இருபதாம் பாடல்
--------
வையை
பொருட் சுருக்கம்
இப் பாடல், கார்ப்பருவம் வந்தமை கண்டு தலைவி பிரிவாற்றாமையால்
பெரிதும் வருந்தினாளாக, தோழி தலைவன்பால் பாணனைத் தூது
விட்டாள். அப் பாணன் தலைவனிடம் சென்று கார்ப்பருவமும், வையை
நீர் விழவணியும், கூறுமுகத்தால் தலைவியின் ஆற்றாமையைக் கூறுவதாக
அமைந்துள்ளது.
1 -15: சூல் முதிர்ந்த முகில் புலியைக் கொன்ற
யானையின்
மருப்பில் உள்ள குருதிக்கறை நீங்கும்படி மழை பெய்தது; முகில்
கடல்நீரை முகந்து மலையிலே மிகவும் பெய்தலாலே வையையாறு
மலர்மணமும், வெங்கார் மணமும், கனி மணமும் கலந்து கொணர்ந்து
பிறர்க்குக் கொடா நின்றது; அவ் வையைக் கரையிலுள்ள சோலையின்
கண் ஆற்றினது வெம்மையால் உண்டான வேசனை நாற்றமும் கலந்தது;
ஊர்கள் தோறும் பறையறையப் பட்டது; சுருங்கையில் நீர் ஓடுகின்ற
முழக்கத்தாலே மதுரையில் உள்ளோர் துயில் நீங்கி வையையில் நீராடும்
பொருட்டு விரைந்தனர்.
16 - 19: தாம் தாம் முற்படுதல் விருப்பத்தாலே
அவர்களிற் சிலர்
தேர் ஏற எண்ணிக் குதிரைகளைப் பள்ளியோடத்திற் பூட்டி, அதன்மிசை
ஏறாநிற்பவும், சிலர் வங்கத்தில் ஏற எண்ணி அதற்குரிய எருதுகளைத்
தேரிற்பூட்டி அதன்கண் ஏறாநிற்பவும், சிலர் குதிரைகளுக்கு இடும்
கலனை முதலியவற்றை யானைகளுக்கிடாநிற்பவும், சிலர் மறதியாலே
யானைகளை ஒப்பனை செய்யாது ஏறி நடத்தாநிற்பவும் இங்ஙனம்
தடுமாறா நின்றனர்.
20 - 26: மகளிர்க்குரிய கோதைகளை மைந்தர் புனைந்தனர்;
மைந்தர்க்குரிய தார்களை மகளிர் அணிந்தனர்; இங்ஙனம் தாம் தாம்
முந்துதல் வேண்டும் என்னும் விருப்பத்தாலே முறைமை மறந்து
அணிந்தவரெல்லாம் வையையாற்றை எய்தினர்; அணிந்து கொள்ளாத
சிலர், தெருக்களில் வந்து நின்று வருந்தினர்; இவ்வாறு வையை
மதுரையில் உள்ளோரால் பெரிதும் விரும்புந் தன்மையுடையதாயிற்று. |
|
|
|