பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்235

அடுத்தடுத்துப் பலகாலும் வணங்கி வாழ்த்தாநின்றேம், எம் காமம்
இன்னும் இன்னும் இதுவே - எளியேங்கள் நின்பால் வேண்டுவது
யாதெனின் எம்பெருமானே! மேலும் மேலும் இங்ஙனமே நின் அடி
இறைஞ்சி வாழ்த்தும் இவ்வழிபாடேயாம்; அருள்வாயாக!


      (வி-ம்.) அன்னை - அத்தன்மையுடையை; முன்னர்ச் சுவைமை
முதலாகக் கூறியவற்றை எல்லாம் தொகுத்து அன்னை எனச் சுட்டினார்.


      நினைஇ - நினைந்து. இறைவனை நினைதற்கே தவம்வேண்டும்
என்பார். "முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால்" என்றார்.
முன்னும் முன்னும் என்றது. பண்டு எய்திய பற்பல பிறப்புக்களினும்
என்றவாறு. இன்னும் இன்னும் என்றது வருகின்ற பிறப்புக்களினும்
என்றவாறு. "காணப்பெற்றால் மனித்தப்பிறவியும் வேண்டுவதே" என்ற
பெரியார் மொழியும் நினைக.

      இறைவன்பால் அன்புடைமை யன்றி வீடும் வேண்டாச் சிறப்பினையும் ஈண்டு நினைக.

      (பரிமே.) அடுக்குகள் காலநீட்டங் குறித்து வந்தன.