பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்308

கிக் கிடந்ததனைக் காட்டுவதாம் என்று அவ் வகலிகை தன் கணவனுக்குத்
தவறிழைத்தமையாலே உண்டான தண்டத்தை விளக்கிக் கூறாநிற்பர்,
இன்ன பலபல எழுத்துநிலை சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும் - இத்தகைய
வரலாறுகள் பற்றி எழுதப்பட்ட ஓவியங்கள் பற்பலவற்றையும் கண்டோர்
இவ்வாறு அவற்றைக் கையாற் சுட்டி வினவாநிற்குந்தோறும் அவர்க்கு
அவ் வரலாறறிந்தோர் அவற்றை விளக்கிக் கூறி அறிவுறுத்தா நிற்பர்,
இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம் - இத்தகைய ஓவிய
மண்டபங்கள் பற்பல அப் பரங்குன்றத்திலே, நேர்வரை விரி அறை
வியல் இடத்து இழைக்க - செவ்விய மூங்கில்களையும் விரிந்த
பாறைகளையும் உடைய அகன்ற இடங்களிலே இயற்றலாலே
அப் பரங்குன்றம், சோபன நிலையது - பெரிதும் மங்கல
நிலைமையினை உடைத்து;

      (வி-ம்.) ஓவியங்கள் மக்களாகச் சுட்டப்பட்ட விடத்தே
உயர்திணையாய் இவன் இவள் எனச் சுட்டப்படுதல் வழுவன்மை
உணர்க. 'விரகியர் வினவ' என்ற குறிப்பால் வினவுவோர் காதலிமாரும்
விடையிறுப்போர் அவர்தம் காதலரும் என்பது பெறப்படும். என்றூழ் -
ஞாயிறு. இருசுடர் என்றது, நாண்மீனும் பிறமீனுமாகிய இருவகை
மீன்களும் என்றவாறு. நாண்மீன் - அசுவனி முதலியன. பிறமீன் ஆவன:
இவற்றையன்றி விண்ணின்கண் எண்ணிறந்தனவாய் மின்னி மிளிரும்
பெயரறியா மீன்கள் என்க. உரையாசிரியர் இவ் வேற்றுமை
தெரித்தோதுவார் 'நாண்மீன்களையும் தாரகைகளையுமுடைய
சுடர்ச்சக்கரம்' என்றார். உள்படுதல் - உளங்கோடல்; உணர்தல் என்க:
என்றூழ் உறவரும் - ஞாயிறு முதன்மையாகப் பொருந்த இயங்கும்:
இவ் வடிகளானே பண்டைக்காலத்துத் தமிழ்ச் சான்றோர் வானின்கண்
உள்ள நாள் கோள் முதலியவற்றை ஆராய்ந்து அவற்றைப்
பொதுவிடங்களிலே ஓவியமாகவும் வரைந்து மாந்தர்க்கு
அறிவுறுத்துவந்தமை உணரப்படும். மேலும் ஓவியங்கள் வாயிலாய்
மக்களுக்கு இதிகாச முதலியவற்றையும் அறிவுறுத்தமையும் உணர்க.

      இந்திரன்........படியிது என்னுந் துணையும் கௌதமன்
மனைவியாகிய அகலிகையை இந்திரன் காமுற்றமையும் அதனால்
விளைந்த நிகழ்ச்சிகளையும் காட்டும் ஓவியச் செய்தி கூறப்பட்டது.

      திருமாலின் தொடர்புடைய இவ் வரலாறு முருகன்
திருக்கோயிலின்கண் எழுதப்பட்டுள்ளமைக்குக் குறிப்பாக
ஏதுக்காட்டுவார் 'மால் மருகன் மாடமருங்கு' என்றார் போலும்.

      நேர்வரை - செவ்விய மூங்கில். விரியறை - விரிந்த பாறை.
சோபனம் - மங்கலம். துணி - என்பதனை எழுத்து நிலைக்கு
அடையாக்கித் தெளிந்த எழுத்துநிலை என்க.

      (பரிமே.) 49. விரகியர் என்றதனால், வினவுகின்ற மகளிர்
பிரியாமைக் குறிப்பினராதலும், அவ் வினாவிற்கு இறை சொல்லுவார்
கணவராதலும் பெற்றாம்.

      52. கொண்டோர் பிழைத்த தண்டங் கூறுவாருமாய்.