பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்277

28-39: வசை . . . . . . . . .குன்றின் அணி

      (இ-ள்.) வசை நீங்கிய வாய்மையால் குற்றமற்ற புகழாலே, திசை
நாறிய குன்று அமர்ந்து - நாற்றிசையினும் பரந்த திருப்பரங்குன்றின்கண்
எய்தி, ஆண்டு ஆண்டு வேள்வியால் - உலகத்தார் பலவிடத்தும்
செய்கின்ற பூசைக்கண், ஆவி உண்ணும் அகில் கெழு கமழ்புகை -
முருகப்பெருமான் ஆவியாகக் கொள்ளாநின்ற அகிலிட்டெழுப்பிய
நறுமணங் கமழும் புகை, வாய் வாய் மீபோய் - அவ்வவ் விடந்தோறும்
மேலே மேலே போதலால், உம்பர் இமைபு இறப்ப - இமையா
நாட்டமுடைய தேவர்களும் இமைத்து அவணின்றும் அகலா நிற்ப,
தேயாமண்டிலம் காணுமாறு இன்று - ஞாயிற்று மண்டிலமும்
அவ்விடத்தே காணும் இயல்புடைத்தன்று, சுனை -
அப் பரங்குன்றினிடத்தே உள்ள சுனைகளிலே, ஈரமாலை இயல்
அணியார் வளை முன்கை வணங்கு இறையார் - குளிர்ந்த
மாலையினையும் இயற்கையழகினையும் வளையல் அணிந்த
முன்கையினையும் வளைந்த இறையினையும் உடைய மகளிரும்,
அணை மெல் தோள் அசைபு ஒத்தார் - அம் மகளிருடைய அணை
போன்ற மெல்லிய தோளின்கண் தங்கி அவர்தம் அன்போடு ஒத்த
அன்புடையரும், தார் மார்பின் தகை இயலார் - மாலை யணிந்த
மார்பினையும் இயற்கையழகுடையருமாகிய ஆடவரும், மனமகிழ்
தூங்குநர் - மனத்தின்கண் மகிழ்ச்சிமிக்கு, பாய்பு உடன் ஆட
- பாய்ந்து ஒருசேர நீராடுதலானே, தாது ஊதும் வண்டு மலர் ஊதல்
எய்தா - தாதூதும் இயல்புடைய வண்டுகள் அஞ்சி அச் சுனையின்கண்
உள்ள மலரின்கட் சென்று தாதூதப்பெறா, பரங்குன்றின் அணி அனைய
- திருப்பரங்குன்றின் அழகுகள் அத்தன்மையன;

      (வி-ம்.) வாய்மை - ஈண்டுச் சிறப்புப் பற்றிப் புகழ்மேனின்றது.
என்னை? உரைப்பா ருரைப்பவையெல்லாம் "இரப்பார்க்கொன்றீவார்மே
னிற்கும் புகழ்" என்பவாகலான். இங்ஙனமே, சொல் உரை இசை
என்பனவும் சிறப்பானே புகழைக் குறித்தலும் உணர்க.

      வாய்மையால் திசைநாறிய எனவும், வேள்வியால் ஆவியுண்ணும்
எனவும் கூட்டுக. குன்று - திருப்பரங்குன்று. வேள்வியால் என்புழி
ஏழனுருபு மூன்றனுருபின் மயங்கிற்று. வேள்வியில்என்க. வேள்வி
- பூசனை. ஆண்டாண்டு என்னும் அடுக்குப் பன்மைபற்றி வந்தது.
ஆவி - புகையின்கண் உள்ள நறுமணப் பண்பென்க.

      முருகன் ஆவியாக நுகரும் புகை என்க. வாய்வாய்
- அவ்வவ் விடந்தொறும். உம்பர் - தேவர். அவர் இமையாக்
கண்ணுடையர். அவரும் இமைத்து அகல என்றார். எனவே பிறர்
இமைத்தல் கூற வேண்டா என்றவாறாயிற்று. உம்பரும் என வேண்டிய
சிறப்பும்மையும், மண்டிலமும் என வேண்டிய சிறப்பும்மையும் செய்யுள்
விகாரத்தால் தொக்கன.