிலத்தின் இலக்கம் போல - கார்ப்பருவம் வாய்த்தலையுடைய பெரிய
முகில் ஒன்றனை இருமருங்கும் நின்று அழகுசெய்த ஒன்றற்கொன்று
மாறுபட்ட ஞாயிறும் திங்களும் ஆகிய இரண்டு மண்டிலங்களினது
இரண்டு வகைப்பட்ட விளக்கம் போன்று விளங்காநின்ற, நேமியும்
வளையும் ஏந்திய கையால் - ஆழிப்படையினையும் சங்கத்தினையும்
ஏந்திய திருக்கைகளுடனே, கருவிமின் அவிர் இலங்கும் பொலம்பூண்
அருவி உருவின் ஆரமொடு அணிந்த - தொகுதியையுடைய மின்னலினது
விளக்கத்தை ஒத்து விளங்காநின்ற பொன்னாரத்தை வெள்ளிய
மலையருவியின் வடிவத்தையுடைய முத்தாரத்தோடு அணியப்பட்ட, நின்
திரு வரை அகலம் தொழுவோர்க்கு - நினது அழகிய மலைபோன்ற
திருமார்பினை நினைந்து வழிபடுவோர்க்கு, உரிது அமர் துறக்கமும்
உரிமை நன்குடைத்து - பெருமானே நீ நினக்கு உரியதாய்க்கொண்டு
எழுந்தருளியிருக்கும் திரு வைகுண்டமாகிய மேனிலையுலகமும் நன்கு
உரிமையாதலை உடைத்து;

      (வி-ம்.) பருவம் - கார்ப்பருவம்: இனி அங்ஙனம் ஒரு செவ்வி
வாய்க்கப் பெற்றமையின் விசும்பினை அணிந்த இருவேறு மண்டிலத்து
இலக்கம்போல, எனக் கூறினுமாம். என்னை? அங்ஙனம் செவ்விவாய்த்தல்
அருமையின் ஒரோவழி வாய்த்துழி என்பது கருத்து. வாய்த்தலினை
உடைய எனற்பால இரண்டனுரு(பும் பயனும் உடன்)தொக்கன' என்பர்
பரிமேலழகர்.

      இறைவனுக்குப் பெரிய முகில் உவமை. ஆழிப்படைக்கு ஞாயிற்று
மண்டிலம் உவமை; சங்கிற்குத் திங்கள் மண்டிலம் உவமை எனக் காண்க.
இவ் வுவமைகளோடு.

"விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
. . . . . . . . . . . . . . . . . . . .
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையி னேந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு