பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்253

38 - 45: மகமுயங்கு . . . . . . . . .கேழிருங்குன்று

      (இ-ள்.) மக முயங்கு மந்தி - குட்டியாலே தழுவப்பட்ட குரங்கு,
வரை வரை பாய - ஒரு சிகரத்தினின்று மற்றொரு சிகரத்திலே
தாவாநிற்ப, முகிழ் முயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட - அரும்புகள்
நெருங்கின முல்லை மகளிரின் கற்பு நிகழ்ச்சியைக் காட்ட, சினை
மணிமருள் நன்னீர் மடமயில் அகவ - மரக்கிளைகள் தொறும்
நீல்மணியை ஒத்த நிறமுடைய நன்றாகிய நீர்மையுடைய மயில்கள் இருந்து
அகவாநிற்ப, குயிலினம் குருகு இலை உதிரக் கூவ - குயில்கள்
குருக்கத்தியின் இலைகள் உதிரும்படி அதன்கட் புகுந்திருந்து கூவாநிற்ப,
பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர் நாநவில் பாடல் முழவு எதிர்ந்
தன்ன - சுருதியை உணர்த்துகின்ற குழலும் தாளமும் இயம்ப
அவ்வோசையினைப் பாடுவாரது மிடற்றுப்பாடல் முழவு என்னும்
இவற்றின் இசை சென்று எதிர்ந்தாற் போன்று, ஒன்னார்க் கடந்து
அட்டான் கேழ் இருங்குன்று - அவுணரை நேர்நின்று போர் செய்து
கொன்றவனது நிறத்தையுடைய குன்றத்தின்கண், சிலம்பில் சிலம்புஇசை
ஓவாது - முழைஞ்சில் முழங்குகின்ற எதிரொலி ஒழியாது;

      (வி-ம்.) குயில், குழல்ஒலியும் மிடற்றுப்பாடலும் போலக் கூவா
நிற்ப, மயில் தாள வொலியும் முழவொலியும் போல அகவாநிற்ப.
அவ்விசையினை எதிர இவ்விருவகை யிசையானும் குன்றின்முழையில்
உண்டாகும் எதிரொலி என்றும் ஒழியாது என்க.

      மக - குட்டி. மந்தி - பெண்குரங்கு. வரை - சிகரம். ஒரு
சிகரத்திலிருந்து மற்றொரு சிகரத்திற் பாய என்க.


      39. 'முகிழ் முயங்கு முல்லை' எனப் பரிமேலழகர் பாடங்
கொண்டார் என ஊகிக்க அவர் உரை இடந்தருகின்றது; ஆராய்க. முறை
- கற்பு. நன்னீர் - நல்ல நீர்மை என்க. குருகிலை உதிரும்படி அதன்கட்
புகுந்து என்க. பகர் - உணர்த்தாநின்ற; கதியை உணர்த்தாநின்ற.
பாண்டில் - தாளம். சிலம்பு - முழை. சிலம்பிசை - முழங்கும் இசை.
கேழ் - நிறம். குன்று - ஈண்டுத் திருமாலிருஞ்சோலைமலை. ஒன்னார்
- அவுணர். கடந்தட்டான் - நேர்நின்று போர்செய்து கொன்றான்.

      (பரிமே.) இசை என்றவழி. குழலொலியும் மிடற்றுப்பாடலும்
குயிலினத்தது கூவற்கும் அதன் எதிரொலிக்கும் உவமை. தாளவொலியும்
முழவொலியும் மயிலது அகவற்கும் அதன் எதிரொலிக்கும் உவமை.

      மந்திபாய முல்லை காட்ட என நின்ற செயவெனெச்சங்கள்
இசையோவா தென்னும் பிறவினை கொண்டன.