30 - ஆர்ததும்பும் அயிலாழி நிறைநாழி என்பது முதலாக அணி
மழை கோலின்று என்பதீறாகவுள்ள கா, சுனை, காந்தள், முகை, வானவில்
என்பவற்றின்முன் 27-ஆம் அடிக்கண் உள்ள "நின்குன்றத்து" என்னும்
தொடரைத் தனித்தனி அதிகாரத்தாற் கூட்டியுரைக்க:
அவ் வானவில் அம்பு சொரிதல் உளவாயின் அவ் வம்பு
யாண்டும் பரவுமாறு மரங்கள் மலரைப் பரப்பின என்க. தாயின -
பரப்பின.
வல்லுப்போர் - சூதுப்போர். வட்டு - சூதுப்போரின்கண்
உருட்டப்படும் உருண்டை. "கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்" (நற்றிணை - 3) எனவும்,
"அரங்கின்றி வட்டாடி யற்றே" (குறள் - 401) எனவும் பிறரும் ஓதுதலறிக.
கருவி இரண்டனுள் முன்னையது இசைக்கருவி, பின்னையது தொகுதி;
மின் முதலிய தொகுதியையுடைய முகிலுக்கு ஆகுபெயர் நின்றன - ஒத்து
நின்றன. (41) மலைய (45) குன்றம் எனக் கொண்டு கூட்டுக.
மலையிடத்துக் குன்றம் என்க. குன்றம் என்றது முருகவேள் கோட்டத்தை:
ஆகுபெயர்.
(பரிமே.) ஈண்டுக் குன்றம் என்றது, முருகவேள் கோட்டத்தையும்
அதனைச் சூழ்ந்த இடத்தையும்.
46 - 50: அருவி . . . . . .சுனை
(இ-ள்.) வரை அருவி ஆர்ப்ப முத்து அணிந்தன - நின்
குன்றத்தின் சிகரங்கள் வெள்ளிய அருவி ஆரவாரித்து இழிதலாலே
முத்துமாலை அணிந்தாற் போன்றன, தினை குருவி ஆர்ப்பக் குரல்
குவிந்தன - நினது குன்றத்தின்கண் தினைப் பயிர்கள் குருவிகள்
ஆரவாரிக்கும்படி கதிர்கள் விளைந்தன. சுனை எருவை கோப்ப பல்
மலரால் - நின் குன்றத்துள்ள சுனைகள் கரையினின்று சாய்ந்த
கொறுக்கச்சியைத் தம்பால் நின்று நீண்டுயர்ந்து முட்டுவனவாகிய
பல்வேறு நிறமுடைய நீர்ப்பூக்களாலே, கூனி எழில் அணி திருவில்
வானின் - கூனற் பட்டு அழகுற்ற இந்திரவில்லை வளைத்த வானத்தைப்
போன்றனவாகி, வரி ஊதும் அணித்த - வண்டுகள் ஊதாநின்ற
அழகுடையவாயின;
(வி-ம்.) வெள்ளிய அருவி இடையறாது சிகரத்தினின்றும்
வீழ்தல்
அச் சிகரம் முத்துமாலை அணிந்தாற்போன்று தோன்றும் என்றவாறு.
தினைக்கதிர் முற்றியபொழுது அக் கதிரைத் தின்னும் குருவிகள் அங்கு
ஆரவாரிக்கும் ஆகலின் 'தினை குருவியார்ப்பக் குரல் குவிந்தன' என்பர்.
எருவை - கொறுக்கைச்சி என்னுமொரு புல். இது நீர்க்கரைகளிலே
செழித்து வளரும் இயல்புடையது. கரையினின்றும் நீரின்மேலாய்ச்
சாய்ந்துள்ள கொறுக்கைச்சியினைச் சுனைநீரினின்றும் வளர்ந்த பன்னிற
நீர்ப்பூக்கள் சென்று முட்டுவன என்க. பன்னிற நீர்ப்பூக்கள் செறிந்த
சுனைக்குப் பன்னிறமுடைய வானவில்லையுடைய வானம் உவமை என்க.
திருவில் என்றது இந்திரவில்லினை. அணித்த - அழகுடையன. வரி -வண்டு. |
|
|
|