பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்254

46 - 48: தையலவரொடும் . . . . . . . சென்மின்

(இ-ள்.) தையலவரொடும் தந்தாரவரொடும் - அம் மலையினை நுங்கள்
மனைவியரோடும் நும்மையீன்ற இருமுதுகுரவரொடும், கைம்மகவொடும்
- குழவிகளோடும், காதலவரொடும் - நும்பால் அன்புடைய
சுற்றத்தாரொடும், தெய்வம் பேணி - தெய்வமாக மதித்து, திசை
தொழுதனிர் சென்மின் - அம் மலை நிற்கின்ற திசையை நோக்கிக்
கும்பிட்டுச் செல்லுமின்;

(வி-ம்.) தையல் - அழகி. ஈண்டு மனைவி என்னும் பொருட்டு. தந்தார்
- ஈன்றோர். கைம்மகவு என்பது மகார் என்னும் பொருட்டாய் நின்றது.
முன்னர் மயர் அறுக்கும் தெய்வம் என்றவர் மீண்டும் அது தெய்வமே
ஆதலின் தெய்வமாகக் கொண்டு தொழுமின் வன வற்புறுத்தோதினார்.

இங்ஙனமே நம்மாழ்வாரும்,

"என்னை முற்று முயிருண்டுஎன் மாய வாக்கை யிதனுள்புக்கு என்னை
முற்றுந் தானேயாய் நின்ற மாய அம்மான்சேர் தென்னன் திருமா
லிருஞ்சோலைத் திசைகை கூப்பிச் சேர்ந்தயான் இன்னும் போவே
னேகொலோ என்கொல் அம்மான் திருவருளே"
(திருவாய் - 10-7: 3)
என அருளிச்செய்தல் காண்க.

"எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பது" பெரியோரியல்பாகலின் எல்லீரும்
மனைவி முதலியவரொடு தொழுது சென்மின் என்றார்.

தொழுதனிர்: முற்றெச்சம். தொழுது என்க.

49-53: புவ்வத்தாமரை . . . . . . . . இருங்குன்றத்தான்

(இ-ள்.) புவ்வத் தாமரை புரையும் கண்ணன் - தனது திரு உந்தித்
தாமரையையே ஒக்கும் திருக்கண்ணையுடையனாய், வௌவல் கார்
இருள் மணிமயங்கு மேனியன் - நீரைக் கவர்தலையுடைய மேகம்
இருள் நீலமணி என்னும் இவைபோன்ற திருமேனியுடையனாய், எவ்வயின்
உலகத்தும் தோன்றி - எல்லா உலகத்தினும் வெளிப்பட்டு, அவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன் - அவ்வவ் விடத்துமுள்ள
உயிர்க்கூட்டங்களின் மறுக்கத்தைச் செய்யும் பிறவித் துன்பத்தைக்
களைவோன், அன்பது மேஎ இருங்குன்றத்தான் - அன்புபட்டு அத்
திருமாலிருஞ் சோலைமலையிடத்தே எழுந்தருளியிருக்கின்றான் ஆதலால்;

(வி-ம்.) புவ்வம் - உந்தி. புரையும் - ஒக்கும்: வௌவல் - கடல் நீரை
வௌவுதலையுடைய என்க. கார் - மேகம்: மணிமயங்கும் என மாறுக.
காரோ காரிருளோ நீலமணியோ எனக் கண்டோர் மயங்கு