பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்315

"நிக்கிர கங்கள் தானும் நேசத்தால் ஈசன் செய்வது
அக்கிர மத்தால் குற்றம் அடித்துத் தீர்த்து அச்சம் பண்ணி
இக்கிர மத்தி னாலே ஈண்டறம் இயற்றி டென்பன்
எக்கிர மத்தி னாலும் இறைசெயல் அருளே என்றும்"
(சிவ. சித். சுப: 105)
எனவும்,
"தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்கள் தம்சொல் ஆற்றின்
வந்திடா விடின் உறுக்கி வளாரினால் அடித்துத் தீய
பந்தமும் இடுவர் எல்லாம் பார்த்திடின் பரிவே யாகும்
இந்தநீர் முறைமை யன்றோ ஈசனார் முனிவு மென்றும்"
(சிவ. சித். சுப: 106)

எனவும் வரும் மெய்கண்ட வித்தகர் மெய்ம்மொழியானும் உணர்க.

      தெவ்வுக் குன்றம் என்றது கிரௌஞ்ச மலையை. தெவ்வு - பகை.
"தெவ்வுப் பகையாகும்" (உரி - 48.) என்பது தொல்காப்பியம். "குருகொடு
பெயர்பெற்ற மால்வரை யுடைத்து மலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை"
என 5ஆம் பாடலினும் வந்தது. இதனால் இறைபணி நிற்போர்க்கு
மலைபோன்ற தடைகள் எதிர்நின்று தடுப்பினும் அவற்றை இறைவன் தன்
அருளாலே அகற்றி அவரை உய்யக் கொள்ளும் இயல்புடையன் என்பது
உணர்த்தப்பட்டது. இதனை,

"யான்செய்தேன் பிறர்செய்தார் என்னதுயான் என்னும்
இக்கோணை ஞானவெரி யால்வெதுப்பி நிமிர்த்துத்
தான்செவ்வே நின்றிடஅத் தத்துவன்தான் நேரே
தனையளித்து முன்னிற்கும் வினையொளித்திட் டோடும்"
(சிவ. சித். சுப: 305)
எனவரும் மெய்ம்மொழியான் உணர்க.

      ஒருவரையை உடைத்து ஒருவரையின் கடம்பமர்ந்தோய் என்பதன்
கண் நயம் உணர்க. தீயோரை ஒறுத்தொழித்து நல்லோரின் மனமலர் மிசை
ஏகுவை என்பது கருத்து. அருள் புரிக என்பது இசை யெச்சம்.

      (பரிமே.) அன்புடைமையின் . . . . .னம் எய்தினையன்றே அது போல
அருளுடைமையின் ஒவ்வா வாழ்த்தும் கேட்டல்வேண்டும் என்றவாறு.

      97. ஒலியல் - கடப்பமாலை. செய்யை என உடையது தொழில் உடையான் மேனின்றது.

      குருதி தோய்ந்துழியல்லது அந்நிறம் இயல்பன்மையின் கொள்ளும் என்றார்.

      99. பண்பின் தொழில் பொருண்மேனின்றது.

      100. சினைவினை முதன்மேனின்றது

      'எம் வாழ்த்து இது' என்பது சொல்லெச்சமாயிற்று.