பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்309

58 - 66: பிறந்த . . . . . . . .வகை

      (இ-ள்.) ஒரு பேதை பிறந்த தமரில் பெயர்ந்து - பேதைப்பருவ
முடையாளொரு சிறுமி பிறத்தலால் ஆகிய தன் சுற்றத்தாரிடத்தினின்று
பிரிந்து, பிறங்கல் இடை இடை புக்குப் பிறழ்ந்து - பிறங்காநின்ற
கற்களின் இடையே இடையே நெறிதவறிப் புகுந்து திகைத்து, யான் வந்த
நெறியும் மறந்தேன் - யான் இங்கு வந்த வழியையும் மறந்தொழிந்
தேனே என்று வருந்தி, சிறந்தவர் - அவளுக்குத் தமரிற் சிறந்தவராகிய
இரு முதுகுரவரையும், ஏஎ ஓஒ என விளி ஏற்பிக்க - அன்னையேஎ!
அப்பாவோஒ! என்று தனது விளியை அவர்கேட்கும்படி கூவா நிற்ப,
முழை அவ்விளியேலா அவ் இசை ஏற்று - அவ்விடத்துள்ள
அம் முழைகள் அவ் விளியைக் கேளாதனவாய் அவ்வொலி தம்மையே
ஏற்று, ஏஎ ஓஒ என அழைப்ப - அன்னையேஎ! அப்பாவோஒ! என்று
கூவா நிற்ப, அழைத்துழிச் செல்குவள் - அப்பேதைப்பெண் இவ்வொலி
முழைஞ்சினின்றெழும் எதிரொலி என்றறியாமல் அத் தமரே தன்னை
அழைக்கின்றாராகக் கருதி அவ்விளி வருமிடத்திற்குச் செல்கின்றவள்,
ஆங்குத் தமர்க் காணாமை மீட்சியும் - அவ்விடத்தும் தன் உறவினரைக்
காணாது மீளுமிடத்தும், கூஉக் கூஉ மேவும் - கூவுதலைக் கூவுதலை
மேற் கொள்ளாநின்றாள், வாழ்த்து உவப்பான் குன்றின் வகை மடமைத்து
அன்பரது வாழ்த்தினை விரும்பும் முருகவேளினது
திருப்பரங்குன்றத்தின்கண் அமைந்த இட வேறுபாடு இவ்வாறு
சிறுவர்களுக்கு மடமை செய்தலை உடைத்து;

      (வி - ம்.) பிறந்த தமர் - தான் பிறந்த காரணத்தானே உண்டான
உறவினர். பேதை - பேதைப் பருவத்தினள்; சிறுமி. பெயர்ந்து - நீங்கி.
பிறங்குதல், பிறங்கல் என நின்றது. பிறங்குதல் - விளங்குதல் பிறழ்ந்து
- திகைத்து. 'யான் வந்த நெறியும் மறந்தேன் சிறந்தவர் ஏஎ ஓஒ'
என்னுந்துணையும் அச் சிறுமியின் கூற்றைக் கொண்டு கூறியவாறு.
சிறந்தவர் - ஈண்டுத் தமரிற் சிறந்தோராகிய அன்னையும் அப்பனும்
என்க. அன்னையேஎ அப்பாவோஒ என விளி யேற்பிக்க என்க.
அம்முழைகள் விளியின் பொருளை உட்கொள்ளாமல் ஒலியைமட்டும்
ஏற்று எதிரொலி செய்ய என்க. மீட்சியும் - மீளுங்காலத்தும்.
குன்றின்வகை - குன்றின் இடக் கூறுபாடென்க. மடமைத்து - இத்தகைய
மடைமையைச் செய்தலையுடைத்து.

      (பரிமே.) இனி அவனை எதிர்முகமாக்கிக் கூறுகின்றார்.

67 - 74: நனிநுனி . . . . . . .மருள

      (இ-ள்.) (84) நெடியாய் நின்குன்றின் மிசை - புகழான்
நீண்டோனே நினது திருப்பரங்குன்றத்தின்கண், நுனி சாய்ப்