|
29 - 37: கேண்மின் .. . . . . . . . . கடவுள்
(இ-ள்.) கேண்மின் - இனி அத் திருமாலிருஞ் சோலை
மலையினது சிறப்பைக் கேண்மின்!, சுனை எலாம் கமழ்சீர் நீலம் மலர -
அம் மலையின்கண் உள்ள சுனையிடமெல்லாம் நறுமணங் கமழாநின்ற
அழகிய நீலோற்பலம் மலராநிற்ப, சுனை சூழ் செயலை சினை எலாம்
மலர - அச் சுனைகளைச் சுற்றிநிற்கும் அசோக மரத்தின் கிளைகள்
எல்லாம் மலர்தலானும், காய் கனி உறழ - ஆண்டுள்ள காய்களும்
பழங்களும் நிறம் மாறுபட, வேங்கை ஒள்ளிணர் நனை மலர -
வேங்கைமரத்தினது ஒள்ளிய கொத்தின்கண் அரும்புகள் மலர்தலானும்
மாயோன் ஒத்த இன்னிலைத்து - அம் மலைதானும் திருமாலை ஒத்த
காட்சிக்கினிய தோற்றமுடைத்தாகும், பெருங்கலி ஞாலத்து இருங்குன்று
என்னும் பெயர்பரந்த அது தொன்று இயல் புகழது - கடல் சூழ்ந்த
நிலவுலகத்தின் கண் திருமாலிருஞ் சோலைமலை என்னும் பெயர் பரவிய
அம் மலை அத்துணைப் பழைதாய் இயலுகின்ற புகழையும் உடையதாகும்,
கண்டு மயர் அறுக்கும் காமக்கடவுள் - அம்மலை தன்னைக் கண்ட
வளவானே காண்பார் தம் மயக்கத்தைப் போக்குவதொரு வழிபடுங்
கடவுளேயாகும், சென்று தொழுகல்லீர் கண்டு பணிமின் - அதனால்
அம்மலைக்குச் சென்று அதன்கண் எழுந்தருளியிருக்கும் திருமாலை
நேரிற்கண்டு வழிபடமாட்டாதீர் நும்மிடத்தேயிருந்தே நெடுந்தூரம்
தோன்றும் அம் மலையையேனும் கண்டு வணங்குமின்;
(வி-ம்.) செயலை - அசோகு. அவ் வேங்கையின் காய்களும்
கனிகளும் நிறத்தான் மாறுபட என்க. நனை - அரும்பு.
நீலமலரைச் சூழ்ந்த அசோகமலர் அப் பெருமான் அணிந்துள்ள
பொன்னாடைக்கு உவமை. மலையின்மேல் காயும் கனியும் மாறுபட
மலர்ந்த வேங்கை அவன் மணிகள் வைத்திழைத்த பொன்றிரு முடிக்கு
உவமை என்க.
பெருங்கலி: அன்மொழித் தொகை; கடல் என்னும் பெயராய்
நின்றது. ஞாலம் - உலகம். காண்டற்கும் இனிதாகலின் கண்டு தொழுமின்
என்பார், 'மாயோன் ஒத்த இன்னிலைத்து' என்றார்.
தொன்று இயல் - தொன்றுதொட்டு நடக்கும். மயர்
- பிறப்பிற்குக்
காரணமான மயக்கம். மயர் அறுக்கும் எனவே பிறவிப் பிணியை அறுத்து
வீடுநல்கும் என்றவாறு. என்னை ? "காமவெகுளி மயக்கம் இவைமூன்ற.
னாமங் கெடக்கெடு நோய்" என்பவாகலின் காமவெகுளிகட்குக் காரணமான
மயர்கெடவே பிறப்பு அறும் என்க.
(பரிமே.) 35-6. பெருங்கலி ஞாலத்து இருங்குன்றென்னும்
பெயர்பரந்த அத்துணையே பழைதாய் இயல்கின்ற புகழையுடைய அது.
36. காமக்கடவுள் - வழிபடுதெய்வம். |
|
|
|