பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்242

மகளிர்பால் பிறந்த அவ் விளம்பருவத்திலேயே, சிறந்தோர் நின்னை
உட்கி அஞ்சிய சீருடையோயே -- நின்னை "எரியுமிழ் வச்சிரங்கொண்டு
இகந்து வந்து எறிந்த அரிதமர் சிறப்பின் இந்திரன்" முதலியோர் மிகவும்
அஞ்சுதற்குக் காரணமான ஆற்றலுடைமையானே உண்டாகிய
புகழினையுடையோனே!, இருபிறப்பு இருபெயர் ஈரநெஞ்சத்து ஒருபெயர்
அந்தணர் அறன் அமர்ந்தோயே - உபநயனத்துக்கு முன்பு ஒரு பிறப்பும்
பின்பு ஒருபிறப்புமாகிய இரண்டு பிறப்பினையும் அப் பிறப்பாலே வந்த
இரண்டு பெயரினையும் அருளுடைய நெஞ்சத்தினையும் ஒப்பற்ற
புகழினையும் உடைய அந்தணரது வைதிக அறத்தைப் பொருந்தியவனே;

      (வி-ம்.) முருகப்பெருமான் தோன்றியபொழுதே இந்திரன் முதலிய
தேவர்கள் அப் பெருமானை எதிர்த்து ஆற்றாது அஞ்சினமையை
இந் நூல் ஐந்தாம் பாடலின்கண்,

"பெரும்பெயர் முருகநிற் பயந்த ஞான்றே
அரிதமர் சிறப்பின் அமரர் செல்வன்
எரியுமிழ் வச்சிரங்கொண் டிகந்துவந் தெறிந்தென
அறுவேறு துணியு மறுவ ராகி
ஒருவனை வாழி யோங்குவிறற் சேஎய்
ஆரா வுடம்பினீ அமர்ந்துவிளை யாடிய
போரால் வறுங்கைக்குப் புரந்தரன் உடைய"
(5: 50-6)
எனவரும் பகுதியிற் காண்க.

      பிறந்த ஞான்றே என்றது, இளங்குழவிப் பருவத்திலேயே
என்றவாறு. உட்கி - அஞ்சிய: ஒருபொருட் பன்மொழி; நிவந்தோங்கிய
என்றாற் போன்று; மிகவும் அஞ்சி என்க. சிறந்தோர் - தேவர்கள். ஈர
நெஞ்சம் - அவருடைய நெஞ்சம். 'எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்ட
நெஞ்சம்' என்றவாறு. ஒருபெயர் - ஒப்பற்ற புகழ். அஃதாவது,
'பார்ப்பனவாகை,' இதனை,

"ஓதம் கரைதவழ்நீர் வேலி யுலகினுள்
வேதம் கரைகண்டான் வீற்றிருக்கும் - ஏதம்
சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த
விடுசுடர் வேள்வி யகத்து"
(வாகை: 9)
எனவரும் புறப்பொருள் வெண்பா மாலையானும் உணர்க.

      அந்தணர் அறம் என்றது, ஓதல் ஓதுவித்தல் வேட்டல்
வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்னும் அறுவகை ஒழுக்கமுமாம். அவற்றுள்
சிறப்புப் பற்றி வேட்டல் ஒன்றனையே ஈண்டு அறம் என்பது சுட்டி
நின்றதென்க. வைதிக அறம் - வேத வொழுக்கம்.

      (பரிமே.) 27. இருபெயர் - இரண்டு நாமம்.(?)